Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சொன்னவற்றிற் சிலவற்றைத் திரும்பவும் அழுத்திக் கூற வேண்டிய தேவை இருக்கிறது:முனைவர் சி.சிவசேகரம்

தேசிய கலை இலக்கியப் பேரவையின் பேராசிரியர் கைலாசபதி நினைவுக் கூட்டத்தில் முனைவர் சி.சிவசேகரம் ஆற்றிய தலைமையுரை.

அனைவருக்கும் வணக்கம்,

பேராசிரியர் கைலாசபதியைப் பற்றிப் புதியதாக எதையும் நான் சொல்லுவதற்கில்லை. ஆனாலும் சொன்னவற்றிற் சிலவற்றைத் திரும்பவும் அழுத்திக் கூற வேண்டிய தேவை இருக்கிறது. ஏனென்றால், கைலாசபதியைப் பற்றிய அவதூறானதும் காழ்ப்புனர்வுடையதுமான கருத்துக்கள் இன்னமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாகச் சில காலம் முன்பு, என் மதிப்புக்குரிய திறனாய்வாளரான ஏ.ஜே. கனகரத்னாவுக்கு ஒரு நினைவு நூல் கனடாவில் வாழும் ஒருவரால் தொகுத்து வெளியிடப்பட்டது. அதிலே ஏ.ஜே. கனகரத்னாவின் உலக நோக்கின் வலுவான இடதுசாரி அடையாளத்தை மூடி மறைக்கிற விதமாகவே அவரைப் பற்றிய கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அவருடைய ஆக்கங்களும் அவ்வாறே தெரிவு செய்யப்பட்டிருந்தன. ஏ.ஜேயை முன்பின் தெரியாதவர்களும் எழுதியிருந்தார்கள். கைலாசபதி வலிந்து தாக்கப் பட்டிருந்தார். ஒரு கட்டுரையில், யாரோ சொன்ன தவறான கருத்துக்கட்குக் கைலாசபதியே தோற்றுவாய் என்று அவதூறு கிளப்பப் பட்டிருந்தது. கைலாசபதி சாதி வேறுபாடு பாராட்டுகிறவர் என்ற பொய், அதற்கான சான்றாக முன்வைக்கப்பட்ட கட்டுக்கதைகள் அம்பலப்படுத்தப்பட்டு ஆண்டுகள் கடந்த பின்பும், திரும்பத் திரும்பப் பிற்போக்காளர்களாற் கூறப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் ஏன் நடக்கின்றன.?

கைலாசபதியை மனதில் வைத்தே ஒரு சாதிவெறியர் பற்றிய சிறுகதை எழுதப்பட்டதாகக் கூறப்பட்ட பொய் எங்கெல்லாமோ பரவி, நம்ப விரும்புகிறவர்கள் அதை உண்மையாக்கிப் பிரசாரம் செய்து பத்துப் பதினைந்து ஆண்டுகளாவது போன பிறகு தான், கதாசிரியர் அக் கதை கைலாசபதியைப் பற்றியதல்ல என்று தெரிவித்தார். அதை எப்போதோ சொல்லியிருந்தாற் பயனற்ற பல விவாதங்கட்குத் தேவையே இருந்திராது. விஜயபாஸ்கரனை வீட்டுக்கு விருந்துண்ண அழைத்தபோது சாதி கருதியே சிலரை அழைக்கவில்லை என்ற பொய்யைப் பரப்ப உதவிய “முற்போக்கு” எழுத்தாளர்கள் உள்ளனர். அப் பொய்யை முற்றாகவே நிராகரித்த டானியலும் இருந்தார். இதிற் கவனிக்க முக்கியமான விடயம் எதுவென்றால், கைலாசபதி இவற்றில் எதையுமே கணிப்பிற் கொள்ளவில்லை என்பது தான். இலக்கிய, அரசியல் நிலைப்பாடு சார்ந்த சிறிய கருத்து வேறுபாடுகளைக் கூடத் தெரிவிக்கத் தயங்காத கைலாசபதி தன் மீதான தனிப்பட்ட தாக்குதல்கட்கு என்றுமே பதில் கூறவில்லை. இவ் விடயத்தில் அவருக்கும் காலஞ்சென்ற கவிஞர் முருகையனுக்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு. அதைவிட, இருவருமே, அவர்களது மறைவின் பின்பு மிகவுங் கோழைத்தனமான தாக்குதல்கட்கு இலக்கானவர்கள் என்பதும் மேலுமொரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையாகும். அவர்கள் இருவருமே அவதூறுகளுக்கு விடை கூறுவது அவற்றுக்குக் கவுரவம் வழங்குவதாகும் என்றே நினைத்தனர். எனினும் அவர்களது மறைவின் பின்பும் பொய்கள் திரும்பத் திரும்பப் பரப்பப்பட்டு வருகிற ஒரு சூழலில், பொய்களையும் பொய்யர்களையும் அம்பலத்துக்குக் கொண்டு வருகிறது தேவையென்று அவர்களது நண்பர்கள் கருதுகின்றனர்.

