Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழத்திலிருந்து தமிழகத்தைத் தனிமைப்படுத்தும் முயற்சி – அவதூறுகள் மீதான எச்சரிக்கைக் குறிப்பு : அஜித்

மேற்கின் இஸ்லாமியர்களுக்கு எதிரான யுத்தம் என்பது இன்னும் ஓய்ந்துவிடவில்லை. அமரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட வேளையில் அந்த யுத்தம் உச்ச நிலையை அடைந்திருந்தது. அமரிக்காவில், இஸ்பைனில், பிரித்தானியாவில், இந்தோனேசியாவில், இந்தியாவில், பாகிஸ்தானில், பிரான்சில் என்று உலகின் ஒவ்வொரு சந்திகளிலும் இஸ்லாமியர்கள் அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள்.

சாமுவேல் ஹன்டிங்கட்னின் நாகரீங்களின் மோதுகை என்ற கோட்பாடு அமரிக்க அதிகாரவர்க்கத்தின் துணையோடுதான் உருவாக்கப்பட்டிருந்தது என்பதை இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் நிறுவிக்கொண்டிருந்தன.

மதம் சார்ந்த பண்பாடுகளின் வழியே சர்வதேசப் பொதுமைப்பாட்டினைக் கொண்டிருந்த ஒரே சமூகமாக அவர்கள் கருதப்ப்பட்டனர். அமரிக்க அணி சோவியதின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனது எதிரியை தானே திட்ட்டமிட்டு கட்டமைத்துக் கொண்டது. இஸ்லாமியர்கள் எதிரிகளாக்கப்பட்டனர். உருவமைக்கப்பட எதிரியைக் காரணமாக முன்வைத்து தனது பாதுகாப்புச் செலவீனங்களை அதிகரித்துக்கொள்ளவும், நாடுகளை ஆக்கிரமிக்கவும் தார்மீக நியாயத்தைத் தேடிக்கொண்டடன மேற்கு நாடுகள்.

அடக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்த ஒவ்வொரு இஸ்லாமியரும் பயங்கரவாதியாகவும் அடிப்படை வாதியாகவும் சித்தரிக்கப்பட்டான். அடிப்படை வாதிகளின் தவறுகளைத் தனக்கு வாய்ப்பாக்கிக் கொண்ட அமரிக்க அணி, மொத்த இஸ்லாமியச் சமூகத்தையும் அடிப்படை வாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் உருவகப்படுத்தி அவர்கள் மீதான யுத்ததைக் கட்டவிழ்த்துவிட்டது. ஆக, மேற்கு நாடுகள் எதிரிகளை உருவாக்கிக் கொண்டார்கள், எதிரிகளைப் பலமடையாமல் அழிப்பதற்கு அவர்களுக்கு ஒரு குறித்த அடையாளத்தை அதாவது அடிப்படை வாதிகள் என்ற அடையாளத்தை வழங்கித் தனிமைப்படுத்தி அழிக்க முற்பட்டனர். இறுதியில் இஸ்லாமிய சமூகத்தின் நியாயமான ஒவ்வொரு எதிர்ப்புக் குரல்களும் அடிப்படை வாதிகள் என்ற போர்வையில் நசுக்கப்பட்டன.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் பெரும் பகுதியினர் தாம் ஒடுக்கப்பட்ட மக்கள் என உணர ஆரம்பித்துள்ளனர். இவர்களின் மத்தியிலிருந்து இலங்கை – இந்திய அரசுகளின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு எதிரான உணர்வுகள் பல்வேறு தளங்களில் செயல்வடிவம் பெற ஆரம்பித்துள்ளன. இவர்களெல்லாம் இந்தியாவும், அமரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், ஏன் ஐக்கிய நாடுகளும் கூட இறுதிவரை நம்பவைத்து ஏமாற்றியதை கண்முன்னே பார்த்தவர்கள்.

