Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தடுமாறும் தமிழ்த் தலைமைகளும்-தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமும்:வெகுஜனன்

தமிழர் தலைமைகள் என்று தம்மை வர்ணித்து வரும் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இன்று கடுமையான தடுமாற்றத்திற்கும் இயலாமைகளுக்கும் உள்ளாகி நிற்கின்றன. இதில் கடந்த பொதுத்தேர்தலில் புலிகள் இயக்கத்துடன் இணைந்து 22 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்வதறியாது திகைத்து நிற்கிறது. வன்னி யுத்தத்தில் பின்னடைவு ஏற்பட ஆரம்பிக்கும் வரை தாமே தமிழ்த் தேசிய இனத்தின் ஏகப்பிரதிநிதிகள் என்பது போன்று நெஞ்சு நிமிர்த்தி நின்று பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் வீண் பேச்சுக்களும் வீரதீர வசனங்களும் வெளியிட்டு வந்தனர். அரசியல் தொலைநோக்கில் தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதைச் சிறியளவில் கூட அவர்களால் அனுமானிக்க முடிய வில்லை. காரணம் அவர்களது நம்பிக்கை முழுவதும் தமிழ் மக்களின் மீதல்ல. புலிகள் இயக்கம், இந்தியா, சர்வதேச சமூகம் என்பனவற்றின் மீதே முழுவதும் தங்கியிருந்தது. ஆனால் இவர்கள் எதிர்பார்த்திருந்த இந்தியாவின் நிலை முழுக்க முழுக்க எதிர்நிலைப் பட்டதாலும் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு அதன் தலைமை அழிக்கப்பட்டதாலும் இன்று திரிசங்கு நிலையில் இருந்து வருகின்றனர். இது அவர்களால் செய்யப்பட்ட முன்வினைகளின் பின் விளைவுகளால் ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலையாகும். அதனால் கக்கவும் முடியாது விழுங்கவும் முடியாத கையறு நிலையில் தமிழ்க் கூட்டமைப்பினர் இருந்து வருகின்றனர்.