கைலாசபதி அதி சிறப்பான ஆய்வாளர். ஆனாலும் பெருந்தொகையான பல்கலைக்கழக ஆய்வாளர்களினின்றும் வித்தியாசமானவர். தமது அறிவைத் தமக்குள்ளே முடக்கி வைத்துப் புகழ் தேடுவதற்கு அலைகிற பல பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் உள்ளனர். அதே வேளை, தமது அறிவையும் அனுபவத்தையும் பிறருடன் பகிரும் பரந்த மனங் கொண்ட பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வித்தியானந்தன் போன்றோரைக் கொண்ட ஒரு கல்விச் சூழலில் உருவான பட்டதாரியான கைலாசபதி அந்த மரபிற்கு உரியர் ஆனார். அது மட்டுமன்றித் தனது ஆய்வுத் திறனைச் சுதந்திரமான புதிய ஆய்வாளர்களை உருவாக்கவும் பயன்படுத்தினார். இது ஏன் முக்கியமானது என்று அறிய நமது பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலரது நடத்தையை அவதானித்தால் போதும். தமது மாணவர்களதும் தமக்குக் கீழ் ஆராய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்களதும் உழைப்பைத் தமது சுய இலாபத்திற்காக உரிமை கொண்டாடுபவர்களை நாம் அறிவோம். தமது மாணவர்கள் அறிவில் தம்மை மிஞ்சிவிடக் கூடாது என்பதிற் குறியாகவுள்ள பேராசிரியர்களை அறிவோம். தங்களது புகழையும் சுயவிளம்பரத்தையும் சுயநலனையும் விட, எதிலும் அக்கறையற்ற பேராசிரியர்களையும் அறிவோம். அதனாலேயே கைலாசபதி ஒரு நல்ல வழிகாட்டி என்பதை இங்கு மீண்டும் வற்புறுத்திக் கூற முற்படுகிறேன்.

கைலாசபதியின் கருத்து வெளிப்பாட்டின் தலையாய பண்பு அதன் தடுமாற்றமற்ற தெளிவான பண்பு. தான் நினைப்பது என்ன என்பதை எந்தவிதமான தயக்கமுமின்றி வெளிப்படுத்துவது மட்டுமல்லாது தான் சொன்னதை எவரும் தான் கருதிய நோக்கத்திற்கு முரணாக விளங்கவோ விளக்கவோ இடமளிக்கக் கூடாது என்பதில் மிகவுங் கவனமாய் இருந்தார். அதேயளவுக்குத் தான் கூறியது தவறு என்று சுட்டிக் காட்டப்படுமிடத்து அதனைத் திருத்தவும் அவர் தயங்கியதில்லை.

கைலாசபதியின் செயற்பாட்டுத் தளம் அவர் சிறப்புப் பயிற்சி பெற்ற துறைகட்கும் அப்பால் விரிவடைந்திருந்தது. உதாரணமாக உலக அரசியல் பற்றிய அவரது கருத்துரைகளைக் கூறலாம். இவ்வாறு தனது ஆளுமையை தனது சிறப்புத் துறைகட்கு வெளியே விரிவு படுத்த இயலுமாக்கியது என்ன?

கற்றது கைம்மண்ணளவு என்பார்கள். அது உண்மை. எவராலும் எல்லாவற்றையும் அறிந்திருக்க இயலாது. என்றாலும் எதையும் அறியும் அடிப்படையாற்றல் எல்லோருக்கும் உண்டு. கற்ற கைம்மண்ணளவைக் கொண்டு கல்லாத கடல் அளவு விடயங்களில் உண்மை – பொய்களை உய்த்துணர்வதற்கு நமக்கு இயலும். அவ்வாறு இயலுமாகுவது என்ன? விஞ்ஞான ரீதியான அணுகுமுறையும் தெளிவான, நேர்மையான சிந்தனையும். அதுவே கைலாசபதியின் அடிப்படையான வலிமை. சமுதாய அக்கறையுடன் அந்த ஆற்றல் இணையும் போது ஒருவர் மிகுந்த சமூகப்பயன் உள்ளவர் ஆகிறார். கைலாசபதியை விளங்கிக் கொள்ள இது போதுமானது.

இவ் வருடம் கைலாசபதி நினைவுப் பேருரையை நடத்த வந்திருப்பவர் கிழுக்குப் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் கலாநிதி யோகராசா. பல்கலைக்கழகத் தமிழ்த் துறையினரிடையே மிக விசாலமான வாசிப்பைக் கொண்டவர் அவர். என்னாற் சில நூல்களை முதல் இரண்டு மூன்று பக்கங்களைக் கூட கடந்து செல்ல முடியாது. என் மனதில் ஒரு நூல் பயனற்றது அல்லது பொய்மை சார்ந்தது என்ற எண்ணம் ஏற்பட்டால் மேற்கொண்டு வாசிப்பதற்கு மிகுந்த மனச்சோர்வாய் இருக்கும். யோகராசா அப்படியல்ல. தனது துறைக்கு தொடர்பாக முழுமையாக வாசிப்பவர். எதையுமே தள்ளி வைக்காதவர். அவருடைய துறைக்கும் பணிக்கும் அது முக்கியமான பண்பு. அதை அவர் நிறையவே கொண்டுள்ளார். அவ்வகையில் கிழக்குப் பல்கலைக்கழகம் அவரைத் தன்னிடம் கொண்டிருப்பதற்கு மிகவுங் கொடுத்து வைத்துள்ளது எனலாம்.

நூல்களை வாசிக்காமலே விமர்சனங்களையும் புத்தகத்தைப் பாராமல் எழுதியவரது முகத்தைப் பார்த்துவிட்டு முன்னுரைகளையும் வழங்குகிற பல பேராசிரியர்களும் அறிஞர்களும் உள்ள நமது பல்கலைக்கழகச் சூழலில் யோகராசா விலக்கான ஒரு சிறுபான்மைக்கு உரியவர். அவர் இன்றைய நினைவுப் பேருரையை ஆற்ற உள்ளமை தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு பெருமை சேர்ப்பதாகும்.

Exit mobile version