Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழர்கள் அடிமைகளாகும் அரசியல் : சபா நாவலன்

தெற்காசியாவின் தென்மூலையில் உலகத்தின் வரைபடத்தில் கண்டுகொள்ளக் கடினமான தீவிலிருந்து இரத்தவாடை மனித குலத்தை அச்சம் கொள்ளச் செய்கிறது.

பல்லாயிரக் கணக்கானா போராளிகள் ஈழ விடுதலைக்காக தமது உயிரைத்தியாகம் செய்திருக்கிறார்கள். மக்களின் மானசீக அங்கீகாரத்தோடு ஒடுக்கு முறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் எழுச்சி பெற்றது. சமூக வரம்புகளை எல்லாம் மீறி பெண்கள் கூட்டம் துப்பாக்கிகளோடும், சீருடைகளோடும் வீதிகளில் விடுதலை தேடிப் போராடியிருக்கிறது.

உலக நாடுகளதும் அத்தனை அதிகார மையங்களதும் ஆதரவோடு வன்னியில் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கிறார்கள். வன்னிப் போர் நாற்பதாயிரம் ஊனமுற்ற சிறுவர்களை உருவாக்கியிருக்கிறது. நாளைய சந்ததியின் ஒன்றுமறியாத ஒரு பகுதி திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பில் சிக்குண்டு ஊனமுற்ற சமூகத்தின் அங்கங்களாக மாற்றப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். இதுவரை கால இழப்பும், இரத்தமும் எந்தப் பெறுமானமும் இன்றி அழிக்கப்பட்டு விட்டது.

சாட்சியின்றி நந்திக்கடலில் கரைக்கப்பட்ட அப்பாவிகளின் சாம்பல்கள் போக எஞ்சிய மறுபகுதி பேரினவாத மகிந்த அரசினதும், ஏகாதிபத்தியங்களதும், வல்லரசுகளினதும் கோரப்பிடிக்குள் சிக்குண்டு தவிக்கிறது.

ஒடுக்கு முறைக்கு எதிராக, மனித குலத்தின் விடுதலைக்காகப் போர்க்களத்தில் மரணித்து மண்ணோடு மண்ணாகிப் போன ஒவ்வோர் போராளிகளதும் மரணத்தைக் கொச்சைப்படுத்தி அவமதிக்கின்ற ஒரு கூட்டம் இன்றும் எமக்கு மத்தியில் தமது பிழைப்புவாத தேசிய வியாபாரத்தை நடத்தி வருகின்றது. தியாகமும், வீரமும் அரப்பணமும் இவர்களைப் பொறுத்தவரைக்கும் வெறும் வியாபாரப் பொருள்.

80 களில் இந்திய உளவுத்துறையின் காலடியில் முகாம்களை அமைப்பதிலிருந்தும், இந்திய அரசின் இராணுவப் பயிற்சியையும், வாரி இறைக்கப்பட்ட பணத்தையும் நம்பி உருவான விடுதலப் போராட்டம் நந்திக்கடலில் இரத்தமும் சதையுமாகக் கரைக்கப்படுவதில் முடிவுற்றத்து. இந்தியா சுய நிர்ணய உரிமையை அங்கிகரிக்க வேண்டும் என்றது. பலம் மிக்க இராணுவம் தமிழர்களுக்குத் தேவை எனக் குரல் கொடுத்தது. இராணுவத்தை அமைத்துக்கொள்ள முகவர்களூடாகவும் அரசியல் பிரமுகர்கள் ஊடாகவும் கோடி கோடியாகப் பணத்தை வாரி இறைத்தது. இந்த வியாபாரிகள் எல்லாம் தமிழ் மக்கள் மத்தியில் தெய்வமாகப் போற்றப்பட்டனர்.

பலி கொடுப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட ஆடுகளைப் போல் போராளிகள் சாரிசாரியாக அழிக்க்ப்பட்டனர். மக்களும் கூடத்தான். எல்லாமே முள்ளி வாய்க்காலில் முடிந்துபோன பயங்கரங்கள் நிறைந்த கனவாகிப் போனது.

