Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜனநாயக விரோத போக்குகளை கண்டிப்போம் : தேடகம்

விடுதலைப் புலிகளினதும், ஏனைய விடுதலை அமைப்புகளினதும் அராஜகம் மேலோங்கி விடுதலைப் போராட்டமானது மக்களுக்கு எதிரான போராட்டத் தொனியை எடுத்திருந்த காலத்தில்தான் ஜனநாயக வெளிக்கும், மனிதவுரிமைக்குமான அமைப்பின் தேவை கனடாவில் உணரப்பட்டது. விடுதலைப் புலிகளினால் ஏனைய விடுதலை அமைப்புகள் தடைசெய்யப்பட்டு அழிக்கப்பட்ட நிலையில் புலம்பெயர் நாடுகளிலும் விடுதலைப் புலிகளின் அராஜகப் போக்கு மூர்க்கமாக செயற்படுத்தப்பட்டது.

மக்கள் விரோத இவ் நடவடிக்கைக்கு எதிராக செயற்பட வேண்டிய தேவை ஜனநாயவாதிகளுக்கு ஏற்பட்டது. இந் நிலையில்தான் மக்கள் ஜனநாயத்தின் நம்பிக்கை உள்ள சிலர் ஒன்றுகூடி விவாதங்களை தொடர்ந்தனர். விடுதலை அமைப்புகளின் மக்கள் விரோத போக்குகளை விமர்சித்து வெளியேறிய பலரும் இவ் விவாதங்களில் இணைந்து கொண்டனர். இக் விவாதங்களுக்கூடாக

• ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளல்

• ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களோடு தோழமையாய் இருத்தல்

• ஈழ விடுதலை அமைப்புகளின் ஜனநாயக விரோத அராஜகப் போக்கை கண்டித்தல் நிராகரித்தல்

• ஜனநாயக விரோத விடுதலை அமைப்புகளோடு நேரடியகவோ மறைமுகமாகவோ உறவுகளை பேணக்கூடாது.

• இலங்கை, இந்திய மற்றும் ஏனைய ஒடுக்குமுறை அரசுகளோடு உறவுகளை பேணக்கூடாது.

எனும் நோக்கங்களை முன்வைத்து தேடகம் உருக்கொண்டது. வெளிப்படையாகவே செயற்பட்டவும் தொடங்கியது. தேடகம் தனது ஆரம்ப நாட்களில் பல்வேறு கருத்து விவாதங்களை நடாத்தியதோடு மட்டுமல்லாது, அதற்கூடாக சிறந்த தீர்மானங்களையும் எடுத்துக்கொண்டது. அதன் காரணமாகவே விடுதலைப் புலிகளின் அராஜக செயற்பாடுகளுக்கெதிராகவும், இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கெதிராகவும் தனது கருத்துக்களை அரசியல், கலை, இலக்கிய தளங்களுக்கூடாக முன்வைத்து தனது பாதையில் தொடர்ச்சியாக பயணித்தும் வருகிறது. உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் பின்னணிகளை கொண்டிருந்தாலும் ஜனநாயக பண்பாட்டையும், அரசியல் நாகரீகத்தையும் கடைப்பிடித்தே வந்தனர்.

பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கருத்துக்களை கருத்துகளால் முகம் கொடுக்கும் பண்பை அவர்கள் பேணியே வந்திருந்தனர். தேடகத்தின் இதுவரைகால வரலாற்றில் வன்முறையை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியது கிடையாது.

கடந்த காலங்களில் தேடகத்தின் மீதான பல்வேறு அவதூறுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. தேடகத்தின் மீதான ஆக்கபூர்வமான கருத்துரீதியான விமர்சனங்களுக்கு தேடகம் எப்போதும் செவிசாய்த்து தனது கருத்துக்களை முன்வைத்துள்ளது. அவதூறுப் பிரசாரங்கள் குறித்து நாம் அதிகளவில் அலட்டிக்கொண்டதி;ல்லை. அதுவும் இணையங்களில் அநாமதேய பெயர்களில்வரும் பிரச்சாரங்களுக்கு பதிலளிக்க விரும்பியதில்லை.

கருத்துரீதியான முரண்பாடுகளினால் வெளியேறிய உறுப்பினர்கள் சிலர் வேறு தாபனங்களை உருவாக்கி செற்பட்டபோதும், அவர்களுக்கும் தேடகத்திற்குமான உறவு நட்புரீதியாகவே இருந்து வருகிறது. தனிமனித தாக்குதல்களையோ அவதூறுகளையோ கொண்டிருக்கவில்லை. மக்கள் ஜனநாயக பண்பாட்டை கட்டியெழுப்பதன் ஊடாகவே, தமிழ் மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை வெற்றிகொள்ள முடியும் என்பதை தேடகம் முழுமையாக நம்புவதோடு அதற்காய் தொடர்ந்து உழைத்தும் வருகிறது.

1989ல் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இற்றைவரை பல்வேறு முற்போக்கு சமூக அமைப்புகளுடனும், ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்புகளுடனும், தொழிற்சங்க அமைப்புகளுடனும் உறவுகளை பேணிவருவதோடு அவர்களுடன் இணைந்து செயற்பாடுகளிலும் பங்காற்றியும் வருகிறது. உணர்வுத்தோழமையோடு பல போராட்டங்களிலும் தேடகம் பங்குபற்றியும் இருக்கிறது. இற்றை வரை தேடகம் தமிழ் மக்களின் மனச்சாட்சியாக நின்றுழைத்திருக்கிறது.