அண்மையில் இத் தமிழ்க் கூட்டமைப்பினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்து மூன்று மணிநேரம் பேச்சுவார்த்தை நடாத்தியதாக ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் அச் சந்திப்பில் கூட்டமைப்பினர் பேசிய நேரம் மிகக் குறைவானதாகும். பல்வேறு விடயங்கள் பற்றி விவாதிக்கப் போகிறோம் எனக் கூறிச் சென்றவர்களிடம் பெரிதாக எதையும் கேட்கும் நிலையில் ஜனாதிபதி இருக்கவில்லை. ஜனாதிபதியும் அவரது சகோதரரும் ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவும் தான் அதிக நேரம் பேசியவர்களாவர். தாம் ஏன் சுமார் மூன்று லட்சம் வரையான மக்களை முகாம்களில் தடுத்து வைத்திருக்கிறோம் என்பதற்கும், மீள் குடியேற்றம் உடனடியாகவோ அன்றி கிட்டிய காலத்திலோ செய்ய முடியாது என்பதற்கும் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது. புலிகள் இயக்கத்தை முழுமையாக வடிகட்டி எடுக்கவும். வன்னியில் கண்ணி வெடிகளை கண்டு பிடித்து அகற்றவும் அதிக காலம் செல்லும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்ற இறுக்கமான செய்தியே தமிழ்க் கூட்டமைப்பினருக்கு கூறப்பட்டது. இதனைக் கேட்டுக் கொண்டு வெறுங் கையுடன் திரும்புவதைத் தவிர வேறெதுவும் கூற முடியாத பரிதாப நிலையிலேயே அவர்கள் இருந்தனர். அவர்களிடம் உள்ள ஒரே திருப்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளாவது உள்ளனவே என்பது மட்டுமேயாகும். ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள சங்கடம் யாதெனில் அவர்கள் ஊர் உலகிற்குப் பாராளுமன்ற உறுப்பினர்களாவர். அது மட்டுமன்றி இதுவரை அரசாங்கத் தரப்பால் கூட்டமைப்பில் இருந்து எவரையும் தமது பக்கத்திற்கு பிரித்தெடுத்துக் கொள்ள இயலவில்லை. எனவே அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டே அதற்கான முயற்சிகளும் இடம் பெறுவதாகவே பேசப்படுகிறது. அந்த வலைக்குள் ஓரிருவர் சிக்கவும் கூடும் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும் ஏற்கனவே இடம்பெற்ற வடக்கின் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்குக் கிடைத்த வாக்கின் வீதம் 10ற்கும் குறைவானதாகும். யாழ் மாநகரசபையில் உறுப்பினர்களைப் பெற முடிந்தாலும் வவுனியாவில் நகரசபை நிர்வாகத்திற்கு தலைமை தாங்கினாலும் மக்களின் ஆதரவு நிலை அடிமட்டமாகவே இருந்து வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் ஆகுவதோ ஏனைய தேர்தலில் தேர்ந்தெடுக்கப் படுவதோ மக்களின் ஆதரவில் அல்லது அரசியல் தெளிவின் கொள்கை விளக்கத்தின் வழிகளில் அல்ல. வர்க்கம், சாதி, ஊர், பணம், ஊழல், முறைகேடுகள் போன்றனவே ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வெற்றியை தீர்மானிக்கின்றன. இதன் மூலம் அத்தகையவர்களே தலைமை தாங்குபவர்களாகக் காட்சிப்படுத்தப் படவும் செய்கின்றனர். இது 62 வருட முதலாளித்து பாராளுமன்ற ஆட்சி முறையின் இலட்சணம் ஆகும். தமிழ்த் தலைமைகள் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாராளு மன்றம் – ஆயுத நடவடிக்கைகள் – பாராளுமன்றம் எனச் சுழன்ற வண்ணமே உள்ளனர். இத்தகையவர்களுக்கு ஆதிக்க அரசியல், பாராளுமன்ற பதவிகள், பேரப்பேச்சுக்கள் போன்றவற்றிற்கு அப்பால் செல்ல முடிவதில்லை. தமிழ்த் தேசிய இனத்தின் மத்தியில் காணப்படும் இன வர்க்க சாதி பெண் ஒடுக்குமுறை களுக்கு எதிராக கொள்கை வைக்கவோ அவற்றுக் குரிய போராட்ட வழிமுறைகளை முன்னெடுக்கவோ தாயாராக வில்லை. இனிமேலும் புதிய மாற்றுக் கொள்கைக்கோ நடைமுறைக்கோ தயாராக மாட்டார்கள்.

இதன் வழியில் அரசாங்கத்தோடு இணைந்து நின்று செயலாற்றி வந்த ஈ.பி.டி.பி. இப்போது சற்றுத் தடுமாற்றம் அடைந்த நிலையிற் காணப்படுகிறது. அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட நிர்ப்பந்திக்கப் பட்டதையும் வடக்கில் மக்களிடம் அதற்கு குறைந்தளவிலாவது வரவேற்பு கிடைக்காமல் போனதையிட்டும் உணர ஆரம்பித்துள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள கருத்துக்களில் அதனைக் காணமுடிகிறது. மகிந்த சிந்தனை அரசாங்கமும் ஜனாதிபதியும் தமது உள்நோக்க நிலைப்பாடுகளை வடக்கில் ஈ.பி.டி.பி. மூலமும் கிழக்கில் அமைச்சர் கருணா, முதலமைச்சர் சந்திரகாந்தன் மூலமும் நிறைவேற்றிக் கொள்ள முன்நிற்கிறார்களே தவிர அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையோ அல்லது தமிழ் மக்கள் சார்பான விருப்பங்களையோ நிறைவேற்றத் தயாராக இல்லாத நிலையே காணப் படுகிறது. அதனால் இவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகள் வெளிவராத அடிக்கடியான புகைச்சல்களாகவே இருந்து வருகின்றன.

இதே நிலைதான் ஆயுதம் தூக்கி அதனால் அழிவுபட்டுப் பின்பு ஜனநாயக நீரோட்டம் என்று கூறிக்கொண்டு பாராளுமன்ற அரசியலுக்கு வந்தவர்களிடமும் காணப்படுகிறது. புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா அணி) மற்றும் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியனவும் அரசாங்கத்தை எதிர்த்து நிற்கவும் முடியாது விட்டுச் தூரச் சென்று சுதந்திரமாக அரசியல் செய்யவும் முடியாத நிலையில் தடுமாற்றத்துடன் இருந்து வருகின்றனர். ஏறத்தாழ ஒரே நிலைப்பாட்டில் உள்ள இவர்களிடம் கூட ஒத்த கருத்தோ மாற்றுக் கொள்கையோ இல்லாத நிலைதான் தொடர்கிறது.

