Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜூலை இனப்படுகொலை – வலி சுமந்த வரலாறும் பிழைப்புவாதிகளும் : சபா நாவலன்

july1983ஜூலைப் படுகொலை, வெலிக்கடைப் படுகொலை என்றெல்லாம் இனப்படுகொலை அரசின் ஆதரவாளர்களே கூட்டம் போட்டுக் கூக்குரலிடும் பிழைப்புவாதிகளின் காலதில் நாங்கள் வாழ்கிறோம். இலங்கையின் தமிழ்ப் பேசும் தேசிய இனங்களின் மீதான இனப்படுகொலையும் இனச் சுத்திகரிப்பும் இந்தக் கணம் வரை தொடரும் நீண்ட வரலாற்றைக் கொண்டது.

ஐயர்லாந்தில் தனது தேசிய இன விடுதலைக்காப் போராடுவது அவசியமானது என்று கார்ல் மார்ஸ் ஒன்ரரை நூற்றாண்டுகளுக்கு முன்னரே சொன்னதை மார்க்சியத்தின் பெயராலேயே அவமானப்படுத்தும் திருடர்களின் கூட்டம் புலம் பெயர் நாடுகளிலிருந்து தனது வேர்களை இலங்கை வரை ஆழப்பதிக்கிறது. தவறுகளே நிறுவனமாகியிருந்த 30 வருடப்போராட்டம் அவலங்களும் ஓலங்களுமாக அழிந்துபோனது என்பதற்காக சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையையே நிராகரிக்கும் தமிழ் மேட்டுக்குடிகளின் சந்தர்ப்பவாத அரசியல் முன்னெப்போதும் இல்லாதவாறு அரச பாசிசத்திற்குத் துணை போகின்றது.

பிரித்தானியக் குடியேற்றத்தின் பின்னான காலம் நெடுகிலும் தனது தேசிய அடையாளத்திற்காக மரணத்துள் வாழ நிர்பந்திக்கப்பட்ட மக்கள் கூட்டம் தான் இலங்கைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர். 1956 இல் தான் முதல் படுகொலையைச் எதிர்கொண்டனர். 1952 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பிரதமரான டி,எஸ்.சேனாநாயக்கவினால் 7.2 மில்லியன் டொலர் செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லோயத் திட்டத்தின் பின்னணியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் செறிவைச் சீர்குலைப்பதற்கான பேரினவாத நோக்கமே அடிப்படையாக அமைந்தது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கான முதல் பரீட்சாத்த முயற்சியாக இது கருதப்படலாம். பட்டிப்பளை ஆறு என்ற தமிழ்ப் பெயர் கல் ஓயா என்று சிங்களத்தில் மாற்றப்படிருந்தது.

150 குடும்பங்களைக் குடியேற்றும் நோக்கோடு, ஏறத்தாள நாற்பதாயிரம் ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் வழங்கும் வகையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழர்கள், முஸ்லீம் தமிழர்கள், வேடர்கள், சிங்களவர் போன்ற இனக் கூறுகளைக் கொண்ட நிலமற்ற குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. குடியேற்றம் நிகழ்ந்த போது சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்தது. சிங்கள மொழியை மட்டும் ஆட்சிமொழியாக மாற்றும் தனிச் சிங்களச் சட்டமூலம் சமர்பிக்கப்பட்ட ஜூன்.1956 இல் கல் ஒயா குடியேற்றங்கள் முற்றுப் பெற்றிருந்தன. 50 வீதமான சிங்களக் குடும்பங்களை கொண்டிருந்த இத்திட்டத்தில் குடியேற்றப்பட்ட தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் மத்தியில் அதிர்ப்தி நிலவிவந்தது. வளமற்ற பகுதிகளில் அவர்கள் குடியேற்றப்பட்டிருந்தனர்.

கொழும்பில் தனிச் சிங்களச் சட்ட மசோதா சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் அதற்கு எதிராகப் போராடிய தமிழ்த் தேசிய வாதிகளை இலங்கை அரச குண்டர் படையினர் தாக்கிய சம்பவம் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.

