கடந்த காலப் போராட்ட உணர்விலிருந்து மக்களை விடுவித்து, வட கிழக்கு உட்பட இலங்கை முழுவதையும் சூறையாடும் அன்னிய நிகழ்ச்சி நிரல் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
இலங்கையில் பாராளுமன்ற அரசியல்வாதிகளும், புலம்பெயர் நாடுகளில் தேசிய வியாபாரிகளும் தமிழ்ப் பேசும் மக்களை அறியாமை இருளில் அமிழ்த்தி எதிர்கால சமூகத்தை இருண்டதாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
பேரினவாதிகளுக்கு வர்ணம் பூசி தமிழ்ப் பேசும் மக்களின் நண்பர்களாக அறிமுகப்படுத்தும் டக்ளஸ் தேவாந்தா, சசிகலா மகேஸ்வரனில் ஆரம்பித்து கஜேந்திரகுமார் சம்பந்தன் வரைக்கும் மக்களின் தலைவிதியைத் தாம் தீர்மானிக்கப் போவதாகக் கிளம்பியிருக்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் மூலையில் லட்சக்கணக்கில் மக்கள் அழிக்கப்பட்டனர். முள்ளிவாய்க்காலின் பின்னான காலம் முழுவதும் தேசியவிடுதலைப் போராட்டத்தின் எச்சசொச்சங்களைத் துடைதெறிந்து அழிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. வன்னியில் நடந்தவை மனிதப் படுகொலைகள். இன்று நடந்துகொண்டிருப்பதோ அதைவிட ஆபத்தான சுத்திகரிப்பு. இது தொடர்பாகப் பேசுவதற்குக் கூட நேர்மையான மனிதர்கள் இல்லாத வெற்றிடம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வெற்றிடத்தை நிரப்ப முனைகின்ற ஒவ்வொரு அரசியலும் பிழைப்புவாதிகளால் அழித்துத் சிதைக்கப்படுகின்றன.
இந்த இருண்ட சூழலில் ஆங்காங்கே நம்பிக்கைதரும் மக்கள் பற்றுள்ள மனிதர்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டிய தேவை முன்னெப்போதும் இல்லாத அளவில் காணப்படுகின்றது.
மக்கள் மத்தியில் சரியான கருத்தை எடுத்துச் செல்வதும் நடந்துகொண்டிருக்கும் அழிவிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும் இன்று ஒவ்வொருவரதும் கடமையாகும்.
மக்கள் பிச்சைக்காரர்களாகவும் அடிமைகளாகவும் வாழ்வைதை விட போராடுவதே மேல் என்ற உணர்விற்கு மறுபடி வந்து சேரவேண்டும். பாராளுமன்றப் பதவிக்காக அருவருக்கத்தக்க பொய்களை மக்களிடம் அரசியல்வாதிகள் கட்டவிழ்த்துவிட ஊடகங்கள் அவற்றை அப்படியே உமிழ்கின்றன.
புலம்பெயர் ஊடகங்களின் ‘பிரேக்கிங் நியூஸ்’ இன் இரு புறங்களிலும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
நான்கு தசாப்தப் போராட்டத்தின் விளைபலனா இது, என துயரத்தில் புலம்பும் சமூகப்பற்றுள்ளவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டியது இன்றைய காலத்தின் அவசியம்.
தேர்தலில் மக்களை எப்படியெல்லாம் ஏமற்றுகிறார்கள்?
1. கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.
இன்றை உலகமாமான காலத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் எமது நாடுகளில் தேசியம் என்பது ஜனநாயகத்தை மீட்பதற்கான ஆரம்பப் பாத்திரத்தை வகிக்கவல்லது. ஆனால் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் தேசியம் என்பது அயோக்கியர்கள் பிழைப்பு நடத்துவதற்கான ஆயுதமாக மாறியுள்ளது.
a) தொடரும் சர்வதேச விசாரணை: எதற்கெடுத்தாலும் சர்வதேசம் விசாராணை செய்யும், சர்வதேசம் விசாரிக்கும், இனப்படுகொலை நடந்தது, நடக்கிறது, என்று கஜேந்திரகுமார் கூறுகின்ற அழகான வார்த்தைகளின் பின்னால் மக்களை ஏமாற்றும் வெற்றுச் சுலோகங்களே உள்ளன.
