Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜெயா என்றால் சீமான், நெடுமாறனுக்கு பயம் பயம் !:வழுதி

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை இடித்துத் தள்ளி, அடுத்தது முற்றத்தையும் இடிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவி. கொளத்தூர் மணி கைது, நெடுமாறன் கைது என்று கைதுகளுக்கும் குறைவில்லை. சர்வாதிகார ஆட்சியின் காட்டுத் தர்பாரை எதிர்க்கத் துணிவற்ற தமிழ்த் தேசியவாதிகளோ… ‘இது மத்திய உளவுத் துறையின் சதி‘ என்கிறார்கள். அதாவது ஜெயலலிதாவுக்கும் இதற்கும் தொடர்பு இல்லையாம்.

கைதுக்கு முந்தைய நெடுமாறனின் பேட்டியைக் கவனியுங்கள்…

‘முற்றத்தை யாராவது அழிக்க நினைத்தால் அவர்களை, இறந்து போன தமிழர்களின் ஆன்மா மன்னிக்காது’’

‘‘மத்திய புலனாய்வுத் துறை மூலமாக இதை இடிக்கவும் விழாவை தடுக்கவும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசும் ஏன் எதிராக செயல்படுகிறது என்றே தெரியவில்லை” என்று புலம்பினார். “ஏன்” என்ற கேள்விக்கு நெடுமாறனுக்கு பதில் தெரியவில்லையென்றால் நடராஜனிடம் கேட்டால் சொல்லக் கூடும். முள்ளிவாய்க்கால் முற்றம் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்தது முதல் சுற்றுச் சுவரை இடித்தது வரை சகலமும் ஜெயலலிதாவின் வேலைதான் என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். நெடுமாறனுக்கு மட்டும் தெரியவில்லையாம்.

அடுத்த பாராவில், ‘‘முற்றத்தை யாராவது அழிக்க நினைத்தால் அவர்களை, இறந்து போன தமிழர்களின் ஆன்மா மன்னிக்காது’’ என்று எச்சரிக்கிறார். மூன்றாவது பாராவில், ‘‘இதை அழிக்க நினைப்பவர்கள் தமிழ் இனத்தின் துரோகி” என்று சாபம் விடுகிறார். கடைசி வரையில் பெயரை மட்டும் அவர் சொல்லவே இல்லை.

மேற்கண்ட பேட்டி, நெருக்கடி முற்றிய நிலையில், குறிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே முற்றத்தை திறந்து வைத்து நெடுமாறன் பேசியது. ஒருவேளை சுற்றுச் சுவர் இடிக்கப்பட்ட பின்னர் ஜெயலலிதாவைக் கண்டித்து ஏதேனும் பேசியிருப்பாரோ என்று தேடிப் பார்த்தோம். அப்போதும் இதேமாதிரி, ‘தமிழர்கள் ஆவி மன்னிக்காது’ என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார். கடைசி வரையில் இடித்தது யார் என்பதை அவர் சொல்லவே இல்லை.

“அதை மட்டும் சொல்லிராதீங்க… அடிச்சுக் கூட கேப்பாங்க, அப்பவும் சொல்லிராதீங்க” என்ற வடிவேல் காமெடியைப் போல… நெடுமாறன் கடைசி வரையிலும் ‘அதை’ மட்டும் சொல்லவே இல்லை. நெடுமாறன் மட்டுமா? இந்தப் பட்டியலில் பலர் உண்டு.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா, இப்படி இடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று அதிர்ச்சி அடைகிறார்.

