Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக பாஜகவின் தேர்தல் வியூகம் இதுதான்!

இதுவரை தமிழகத்தில் பாஜக காலூன்றியதில்லை.  கன்னியாகுமரி காங்கிரஸ், திமுக கூட்டணி தனித்தனியாக போட்டியிட்டால்  கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே பாஜக வெல்லும். இதுதான் நிலை. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் நிலவும் குழப்பங்களை வயப்படுத்தி பாஜக வெல்ல நினைக்கும் நிலையில், இப்போது அதன் வியூகங்கள் மாறி வருவதை அவதானிக்க முடிகிறது.

பாஜக ஏன் ஒரு மாநிலத்தில் காலூன்ற முடியாமல் போகிறது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்தி பேசும் வட இந்திய மாநிலங்கள்தான் அதிலும் குறிப்பாக உத்தரபிரதேசம், ராஜஸ்தான், உட்பட இந்தி பேசி மாநிலங்களில் பாஜக இந்து அரசியல், ராம ராஜ்ஜியம் போன்ற மத உணர்ச்சியைத் தூண்டி தன்னை வலுப்படுத்திக் கொண்டது. ஆனால்,  இதே பாணி இந்தியாவில் பல மாநிலங்களில் எடுபடவில்லை. காரணம் ராமர் வழிபாடு  எல்லா மாநில மக்களும் வழிபடவில்லை. தமிழகத்தில் ராமர் வழிபாடு என்பது பெரும்பான்மை மக்களால் கடைபிடிக்கப்படும் ஒன்று அல்ல.  அதனால் இங்கு முருகனை கையில் எடுத்தார்கள். அதையும் திராவிட இயக்கங்களுக்கு எதிராக முன்னிறுத்தினார்களே தவிற வட இந்தியாவில் முஸ்லீம்கள் உட்பட சிறுபான்மை மக்களுக்கு எதிராக முருகனை முன்னிறுத்தவில்லை. காரணம் தமிழகத்தில் உள்ள சமூகச் சூழல் வேறு.இங்கு குமரி மாவட்டம், திருப்பூர் போன்ற பகுதிகளைப் போல மத உணர்வை தூண்டி பிளவு படுத்த இயலவில்லை. அந்த முயற்சிகள் தொடர்ந்து நடந்தாலும் அது இப்போதைக்கு பலன் கொடுக்க வாய்ப்பில்லை.

தேர்தல் அரசியலில் வெல்ல அதிமுகவையும், ரஜினியையும் , தனித்தனியாக போட்டியிடும்  கமல்,நாம் தமிழர் கட்சியையும் நம்பியே பாஜக களமிரங்குகிறது. இவர்கள் அனைவரும் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்குகளைப்  பிரிப்பார்கள். திமுக வெல்லாமல் போகும் அதை வைத்து அதிமுகவை உடைத்து ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் தனது கூட்டணிக் கட்சியான அதிமுகவை பலவீனப்படுத்தும் பிகார்  பாணி அரசியலையும் தமிழகத்தில் முன்னெடுக்கிறது. பாஜகவின் தேசிய ஆலோசர்களில்  ஒருவரான துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அதிமுகவில் உள்ள பலரோடும் பேசி அவர்களை ரஜினியின் கட்சிக்கு இழுக்க பேசி வருகிறார்.

பாஜகவின் இந்த தேர்தல் நோக்கமே தங்களை மூன்றாவது பெரிய கட்சியாக நிலை நிறுத்திக் கொள்வதே. எப்படி மேற்குவங்கத்தில் 18 தொகுதிகளை கடந்த தேர்தலில் பிடித்தார்களோ அப்படி 25 இடங்களில் தமிழகத்தில் வெல்ல வேண்டும் என்பதே இலக்கு. முயன்றவரை கட்சிகளை பலவீனமாக்கி வாக்குகளை சிதறடித்து வெல்ல நினைக்கிறது.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழக கட்சிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்கள். அந்த ஆலோசனையில் அனைத்துக் கட்சிகளுமே பங்கேற்று ஒரே கட்டமாக  தமிழகத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்க. பாஜக மட்டும் மூன்று கட்டங்களாக தமிழக தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. அது போல 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் என்ற தேர்தல் கமிஷனின் திட்டம் ஆளும் கட்சிக்கு சாதகமான ஒன்றாகவே உள்ளது. பிகார் தேர்தலில் தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாஜக மக்கள் செல்வாக்கில் அல்லாமல் தேர்தல் கமிஷன், பிற கட்சிகளின் உதவியோடு வெல்வதை தன் தேர்தல் பாணியாகக் கொண்டுள்ளது.

Exit mobile version