ஏற்கனவே, இலங்கைக்குச் செல்லும் செய்தியை, முகநூல் ஊடாக நண்பர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார் ஜெயபாலன். நூல் வெளியீடு ஒன்றிக்காக யாழ் நகருக்குச் செல்கின்றார் என்று அறிந்தோம்.
இலக்கியத்திலிருந்து திரைப்படத்துறைக்குத்தாவிய ஜெயபாலன், கடைசியாக நடித்த திரைப்படம், சுசீந்திரன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த ‘பாண்டியநாடு’.
யாழ்.ஊடக இல்லத்தில் அவர் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பும், அங்கு அவர் தெரிவித்த அரசியல் கருத்துக்களும், பேரினவாத ஆட்சி பீடத்திற்கு மகிழ்ச்சியை அளித்திருக்காது.
இன நல்லிணக்கம் பற்றி தம்மைத்தவிர வேறெவரும் பேசக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது மகிந்த ஆட்சி மையம்.
‘ஜெயபாலன், அப்படியொன்றும் இனவாதம் பேசவில்லை’ என்று, மகிந்தருக்கு விளக்குகின்றார் நீதியமைச்சர் ராவுவ் ஹக்கீம். இலங்கையில் கருத்துரிமையை, மனித உரிமையைப் பாதுகாக்குமாறு சுதந்திர ஊடக இல்லமும் அரசுக்கு அறிவுரை வழங்குகிறது.
ஆனாலும் இந்தக் கைது விவகாரத்தின் நோக்கங்கள் தெளிவானவை.
அதாவது ‘நல்லிணக்கம், நல்லாட்சி பேசும் புலம் பெயர்ந்து வாழும் சில ஈழத்தமிழர்கள், தம்மோடு இணைந்துள்ள தமிழ் அரசியல் கட்சிகளூடாகவே, அது குறித்து பேச இங்கு அனுமதி உண்டு’ என்கிற செய்தியை அரசு இக்கைது ஊடாகச் சொல்கிறது.
தமது ஆட்சி அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில், சாமி தரிசனத்திற்கு வரலாம். தமக்குச் சார்பான அணியோடு இணைந்து இலக்கிய மாநாடுகளை நடாத்தலாம். அதையும் மீறி அரசியல் பேச முற்பட்டால், எதிர்ப்பரசியல் கருத்துக்களை முன்வைத்தால்,, இந்தக்கதிதான் இனி வருவோருக்கும் நிகழும் என்பதை அழுத்திக் கூறுகிறார் மகிந்தர்.
‘விசா’ கட்டுப்பாட்டினை மீறினால், அவரை நாட்டைவிட்டு வெளியேறச் சொல்லலாம். இவ்வளவு விசாரணைகள் தேவையில்லை. ஆகவே, ஜெயபாலன் மீது மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணை இடப்பெயர்வுகள் யாவும், ‘ அங்கு சுமுகமான நிலை உருவாகிவிட்டது. வாருங்கள் அரசியல் செய்வோம்’ என்று புலம்பெயர் நாடுகளில் பரப்புரை செய்வோரின் வேண்டுகோளை மறுபார்வைக்கு உட்படுத்துகிறது எனலாம்.
அண்மைக்காலமாக அவர் வெளியிடும் கூட்டமைப்பு சார்பு அரசியல் நிலைப்பாட்டுடன் உடன்பாடு இல்லாவிட்டாலும், அவரின் கருத்துக்கூறும் உரிமையை, சக மனிதன் என்கிற உறவினை மதிக்கிறோம்.
வடக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண முதலமைச்சரிடம், மகிந்த சிந்தனையை மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டுமென, நிறைவேற்று அதிகாரத்தொனியில் கட்டளையிடும் ஆட்சியாளரிடம், அறத்தை எதிர்பார்க்க முடியுமா?.
‘அந்த’ மாதிரி போடப்பட்ட வீதியில்தான் கவிஞரும் கைது செய்யப்பட்டுள்ளார். அரச பயங்கரவாதம், இன்னமும் ஆட்சி பீடத்தின் ஆத்மாவாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
அப்படி இல்லையென்று அடம்பிடிக்கும் கூட்டம், கவிஞரைக் கைது செய்யவில்லையென்றும் கூறுவார்கள்.
இருப்பினும் ஜெயபாலனின் விடுதலை குறித்து குரல் எழுப்ப வேண்டிய தார்மீகப்பொறுப்பு, அனைத்து ஊடகங்களுக்கும் உண்டு.