ஜூன் மாதம் ஐந்தாம் திகதி 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் பின்வந்த சில நாட்கள் தலைநகரிலிருந்த தமிழ்ப் பேசும் மக்களின் வியாபார நிறுவனங்கள் தாக்கியழிக்கப்பட்டன.

கல் ஓயாவில் இதன் எதிரொலியை காணக்கூடியதாக இருந்தது. குடியேற்றப்பட்ட தமிழ்- சிங்கள இனப் பிரிவுகளிடையே சிறிய வன் முறைகள் ஏற்பட்டன. 10ம் திகதி ஜூன் மாதம் கொழும்பு சிங்கள நாழிதழ்கள் சிங்கள யுவதி ஒருவர் பாலியல் வன் முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக செய்த் வெளியிட்டிருந்தன. 11ம் திகதியில் சிங்களக் குடியேற்ற வாசிகள் மத்தியில்ருந்த காடையர்கள் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரைக் கோரமாகக் கொலைசெய்ய ஆரம்பித்தனர். காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இரண்டு நாட்களுக்குள் 150 அப்பாவித் தமிழர்கள் அனாதைகளாகக் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஒரு புறத்தில் சிங்களப் பேரினவாதிகளும் தமிழ் அரசியல் வாதிகளும் தமது சமூகம் சார்ந்த வாக்குத் திறனை அதிகப்படுத்திக்கொள்ள மக்களின் உணர்வுகளைப் ப்யன்படுத்திக் கொள்ள, கல் ஓயா கொலைகள் சில அறிக்கைகளோடு மறைந்து போயின.

இந்தியாவின் தென் மூலையில் அதன் இரத்தக் கண்ணிர் போன்று அமைந்திருக்கும் இலங்கைத் தீவின் முதல் இனப்படுகொலை கல் ஓயாப்படுகொலைகளே.

1958 இல் நாடு தழுவிய அளவில் தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான வன் முறைகள் ஆரம்பித்தன. பண்டாரநாயக்க தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்ததன் பின்னதாக ஏற்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம் ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர எதிர்ப்பினால் கிழித்தெறியப்பட்டது. இது குறித்துப் பேசுவதற்காக தமிழரசுக் கட்சியின் மாநாடு ஒன்று வவுனியாவில் ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்த மாநாட்டில் சிங்கள எதிர்பு முழக்கங்கள் முன்வைக்கப்பட்ட அதே வேளை வன்முறையற்ற வழிகளில் போராட்டங்கள் நடத்துவதகத் தீர்மானிக்கப்படுகிறது. மாநாட்டில் கலந்துகொள்ள மட்டக்களப்பிலிருந்து சென்ற இரண்டு தமிழர்கள் சிங்கள இனவெறியர்களால் பொலநறுவைப் புகையிரத நிலையத்தில் கோரமாகக் கொலைசெய்யப்படுகின்றனர்.

பொலநறுவைக் கரும்புத் தோட்டத்தில் தொழில் செய்த ஏழைத் தமிழ்த் தொழிலாளர்கள் சிங்களக் காடையர்களால் தாக்கப்படுகின்றனர். 70 தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். மே மாதம் 25 ஆம் திகதி 70 தமிழர்களை கொன்று குவித்த படுகொலை நிகழ்வு தமிழ்ப்பேசும் மக்கள் வாழும் பகுதியெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. பாணந்துறையில் இரண்டு சிங்களப் பெண்கள் கொலை செய்யப்ப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த இந்துக் கோவில் அர்ச்சகர் உயிரோடு எரிக்கப்படுகிறார். நுவரெலிய நகராட்சித் தலைவர் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கொலைசெய்யப்படுகிறார். இவரது கொலையே வன்முறைகளுக்குக் காரணம் என நாட்டின் பிரதமர் வானொலியில் உரையாற்ற தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான வன் முறைகளுக்குப் பிரதமர் அங்கீகாரம் வழங்கியது போல் இருந்தது.

300 வரையான தமிழ்ப் பேசும் மக்களைக் காவுகொண்ட வன் முறை நிகழ்வுகளின் எதிர்விளைவாக 12 ஆயிரம் தமிழர்கள் அகதிகளானார்கள்.