இவர்கள் சர்வதேசம் என்று இவர்கள் கூச்சலிடும் நாடுகள் மைத்திரிபாலவையும், ராஜபக்ச இல்லாத அரசை நம்புங்கள் என்று கூறுகின்றது. இலங்கை அரசோடு இணைந்து அபிவிருத்தி செய்யுங்கள் இனப்படுகொலை என்று பேசாதிர்கள் என்றெல்லாம் இவர்கள் கூறும் சர்வதேசம் ஆணையிட, இவர்களோ சர்வதேசத்தை நம்புங்கள் என்கின்றனர்.
ஆக, சர்வதேச விசாரணை நடத்துவோம் என்றும் சர்வதேசத்தைப் பிடித்து இனப்படுகொலை என்று கூறுவோம் என்றும் இக் குழுவினர் கூறுவது அப்பட்டமான பொய். மக்களை அழகான உணர்ச்சியூட்டும் வார்த்தைகளால் தேர்தலுக்காக ஏமாற்றும் வழிமுறை இது!
b) ஏமாற்றத்திற்கான குரல்: ‘மாற்றத்திற்கான குரல்’ என்ற முழக்கத்தோடு அரசியல் கடைவிரித்திருக்கும் கஜேந்திரகுமார் இலங்கை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் பேரினவாதிகள் மத்தியில் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கிறார். காலனியத்திற்குப் பின்னான காலம் முழுவதும் பாராளுமன்றம் ஒற்றையாட்சிப் பாராளுமன்றம் என்பது குறைந்தபட்ச ஜனநாயகத்தைக் கூட உத்தவாதம் செய்யவில்லை என்பதால் தானே போராட்டமே ஆரம்பித்தது?
ஆக, கஜேந்திரகுமார் மட்டும் பகலில் விளக்குப் பிடித்து தேசியத்தின் பெயரால் பாராளுமன்ற வளாகத்திற்குள் ஜனநாயகத்தை எப்படித் தேடுவார்? ஆக,, கஜேந்திரகுமாரின் குரல் மாற்றத்திற்கான ஏமாற்றத்திற்கானதா?
c) விடுதலைப் புலிகள் மீதான விசாரணை: கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இன்னொரு உணர்ச்சி முழக்கம் ‘விடுதலைப் புலிப் போராளிகள் விசாரிக்கப்படக்கூடாது’ என்பதாகும். அதற்கு அவர்கள் கூறுகின்ற காரணம் புலிகள் அமைப்பிலிருந்த போராளிகள் ஏற்கனவே இலங்கை அரசால் விசாரிக்கப்பட்டுத் தண்டனை அனுபவித்துவிட்டார்கள், தண்டனை அனுபவித்தவர்கள் அதே குற்றத்திற்காக மீண்டும் தண்டிக்கப்படக் கூடாது என்பதாகும். எவ்வளவு அபத்தமான காட்டிக்கொடுப்பு இது.
இதன்படி தண்டனை அனுபவிக்காமல் அகதிகளாக வேற்றுநாடுகளில் இருப்பவர்கள் போர்க்குற்றத்திற்காகத் தண்டிக்கப்படலாம் என்பது தானே இதன் உள்ளர்த்தம்?
புலம்பெயர்ந்து புலிகளின் உறுப்பினர்கள் எனக் கூறி அரசியல் தஞ்சம் கோரியவர்கள் போர்க் குற்றமிழைத்தவர்கள் என மேலை நாடுகளால் குற்றம் சுமத்தப்பட்டு தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்படுகின்றது. இவர்கள் போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் நாளை தண்டிக்கப்படலாம். இதற்கும் கஜேந்திரகுமாரின் கூற்றிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதா எனத் தெரியவில்லை. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக எழக் கூடிய எதிர்ப்பைத் தணிப்பதற்கான அடியாளாக கஜேந்திரகுமார் பயன்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
d)சுயநிர்ணைய உரிமையை நிராகரித்தல்: சமஷ்டித் தீர்வுஇடையில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டித் தீர்வு தேவை என்கிறார்கள். சுயனிர்ணைய உரிமைக்கும் சமஷ்டிக்கும் என்ன தொடர்பு? சுயநிர்ணைய உரிமை என்பதே பிர்ந்து செல்வதற்கான உரிமை. மக்கள் இதற்காகத்தானே இதுவரை தமது குடித்தொகையின் ஒரு பகுதியை இழந்துபோனார்கள்? இதற்காகத்தானே உலகமெங்கும் சிதறுண்டு போனார்கள்?
