Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழகத்தின் எழுச்சி மட்டுமே இந்தியாவின் கருத்தை மாற்ற வைக்கும் ஆற்றல் வாய்ந்தது:சென்னை கண்டனக் கூட்ட பதிவுகள்!

 “சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை” – என்ற தலைப்பில் “சேவ் தமிழ்ஸ்” கூகுள் குழுமத்தின் சார்பில்   கண்டனக் கூட்டம் செப். 12, சனிக்கிழமை சென்னையில்  நடைபெற்றது.

   ‘சேவ் தமிழ்ஸ்” கூகுள் குழுமம் தகவல் தொழில்நுட்பவியலாளர்களினால் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.  இலங்கைஇராணுவம் ஈழத் தமிழர்களை கண்மூடித்தனமாகக் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் இக்குழுமத்தின் சார்பில் மனிதச் சங்கிலி, பட்டினிப் போராட்டம் உட்பட பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன. பின்னர் வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவிக்கக் கோரியும் பேரணி போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

   ஈழத் தமிழர் நலன்களுக்காக நடத்தப்பட்ட பல நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, திசநாயகத்திற்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகால சிறை தண்டனையை உடனடியாக இரத்து செய்து அவருக்கு நிபந்தனை அற்ற விடுதலை வழங்கக் கோரியும், ஈழத் தமிழர்கள் அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குள் பன்னாட்டு ஊடகங்களை அனுமதிக்கக் கோரியும்,   இலங்கை அரசின் ஊடக ஒடுக்குமுறையைக் கண்டித்தும்   செப். 12, சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு சென்னை தியாகராய நகர் செ. தெ. நாயகம் பள்ளியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

   இக்கருத்தரங்கத்தில் இந்தியாவின் முன்னணி ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

   மூத்த ஊடகவியலாளரும், சன் டிவியின் முன்னாள் செய்தி ஆசிரியருமான ஏ. எஸ் பன்னீர்செல்வம் தனது உரையில் ‘திசநாயகத்தின் கைது ஒரு குறிப்பிட்ட ஏதேச்சையான நிகழ்வு அல்ல. அதற்கு பின்னணியில் இலங்கை அரசியல் சட்டத்தின் அமைப்பும் அது அரசுக்கு வழங்கியுள்ள உச்சபட்ச அதிகாரமும் இருக்கிறது. அந்த அரசியல் சட்டம் நீக்கப்படாமல் இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வு கிடையாது” என ஆணித்தரமாக விளக்கினார்.

   டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழின் மூத்த செய்தியாளர் வெங்கட்ரமணன் தனது உரையில், திசநாயகத்தின் வழக்கின் பின்னணியையும், எவ்வாறு திசநாயகத்திற்கு ஆதரவாக சாட்சியம் அளித்தவர்களின் சாட்சியங்கள் எவ்வித நியாயமான காரணமுமின்றி நிராகரிக்கப்பட்டன என்பதையும், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட தீர்ப்பே வழங்கப்பட்டது என்பதையும் விரிவாக விளக்கினார்.

   ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ் அதிகாரியும் ஈழம் தொடர்பாக தொடர்ந்து ஊடகங்களில் எழுதி வருபவருமான தேவசகாயம் ‘சீனா இலங்கையில் காலடி எடுத்து வைப்பது என்பது இந்தியாவின் நலன்களுக்கும் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரானது. ஓர் இந்தியக் குடிமகனாக எனக்கு இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

   இந்நிலையில் தமிழர்களை இந்தியா நட்பு சக்தியாக்கிக் கொள்வது மட்டுமே இந்தியாவிற்கு நன்மை பயக்கும். இலங்கை மண்டியிட வைப்பதற்கான ஒரு வழியாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடர் பிரச்சாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்கா தடை செய்யப்பட்டதைப் போன்று இலங்கையும் கிரிக்கெட் மற்றும் பிற உலகளாவிய விளையாட்டுகளில் விளையாட தடை செய்யப்பட வேண்டும்” என கூறினார்.

   ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியின் செய்தியாளரும் சமாதான காலங்களிலும் பிற நேரங்களிலும் 5 முறை ஈழத்திற்கு சென்று பதிவு செய்தவருமான ராஜேஷ் சுந்தரம் இந்நிகழ்விற்காக தில்லியில் இருந்து வந்திருந்தார். அவர் தனது உரையில்,

   ‘முகாம்களில் மக்களை அடைத்து வைப்பதன் மூலம் வெறுப்பையும் போராட்ட உணர்வையுமே இலங்கை அரசு வளர்க்கிறது. இன்று முகாமில் வளரும் 10-11 வயது சிறுவன் தன் கண் முன் தனது 2 வயது தங்கையும் 80 வயது தாத்தாவும் மருந்தின்றி மடிவது கண்டும், தனது தாய், தந்தை, மூத்த சகோதரர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவது கண்டும் வளரும் நிலையில் அதற்கு எதிரான போராட்ட உணர்வே அவன் மனதில் மேலோங்கும்.

   எனது கணிப்பில் இன்னும் 6 மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ மீண்டும் ஆயுதப் போராட்டங்கள் ஈழத்தில் வெடிக்கும் என்றே கருதுகிறேன்.

   இந்தியாவைச் சுற்றி நண்பர்களே இல்லாத நிலையில் ஈழத்தையும் தமிழர்களையும் தனது நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தமிழகத்தின் எழுச்சி மட்டுமே இந்தியாவின் கருத்தை மாற்ற வைக்கும் ஆற்றல் வாய்ந்தது. நீங்கள் ஆயுதம் ஏந்த வேண்டியதில்லை. ஆனால் காந்திய முறைப்படி பல போராட்டங்களை நடத்தலாம்.

   இலங்கையின் சுற்றுலாத் துறை இந்த ஆண்டு மட்டும் இந்தியாவிலிருந்து 7.5 இலட்சம் பேர் இலங்கைக்கு சுற்றுலாவிற்கு வருவார்கள் என கூறுகிறது. இந்த 7.5 இலட்சம் பேர் ஆளுக்கு 100 டாலர்கள் குறைந்தபட்சமாக செலவழித்தால் கூட அந்த பணம் இலங்கை அரசு மேலும் ஆயுதங்கள் வாங்கவும், மேலும் ஆட்களை இராணுவத்தில் சேர்க்கவுமே பயன்படப் போகிறது. இதனை தடுக்க, இலங்கைக்கு சுற்றுலாச் செல்ல வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரச்சாரங்கள் செய்ய வேண்டும்.

   இலங்கைப் பொருட்களை பயன்படுத்துவதை எதிர்த்து பிரச்சாரங்கள் செய்ய வேண்டும். இவை இலங்கையின் பொருளாதாரத்திற்கு நெருக்கடியை அளிக்கும். அதன் மூலம் இலங்கை அரசுக்கு நெருக்கடி அளிக்கலாம்” என்றார்.

   மேலும், வீக் ஆங்கில வார இதழின் கவிதா முரளிதரன், டெக்கான் கிரானிக்கல் பீர் முகம்மது, குங்குமம் இதழின் அருள் எழிலன், நக்கீரன் இதழின் லெனின், குமுதம் இதழின் கார்டூனிஸ்டு பாலா ஆகியோரும் தங்கள் கண்டனத்தையும் கருத்துக்களையும் பதிவு செய்தனர்.

Exit mobile version