அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் புதிய வேட்டையின் இப்போது தேவைப்படுவது கனிமங்கள்……எங்கெல்லாம் கனிமங்கள் கண்டு பிடிக்கப்படுகிறதோ அந்த இடம் அமெரிக்காவிற்கு சொந்தமாக்கப்பட்டு விடும். இதுதான் ஆசிய நாடுகள் குறிப்பாக பாகிஸ்தான், ஆப்கான், இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகம் கனிம கூடாரம்
இல்மனைட், கார்நெட், போன்ற கனிமங்கள் ஏற்கனவே தமிழக கடலோரங்களில் கண்டெடுக்கப்பட்டு அதை ஏகாதிபத்தி நாடுகள் சத்தமில்லாமல் கொள்ளையடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அது போல உள்ளூர் தரகு முதலாளிகளும் இந்த கனிமங்களை எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் அடைந்து வருகிறார்கள். வி.வி.மினரல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் வைகுண்டராஜன் தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுந்த டைட்டானியம் சர்ச்சையை நாம் மறந்திருக்க முடியாது டாடா நிறுவனம் தமிழக டைட்டானியம் வளங்களை குறிவைத்து நிலங்களைக் கையகப்படுத்துவதில் வைகுண்டராஜனுக்கும் டாடாவுக்கும் யார் கனிமங்களை கொள்ளையடிப்பது என்ற பிரச்சனையில் தற்காலிகமாக டாடாவிடம் இருந்து டைட்டானியம் தப்பியது. ஆனால் வைகுண்டராஜன் இன்றுவரை தன்கொள்ளையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
பிளாட்டினப் படிமங்கள்
இந்தியாவிலேயே முதன் முறையாக பிளாட்டினப் படிவங்கள் தமிழகத்தின் கோவை, நாமக்கல் மாவட்டங்களில் அபரிமிதமான அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுடன் இணைந்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று சென்னையில் கையெழுத்தானது.சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவரது அறையில் நடைபெற்ற இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கொல்கத்தாவில் உள்ள இந்திய புவியியல் ஆய்வுத்துறை டைரக்டர் ஜெனரல் என்.கே.தத்தா, தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் க.மணிவாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அப்போது, சட்ட அமைச்சர் துரைமுருகன், சுரங்கத் துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர், தமிழக தொழில்துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகம், தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் பொதுமேலாளர் வி.மனோகரன் தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் தங்க கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.
இது தொடர்பாக சாந்த ஷீலா நாயர் செய்தியாளர்களிடையே பேசும் போது ” தமிழகத்தில் கடந்த 2,3 ஆண்டுகளாக பிளாட்டினம் கனிமத்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு கனிம நிறுவனத்துக்கு, இந்திய புவியியல் துறை இப்பணியில் உதவி வருகிறது. இதில், நாமக்கல் மாவட்டம் சத்தம்பூண்டியிலும், மேட்டுப்பாளையத்திலும் பிளாட்டினம் படிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் மிக அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. சத்தம்பூண்டி பகுதியில் 27 சதுர கி.மீ. பரப்புக்கு பிளாட்டினம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல், மேட்டுப்பாளையம் பகுதியில் 5 சதுர கி.மீ. பகுதியில் பிளாட்டினம் உள்ளது.
ஆனால், இன்னும் 150 கி.மீ. பகுதியில் பிளாட்டினம் உள்ளது.தற்போது, 30 மீட்டர் ஆழம் மட்டுமே தோண்டியுள்ளோம். இன்னும் 200 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை தோண்டும்போது மிக அதிக அளவில் பிளாட்டினம் கிடைக்கக்கூடும். உலகில் தற்போது, தென்னாப்பிரிக்காவில்தான் அதிக அளவில் பிளாட்டினம் வெட்டியெடுக்கப்படுகிறது. உலகில் கிடைக்கும் 100 சதவீத பிளாட்டினத்தில் 70 சதவீதம் தென்னாப்பிரிக்காவில்தான் கிடைக்கிறது.இந்தியாவில் ஒரிசாவில் மட்டும் ஓரளவு பிளாட்டினம் கிடைத்து வருகிறது. ஆனால், தமிழகத்தில்தான் முதல்முறையாக மிக அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தமிழகத்தையே சேரும்.மத்திய அரசு, பிளாட்டினம் கண்டறிவதில் உதவி மட்டுமே அளிக்கும். பிளாட்டினம் இருக்கும் இடங்களில் கனிமத்தை வெட்டியெடுப்பதில் தனியாரை ஈடுபடுத்துவது, அதை விற்பனை செய்வது என அனைத்திலுமே தமிழக அரசுதான் முழுபங்கு வகிக்கும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் இப்போது கிடையாது. இன்னும் அந்த அளவுக்கு பணிகள் செல்லவில்லை என்றார்.
தனியாருக்கா?
ஆமாம் நிச்சயமாக எந்த ஒரு கனிமங்களையுமே தனியார் முதலாளிகள் விட்டு வைக்கமாட்டார்கள். அரசுக்கு வருவாய் என்று சொன்னாலும் தனியார் தாரளமயத்தின் பலனை அனுபவிக்கப் போவது முழுக்க முழுக்க பன்னாட்டு முதலாளிகளும் இந்தியப் பெரு முதலாளிகளும்தான். இந்தப் படிமங்களின் முழு உரிமையும் மக்களைச் சார்ந்ததே. அவர்களின் வாழ்வாதரங்களைப் பலியாக்கி நிலங்களை கையகப்படுத்துவதை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும். பொதுத்துறை நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் மக்களுக்கு முன்னுரிமை வழங்கி அரசு செய்ய வேண்டிய வேலை. தனியாரை இதில் அறிமுகப்படுத்தக் கூடாது.