Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜே.வி.பி யின் புதிய அக்கறை – எங்கே செல்கிறோம் : விஜய்

ஜே.வி.பி.யினர் யாழ்ப்பாணத்தில் காணமல் போனவர்கள் தொடர்பான போராட்டம் ஒன்றினை பல்வேறு இடர்களையும் தாங்கிக்கொண்டு நடாத்தியதன் பின்பாக தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் தொடர்பான ஒரு நல்லபிப்பிராயம் ஒன்று ஏற்படத்தொடங்கியது. அந்தப் போரட்டத்தில் பெருமளவு பாதிக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். பலர் அப்போரட்டத்pனை வரவேற்றனர். ஆயினும் ஜே.வி.பி.யினரின் அரசியல் குறித்து குறிப்பாக தமிழ் மக்களிற்கெதிரான இன ஒடுக்குமுறையில் மற்றும் யுத்த அழிவுகளில் அவர்கள் பங்களிப்புக் குறித்து எவரும் மறந்து விடவில்லை.

சபரி என்பவர் ஜே.வி.பி. யின் அண்மைக்கால போராட்டங்கள் தொடர்பாக (தினக்குரல்-21.11.2010), ‘தென்னிலங்கை சிங்கள மக்களை அணுகும் விடயத்திலும், யாழ்ப்பாணத்தில் தமிழர்களை அணுகும் விடயத்திலும் வௌ;வேறான உபாயங்களை வகுத்து ஜே.வி.பி. செயற்படுகின்றது. வட பகுதி செல்லும் போது இடம் பெயர்ந்த மக்களுடைய அவலம் மற்றும் காணமல்போனவர்களின் பிரச்சினை தொடர்பாக மட்டுமே தமது கவனத்தைச் செலுத்தும் ஜே.வி.பி.யினர் அந்தப் பிரச்சினைகளை மையப்படுத்தி தென்பகுதியில் போராட்டங்கள் எதனையும் முன்னெடுக்கத் தயாரில்லை” எனக் குறிப்பிட்டிருப்பதுடன், “போருக்கு முழு ஆதரவையும் வழங்கி ஊக்குவித்தவர்களில் ஜே.வி.பி. முன்னணியில் இருந்துள்ளது. போர் நிறுத்தத்திற்கெதிராகவும் , சமாதானப் பேச்சு வார்த்தைகளிற்கு எதிராகவம் போரட்டங்களை நடத்தியே தமது அரசியலை அவர்கள் கடந்த காலங்களில் நடத்தினார்கள். தமிழர்கள் இன்று எதிர்நோக்கும் அவலங்கள் அனைத்துக்கும் இந்தப் போர்தான் காரணமாக இருந்துள்ளது. காணமல் போனவர்கள் பிரச்சினையும், மீள்குடியேற்றப் பிரச்சினையும் இராணுவ நடவடிக்கைகளால் ஏற்பட்டவைதான். இந்த நிலையில் காணமல் போனவர்கள் பிரச்சினை தொடர்பாக தென்பகுதியில் பேசுவது அவர்களுடைய அரசியலுக்கே பாதகமாகலாம்.” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சபரியின் கருத்தை ஜே.வி.பி. யினர் மறுத்துரைக்க முடியாது. சபரி கூறுவதற்கு மேலான விடயங்கள் பலவற்றையம் ஜே.வி.பி.யினர் தொடர்பாக கேட்கவேண்டியுள்ளது.

யுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், வட-கிழக்கு மற்றும் தென்னிலங்கையில் தமிழர்கள் பலர் காணமல் போய்க் கொண்டிருக்கையில் அவற்றையெல்லாம் ஜே.வி.பி.யினர் நன்கு தெரிந்திருந்தும் ஏன் தடுக்க முற்படவில்லை. ஏன் அதற்கெதிராகப் போராடாது இருந்தனர். இதற்கான விடை ஜே.வி.பி.யினரின் சிங்கள இனவாதம் என்பதே. அதற்காக மக்கள் அழிவுகள் குறித்து ஜே.வி.பி. அப்போது சிறிதேனும் கவலைப்படவில்லை. மக்கள் அழிவுகள் ஏற்பட்டாலும் புலிகள் அழிக்கப்பட வேண்டம் என்ற அரசியலை ஜே.வி.பி. கொண்டிருந்தது.

வன்னிய யுத்தம் நடைபெற்ற வேளை, தனது எதிரியான ஆளும் அரசாங்கம் புலிகளுக்கெதிராக யுத்தத்தினை மேற்கொண்டிருக்கையில் அந்த யுத்தத்தில் தனது எதிரியான ஆளும் அரசாங்கம் வெற்றி பெற வேண்டுமானால் தனது எதிரியான ஆளும் அரசாங்கத்திற்கெதிரான எல்லா எதிர்ப்புகளையும் நிறுத்தி உதவி புரிந்தாக வேண்டியிருந்தது. தனது இன்றைய எதிரியான ஆளும் அரசாங்கத்துடன் தமிழ் இனவாதத்திற்கெதிராக எதிரன கூட்டு அது.

ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க தினக்குரலுக்கு வழங்கியுள்ள நேர்காணிலில் அளித்துள்ள பதிலொன்று பற்றியும் இங்கு குறிப்பிடவேண்டியிருக்கிறது. ‘வடக்கில் உள்ள மனித பேரவலங்களை நேரில் சென்று பார்த்துள்ளீர்கள். இந்த மனிதப் பேரவலங்கள் யுத்தத்துடன் இணைந்ததொன்றாகவே எமது மக்கள் மீது ஏற்படுத்தப்பட்டன. இந்த இடத்தில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் யுத்தத்தினை தொடர்ந்து நடத்துமாறு ஜே.வி.பி. அரசாங்கத்திற்கு ஆதவரளித்தது. இதை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?” என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் சோமவன்ச அமரசிங்க,

‘ மக்கள் விடுதலை முன்னணி எந்தச் சந்தர்ப்பத்திலும் மக்களின் நலன்களுக்காகவும் தேசிய நலன்களுக்காகவும் செயற்படுகின்றதுமான கட்சி. ஆகவே பிரிவினை வாதம் சிங்கள சமுதாயத்தின் ஊடாகவரலாம். அல்லது தமிழ் சமுதாயத்தின் ஊடாகவரலாம். அல்லது முஸ்லிம் சமுதாயத்தின் ஊடாகவரலாம். எப்படி எந்த திசையில் இருந்து வந்தாலும் தேசிய ஒற்றுமைக்கும் மக்கள் நல்லிணக்கத்திற்கும் அது பாதிப்பதாகவே அமையும். ஆகவே அந்த பிரிவினையினைத் தோற்கடிக்கவே நாம் செயற்பட்டோம். அவ்வாறான யுத்தத்தின் பின் மக்களின் நலன்களுக்காக தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்த நாம் செயற்படுகின்றோம்…” எனக்குறிப்பிட்டுள்ளார்.

பிரிவினை வாதம் சிங்கள சமுதாயத்தின் ஊடாகவரலாம் என குறிப்பிட்டிருககிறார். எப்போது சிங்கள சமுதாயம் பிரிவினையை முன்வைத்தது. அல்லது இனி எப்போது சிங்கள சமுதாயம் பிரிவினையை முன்வைக்கப் போகிறது. முஸ்லிம் சமூகம் எப்போது பிரிவினை வாதத்தினை முன்வைத்தது? சிங்கள சமுதயாத்தினூடாக வருவது சிங்களப் பேரினவாதமே. பிரிவினைவாதம் சிங்கள இனவாதத்திற்கெதிராக சிறுபாண்மை இனங்களால் மட்டும் முன்வைக்கப்படுவது. இந்தப் பதில் இப்போதும் ஜே.வி.பி. சிங்கள மேலாதிக்க வாதத்திலிருந்து விடுபடவில்லை என்பதனையும் மக்கள் நலன் எனக்கூறவது வெற்றுப் பொய் வார்த்தை என்பதனையும் உணரவைத்துள்ளது.

ஜே.வி.பி.யினர் தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறை பற்றி வாய் திறக்கவில்லை. இனஒடுக்குமறைக்கெதிராக சிறுபாண்மை மக்கள் எதிர்ப்பியக்கத்தினை முன்னெடுக்கையில் அவர்களுக்கு மக்கள் நலனை விட தேசிய நலன் பெரிதாகத் தோன்றலாம். அப்போது அவர்கள் அதனைத் தோற்கடிக்க முற்படலாம் என்பதே இந்தப்பதிலின் உள்ளடக்கம்.

‘யுத்தத்தின் பின் மக்களின் நலன்களுக்காக தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்த நாம் செயற்படுகின்றோம்…” என்பது எவ்வளவு கேடுகெட்ட வார்த்தை. வரலாற்று வழயில் இத்தகைய வார்த்தைகளை நாம் பல்வேறு வழிகளில் – பல்வேறு நபர்கள் மூலம் பல தடவைகள் கேட்டிருக்கிறோம். ஆனால் அவையெவையும் ஒரு போதும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கவில்லை.

மக்களின் பிரச்சனையைக் கருத்தில் கொள்ளாது முன்னே செல்கின்ற தமிழ் இடதுசாரித் தலைமைகள் தேசிய இனப் பிரச்சனையை ஏனைவர்களிடம் விட்டுவிடுகிறது. இதனால் பிரச்சனைகள் தமிழர் விடுதலைக் கூட்டணி, தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலிகள் ஜேவிபி போன்ற கடைந்தெடுத்த பிற்போக்கு சக்திகளிடம் தேசிய இனப் பிரச்சனையை விட்டுவிடுகின்றனர். அவர்களின் இன்றைய போக்கில் மாற்றங்கள் தெரிகின்றன.

Exit mobile version