சமஷ்டி என்பதே அடிப்படையில் சுயநிர்ணையத்தை நிராகரிப்பதாகும். ‘நான் கடவுள் சத்தியமா கடவுள் நம்பிக்கை இல்லாதவன்’ என்று கூறிவது போன்ற ஏமாற்று இது.
e) யார் அழித்தாலும் அசையமாட்டோம்: எந்த நாட்டுடனும் பகையுறவு இல்லை என்கிறது இவர்களின் மற்றோரு சுலோகம். கடந்த 35 வருடங்களாக இந்தியா ஈழத்தமிழர்களின் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் தலையிட்டு அழித்துவருகிறது. அமெரிக்காவும் அதன் அணியும் இனப்படுகொலை நடத்தி ஈழப் போராட்டத்தை அழித்த பின்னர் மைத்திரி அரசோடு இணைந்து ‘கைவீசம்மா கைவீசு’ என பாப்பாப் பாட்டுப் பாடச்சொல்லி மிரட்டுகின்றன. புலிகளில் செயற்பாடு புலம்பெயர்ந்த அப்பாவிப் போராளிகள் மீது போர்க்குற்றம் சுமத்துகின்றன. இந்தச் சூழலில் எந்தக் கூச்சமும் இல்லாமால் எல்லா நாட்டின் அதிகாரவர்க்கங்களுடனும் பகையின்றி உறவு வைத்துக்கொள்வோம் என்கிறார் கஜேந்திரகுமார்.
அப்படியானால் பேரினவாத இலங்கை அரசோடும் மேற்குறித்த நாடுகளைப் பகைத்துக்கொள்ளமல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் அல்லவா?
f) ஒரு நாடு இரு தேசம் : இவ்வளவிற்கும் மேல் ஒரு நாடு இரு தேசம் என்ற கருத்தையும் முன்வைத்துத் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறுகிறார்கள்.
சுயநிர்ணைய உரிமை கோருவதாகக் கூறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஒரு நாடு என்று கூறி சுயநிர்ணைய உரிமையைக் கொச்சப்படுத்துவது எவ்வளவு அபத்தமானது?
சுய நிர்ணைய உரிமை என்பது பிரிந்துசெல்வதற்கான உரிமை. பிரிந்து செல்லும் உரிமையை பெற்றுக்கொண்ட பின்னர் ஒரு நாடாக இணைந்திருப்பதா அன்றிப் பிரிந்து இரண்டு நாடுகள் ஆவதா என்பது மக்களைப் பொறுத்தது. இலங்கையில் ஆறாவது திருத்தச்சட்டம் பிரிவினையைத் தடை செய்வதால் இதற்கு மேல் பேச முடியாது என்கிறனர். சர்வதேசச் சட்டங்களின் அடிப்படையில் பிரிந்து செல்வதற்கான உரிமை தடைசெய்யப்பட முடியாத ஒன்று. ஆக, ஆறாவது திருத்தச்சட்டம் பிரிந்து செல்லும் உரிமை கோருவதைத் தடைசெய்ய முடியாது.
நிலமை இவ்வாறிருக்க கஜேந்திரகுமார் சுயநிர்ணைய உரிமை வேண்டாம் என்கிறார். அதேவேளை சுய நிர்ணைய உரிமைக்குப் போராடுவோம் என்கிறார்.
