Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜனாதிபதி தேர்தலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்:வெகுஜனன்

  
எதிர்வரும் 26-01-2010 அன்று இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தனிநபர் சர்வதிகார ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஏற்கனவே ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவும், சில மாதங்களுக்கு முன்பு வரை ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் பொன்சோகாவும் பிரதான வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். முதலாமவரை ஆளும் வரக்க கட்சியில் ஒன்றான சிறிலங்கா சுதந்திர கட்சியும் அதனோடு இணைந்த கட்சிகளும் தமது பிரதிநிதியாக ஏற்று நிற்கின்றன. இரண்டாமவரை மற்றொரு ஆளும் வர்க்கக் கட்சியான் ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் கூட்டாளிக் கட்சிகளும் ஆதரித்து தமது பிரதிநிதியாக நிறுத்தியுள்ளன.
 
இவர்களில் ஒருவரே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதே முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீற முடியாத விதியாக உள்ளது.இவர்கள் இருவரும் யார் என்பதும் நாட்டிற்கும் மக்களுக்கும் தேசிய இனங்களுக்கும் என்ன செய்தார்கள் என்பது சிறிய நேரமாவது சிந்திப்பதற்கு உரிய ஒன்றாகும்.
 
 முதலாமவர் கடந்த நான்கு வருடங்களாக ஜனதிபதியாக இருந்து வந்தவர். தனது பதவிக்காலத்தில் முன்னையவர்களின் தொடர்சியாக நாட்டை மேல்மேலும் தாராள தனியார் மயச் சேற்றுக்குள் அமுக்கி அதன் விளைவுகளை சொத்து சுகம் கொண்டோருக்கு சாதகமா க்கியும் ஏகப் பெருபான்மையான சாதாரண உழைக்கும் மக்களு க்கு பாதகமாக்கியும் கொண்டவர். அதே போன்று இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை யுத்தமாக்கி வந்த முன்னைய ஜனாதிபதிகளின் வரிசையில் மேலும் ஒருபடி மேலே சென்று வடக்கு கிழக்கு யுத்தத்திற்கு ஆணைகள் இட்டு கொடூர நிலைக்கு முன்னின்றவர்.  கடந்த வருட நடுப் பகுதியில் தமிழ் மக்களது இரத்த வெள்ளத்திலும் சிங்கள கிராமப்புற இளைஞர்களான ராணுவத்தினரதும் இழப்புகளின் மத்தியிலும் யுத்த வெற்றி பெற்று நவீன துட்டகைமுனு எனப்பட்டம் சூட்டிக் கொண்டவர்.

பிரதான வேட்பாளர்களில் , இரண்டாமவர் கடந்த 40 வருடங்களாக இராணுவத்தில் சேவையாற்றி அதில் முப்பது வருடங்களை வடக்கு கிழக்கில் பல நிலைப் பதவிகள் வகித்து இறுதி மூன்று வருட கொடூர யுத்தத்திற்கு வழிகாட்டி வந்த ராணுவத் தளபதியாவார். வடக்கு கிழக்கில் இடம் பெற்ற பல ராணுவ நடவடிக்கைகளின் போது அவற்றில் ஒன்றுமறியாத தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்படுவதற்கும் முன்னின்றவர். இன்றும் விடைக்கிடைக்காத அறுநூறுக்கு மேற்பட் டோர் செம்மணிப் புதைகுழியில் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் ராணுவ நடவடிக்கையின் போது வடபுலத்தின் ராணுவ உயர்பதவி வகித்தவர். மேலும் பல தமிழ் மக்கள் இளைஞர்களுக்கு இன்று வரை என்ன நடைப்பெற்றது என்று அறிய முடியாது காணாமல் போவதற்கு காரணமாக இருந்தவர்களில் இந்தப் பிரதான வேட்பாளரும் ஒருவர்.

மேலே குறிப்பிட்ட இரண்டு பிரதான வேட்பாளர்களும் வர்க்க நிலையில் ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளாக மட்டுமன்றி இனரீதியில் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் பிரதிநிதிகளாகவும் உள்ளனர். இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை என்பது இல்லை என்பதாகவும் அதற்கு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை நிராகரிப்பதுமே இருவரதும் ஒத்த நிலைப்பாடாகும். இலங்கை பல்லினத் தேசியங்களையுடைய ஒரு நாடு என்பதை இவர்கள் இருவருமே ஏற்பதாக இல்லை. அதனைப் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாகவே கூறியும் வந்துள்ளனர். இந்த நாட்டில் சிறுபான்மை இனம் என்ற ஒன்று இல்லை என்பதை முதலாமவர் கூறிவருகிறார். இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லீம் மக்கள் இடையில் வந்து குடியேறியவர்கள். அவர்கள் வேண்டும் என்றால் இருந்து விட்டுப்போகட்டும், எதையும் கேட்கக்கூடாது எனக் கூறிக் கொண்டவர் இரண்டாமவர்.
 