ஓகஸ்ட் மாதம் 1977 ஆம் ஆண்டு இலங்கைப் பொதுத் தேர்தலின் பின்னதாக உருவெடுத்த வன்முறைகள் இலங்கை முழுவதும் 400 வரையான தமிழர்களைக் கொன்று போட்டதுடன் 15 தமிழர்களை அகதிகளாக்கியது. 77 வன்முறை மலையகத் தமிழர்களையும் பெருமளவில் பாதித்தது. 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியும், அதன் பின்னதான உணர்வலைகளும் இலங்கையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. பல்கலைக் கழகங்களுக்கான மொழிவாரித் தரப்படுத்தல்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் போன்றன தமிழ்த் தேசிய வாத அலையைத் தோற்றுவித்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தாக்குத்தல்கள் அதன் மீதான வெறுப்புணர்வு என்பன பேரினவாதத்தை உக்கிரன்மடையச் செய்திருந்தது. பிரதம மந்திரி ஜே.ஆர்.ஜெயவர்தன தனது யாப்பியல் சர்வாதிகாரத்தை நிலை நாட்ட சிங்களப் பேரின வாதத்தைப் பயன்படுத்திக் கொண்டார். இவை அனைத்திற்கும் பலியான அப்பாவித் தமிழர்கள் இலங்கைத் தீவின் பிரசைகளாகக் கருதப்பட்டனர்.

1977 இல் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான படுகொலைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட பின்னர், நாட்டின் பிரதமர் ஜெயவர்தன பாராளுமன்றத்தில் பேசியது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “நீங்கள் சண்டையிட முயற்சித்தால் அவர்களும் சண்டை போடுவார்கள். நீங்கள் சமாதனத்தை விரும்பினால் அவர்களும் விரும்புவார்கள். தமிழர்கள் சிறுபான்மை என்ற வகையில் அவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படும்.” இலங்கையில் வாழுகின்ற ஒவ்வொரு தமிழ்ப் பேசும் குடிமகனுக்கும் தான் இலங்கையன் அல்ல என்ற உணர்வை முதலில் வெளிப்படையாக ஏற்படுத்திய உரை அதுவாகும்.

23ம் திகதி ஜூலை மாதம் 1983 ஆம் ஆண்டு இதுவரை நடந்திராத நாடுதழுவிய வன்முறை தமிழ்ப் பேசும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது. 3000 தமிழர்கள் வரை கோரமாகக் கொல்லப்பட்ட ஜூலைப் படுகொலைகள் யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டதன் எதிர்வினையாக மேற்கொள்ளப்பட்டது என அரச தரப்புப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1977 இல் ஜெயவர்தன கூறிய போர் என்றால் போர் என்ற தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான யுத்தப் பிரகடனம் 1983 இல் மறுபடி பிரயோகிக்கப்பட்டது.

அரச படைகள் இனப்படுகொலையைக் கட்டுப்படுத்த முனையவில்லை. சிங்களக் காடையர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்படிருந்த தமிழ் அரசியல் கைதிகளைப் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வகையில் கொன்று குவித்தனர். தலை நகரில் வாக்களர் விபரத்தைச் சேகரித்துக்கொண்ட இனவெறியர்கள் தமிழ்ப் பேசும் மக்களின் வீடுகளைச் சூறையாடினர். உயிரோடு தீவைத்துக் கொழுத்தப்பட்ட தமிழர்கள் பலர்.

நாடே மனித அவலத்துள் அமிழ்த்தப்பட்டது. தெருவோரத்தில் சாகடிக்கப்பட்ட அனாதைத் தமிழர்களின் பிணங்கள் அப்புறப்படுத்தப்பட நாட்கள் சென்றன. அரச இயந்திர வன்முறையை வெளிப்படையாக தனது நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட போதுதான் தமிழ்ப் பேசும் மக்கள் மரணத்துள் வாழ்வதாக உணரத் தொடங்கினார்கள்.

