Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சொந்த முகங்களை இழந்து.. – புலம்பெயர் அரசியல் : சபா நாவலன்

01.06.2011 இல் பதியப்பட்ட இந்தக் கட்டுரை காலத்தின் தேவைக்கு ஏற்ப மீள் பதிவிடப்படுகிறது.

 

“சொந்த முகங்களையும் இழந்து அன்னிய முகங்களும் பொருந்தாமல் இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ்கிறோம்” என்பது முன்னெப்போதோ கேட்ட கவிதை வரிகள். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் நிலை இவ்வாறுதான் இன்றும் ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் மையம் கொண்டுள்ளது. சீர்குலைந்து போயுள்ள ஐரோப்பியக் கலாச்சாரத்தின் முற்போக்கான கூறுகளைக் கூட எதிர்க்கும் விசித்திரமான அடையாளக் குழுக்கள் தான் இந்தப் புலம்பெயர் குழுக்கள்.

ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல மூன்றாம் உலக நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து மேற்கை வாழ்விடமாக வரித்துக்கொண்ட பல்வேறு சமூகக் குழுக்களுக்கும் இது பொருந்தும்.

1950 இற்கும் 60 இற்கும் இடையிலான காலப்பகுதியில் கிழக்கு லண்டனை நோக்கிக் குடிபெயர்ந்த பங்களாதேஷியர்கள் இதற்குச் சிறந்த உதாரணமாகும். பங்களாதேஷின் சிலட் மாவட்டத்திலுள்ள பகீர் காதி கிராமத்திலிருந்து பெருந்தொகையான பங்களாதேஷியர்கள் இங்கிலாந்தின் மலிவான கூலிகளாக கிழக்கு லண்டன் பகுதியில் குடியேறினார்கள். கட்டுமானத் துறையில் மிகக் கடினமான பணிகளுக்காக வரவழைக்கப்பட்ட இவர்கள், ஆரம்பத்தில் பிரித்தானியாவில் நிரந்தரமாகத் தங்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை.

முதலில் குடியேற்ற வாசிகளின் குடும்பங்களும் அதனைத் தொடர்ந்து கிராமத்தவர்களும் லண்டனை நோக்கி இடம்பெயர ஒரு குட்டி சிலெட் கிழக்கு லண்டனின்ல் உருவானது. இதன் பின்னர் அவர்கள் நாடுதிரும்புவதற்கான தேவை ஏற்படவில்லை என்கிறார் கார்னர் என்ற ஆய்வாளர்.

இவ்வாறே அரசியல் காரணங்களை முன்வைத்து தற்காலிகமாக அமரிக்காவில் குடியேறிய ஹெயிட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள் தமது சொந்தத் தேசத்திற்குத் திரும்பிச் செல்வது குறித்துச் சிந்தித்தில்லை என்கிறார் அவர்கள் குறித்து ஆய்வு செய்த கிளிக் சில்லர். ஹெயிட்டி குடியேற்ற வாசிகளைப் போலவே அரசியல் காரணங்களுக்காக நோர்வேயை நோக்கி இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும் நோக்கப்பட வேண்டும் என்கிறார் புலம் பெயர் தமிழர்கள் தொடர்பான கற்கையை மேற்கொண்ட பொக்லேர்ட் என்பவர்.

புலத்திலிருந்து இடம் பெயர்ந்து புதிய ஐரோப்பிய அல்லது அமரிக்க நாடுகளில் குடியேறிய மூன்றாம் உலக நாடுகளின் குடியேற்ற வாசிகளிடையே ஒரு பொதுவான கூட்டுப்பண்பு காணப்படுகிறது என்று வாதிக்கிறார்.கிளிக் சில்லர். அந்தப் பொதுவான பண்பு என்ன அது புலம்பெயர் அரசியல் தளத்தில் எவ்வாறு செயற்படுகிறது என்ற வினாக்கள் இன்றைய தமிழ்ப் புலம்பெயர் அரசியல் சூழலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவையாகும்.