தவிர, வடக்குக் கிழக்குத் தமிழர்கள் சுயநிர்ணைய உரிமைக்கான தமது போராட்டத்தை ஆரம்பித்த காலப்பகுதியிலேயே மலையக மக்கள் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை ஆரம்பித்தனர். சுய நிர்ணைய உரிமை கோரிப் போராடிய மலையக் மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பு சந்திரசேகரின் தலைமையில் மலையக மக்கள் முன்னணியாக மாற்றமெடுத்து சீரழிந்து போனது.
எழுபதுகளிலேயே மலையக மக்கள் தனியான தேசிய இனம் என்ற தத்துவார்த்த அடிப்படையிலானா ஆய்வுகள் மலையகத்தவர்களால் வெளிக்கொண்டுவரப்பட்டது. இதனை முன்வைத்துப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலம் என்ற நூல் பீ.ஏ.காதர் இன் முதலாவது நூலாக வெளிவந்தது.
ஒரு நாடு இரு தேசம் என்ற முழக்கத்தின் கீழ் கஜேந்திரகுமார் மலையக மற்றும் முஸ்லீம் மக்களின் சுய நிர்ணைய உரிமையை மறுக்கிறார். வட கிழக்குத் தமிழர்கள் ஒரு தேசம் என்றும் ஏனைய அனைத்து மக்களும் மற்றொரு தேசம் என்ற தொனிப்பட இரண்டு தேசம் ஒரு நாடு என்கிறார்.
ஆக, மலையக் முஸ்லீம் மக்களை சிங்களப் பேரினவாத்த்தோடு இணைந்திருக்கச் சொல்கிறார். ஏனைய தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான சுய நிர்ணைய உரிமையை மறுத்துவிட்டு வட கிழக்குத் தமிழர்கள் மட்டும் எப்படி சுயநிர்ணைய உரிமை கோரலாம் என்பது எப்படிச் சரியாகும்.?
முழுமையான பொய்களை அடித்தளமாகக்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல்கால சுலோகங்கள் மக்களை மந்தைகளாக்குகிறது.
இவை தவிர, இன்று கஜேந்திரகுமார் குறுக்கும்மறுக்குமாக நடந்துதிரியும் மண்ணில் அவரது காலடியில் நடக்கும் இனவழிப்புக் குறித்து மூச்சுகூட விடவில்லை. முள்ளிவாய்க்கால் அழிப்பின் பின்னர் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாபெரும் சதிதான் ‘சுன்னாகம் இனச்சுத்திகரிப்பு’. வலிகாமம் பகுதி மண்ணும், நீரும் மக்களின் பாவனைக்கு ஒவ்வாத இடமாக மாற்றப்பட்டுள்ளது. அரச பயங்காவாதி சம்பிக ரணவக்க என்ற இலங்கை மின்வலு அமைச்சரும் சிங்கள பௌத்த பேரினவாதியும் சுன்னாகம் பகுதி முழுவதும் கழிவு நீரை வெளியேற்றி மக்களை கொடிய நஞ்சின் மீது வாழ்கை நடத்த நிர்பந்தித்துள்ளனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் யாழ்பாணம் சென்ற சம்பிக்க ரணவக்க விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கிருமிநாசினிகளே அழிவிற்குக் காரணம் என அப்பட்டமாகப் பொய்கூறும் போது கஜேந்திரகுமார் குழு வாக்குப்பொறுக்க அலைந்துகொண்டிருந்தது.
அழிக்கும் சர்வதேசத்தை நம்புங்கள், பேரினவாதிகளின் பாராளுமன்றத்தில் மாற்றம் எற்படும் என நம்புங்கள், சுயநிர்ணய உரிமையைத் தலைகீழாக்கி அழித்துவிடுங்கள், தண்டிக்கப்படாத போராளிகளைப் போர்க்குற்ற்வாளிகள் ஆக்குங்கள், மலையக மற்றும் முஸ்லீம் மக்களை பேரினவாத அரசுடன் இணைத்துவிடுங்கள் என்பனவே கஜேந்திரகுமாரின் தேர்தல்கால முழக்கத்தின் மறுபக்கம்.
ஏனைய கட்சிகள் தொடர்பாகவும் முடிவுரையும் நாளை பதியப்படும்….
-இனியொரு…