Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக மீனவர்களோடு இலங்கை மீனவர்களுக்கும் வில்லனாகும் ராஜபக்சே அரசு !

இலங்கை கடலில் மீன் பிடிக்கும் உரிமையை ஒரு சீன நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தில் இலங்கை முதலீட்டுக் கழகத்தின் சார்பில் ராஜபக்சே அரசின் அமைச்சர் கையெழுத்திட்டிருக்கிறார். அந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் தனிஉரிமை கடற்பகுதியில் சீன நிறுவனத்தின் கப்பல்கள், இலங்கை கொடியுடன் மீன் பிடிக்க அனுமதிக்கப்படும்.

டிக்கோவிடா மீன்பிடி துறைமுகம் (பகலில்)

இதற்கு முந்தைய உடன்படிக்கையின்படி இலங்கையின் தனிஉரிமை கடற்பகுதியில் மீன் பிடிக்க வந்த இரண்டு சீனக் கப்பல்களை இலங்கை கடற்படை திருப்பி அனுப்பி விட்டது. இப்போது பேரம் சரியாக படிந்து, இலங்கை கொடியுடன் மீன் பிடித்துக் கொள்ளலாம் என்று சீன நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிடிக்கப்படும் மீனில் 30% நேரடியாகவும், 60% இலங்கை-சீன கூட்டு நிறுவனம் மூலமாகவும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும். அதாவது 90% சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும். 60% மீன்களை ஏற்றுமதி செய்யவுள்ள இலங்கை நிறுவனம் அமைச்சரின் பினாமிக்கு சொந்தமானது.

10% மீன்கள் கிலோ $1 என்ற விலையில் இலங்கை மீன்துறை கழகத்துக்கு விற்கப்படும். இலங்கை மீன்துறை கழகத்துக்கு எந்த வகையான மீன்கள் கொடுக்கப்படும் என்று வரையறுக்கப்படவில்லை. அதாவது கிடைப்பதில் பலனற்ற அல்லது விலை குறைந்த சிறிய மீன் வகைகளை மீன் துறை வாரியத்திடம் கொடுத்து விட்டு மதிப்பு அதிகமானவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படலாம்.

சீன நிறுவனம் தொடக்கத்தில் 150 அடி நீளமுள்ள நான்கு மீன்பிடி கப்பல்களை பணிக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. மொத்தத்தில் 40 கப்பல்கள் வரை பயன்படுத்தப்படும். இதன் மூலம் முதல் ஆண்டில் 1.1 அமெரிக்க டாலர்கள் (இலங்கை ரூபாய் 130 கோடி) வருமானம் கிடைக்கும். ஆரம்பத்தில் பயன்படுத்தப்படவுள்ள நான்கு படகுகளும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலை எதிர் நோக்கி இலங்கைக்கு தெற்கே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

“அன்னிய கப்பல்களை தனிஉரிமை பொருளாதார மண்டலத்தில்தான் மீன்பிடிக்க அனுமதித்திருக்கிறோம். இலங்கை கடல்

நெதர்லாந்து முதலீட்டில் ஜொலிக்கும் டிக்கோவிடா (இரவில்)

பகுதியில் மீன் பிடிக்க அனுமதிக்கவில்லை” என்கிறார் முதலீட்டு வாரிய அதிகாரி. ஆனால், “இலங்கையில் பதிவு செய்யப்பட்டு இலங்கை கொடி பொருத்தப்பட்ட கப்பல்கள் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்க எந்தத் தடையும் இல்லை” என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதாவது, சீன நிறுவனம் தனது கப்பல்களில் இலங்கைக் கொடியை பொருத்திக் கொண்டால் இலங்கையின் கடல் வளத்தை கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்ற அனுமதியை ராஜபக்சே அரசு வழங்கியிருக்கிறது.

இப்போது தனிஉரிமை பொருளாதார பகுதியில் 42% மீன்கள் ஐரோப்பிய நாடுகளால் அறுவடை செய்யபடுவதாகவும், அதில் 60% இலங்கைக்கு வந்தாலும் அது லாபம்தான் என்றும் அரசு அதிகாரி கூறியிருக்கிறார். சீன மீன்பிடி கப்பல்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ள டிக்கோவிடா மீன்பிடி துறைமுகத்திற்கு தமது பிடிப்பை கொண்டு வரும் என்றும், அங்கு ஏற்றுமதிக்கான பதப்படுத்தல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