முதலாளித்துவப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்த நாடுகளான ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து குடியேறுகின்ற அல்லது நாடுகளிடையே குடிபெயருகின்ற குழுக்களைப் பொறுத்தவரை அவர்களின் புலம்பெயர் அரசியல் புலம் பெயர்ந்த நாடுகளின் தேசிய அரசியலாகவே மாறிவிடுகிறது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவர்கள் உள்ளூர் அரசியல் பொருளாதார கலாச்சார நிலைமகளோடு இரண்டறக் கலந்துவிடுகின்றனர்.

புலம் பெயர் தமிழர்களின் சிந்தனை தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளின் சிந்தனை முறையிலிருந்து அடிப்படையிலேயே வேறுபடுகிறது. 30 வருடங்களாகப் புலம்பெயர்ந்து வாழுகின்ற பெரும்பாலான தமிழர்கள் முப்பது வருடத்திற்கு முன்னர் தாம் தொலைத்த அடையாளங்களை இன்றும் தேடியலைந்து கொண்டிருக்கிறார்கள். பங்களாதேஷியர்களைப் பற்றிக் குறிப்பிடும் அல் அலி என்ற ஆய்வாளர் இதனைத் தேசம் கடந்த அடையாளம் என்கிறார்.

குடிபெயர்ந்த தமிழர்கள் மத்தியில், முதலாவது சந்ததி இப்போது தான் உருவாக்கம் பெற்றுள்ளது. அந்தச் சந்ததியை தமது கலாச்சார வட்டத்திற்குள் பேணுவதற்காகான பெரும் போராட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் புலம்பெயர் தமிழர்கள்.

இன்று இலங்கையில் கூட அருகிப் போய்விட்ட பூப்புனித நீராட்டு விழா, மரபு சார்ந்த திருமணச் சடங்குகள் போன்றவற்றை மிகுந்த பொருட்செலவில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்கிறார்கள்.

30 வருடங்களின் முன்னிருந்த “யாழ்ப்பாணத்தை” ஐரோப்பாவில் மட்டும்தான் காணமுடியும்.

பிரித்தானியாவில் பெர்போர்ட் என்ற இடத்தில் செறிந்து வாழ்கின்ற பாகிஸ்தானியர்களை விட பாகிஸ்தானிய நகர்ப்புற முஸ்லீம்கள் மிகவும் “முன்னேறிய” மூட நம்பிக்கையற்றவர்களாகக் காணப்படுவதாக ஜோர்ஜ் அழகையா இன்ற பி.பி.சி ஊடகவியலாளர் தனது நேர்முகம் ஒன்றில் குறிப்பிடுகிறார்.

ஆக, மூன்றாம் உலக நாடுகளின் குடியேற்ர வாசிகள் தமது அடையாளத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக மிகவும் “விசித்திரமான” சிந்தனைத் தளத்தில் போராடுகின்றார்கள். இந்தச் சிந்தனை அவர்களிடையே ஒரு வகையான ஒருங்கிணைவை ஏற்படுத்துகிறது.

உதாரணமாக , தனது பெண்பிள்ளை ஒரு கறுப்பினத்தவரைத் திருமணம் செய்துகொண்டிவிடக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படுகின்ற ஒருங்கிணைவு, திருமணத்திற்கு முன்னர் பெண்பிள்ளை உடலுறவு வைத்துதுக்கொள்ளக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படும் ஒருங்கிணைவு என்பனவெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் ஒருங்கிணைகின்றன. அவை பண்பாட்டு நிகழ்வுகளாகவும், கலாச்சார வைபவங்களாகவும், மத வழிபாடுகளாகவும் வெளிப்படுகின்றன.

இவை எல்லாம் சரியா தவறா என்பதற்கான விவாதத்தை முன்னெடுப்பது கட்டுரையின் நோக்கம் அல்ல.