இனப்படுகொலை திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது நாள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகள் 37 பேர் சிங்கள இன வெறியர்களால் கோரமாகக் கொலைசெய்யப்பட்டார்கள். தமிழ்ப் பேசும் மக்களின் உணர்வுகள் எரிந்துகொண்டிருக்க, இது நடந்து மூன்றாவது நாள் மறுபடியும் பதினைந்து தமிழ்க் கைதிகள் கொசுக்கள் போல அதே சிறைக்கூடத்தில் கொல்லப்பட்டார்கள். பேரினவாதம் என்ற கருத்தியல் நிகழ்த்திய படுகொலைகள் தான் இவைகள்.

மலையகத் தமிழர்கள் அரை மனிதர்களாகவே கருதப்படுகிறார்கள். இலங்கை அதிகாரம் தங்கியிருக்கும் பெருந்தோட்டத் தொழிற்துறையின் கூலி அடிமைகளாக அவர்கள் நடத்தப்படுகிறார்கள். இலங்கையின் மத்திய பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட சிறைகளில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். பேரினவாதத்தின் ஒவ்வொரு அசைவும் அவர்களை மேலும் சூறையாடுகின்றது.

சிங்கள மக்கள் மத்தியில் புரையோடிப் போயிருக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கச் சிந்தனை, பிரித்தானியரால் உரமிட்டு வளர்க்கப்பட்டது. அனகாரிக தர்மபாலவைத் திட்டமிட்டு உருவாக்கியது பிரித்தானிய அரசு. பௌத்த மதத்தை அரசியல் தளத்தை நோக்கி நகர்த்திய பிரித்தானியப் பிரித்தாளும் தந்திரம், நிறுவன மயப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தை பேரினவாதமாக வளர்த்துள்ளது.

இலங்கையில் பேரினவாதம் என்பதே சிங்கள பௌத்த மேலாதிக்க வாதக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டதாக அமைகிறது. தொலைதூரக் கிராமங்கள் வரை அக்கிராமங்களை கட்டுப்படுத்தும் பௌத்த விகாரைகள் வழியாக இக்கருத்தியல் நிறுவனமயப்பட்டுள்ளது. எந்த அரசியலும் எப்போதும் பயன்படுத்தக் கூடிய வகையிலான சோவனிசமாக, சமூகத்தின் எதிர்மறைச் சக்தியாக உருவெடுத்துள்ள சிங்கள பௌத்த மேலாதிக்கம், அதன் வழியான சோவனிசம் எப்போது அழிக்கப்படும் என்பது சிங்கள முற்போக்காளர்கள் எழுப்ப்பும் வினா.

சிறுபான்மைத் தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டம் சரியான திசைவழி நோக்கி வளர்ந்து செல்லும் உச்ச நிலையில் சிங்களத் தேசிய இனம் தான் கட்டுண்ட சிங்கள பௌத்த மாயையிலிருந்து விடுதலை பெற வாய்ப்புகள் உண்டு. ஐம்பதாயிரம் அப்பாவிகளை கொன்றுகுவித்த ராஜபக்ச அரச அதிகாரம் மீண்டும் வெற்றிபெறத் துணைவந்தது கூட சிங்கள பௌத்த சிந்தனையில் ஊறியிருக்கும் சோவனிசம் தான்.

30 ஆண்டுகால யுத்தப் பயங்கரத்திலிருந்து மக்கள் இன்னும் விடுப்பட்டாகவில்லை. மனிதச் சீர்குலைவு நிலையிலிருந்து அவர்கள் மீண்டாகவில்லை. இப்போது தவறுகளை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். நண்பர்கள் எதிரிகள் எல்லாம் வெளிப்படையாகத் தம்மை இனம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் விரோதிகள், சமூகத்தின் எதிரிகள், காட்டிக்கொடுத்தவர்கள், லும்பன்கள் ஏன் தமது “துரோகிகள்” என்பவைகளை எல்லாம் மக்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தனது பிரிந்துபோகும் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவது தவிர்க்க முடியாது என்பதை இன்று ஜூலைப் படுகொலை நாளில் மக்கள் விரோதிகளின் முகத்தில் அறைந்து உரக்கச் சொல்வோம்.

Exit mobile version