இவை யாவற்றுக்கும் மேலாக கடந்த வருட நடுப்பகுதியில் ஒரே யுத்தத் தேரில் சாரதியாக இருந்து ஆணை பிறப்பித்தவர் முதலாமவர். கொடு வில்லேந்தி தமிழ் மக்கள் மீது கணைகள் தொடுத்து கொத்துக் கொத்தாக வன்னி யுத்தத்தில் மக்களைக் கொன்றொழிப்பதற்கு தலைமை தாங்கியவர் இரண்டாமவர்.
இத்தகையத் தன்மைகளைக் கொண்ட இவ்விரண்டு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி சிங்கள, முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களுக்கும் நியாயமான எவற்றையும் கொண்டுவரமாட்டார்கள் என்பது திண்ணம். அவர்களது உயர்வர்க்க பேரினவாத ஏகாதிபத்திய அரவணைப்பு நிலைப்பாடு இந் நாட்டின் உழைக்கும் மக்களுக்குரிய ஒன்றல்ல. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் அதற்கான அரசியலமைப்பும் இந்நாட்டின் உழைகை;கும் மக்களுக்கு எதிரான ஒன்று என்பது இவ்வேளை உரத்து நினைவு ட்டத் தக்கதாகும்.

இவ்வாறானதொரு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் அணி பிரிந்து இரண்டு பேரினவாத வேட்பாளர்களுக்கும் ஆதரவு தெரிவித்து நிற்கும் வெட்கக் கேட்டையே காணமுடிகிறது. முஸ்லீம் தேசியம் பேசிய கட்சிகளும் மலையகத் தேசியம் பேசுவோரும் அவ்வாறே இருபுறத்தும் சென்றடைந்து நிற்கின்ற கேவலத்தையே பார்க்க வேண்டியுள்ளது. சில தமிழ்க் கட்சிகளும் குழுக்களும் ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த தமது நிலைப்பாட்டைத் தொடருகின்றன. ஆனால் புலிகள் இயக்கத்தை ஏகப் பிரதிநிதிகளாக ஏற்று அவர்க ளின் ஆதரவுடன் 22 பாராளுமன்ற உறுப்பினர்களாக மார்தட்டி நின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு தமிழ் மக்களுக்கு இழைத்து வந்த துரோகத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியாகவே காணப்படுகிறது.

எவ்வளவிற்கு இனம் மதம் மொழி பண்பாடு என்று தேசிய வாதிகள் உச்சக் குரலில் பேசினாலும் இறுதியில் அவர்களது நிலைப்பாட்டினைத் தீர்மானிப்பது அவர்கள் சார்ந்த வர்க்கத்தின் குணாம்சமாகவே அமைந்து கொள்ளும். வர்க்கம் கடந்த தூய் மையான தேசியம் என்பது வெறும் போலித்தனமானது என்பதைக் காணும் ஒரு உதாரண இடமாக ஜனாதிபதித் தேர்தலில் தேசியவாதிகள் எனப்படுவோர் அனைவரினதும் நிலைபாட்டைக் காண முடியும். அதிலும் குறிப்பாகத் தமிழ்த் தேசியத்தை குறுந் தேசியவாதமாக முன்னெடுத்து வந்த அனைவருமே இன்று எவ்வாறான முடிவுகளுக்கு வந்துள்ளனர் என்பதைக் காணும் போது தமிழ்ப் பழைமைவாதப் பிற்போக்குத்தனத்தின் மொத்த உருவத்தையே காண முடிகிறது.