முற்றம் இடிப்பைக் கண்டித்துப் பேசிய சீமான், ‘இது மத்திய உளவுத்துறையின் சதி’ என்றதோடு நிற்கவில்லை. அதை நிரூபிக்க ஆதாரங்களை எடுத்து விட்டார். ஆக்கிரமிக்கப்பட்டதாக சொல்லப்படும் நெடுஞ்சாலை மத்திய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமென்றும், அதனால் ரா அமைப்பின் தூண்டுதலின் பேரில்தான் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டிருப்பதாகவும் ஈழ இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். நெடுஞ்சாலைகளெல்லாமே மத்திய அரசுக்கு சொந்தமானவையல்ல என்பதை அண்ணனுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது. இந்த இடத்தை மாநில அரசிடமிருந்து குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும், குத்தகையை மாநில அரசு புதுப்பிக்கவில்லையென்றும் நெடுமாறன் கூறியிருக்கிறார். அண்ணன் அதையும் கவனிக்கவில்லை போலும். ஜெ அரசு சம்பந்தப்பட்டதாக இருந்தால், எப்படியோ அது அண்ணன் கண்ணில் படாமலேயே போய் விடுகிறது.

அதுமட்டுமல்ல, ‘காமன்வெல்த் மாநாட்டுக்குத் தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் எதிர்ப்புகளை திசை திருப்பவே, முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டுள்ளது’ என்ற யாரும் எதிர்பார்க்காத கோணம் ஒன்றையும் எடுத்து விட்டார். இப்படி சொல்லி முடிப்பதற்குள் அவருக்கு ஜெயலலிதாவின் காமன்வெல்த் தீர்மானம் நினைவுக்கு வந்து விட்டது. ‘சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா, இப்படி இடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று அதிர்ச்சி அடைகிறார். அப்ப தீர்மானமெல்லாம் நாடகமா என்று சந்தேகமாக கேட்கிறார்.

என்ன பேசினாலும் ‘ஜெயலலிதா’ என்ற பெயரை மட்டும் அவர் சொல்லவில்லை. பெருமகனார் என்பதைப் போல பெருமகளார் என்று மரியாதையாகவாவது சொல்லலாம். ஆனால் எச்சரிக்கையாக ‘தமிழக அரசு’ என்கிறார். தமிழக அரசின் செயல் அவருக்கு அதிர்ச்சி அளிக்கிறதாம்.


வைகோவை பொருத்த வரை அம்மாவுடன் கூட்டணி கிடையாது.

அம்மாவுக்கு அப்பாற்பட்டு ஒரு அரசா? கழிவறை முதல் கல்லறை வரை எது திறக்கப் பட்டாலும், “நான் உத்தரவிட்டுள்ளேன், என்னுடைய அரசு நிறைவேற்றியிருக்கிறது” என்று அடக்கத்தோடு பொறுப்பேற்றுக் கொள்ளும் அம்மையார், இந்த புல்டோசர் வேலைக்கு மட்டும் பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டாரா என்ன?

அம்மாவுக்கு அப்பாற்பட்டு ‘தமிழக அரசு’ என தனியே ஒன்று செயல்படுவதாக சீமான் பேசி வருவது அம்மாவுக்கு தெரிந்தால், அண்ணன் மீது அவதூறு வழக்கு பாயத் தொடங்கி விடுமே! சீமான் இந்தக் கோணத்தில் யோசித்தாரா தெரியவில்லை.

ஸ்ஸ்.. யப்பா… முடியலை.

ஜெயலலிதா எவ்வளவு அடித்தாலும் வலிக்காதது மாதிரியே நடிக்கும் இவர்கள், இப்போதும் வலியை பொறுத்துக் கொண்டு, உள்குத்துக்கு ஆயின்மென்ட் தடவிக் கொண்டிருக்கிறார்கள்.

வைகோவை பொருத்த வரை அம்மாவுடன் கூட்டணி கிடையாது. அவர் தலைவிதி முடிவாகி விட்டது. “அங்க அவன் இடிக்கிறான், இங்க இவள் இடிக்கிறாளா, அங்கே ராஜபக்சே இடிக்கிறான், இங்கே ஜெயலலிதா இடிக்கிறாளா?” என்று வைகோ உணர்ச்சி வசப்பட்டு வார்த்தையை விட்டதை காப்டன் டிவிக்காரன் கவ்வி விட்டான். அதையே திரும்பத் திரும்ப போட்டுத் தாக்குகிறான்.