தமிழகத்தில் சமூகபற்று மிக்க மனிதர்களெல்லாம் தமது மறு எல்லையில் சாரி சாரியாக மக்கள் கொலைசெய்யப்படுவதற்கு தாம் சார்ந்த அரசுகளே காரணம் என அறிவிக்கப்பட்டவர்கள். அரச அதிகாரங்கள், வாக்குக் கட்சி அரசியல்வாதிகள், சாமியார்கள், மதகுருக்கள் என்று சமூகத்தை ஆதிக்கம் செலுத்துகின்ற ஒவோரு கூறுகளும் எமாற்றியதை கண்டுகொண்டவர்கள். இதனால், தாம் ஒடுக்கப்பட்டவர்கள் என உணர்ந்துகொண்டவர்கள்.

தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலுள்ள அரசியல் வியாபாரிகள், உளவாளிகள், லும்பன்கள் போன்ற பிரிவினர் தவிர்ந்த அனைவருமே தம் மீதான ஒடுக்குமுறையைக் கண்கூடாகக் கண்டவர்கள். ஆக, இவர்களிடையேயான இணைவு தெற்காசியாவின் புதிய சக்தியாக உருவெடுக்கும் என அச்சம் கொள்கிறார்கள் அதிகாரவர்க்கத்தினர். ஒடுக்குமுறையை உணர்ந்து கொண்டு அதனை எதிர்கொள்வது குறித்துச் சிந்திக்க ஆரம்பித்திருக்கும் தமழ்ப் பேசும் மக்களைப் பிளவு படுத்துவதும் அவர்களுக்குப் பயங்கரவாத அடையாளத்தை வழங்குவதும் இன்று இலங்கை இந்திய அரச உளவாளிகளும் அவற்றின் முகவர்களும் பிரச்சார ஊடகங்களும் மேற்கொள்ளும் நடவடிக்கையாக அமைகிறது.

இலங்கை அரசிற்கு எதிரானவர்களெல்லாம் புலிகள் என்ற சமன்பாட்டை அவர்கள் உருவாக்க முனைகிறார்கள். அதன் வழியாக புலிகளின் தவறுகளையெல்லாம் அரசை எதிர்க்கும் அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகள் மீது சுமத்த முனைகிறார்கள். இலங்கை அரசின் வெளிப்படையாகத் தெரியும் அடக்குமுறைகளுக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்படும் போதும், போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் போதும், அவர்கள் யாராக இருந்தாலும் சரி புலிகள் என்ற முத்திரையைப் பதித்து அன்னியப்படுத்த முயல்கிறார்கள். இந்த முயற்சியை ஆரம்பிப்பது அரசும் அதன் ஊதுகுழல்களும்; பின் தொடர்வது லும்பன்களும் அரசியல் வியாபாரிகளும் என்ற ஒழுங்கு முறையைக் கூட இங்கு காணலாம். இதனூடாக அரச வலைப்பினா சாதிக்க விரும்புகின்ற இரண்டாவது பிரதான விடயம் என்பது பிளவுகளை உருவாக்குதலாகும்.

குறிப்பாகத் தமிழ் நாட்டில் வாழும் ஒடுக்குமுறையை உணர்ந்துகொண்ட போராட்ட சக்திகளை புலிகளின் மையப் பகுதியாக அடையாளப்படுத்தி அவர்களை குழப்பவாதிகளாக சித்தரிக்க முனைவது என்பது  இலங்கை –  இந்திய அரசுகளின்  தந்திரோபயமாக அமைகிறது. இவ்வாறான ஒடுக்கு முறைக்கு எதிரான உணர்வுகளின் அடிப்படையிலான இணைவைச் சீர்குலைப்பதற்காக அவதூறுகளை உருவாக்குதல், அவற்றைப் பரப்புதல், அழிவுகளின் ஊற்றுமூலம் இலங்கை அரசிற்கு எதிரானவர்கள் என பரப்புரை செய்தல், அழிவை ஏற்படுத்திய புலிகளின் தொடர்ச்சி என தனிமைப்படுத்தல் போன்ற முக்கிய நிகழ்வுகளை நாம் கண்டுகொள்ளலாம். அண்மையில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், முற்போக்கு அமைபுக்கள், தனி நபர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களின் பின்புலத்தில் இலங்கை-இந்திய அரசுகளின் திட்டமிடலை உய்த்தறிவது கடினமான ஒன்றல்ல.

எது எவ்வாறாயினும் இவற்றை எதிர்கொள்ளும் வலிமையும் கோட்பாடும் மிக அவதானமாக உருவாக்கப்பட வேண்டும்.

Exit mobile version