இவற்றைவிடத் தற்போது தமிழ்க் கூட்டமைப்பில் இருந்துவரும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய இரண்டு கட்சிகளும் ஏற்கனவே புலி எதிர்ப்பு வன்மத்துடன் சந்திரிகா அரசின் கீழ் அரசாங்கத்துடன் இருந்து தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்களாவர். புலிகள் மட்டுமே பிரதான எதிரியென கொண்டிருந்த இவர்கள் புலிகளின் ஆதரவுடன் பாராளுமன்ற பதவிகளைப் பெறவும் தமிழ் மக்கள் மத்தியில் தத்தமது பாராளுமன்ற அரசியலை தக்க வைக்கவும் தமிழ்க் கூட்டமைப்பில் இணைந்தனர். பாராளுமன்றப் பதவிகளைப் பெற்றனர். ஆனால் நிலைமை இந்தளவுக்கு ஆபத்தாக வருமெனக் கனவிலும் அவர்கள் நினைக்கவில்லை. அவர்கள் மட்டுமன்றித் தமிழ் மக்கள் மத்தியில் அன்று தொட்டு ஆண்ட பரம்பரை ஆதிக்கச் சிந்தனை வழியில் பாராளுமன்ற அரசியலில் இருந்து வந்த தமிழரசு-தமிழ்க்காங்கிரஸ் கட்சிகள் கூட இப்படியொரு அவல நிலைக்கு தள்ளப்படுவோம் என எதிர்பார்க்கவில்லை. இவர்கள் எல்லோரும் ஒருபுறம் புலிகளின் ஆயுதப் பலத்தையும் மறுபுறம் இந்திய ஆளும் வர்க்க எசமானர்களையும் நம்பியிருந்தனர். அவை இரண்டும் இன்று இவர்களின் பிடிக்குரியதாக இல்லாத நிலையில், நடையிழந்து குரலற்று வெறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற பெயரில் தட்டுதடுமாறியவர்களாக இருந்து வருகின்றனர். அதுமட்டுமன்றி இவர்கள் அனைவரிடம் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்கும் செய்த அரசியல் துரோகமும், மக்கள் மத்தியில் கொலை, கொள்ளை, சகோதரப் படுகொலை நிகழ்த்திய இரத்தக் கறைகளும் அழிக்கப்பட முடியாத அளவுக்கு நிறைந்துள்ளன.

இவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியத்தை பின்பற்றியவர்கள் என்பதுடன் இந்திய ஆளும் வர்க்க எசமானர்களின் காலடியில் கிடந்து வந்தவர்கள். அழிவுகளைத் தேடிய புலிகளும் இத் தமிழ் கூட்டமைப்பினரும் தமிழ்த் தேசிய இனத்திற்கு மாபெரும் துரோகம் இழைத்தவர்களே ஆவர். இதில் யார் கூட குறையச் செய்தவர்கள் என்று கணக்கிட முடியாத அளவுக்கு சகல நிலைகளிலும் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பிற்கும் எதிர்காலத்திற்கும் மாபெரும் அழிவுகளை தேடித் தந்திருக்கின்றனர். சில தமிழ் தேசியவாத ஆய்வுக்காரர்கள் இப்போதும் பாராளுமன்ற இடதுசாரிகள் இழைத்த அரசியல் தவறுகளை பெரும் தமிழினத் துரோகமாக ஊதிப் பெருப்பித்துக் காட்டி வருவதில் குறியாக இருக்கின்றனர். அத் தவறுகள் மறைக்கப்படுவதற்கு இல்லை. ஆனால் தமிழ்;த் தேசிய வாதத் தலைமைகள் அனைத்தும் தமிழ்த் தேசிய இனத்திற்கு செய்துள்ள மாபெரும் துரோகங்களோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றதாகும். இவற்றை வெறும் அரசியல் காழ்ப்புணர்வினால் நாம் கூறவில்லை. வரலாற்றின் ஊடே இடம்பெற்ற நிகழ்வுகளின் அடிப்படையிலேயே காணுகின்றோம்.

