தேசிய கலை இலக்கியப் பேரவையின் பேராசிரியர் கைலாசபதி நினைவுக் கூட்டத்தில் முனைவர் சி.சிவசேகரம் ஆற்றிய தலைமையுரை.
பேராசிரியர் கைலாசபதியைப் பற்றிப் புதியதாக எதையும் நான் சொல்லுவதற்கில்லை. ஆனாலும் சொன்னவற்றிற் சிலவற்றைத் திரும்பவும் அழுத்திக் கூற வேண்டிய தேவை இருக்கிறது. ஏனென்றால், கைலாசபதியைப் பற்றிய அவதூறானதும் காழ்ப்புனர்வுடையதுமான கருத்துக்கள் இன்னமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாகச் சில காலம் முன்பு, என் மதிப்புக்குரிய திறனாய்வாளரான ஏ.ஜே. கனகரத்னாவுக்கு ஒரு நினைவு நூல் கனடாவில் வாழும் ஒருவரால் தொகுத்து வெளியிடப்பட்டது. அதிலே ஏ.ஜே. கனகரத்னாவின் உலக நோக்கின் வலுவான இடதுசாரி அடையாளத்தை மூடி மறைக்கிற விதமாகவே அவரைப் பற்றிய கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அவருடைய ஆக்கங்களும் அவ்வாறே தெரிவு செய்யப்பட்டிருந்தன. ஏ.ஜேயை முன்பின் தெரியாதவர்களும் எழுதியிருந்தார்கள். கைலாசபதி வலிந்து தாக்கப் பட்டிருந்தார். ஒரு கட்டுரையில், யாரோ சொன்ன தவறான கருத்துக்கட்குக் கைலாசபதியே தோற்றுவாய் என்று அவதூறு கிளப்பப் பட்டிருந்தது. கைலாசபதி சாதி வேறுபாடு பாராட்டுகிறவர் என்ற பொய், அதற்கான சான்றாக முன்வைக்கப்பட்ட கட்டுக்கதைகள் அம்பலப்படுத்தப்பட்டு ஆண்டுகள் கடந்த பின்பும், திரும்பத் திரும்பப் பிற்போக்காளர்களாற் கூறப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் ஏன் நடக்கின்றன.?
கைலாசபதி அதி சிறப்பான ஆய்வாளர். ஆனாலும் பெருந்தொகையான பல்கலைக்கழக ஆய்வாளர்களினின்றும் வித்தியாசமானவர். தமது அறிவைத் தமக்குள்ளே முடக்கி வைத்துப் புகழ் தேடுவதற்கு அலைகிற பல பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் உள்ளனர். அதே வேளை, தமது அறிவையும் அனுபவத்தையும் பிறருடன் பகிரும் பரந்த மனங் கொண்ட பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வித்தியானந்தன் போன்றோரைக் கொண்ட ஒரு கல்விச் சூழலில் உருவான பட்டதாரியான கைலாசபதி அந்த மரபிற்கு உரியர் ஆனார். அது மட்டுமன்றித் தனது ஆய்வுத் திறனைச் சுதந்திரமான புதிய ஆய்வாளர்களை உருவாக்கவும் பயன்படுத்தினார். இது ஏன் முக்கியமானது என்று அறிய நமது பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலரது நடத்தையை அவதானித்தால் போதும். தமது மாணவர்களதும் தமக்குக் கீழ் ஆராய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்களதும் உழைப்பைத் தமது சுய இலாபத்திற்காக உரிமை கொண்டாடுபவர்களை நாம் அறிவோம். தமது மாணவர்கள் அறிவில் தம்மை மிஞ்சிவிடக் கூடாது என்பதிற் குறியாகவுள்ள பேராசிரியர்களை அறிவோம். தங்களது புகழையும் சுயவிளம்பரத்தையும் சுயநலனையும் விட, எதிலும் அக்கறையற்ற பேராசிரியர்களையும் அறிவோம். அதனாலேயே கைலாசபதி ஒரு நல்ல வழிகாட்டி என்பதை இங்கு மீண்டும் வற்புறுத்திக் கூற முற்படுகிறேன்.
கைலாசபதியின் செயற்பாட்டுத் தளம் அவர் சிறப்புப் பயிற்சி பெற்ற துறைகட்கும் அப்பால் விரிவடைந்திருந்தது. உதாரணமாக உலக அரசியல் பற்றிய அவரது கருத்துரைகளைக் கூறலாம். இவ்வாறு தனது ஆளுமையை தனது சிறப்புத் துறைகட்கு வெளியே விரிவு படுத்த இயலுமாக்கியது என்ன?
கற்றது கைம்மண்ணளவு என்பார்கள். அது உண்மை. எவராலும் எல்லாவற்றையும் அறிந்திருக்க இயலாது. என்றாலும் எதையும் அறியும் அடிப்படையாற்றல் எல்லோருக்கும் உண்டு. கற்ற கைம்மண்ணளவைக் கொண்டு கல்லாத கடல் அளவு விடயங்களில் உண்மை – பொய்களை உய்த்துணர்வதற்கு நமக்கு இயலும். அவ்வாறு இயலுமாகுவது என்ன? விஞ்ஞான ரீதியான அணுகுமுறையும் தெளிவான, நேர்மையான சிந்தனையும். அதுவே கைலாசபதியின் அடிப்படையான வலிமை. சமுதாய அக்கறையுடன் அந்த ஆற்றல் இணையும் போது ஒருவர் மிகுந்த சமூகப்பயன் உள்ளவர் ஆகிறார். கைலாசபதியை விளங்கிக் கொள்ள இது போதுமானது.
நூல்களை வாசிக்காமலே விமர்சனங்களையும் புத்தகத்தைப் பாராமல் எழுதியவரது முகத்தைப் பார்த்துவிட்டு முன்னுரைகளையும் வழங்குகிற பல பேராசிரியர்களும் அறிஞர்களும் உள்ள நமது பல்கலைக்கழகச் சூழலில் யோகராசா விலக்கான ஒரு சிறுபான்மைக்கு உரியவர். அவர் இன்றைய நினைவுப் பேருரையை ஆற்ற உள்ளமை தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு பெருமை சேர்ப்பதாகும்.