தலைநகர் கொழும்பிலிருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும் டிக்கோவிடா மீன்பிடி துறைமுகத்தை ஜனாதிபதி ராஜபக்சே கடந்த ஜனவரி மாதம் திறந்து வைத்தார். இலங்கை மீனவர்களுக்கு உள்கட்டுமான வசதியை மேம்படுத்துவதற்காக நெதர்லாந்து அரசு அளித்த குறைந்த வட்டியிலான 43 மில்லியன் யூரோ கடனில் நெதர்லாந்தின் பிஏஎம் நிறுவனம் இந்த நவீன துறைமுகத்தை உருவாக்கியிருந்தது. இலங்கையின் முன்னேற்றத்துக்காக அன்னிய நாடுகள் செய்யும் நிதி உதவிகள் பன்னாட்டு நிறுவனங்களின் வணிக நலன்களுக்காகவே பயன்படுகின்றன என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளுடனான போர் நடந்த காலத்திலும் பின்னரும் கூட கடலில் மீன் பிடிக்கப் போகும் தமிழக மீனவர்களை சுடுவது, அவர்களது வலைகளை அறுப்பது, படகுகளை சேதப்படுத்துவது என்று இலங்கை கடற்படையினர் அடாவடி செய்து வந்தனர். போராளிகளை தடுக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழகத்திலிருந்து எந்த உதவியும் புலிகளுக்கு கிடைத்துவிடக்கூடாது என்று பயமுறுத்துவதற்காகவும் இலங்கை கடற்படை இத்தகைய நடவடிக்கைகளை செய்து வந்தது. இதற்கு இந்திய அரசின் ஒப்புதலும் இருந்தது.

ஈழப் போர் முடிந்த பிறகு, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிப்பதால் இலங்கை மீனவர்களின்

டிக்கோவிடா துறைமுகத்தை திறந்து வைக்கும் ராஜபக்சே (ஜனவரி 2013)

வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றன என்ற பெயரில் இலங்கை அரசு தாக்குதல்களை தொடர்ந்தது. தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து சுடுவது போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு தமிழக மீனவர்களை தாக்குவது, படகுகளை சேதப்படுத்துவது, இறுதியில் கைது செய்து இலங்கைக்கு கொண்டு போவது என இலங்கைப் படையினர் தொடர்ந்து வருகின்றனர். சிங்கள இனவெறி ராஜபக்சே அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்களும், பொதுக்கருத்தும் உருவாகிவருவது தோற்றுவிக்கும் வெறுப்பிலும் கூட இந்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

அதே நேரம் இலங்கையிலும், குறிப்பாக ஈழத்தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களிடமும் அவர்களது நலனுக்காகத்தான் இத்தகைய தாக்குதல்கள் செய்து வருவதாக இலங்கை அரசு நடித்தது. அவர்களும் அதை நம்பியிருக்கக் கூடும்.

இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கைகள் தம் நாட்டு மீனவர்களின் நலனுக்காக இல்லை என்பதை சீன ஒப்பந்தம் அம்பலப்படுத்தியிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் மீன் பிடிப்பதற்கு வசதி செய்து தருவதற்குத்தான் என்பதையும் இந்த ஒப்பந்தம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

இலங்கையின் கடற்பகுதியிலும் அதைச் சுற்றிய பன்னாட்டு கடற்பகுதியிலும் மீன் பிடிக்கும் உரிமையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுப்பதுதான் இலங்கை அரசின் நோக்கம். அத்தகைய ஒப்பந்தங்களின் மூலம் இலங்கையின் தரகு முதலாளிகளும் லாபம் ஈட்டுகின்றனர். மீன்பிடி துறைமுகத்தை இயக்குவது அன்னிய நிறுவனம், மீன் பிடிப்பது அன்னிய நிறுவனம், மீனை நுகரப் போவது அன்னிய நாடு, அழியவிருப்பது இலங்கை மீனவர்களின் தொழில். இனி சீனக்கப்பல்கள் மட்டுமல்ல இந்தியக் கப்பல்களுக்கும் கூட அத்தகைய அனுமதி தரப்படலாம்.

இலங்கை அரசால் பாதிக்கப்படுவது தமிழக மீனவர்கள் மட்டுமின்றி இலங்கையைச் சேர்ந்த சிங்கள, ஈழத் தமிழ் மீனவர்களும்தான் என்பதை அவர்களும் உணர்வார்கள். அதன் முன்னறிவிப்பாக இலங்கை அரசு சீன நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்திற்கு எதிராக போராடப் போவதாக இலங்கையின் மீன்பிடி சங்கங்கள் அறிவித்திருக்கின்றனர்.

நன்றி : வினவு

Exit mobile version