80 களில் இந்திய அரசை நம்ப வேண்டாம் என்று கோரியவர்கள் துரோகிகளாகத் தூற்றப்பட்டனர். இந்திய அரசியல் வியாபாரிகளிடமிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று போராடியவர்கள் அன்னியப்படுத்தப்பட்டனர். ஈழத்தில் அன்றிருந்த அத்தனை அரசியல் வியாபாரிகளுக்கும் இந்தியா தீனிபோட்டது. ஒரு புறத்தில் உறுதியான அரசியலற்ற தேசிய வாதிகளை உள்வாங்கிக்கொண்டு மறு புறத்தில் அவர்களை அழிப்பதற்கான அத்தனை பொறிமுறைகளையும் வகுத்துக்கொண்டது.

மக்கள் குறித்தும் மக்களை அணிதிரட்டிப் போராட வேண்டும் என்பது குறித்தும் பேசிய ஒவ்வொரு மனிதனையும் நிராகரித்த விடுதலை இயக்கங்கள் கோலோச்ச ஆரம்பித்தன. இந்திய அரசின் இராணுவ மற்றும் பண உதவியால் வீங்கிப் பருத்த விடுதலை இயக்கங்கள் தம்மிடம் போதிய பலம் குவிந்திருப்பதாக மார்தட்டிக்கொண்டன. மக்கள் பலம் தேவையற்றது என நிராகரித்தன. மக்க்கள் போராட்டங்களை நிராகரித்த ஆயுதபலமும் பணபலமும், போராட்டத்தின் தவறான வழிமுறைகளை விமர்சித்தவர்களை தனிமைப்படுத்தியது. விடுதலை இயக்கங்களால் அவர்கள் துரோகிகளாக ஒதுக்கப்பட்டனர். சித்திரவதைகளுக்கு உட்ப்படுத்தப்பட்டனர். கொன்று குவிக்கப்பட்டனர். மக்களைப் பற்றிப் பேசிய ஒரேகாரணத்திற்காக மண்ணோடு மண்ணாகிப்போன ஆயிரக்கணக்கானவர்கள் இன்று வரைக்கும் துரோகிகள் பட்டியலிலிருந்து வெளியே வந்தாகவில்லை.

முள்ளிவாய்க்காலில் முடிந்துபோன அழிவுகளுக்கு அத்திவாரமிட்ட அதே பிழைப்புவாதிகளின் அரசியல் இன்னுமொரு அழிவிற்கு மக்களைத் தயார்படுத்துகிறது. உறுதியான மக்கள் பின்புலமற்ற தேசியவாத்தை எவ்வாறு இந்தியா தனது அழிவு நோக்கங்களுக்காகப் பயன்படுத்த உளவாளிகளையும், பிழைப்புவாதிகளையும் உருவாக்கியதோ, அதைவிடப் பலமடங்கு வேகத்தில் அமரிக்கா புதிய உளவாளிகளையும் வியாபாரிகளையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

சீக்கியர்களதும், கஷ்மீரிகளதும், நாகா மக்களதும் தன்னுரிமையை அங்கீகரிக்க மறுக்கின்ற, அயல் நாடுகளை ஆக்கிரமிக்க முற்படுகின்ற இந்திய அரசு ஈழத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஆதரிகாது என்று முற்போக்கு ஜனநாயக சக்திகளால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் மிகவும் மூர்க்கத்தனமாக முறியடிக்கப்பட்டன.

உலகம் முழுவதும் தனது கொலை வெறியைத் தீர்த்துக்கொள்ளும் அமரிக்கா கால்வைத்தை அத்தனை நாடுகளிலிலும் அழிவைமட்டுமே விட்டுச்சென்றுள்ளது. உலகில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை அழிப்பதற்காக கவும் ஆக்கிரமிப்பதற்காகவும் அமரிக்காவின் திட்டமிட்ட மனிதப்படுகொலைகள் எண்ணிலடங்காதவை. மத்திய கிழக்கில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் சர்வாதிகாரிகளை உருவாக்குவதும் அவர்களையே காரணமாக முன்வைத்து நாடுகளை ஆக்கிரமிப்பதும் அமரிக்க அரசின் உலக ஜனநாயகம்.