தமிழ்த் தேசிய இனத்தை விடுவிக்கும் பாதை எனக் கூறி வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை அரசியல் தலைமை தாங்கிய தமிழ்ப் பழைமைவாதக் குறுந் தேசியவாதிகள் இன்று சரத் பொன்சேகாவை ஆதரிக்க எடுத்த முடிவு தொடர் ந்தும் நாம் தமிழ் மக்களுக்கு இத்தகைய மேட்டுகுடி நிலைபா ட்டையே கொண்டிருப்போம் என்ற செய்தியையே கோடிட்டுக் காட்டியுள்ளனர். முல்லைத்தீவில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ்மக்களின் பிணவாடை மாறுவதற்கு முன்பாக, வழிந்தோடிய இரத்தமும் கண்ணீரும் காய்ந்த கறையாக இருந்து வரும் நிலையில், முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட மூன்று லட்சம் மக்களின் அவலங்கள் தொடருகின்ற சூழலில், நீண்ட காலமாக சிறைகளில் தமிழர்கள் இருந்து வரும் போது தான் தமிழர் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகா என்ற ராணுவப் பேரினவாதிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் எடுத்து நிற்கிறார்கள்.

இவ்வாறான தீர்மானத்தை எடுக்குமாறு விதித்த சூழல் இனத்துவம் சார்ந்த தேசிய வாத நிலைபாடு என்று யாராவது கூற முடியுமா?  அவர்களது மேட்டுக் குடி உயர்வர்க்க உயர்சாதியப் பழைமை வாதப் பிடியின் இறுக்கமேயாகும். இத்தகைய நிலைப்பாடு இறுகிப் போன தமிழ்ப் பழைமை வாதத்தின் பிரதிநிதிகளான அறிஞர்கள் புத்திஜீவிகள் மேட்டுக்குடிச் சிந்தனையாளர்கள், மதத் தலைவர்கள், வர்த்தகப் புள்ளிகள், உயர்சாதிக் கனவான்கள் ஊடக உரிமையாளர்கள் போன்றோருக்கு உடன்பாடானதேயாகும். அதனாலேயே பகிஸ்கரிப்பு வேண்டாம் என்று ஓலம் வைத்து அறிக்கை விட்டனர். அது மட்டுமன்றி இரண்டு பேரினவாத வேட்பாளர்களில் ஐக்கியத் தேசிய கட்சி ஆதரிக்கும் வேட்பாளரை ஆதரிக்குமாறு நிர்ப்பந்தங்களையும் கொடுத்து வந்தனர். இந்தியா மனம் நொந்தாலும் பரவாயில்லை அமெரிக்கா சரத் பொன்சேகா பக்கம் நிற்கிறதே என நம்பிக்கை ஊட்டப்பட்டது. பச்சைப் பேரினவாதிகளும் சிவப்பு பேரினவாதிகளும் கைக்கோர்த்து நிற்கும் கூட்டணியில் தமிழ்க் குறுந்தேசியவாதப் பிற்போக்காளர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எவ்வித தன்மானத் தயக்கமும் இன்றி கரம் கோர்த்து நிற்பது வர்க்க நிலைப்பாட்டின் காரணமாக வேயாகும். அது மட்டுமன்றி இந் நிலைப்பாடு பற்றி புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்கள் மத்தியில் தமிழ்த்தேசியம் தமிழீழம் எனப் புயல் கிளப்பிய சீமான்களும் சீமாட்டிகளும் என்ன கூறப்போகிறார்கள்.

ஆனால் ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதாவது தமிழ்த்தேசிய இனத்தின் மத்தியில் ஏகப் பெரும்பான்மையாக இருந்து வரும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள் மற்றும் உழைக்கும் மக்கள் சார்பாக எந்தவொரு தமிழ்த்தேசியவாதக் கட்சியோ குழுக்களோ இல்லை என்பதாகும். சிவாஜிலிங்கம் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சுயே ட்சை வேட்பாளர் கூட மறைமுக நிகழ்ச்சி நிர லில் வாக்குகளை பிரிக்கும் உள்நோக்குடனே யே நிறுத்தப்பட்டுள்ளாரே தவிர ஒரு உறுதி யான முற்போக்கு தேசியவாத நிலைப் பாட்டில் அல்ல.

எனவே தமிழ்த்தேசிவாதப் பழைமைவாத சக்திகளும் அவர்களின் பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய இனத்தை பின் நோக்கி இழுத்துச் சென்று கடந்த நூற்றாண்டின் நடுக் கூற்றில் நிறுத்தவே முன்நிற்கிறார்கள். தமிழ் மக்கள் தான் இதற்கு உரிய விடையளிக்க வேண்டும்.  தமிழ் மக்கள் மத்தியில் இளம் தலைமுறையினர் மாற்று அரசியல் பற்றி சிந்திக்க வேண்டும்.

Exit mobile version