( இலங்கைத் தமிழ் அரசியற் சூழலின் ஜனநாயகமின்மைக்குத் தமிழ்த் தேசியவாதத்தின் பங்களிப்புப் பற்றிப் பேசப்படுகிறது.)
நிலவுடைமை அமைப்பையும் அதன் கருத்தியற் சிந்தனை நடைமுறைகளையும் தொடர்ந்து பேணிவருவது தான் தென்னாசிய நாடுகளின் பிரதான போக்காக இருந்து வருகிறது. அவற்றின் வழியாகவே பாராளுமன்ற முதலாளித்துவ ஜனநாயகம் பேணிப் பாதுகாக்கப் படுகிறது. மக்களது சிந்தனைகள் நடைமுறைகள் இவ் நிலவுடைமைக் கருத்தியல் அடிப்படையிலேயே அடிமைத்தனமாகப் பின்பற்றப் படுகிறது. வர்க்கம், இனம், சாதியம், பால் ஆகிய நான்கும் நமது சமூக அமைப்புச் சூழலில் மிகவும் இறுக்கமான நிலவுடைமைக் கருத்தியல் தளத்தில் இயங்குவையாகக் காணப் படுகின்றன. குறிப்பாக நமது தமிழ்ச் சூழலில் மேற்படி நான்கு விடயங்களையும் தமிழ்த் தேசியம் பேசும் எவரும் தகர்க்க முன்வரவில்லை.
தமிழ் நாட்டில் பெரியார் என அழைக்கப்பட்ட ஈ.வே.ரா.வினால் சாதிய, பால் ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தி அவற்றுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்புரை செய்து சீர்திருத்த இயக்கத்தை முன்னெடுக்க முடிந்தது. அவ்வியக்கம் தமிழகத்தில் தாக்கங்களை உருவாக்கி சமூகம் ஒரளவு ஜனநாயகத் தன்மைகளைப் பெற வைத்ததாயினும் அவரது மறைவுக்குப் பின் அதன் வீரியம் குறைந்து மங்கிக் கொண்டது.
உதாரணத்திற்கு, அரசியலில் தமிழ்த் தேசியவாதிகள் பயன்படுத்தும் சொல்லாடல்களை உற்று அவதானித்தால் அவற்றினுள் நிலவுடைமைக் காலத்தின் தொடர்ச்சி படிந்திருப்பதைக் காணலாம். தந்தை, அண்ணன், தம்பி, அன்னை, அம்மா போன்ற குடும்பப் பெயர்களிலும் தளபதி, தனிப்பெரும் தலைவர், உயர்திரு, மதிப்பிற்குரிய போன்றவை மட்டுமன்றி சோழன், கரிகாலன் என்றெல்லாம் அழைத்துக் கொள்வதில் பெருமையும் சுகமும் கண்டவர்கள் தமிழ்த் தேசியவாதிகள். இவ்வாறு அழைக்கப்படுவதில் ஏதோ குடும்ப பாச உணர்வும் பழைய மன்னர் காலப் பெருமை மட்டும் தங்கியிருக்கவில்லை. இச் சொல்லாடல்களுக்குள் இன, வர்க்க, சாதிய, பால் ஆதிக்க சிந்தனைப் போக்குக்களே படிந்திருக்கின்றன.
நடைமுறையில் குடும்பத்திற்கு வெளியே ஐயா, அம்மா, அண்ணன், தம்பி என விளித்து அழைப்பதற்கு சாதிய வரையறைகள் அன்று இறுக்கமாக இருந்து வந்தது. இன்று உயர் வர்க்க அரசியல் தேவை கருதி அவற்றில் நெகிழ்ச்சி காணப்பட்டாலும் படிநிலைச் சாதிய அமைப்புச் சூழல் இருந்து வருகிறது.
அவ்வாறு நோக்கப்பட்டபோது ஒருவர் சுட்டிக்காட்டி எழுப்பிய கேள்வி யாதெனில், இத்தனை இயக்கங்களில் எவற்றில் ஒன்றிலாவது ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞன் தலைமைப் பதவியில் உள்ளானா என்பதேயாகும். ஆனால் அடுத்தடுத்த நிலைகளில் இருந்திருக்கிறார்கள். காரணம் அவர்களது போர்க்குணம் உறுதி, உற்சாகம், திறமைகள் என்பவற்றைப் புறந்தள்ள முடியாத நிலையிலேயேயாகும். அத்தகையவர்கள் கூட இயக்க உள் அரங்கிலே எவ்வாறு சாதியச் சிந்தனைகட்கு முகம் கொடுத்தார்கள் என்பது வேறொரு விடயமாகும்.