இந்த நிலையில் இருந்து தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் எவ்வகையிலும் மாற்றம் அடையப் போவதில்லை. ஆனால் தமிழ்த் தேசிய இனத்தின் முன்னால் ஒரு பாரிய அரசியல் கேள்வி எழுந்து நிற்கிறது. தொடர்ந்தும் செக்கு இழுத்த பாதையில் தமிழ்த் தேசிய வாத பிற்போக்கு தலைமைகளுக்குப் பின்னால் தலையாட்டி மாடுகள் போன்று அல்லது செம்மறியாட்டுக்கூட்ட மனோநிலையில் மேய்ப்பர்கள் காட்டும் இருட்டு அரசியலுக்குள் தொடர்ந்து செல்வதா அல்லது அதனை நிராகரித்த புதிய அரசியல் வழிமுறைகளை நாடுவதா என்பதே அக் கேள்வியாகும். கடந்த கால தமிழ்த் தேசியவாத அரசியல் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்ட வரலாற்று நிகழ்வுகளும் ஆழ்ந்து நோக்கப்படல் வேண்டும். அவற்றிலிருந்து உரிய அனுபவங்களும் பட்டறிவுகளும் பெறப்பட்ட மீளாய்வும் சுய விமர்சனங்களும் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுவது அவசியம். அறணைத்தனமாக அன்றன்று மறந்துவிட்டு அரசியல் ஆதிக்க மேய்ப்பர்களின் பின்னால் ஓடும் அரசியல் கலாச்சாரத்திற்கு தமிழ் மக்கள் முற்றுப் புள்ளியிடல் வேண்டும்.

தமிழ்த் தேசிய இனத்தின் இன்றைய அவல நிலையையும் இருப்பையும் எதிர்காலத்திற்குரிய தொலைநோக்குத் திட்டங்களையும் வகுக்கக் கூடிய ஒரு பரந்து பட்ட அரசியல் விவாதம் அவசியம். இதனை, தனியே ஒரு கட்சி அல்லது சில படித்த மேதாவிகள் அல்லது புலம்பெயர்ந்த உயர்வர்க்க கனவான்கள் என்போரால் செய்ய முடியாது. தமிழ்த் தேசிய இனத்தின் பொரு ளாதார அரசியல் சமூகப் பண்பாட்டுத் தளங்களிலான யதார்த்த நிலைமைகளை உண்மைகளின் அடிப்படையிலும் வரலாற்று வளர்ச்சிகளின் ஊடாகவும் அலசி ஆராயப்பட வேண்டும். இவ் ஆராய்வும் கொள்கை முடிவுகளும் மேட்டுக்குடி உயர்வர்க்க சக்திகளின் தேவைகள் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் எடுக்கப்படல் வேண்டும். பரந்துபட்ட தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் பெண்கள் மற்றும் கீழ் மத்தியதர வர்க்கத்தினரான அரசாங்க தனியார் துறையினர் மற்றும் உழை க்கும் மக்களின் நலன்களிலிருந்து தோற்றுவிக்கப் படல் வேண்டும். இத்தகைய நிலைப்பாடு தான் தமிழ்த் தேசிய இனத்திற்குரியதும் முதலாளித்துவ பேரினவாத ஆளும் அதிகார சக்திகளுக்கும் அவர்களது அன்னிய கூட்டாளிகளுக்கும் எதிராக முன்னேறிச் செல்லக் கூடியதுமான சரியான அரசியல் வெகுஜனப் போராட்ட மார்க்கமாக அமைய முடியும். இதனைத் தமக்குரிய வரலாற்றுக் கடமையாகவும் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கும் வகையிலும் தமிழ் மக்கள் முன்னெடுக்க முன்வராது விட்டால் தொடர்ந்தும் அடக்குமுறைகள் அழிவுகள் அவலங்களுக்குள் அடிமைத்தனமான வாழ்வை மேற்கொள்ள வேண்டியே ஏற்படும்.

Exit mobile version