இதையெல்லாம் கண்டு நெடுமாறன் அண்ட் கோவுக்கு சித்தம் கலங்குகிறது. ‘நாம வெயிட்டாவும், வீக்காவும் பேசி சமாளிச்சுக்கிட்டிருக்கோம். இந்தாளு நடுவுல புகுந்து குட்டையைப் குழப்புறாரே’ என்று அவர்கள் உள்ளுக்குள் குமைகிறார்கள்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதா குடைச்சல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். நினைவு ஜோதி கொண்டு வந்தவர்களை கைது செய்தார். நிகழ்ச்சியையே தடை செய்ய முயன்றார். அதனால்தான் திட்டமிட்டதில் இருந்து இரண்டு நாட்கள் முன்பாகவே நெடுமாறன், முற்றத்தை திறந்து வைக்க வேண்டியிருந்தது. அதன் பிறகும் காவல் துறையின் நெருக்கடிகள் நிற்கவில்லை. பிரபாகரன் படம் பதித்த ப்ளெக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று அவற்றை அகற்றினார்கள்.

அந்த சமயத்தில் ‘இந்து’ பத்திரிகையில் ஒரு செய்தி வெளியானது. ‘முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் உட்பகுதியில், ஈழப் போராட்டத்தில் உயிர் நீத்த பல தலைவர்களின் படங்கள் ஓவியங்களாக வைக்கப்பட்டுள்ளன. அதில் பிரபாகரனின் ஓவியமும் உள்ளது. அந்த ஓவியம் மட்டும் ஒரு துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளது’ என்ற அந்த செய்தியைக் கண்டு பதறிப்போன நெடுமாறன் உடனடியாக மறுப்பு ஒன்றை வெளியிட்டார். , ‘ஈழப் போராட்டத்தில் இறந்து போனவர்களின் ஓவியங்களை மட்டுமே முற்றத்தில் வைத்துள்ளோம். பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார். அதனால் அவர் படத்தை வைத்திருக்கிறோம் என்ற செய்தியே தவறானது’ என்று அறிக்கை வெளியிட்டார்.

எவ்வளவு அயோக்கியத்தனம் இது? காலம் எல்லாம் எந்தப் பெயரை வைத்து அரசியல் செய்தார்களோ… அந்தப் பெயரை சத்தமே இல்லாமல் கை கழுவி விட்டார்கள். முப்பதாண்டு காலமாக தங்களின் சுயநல அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்ட பிரபாகரன் என்ற பெயரை, அவரது மரணத்திற்குப் பிறகு தீண்டத் தகாததாக மாற்றி விட்டனர் தமிழ்த் தேசியவாதிகள். அதனால்தான் ‘பிரபாகரனின் ஓவியம் இருக்கிறது’ என்ற செய்திக்கு அஞ்சிப் பதறுகிறார் நெடுமாறன்.

ஓவியம் இருக்கிறது என்ற செய்தி அம்மாவின் கண்ணில் பட்டு விட்டால் என்ன செய்வது என்பது தான் அவருடைய பிரச்சினை. அதனால்தான், எப்டியெல்லாமோ பேசி சமாளிக்கிறார். பிரபாகரன் உயிரோடு இருப்பதாக இப்போது எவரும் பேச மறுக்கும் நிலையில் அதை ஒரு லா பாயிண்டாக வைத்து இந்து செய்தியை மறுக்கிறார் நெடுமாறன். இதில் பிரபாகரன் புகழை விட ஜெயா மீதான அச்சமே மேலோங்கி இருக்கிறது.

பிரபாகரன் பெயரைச் சொல்ல பயம், ஜெயலலிதா பெயரைச் சொல்ல பயம்… இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் ஈழம் வாங்கித் தரப் போகிறார்களாம்!

இதில் உச்சகட்ட காமெடி ஒன்றும் இருக்கிறது. இரவு 10 மணிக்குப் பிறகு ஒலிபெருக்கி பயன்படுத்திய வழக்கில் (சசிகலா) நடராஜன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நடராஜன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘நவம்பர் 8 -ம் தேதி நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன். விழாவை ஏற்பாடு செய்திருந்த உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளைக்கும், விழா ஏற்பாட்டாளர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். திறப்பு விழா மற்றும் கருத்தரங்கம் எந்தவொரு தனிப்பட்ட நபருக்கோ, அரசுக்கோ அல்லது நாட்டுக்கோ எதிராக ஏற்பாடு செய்யப்படவில்லை.” என்கிறார் நடராஜன்.