என்று மத்திய கிழக்கில் எண்ணைவளம் கண்டுபிடிக்கப்பட்டதோ அன்றிலிருந்து அந்த நாடுகளைப் போர்க்களமாக மாற்றி சாரி சாரியாக மக்களைக் கொன்றொழித்த உலக மக்களின் எதிரி அமரிக்க ஏகபோகம் இன்று ஆசியாவையும் ஆபிரிக்காவையும் குறிவைத்திருக்கிறது.

இன்று வரைக்கும் அமரிக்கா சார்ந்த மேற்கு உலகத்தின் அடிமை போன்றே இந்த நாடுகள் செயற்பட்டன. இன்று உருவாகிவரும் ஆசிய வல்லரசுப் போட்டியில் தனது முழுமையான ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்வதற்காக அமரிக்காவின் ஆசியத் தலையீடு என்றுமில்லாத அழிவுகளை ஆசிய நாடுகளில் குறிப்பாகத் தெற்காசிய நாடுகளில் ஏற்படுத்த வல்லது.

தேர்தலில் போட்டியிட்ட போதே அமரிக்காவின் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் மீதான ஆக்கிரமிப்புக் கொள்கையை தனது தேர்தல் திட்டத்தில் பிரதிபலித்தவர் ஒபாமா. இந்தியாவுடன் நட்புறவைப் பேணிக்கொண்டே பாகிஸ்தான் உட்பட இந்தியாவைச் சூழவர உள்ள நாடுகள் மீதான முழுமையான அரசியல் பொருளாதார இராணுவ ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே இவர்களின் அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளது.

80 களின் இந்தியா ஈழப் போராளிகளுக்குப் பயிற்சி வழங்கிய வேளையில் அதற்கு எதிரான கருத்தியல் போராட்டங்களை நடத்தியவர்கள் அன்னியப்படுத்தப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து பங்களாதேசைப் பிரித்தது போன்று தமிழ் ஈழத்தையும் பிரித்துத் இந்தியா தரும் எனக் கனவு கண்டனர்.

இதன் மறு பிரதியாக இன்று அமரிக்கா ராஜபக்சவைத் தண்டிக்கும் என்றும் ஈழத்தைப் பிரித்துத் தரும் என்றும் பிழைப்பு வாதிகள் கனவு காணுமாறு கோருகின்றனர்.

இரத்தமும், இழப்புமாக இல்லாமல் போன விடுதலைப் போராட்டம் முள்ளி வாய்க்காலில் அவலங்களை மட்டுமல்ல பிழைப்பு வாதிகளையும், மன நோயாளிகளையும், உளவாளிகளையும், கோழைகளையும் கூடத்தான் விட்டுச் சென்றிருக்கின்றது. கே.பி என்ற உளவாளி இனப்படுகொலை அரசுடன் இணைந்து இன்றைய அழிவுகளையும் இனச் சுத்திகரிப்பையும் செயற்படுத்துகிறார் என்றால், விடுதலை என்ற பெயரில் அமரிக்காவினதும் இந்தியாவினதும் ஐரோப்பிவினதும் உளவாளிகள் நீண்ட கால நோக்கில் அழிவரசிலில் பிரதி நிதிகள் ஆகியுள்ளனர். கேட்டால் இன்னும் உயிருடன் உலாவரும் ‘தேசியத் தலைவர்’ போராட்டத்தைத் தங்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றதாகப் படம் காட்டுகிறார்கள்.

அழிக்கும் வல்லரசுகளின் உளவாளிகளிடம் நமது தேசத்தின் தலைவிதி ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை எதிர்காலச் சந்ததி தெரிந்து கொண்டால் தமது தந்தையர்களுக்காக அவமானப்படும்.

ஜெனிவாவில் அமரிக்கா இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுகிறது என்றால் அத் தீர்மானத்தை ஆதாரமாக முன்வைத்து உலகமெங்கும் பரந்திருக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகளுடன் இணைந்து கொள்வதற்கான பிரச்சாரங்களை மேற்கொள்வதே மக்கள் பற்றுள்ளவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டிய அரசியல்.

பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிரான எமது போராட்டத்தில் இன்றைக்கு வரை நாம் தொட்டுப்பார்க்காத பக்கம் ஒன்று இருக்கிறது என்றால் அது மட்டும் தான்.

இன்றைக்கு வரை உலகின் போராடும் எந்த அமைப்புடனாவது குறைந்தபட்ச உடன்பாட்டிற்கு வந்திருகிறோமா அல்லது எங்காவது ஒரு மூலையில் ஆதரவு அறிக்கையாவது வெளியிட்டிருக்கிறோமா என்றால் இல்லை என்று கூறுவதற்கு யாரும் தயங்கமாட்டார்கள்.

ஏகாதிபத்திய அடிவருடிகளாகவும் உளவாளிகளாகவும் உருவான புலம் பெயர் “தமிழ்த் தேசிய” தலைமை ஒடுக்கு முறக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை மிக நீண்ட காலத்திற்குப் பிந்தள்ளும் அபாயகரமான சூழல் காணப்படுகிறது.

இந்த அரசியல் மூன்று முக்கிய தளங்களில் செயற்படுகின்றது:

-ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடும் நட்பு சக்திகளிடமிருந்து தமிழ்ப் பேசும் ம்க்களை அன்னியப்படுத்தும்.

-அமரிக்காவின் அழிவு அரசியலைத் தெற்காசியாவில் வலுப்படுத்தும்

-போராடத் துணியும் இலன்கை மக்களை ஏகாதிபத்தியங்களுக்குக் காட்டிக்கொடுக்கும்.

பிரித்தானியாவிலும் அமரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் உலகில் படுகொலைகள் நிகழும் போது தெருவில் இறங்கிப் போராடிய யாரும் வன்னிப்படுகொலைகள் நிகழும் போது கண்டுகொண்டதில்லை.

ஈழப் போராட்டத்தை அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய அதிகாரவர்க்கத்தின் நலன்கள் சார்ந்த போராட்டமாகவே அவர்களுக்கு அறிவித்திருந்தோம். மேற்கின் அரசுகளுக்கு எந்த அழுத்தங்களும் வழங்கப்படவில்லை. இனப்படுகொலைக்கு பிரித்தானிய அரசு ஆயுதங்கள் வழங்கியத்தைக் கூட கண்டிக்கவோ அழுத்தம் வழங்கவோ துணிவற்றிருந்தன தமிழ் மேட்டுக் கூடித் தலைமைகள். ஒபாமாவிற்கான தமிழர்கள், கொன்சர்வேட்டிவிற்கான தமிழர்கள், லேபர் கட்சிக்கான தமிழர்கள் என்று ஏகாதிபத்தியங்களின் அடிமாட்டு அடிமைகளாகவே தம்மை அறிவித்துக்கொண்டனர்.

புலியை முறத்தால் அடித்து விரட்டியாதான் புற நானூற்றுக் கதைகளை எல்லாம் கூறி மார்தட்டிக்கொள்ளும் தமிழர்கள் அவமானகரமாக அடிமைகளான வரலாற்று அசிங்கம் இது.

இலங்கையில் தமது உரிமைக்காக இனிமேல் மக்கள் போராடும் போது ஏகாதிபத்திய அடிமைகளுக்கும் உள்வாளிகளுக்கும் எதிரான போராட்டத்தைச் சமாந்தரமாக முன்னெடுக்கவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மக்கள் போராடும் போதெல்லாம் புலம் பெயர் நாடுகளிலும் உலகிலும் போராடும் மக்களோடு இணைந்து இனப்படுகொலைக்கு எதிரான பொது அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் புதிய முற்போக்குத் த்லைமை ஒன்று அவசியமாகிறது. ஏகாதிபத்தியம் குறித்த அறியாமையிலிருப்போரை அரசியல் மயப்படுத்துவதும் அதன விசுவாசிகளை எதிர்த்துப் போராடுவதும் இன்றைய காலத்தின் அவசர தேவை.

Exit mobile version