இங்கே மற்றொரு விடயத்தையும் நாம் காணுதல் வேண்டும். புலிகள் இயக்கம், ரெலோ இயக்கம் இரண்டும் தோழர் என்ற சொல்லாடலை பயன்படுத்தவில்லை. தலைவர், அண்ணை, தம்பி, ஐயா, அம்மா, தங்கச்சி என்றே அவர்கள் பயன்படுத்தினர். ஏனைய மூன்று நான்கு இயக்கங்கள் தோழர் என்ற சொல்லாடலைத் தம்மிடையே பயன்படுத்தி வந்தன. அவை தோழர் என்ற சொல்லை எந்த அடிப்படையில் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது அவர்களுக்கே புரியாத ஒன்றாகும்.
நிலவுடைமைக் கருத்தியல் சிந்தனை நடைமுறைகளைக் கொண்ட தமிழ்த் தேசியத்தை ஆள்மனம் தொட்டு நுனி நாக்கு வரை வைத்துக் கொண்டு அல்லது அதனைச் சந்தர்ப்பவாதமாக நடைமுறைப்படுத்திக் கொண்டு அர்த்த மிகுதியும் ஆழமான சகத்துவ உணர்வின் வெளிப்பாடாக அமைந்த தோழர் அல்லது தோழர்கள் என்ற சர்வதேசச் சொல்லாடலைப் பயன்படுத்திக் கொண்டமை முரண்நகையானதாகும்.
அத்தகைய மகத்தான அர்த்தமுடைய தோழர், தோழர்கள் என்ற பதங்களை தோழமை உணர்விற்கும் சமத்துவத்திற்கும் சம்மந்தமற்ற தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் சில பயன்படுத்தி சிறுமைக்கும் கொச்சைப்படு த்தலுக்கும் சீரழிவுக்கும் உள்ளாக்கிக் கொண்டமை சோகமானதாகும். இன்று ஒருவரை தோழர் என அதன் உண்மையான அர்த்தத்தில் அழைத்தால் அதனை அவதானிக்கும் ஒரு சாமானியர் அழைத்தவை ஏதோ ஒரு தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று கருதும் அளவிற்கு அப்பதம் பழுதாக்கப்பட்டு விட்டது. அந்த மகத்தான சொற்பதம் கம்யூனிஸ்டுக்களா கட்சிகளிலும் பெரும் புரட்சிகளிலும் போர்க்களங்களில் மட்டுமன்றி தத்தம் தேச நிர்மாணங்களிலும் பயன்படுத்தப் பட்டது. அதற்கு அர்த்தமும் வலிமையும் இருந்து வந்தன.
இவை யாவும் எவற்றின் தொடர்ச்சியும் வெளிப்பாடும் என ஒருவர் சிந்தித்தால் நமது தமிழ்ச் சூழலில் ஜனநாயகப்படுத்தல் இடம்பெறாமை என்றே துணிந்து கூறலாம். மேற்கில் மகத்தான பிரஞ்சுப் புரட்சியும் அதனோடு ஒத்த புரட்சிகளும் நிலவுடைமைக் கருத்தியற் சிந்தனை நடைமுறைகளை உடைத்தெறிந்து சமூக அமைப்பில் பெருமளவிற்கு ஜனநாயகமயப் படுத்தல்களுக்கு வழி சமைத்தன. அதன் பின் சோசலிசப் புரட்சிகள் இடம் பெற்றன. அவை கிழக்கிலும் சில நாடுகளில் நிகழ்ந்தன. ஆனால் தென்னாசிய நாடுகளில் மேற்படி நிலவுடைமைத் தகர்ப்பு இடம் பெறவில்லை என்பது கவனத்திற்கு உரியதாகும்.
எனவே வர்க்கம், இனம், சாதியம், பால் ஆகிய நான்கு ஒடுக்குமுறைத் தளங்களிலும் தமிழ்த் தேசிய இனத்தின் மத்தியில் மட்டுமன்றி ஏனைய தேசிய இனங்கள் மத்தியிலும் ஜனநாயகப் படுத்தவோ அவற்றுக்கான கொள்கை நடைமுறை வழியிலான போராட்டங்களோ முன்னெடுக்கப் படவில்லை. தமிழ்ச் சூழலில் சாதியத்திற்கு எதிரானதும் வர்க்க ரீதியில் தொழிற் சங்கப் போராட்டங்களுமே ஜனநாயகத்திற்கான போராட்டங்களாக மாக்சிச லெனினியவாதிகளால் முன்னெடுக்கப் பட்டன. அதன் தொடர்ச்சி எழுபதுகளில் இருந்து தமிழ்த் தேசியவாதத்தால் பின்தள்ளப் பட்டது.
எனவே, தமிழ்ச் சூழலில் நிலவுடைமை வழிவந்த பழைமைவாதக் கருத்தியற் சிந்தனையும் நடைமுறைகளும் உரிய போராட்டங்களால் தகர்க்கப்படவேண்டும் ஜனநாயகப்படுத்தல் இடம் பெற வேண்டும். இல்லாவிடில் தமிழ் இன விடுதலை வெறும் கனவுகளாகவே வந்து போய்க் கொண்டிருக்கும். அதனை தமிழ் மேட்டுக்குடி உயர் வர்க்கத்தினர் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்வர்.
மீள் பதிவு:Nov 6, 2009