‘எனக்கும் இந்த முற்றத்துக்கும் அதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’

//விழாவை ஏற்பாடு செய்திருந்த உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளைக்கும், விழா ஏற்பாட்டாளர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை// என்ற வாக்கியத்தின் பொருள் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை என்பது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்படுவதற்காக உருவாக்கப்பட்டது. இதற்கு நெடுமாறன்தான் தலைவர். ‘விழா ஏற்பாட்டாளர்கள்’ என்றால் யார்? நடைமுறையில் இது நடராஜனைதான் குறிக்கும். தனக்கும் நெடுமாறனுக்கும் தொடர்பில்லை என்கிறார்.

அப்புறம், ‘இது தனியொரு நாட்டுக்கோ தனியொரு நபருக்கோ எதிரானது இல்லை’ என்கிறார். ‘யாருக்கும் எதிரானது இல்லை’ என்றால் ராஜபக்சேவுக்கும் எதிரானது இல்லை போலும். மொத்தத்தில் ‘எனக்கும் இந்த முற்றத்துக்கும் அதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்பதுதான் அவர் தனது ஜாமீன் மனுவில் கூறவரும் விசயம்.

ஒரு வருடத்துக்கு முன்பு தஞ்சாவூரில் நடந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில், நடராஜனுக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவை விழா மேடையில் வைத்து விற்பனை செய்து, அதில் கிடைத்த 45 லட்ச ரூபாய் பணத்தை முள்ளிவாய்க்கால் முற்றத்திற்காக நெடுமாறனிடம் கொடுத்தார் நடராஜன். இது அவர்களே வெளியிட்ட பத்திரிகை செய்திதான். அந்த 45 லட்சம் பணம் போக, விளார் கிராமத்தில் உள்ள தனது நிலம் 2 ஏக்கரையும் முற்றத்திற்காகக் கொடுத்தார். பிறகு நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தார். முற்றத்தை நெடுமாறன் திறந்து வைக்கும் போதும் அதன் பிறகும் நடராஜனும், அவரது சகோதரர் சுவாமிநாதனும் எப்போதும் உடன் இருந்தார்கள். இப்படியிருக்க… ‘எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை’ என்று அடித்து விடுகிறார் நடராஜன்.

நேற்று நெடுமாறன் உள்ளிட்ட 81 பேருக்கு ஜாமீனும், நடராஜனுக்கு முன்ஜாமீனும் வழங்கியிருக்கிறது உயர்நீதிமன்றம். ‘10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி போட்டது’ என்பதெல்லாம் ஒரு போண்டா செக்சன். இதற்கு முன் ஜாமீன் வாங்கி வரலாறு படைத்திருப்பவர் அநேகமாக ‘மொழிப்போர்‘ மறவர் நடராசன் ஒருவராகத்தான் இருக்க முடியும். அதேபோல, இந்த போண்டா கேசுக்கு முன்ஜாமீன் வாங்குவதற்கே உயர் நீதிமன்றம் வரை விரட்டிய அரசும் புரட்சித் தலைவியின் அரசாகத்தான் இருக்கமுடியும்.

தொடர்ந்து பல்லைக் கடித்துக் கொண்டு வலியைப் பொறுத்துக்கொள்வதே அடுத்தடுத்து அடி வாங்குவதற்கான அடிப்படையாகவும் அமையக் கூடும். “நாம இவ்வளவு தூரம் கை வலிக்க அடிக்கிறோம். நம்மளை ஒரு வில்லனாவே ஒத்துக்க மாட்டேங்குறாங்களே” என்று அம்மா ஆத்திரமடைவதற்கான வாய்ப்பும் உண்டு.

புற முதுகு காட்டாத தமிழின வீரம் என்பது சங்க இலக்கியத்திற்கு மட்டுமே சொந்தம், முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அல்ல போலும்.

நன்றி:வினவு

Exit mobile version