தேடகம் ஆரம்பிக்கப்பட்டு 23 ஆண்டுகளுக்கு பின்னர் தனிநபர் குறித்து ஒரு விமர்சனத்தை தெரிவிக்கவேண்டிய இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு முக்கிய காரணம், ரொரன்டோ தமிழ் சூழல் பலரது கடும் உழைப்பால், புலிகளின் அராஜகத்திற்கு எதிராக முகம்கொடுத்து கட்டி வளர்த்த ஜனநாயக செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என்பதாலேயே.

தேடகத்தினால் நடாத்தப்பட்ட மூன்று கூட்டங்களில் திரு. நேசன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் புலிகளின் ஜனநாயக மறுப்பை மீளவும் நினைவுக்கொண்டு வருகிறது. அச்சொட்டாக புலிகளின் வன்முறையை நேசன் அவர்களும் பின்பற்றி வருவது, ஜனநாயக தளத்தில் செயற்பட்டு வரும் பலருக்கும் இடையூறாக இருப்பதுடன் எமது கூட்டங்களில் பங்கு கொள்ளும் இளையவருக்கு பிழையான செய்தியை வழங்குவதாயும் உள்ளது.

இத்தகையதான அராஜக போக்கை நாம் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. அதன் காரணமாகவே கடைசியாக நடைபெற்ற கூட்டத்திலிருந்து மண்டப காவலர்களினால் நேசன் வெளியேற்றப்பட்டார். கூட்டத்திற்கு தனது வேலைக்கு தேவையான ஆயுதங்கள் அடங்கிய இடுப்பு பட்டியுடன் வந்து அங்கு நடந்துகொண்ட முறையானது. முற்றுமுழுதான வெருட்டல் பாணியினதாகும். அரசியல் நாகரீகத்திற்கும் அரசியல் அறத்திற்கும் புறம்பானதாகும்.

தம்புள்ள முஸ்லீம் பள்ளிவாசல் மீதான தாக்குதல் தொடர்பான கூட்டத்தில் தேடக உறுப்பினர்கள் விவாதங்களின் போது தலைவரின் கோரிக்கைகளை மதிக்காமல் நடந்து கொண்டனர். அதனால் கூட்டம் ஒழுங்கை மீறியிருந்தது. கூட்டத்தில் ஏற்பட்ட ஒழுங்கு மீறல்களுக்காய் தேடகம் அக் கூட்டத்திலேயே சபையோரிடம் மன்னிப்பைப் கோரி நின்றது.

அதில் கலந்துகொண்ட நேசன் அவர்களுக்கு கருத்து கூற சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோதும் ‘தான் இப்போது கருத்துக்கூற விரும்பவில்லை’ எனக் கூறி விலகிக்கொண்டார். ஆயினும் தமிழரங்கம் இணையத்தில் அவர் எழுதிய பத்தியில் தனக்கு கருத்துரிமை மறுக்கப்பட்டதாக எழுதியிருந்தார். அக் கூட்டத்தின் முடிவில் மண்டபத்திற்கு வெளியில் திரு. யானுடன் நேசன் விவாதத்தில் மேற்கொண்டிருந்த சற்று நேரத்தில் யான் அவர்களை அடிக்கும் தோரணையில் அவரை அண்மித்தபோது ஏனைய நண்பர்கள் அவரை கட்டிடத்திற்கு வெளியே இழுத்துச் சென்றனர்.

ஐயரின் புத்தக வெளியீட்டின் பின்னராகவும் சுசிஸ் முரளியுடனும் இவ்விதமாகவே நேசன் நடந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இணையத்தளங்களில் தன்னை ஒரு நியாயவாதியாக புணைவு செய்து கொண்டாலும் நடைமுறையில் ஆயுத இயக்கங்களின் அராஜக பண்புகளை பின்பற்றுபவராகவே திரு. நேசன் அவர்கள் உள்ளார். இயக்கங்களின் ஜனநாயக மீறல்களுக்கு எதிராக உட்கட்சி ஜனநாயகத்திற்காக போராடிய காத்திரமான பங்களிப்பு திரு. நேசன் அவர்களுக்கு உண்டு. ஆயினும் அண்மைக்காலங்களில் மாற்றுக் கருத்திற்கெதிரான அவரது வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று. நேசன் அவர்கள் தன்னை மீளாய்வு செய்துகொள்ளவேண்டும்.

யூலை 1989ல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் அ. அமிர்தலிங்கம் அவர்களது இரங்கல் கூட்டம் ரொரன்டோவில் நடைபெற்றபோது அக் கூட்டம் புலிகளினால் குழப்பப்பட்டது. ‘எனக்கு பேசுவதற்குதான் உரிமை இல்லை அழுவதற்காவது உரிமை தாருங்கள்’ என அங்கு சட்டத்தரணி கரிகாலன் அழுது வேண்டினார். அவ் அழு குரலிலிருந்து இன்றைய ஜனநாயக வெளியை உருவாக்குவதற்கு பல ஜனநாய ஆர்வலர்கள் தமது கணிசமான பங்களிப்பை செய்திருந்தார்கள். அதில் தேடகமும் அமைப்புரீதியாக காத்திரமாக பங்களிப்பை வழங்கியது.

பலரின் அர்ப்பணிப்புகளுடன் உருவாக்கப்பட்ட ஜனநாயக பண்புக்கான முற்போக்கு வெளி நேசன் அவர்களால் அச்சுறுத்தப்படும்போது இப்போக்கை கண்டித்து, நிராகரித்து அம்பலப்படுத்தப்படவேண்டியது ஜனநாயகசக்திகளின் கடமையாகும்.

தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்)
ரொரன்டோ, கனடா
thedakam@gmail.com
11.09.2012

Exit mobile version