எது எவ்வாறாயினும் புலம் பெயர்ந்த தேசியம் அல்லது அது குறித்த உணர்வுகளின் பிரதான காரணிகளாக இவையே அமைகின்றன.

இவ்வாறு புலத்திலிருந்து தொலை தூரத்தில் உருவாகின்ற தேசிய உணர்வானது “கலாச்சாரப் அச்ச”  உணர்வின் அடிப்படையிலிருந்து மேலெழுகிறது. இத் தொலை தூரத் தேசிய உணர்வு சொந்த நாட்டின் அரசியலில் கணிசமான தாக்கதைச் செலுத்துகிறது.

ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலிகளுக்குக் கிடைத்த உணர்வு பூர்வமான ஆதரவு என்பது 90 களின் பின்னர் இலங்கையின் வட கிழக்கில் அவர்களுக்குக் கிடைத்ததில்லை. மேற்கின் சீரழிந்த கலாச்சாரத்திலிருந்து தமது சந்ததியைப் பாதுகாக்கின்ற குறியீடாக விடுதலைப் புலிகள் அமைப்பை “மேற்குத் தமிழர்கள்” நோக்கினார்கள் என்பதே இதன் அடிப்படையாகும்.

குஜராத்யர்கள் செறிவாக வாழும் பிரித்தானியாவின் நகரமான லெஸ்டரில் சாரி சாரியாக 30 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்ட கூட்டம் பாரதீய ஜனதா கட்சியின் அத்வானி கலந்துகொண்ட பொதுக்கூட்டமாகும். விஸ்வ இந்து பரிசத் என்ற இந்து அடிப்படை வாதக் குழுவிற்கு பிரித்தானியாவிலிருந்து ஒவ்வொரு இந்தியரும் உணர்வு பூர்வமாக வழங்கும் பணம் புலிகள் இயக்கத்திற்குத் தமிழர்கள் “கண்ணை மூடிக்கொண்டு” வழங்கிய பணத்தைப் போன்றதாகும்.

மேற்கு நாடுகளில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தடைப்பட்டு, அழிந்து சீர்குலைந்து கொண்டிருக்கும் சமூக உறவுகளோடு இணைந்து கரைந்து விடுவதற்கு வெளி நாட்டவர்கள் யாரும் தயாராக இல்லை. பாரதீய ஜனதாவும், இஸ்லாமிய அடிப்படை வாதமும், புலிகள் முன்வைத்த தேசிய வாதமும், அல்பேனிய தேசிய வாதமும் கூட பிற்போக்கான நிலப்பிரபுத்துவ சிந்தனைக்கும் சீரழிந்த கலாச்சாரத்திற்கும் இடையேயான மோதலின் விளைவே.

இலங்கையில் சிறுவர்கள் புலிகளின் இராணுவத்தில் இணைந்து கொள்கிறார்கள் என்று ‘உரிமை வாதிகள்’ கூக்குரலிட்டுக்கொண்டிருந்த வேளையில் “மேற்குத் தமிழர்கள்” தமது பிள்ளைகளை புலிகளின் புலம்பெயர் அமைப்புகளுக்கு அனுப்பிவைத்தார்கள். “புலம்பெயர் புலி அமைப்பில் இணைந்த பின்னர் தான் டங்கோ நடனம் கற்றுக்கொண்டிருந்த தனது பெண்பிள்ளை பரத நாட்டியம் கற்றுக்கொள ஆர்வம் காட்டுகிறாள்” என்று பெருமைப்பட்டுக் கொண்டார் ஒரு புலம்பெயர் தாய்.

புலிகளின் பின்னான புலம் பெயர் அரசியல் என்பதும் கூட இந்தத் தொலை தூரத் தேசிய உணர்விற்கு யார் தலைமை வகிப்பது என்பதிலிருந்தே ஆரம்பமாகிறது. புலம் பெயர் தமிழ் அரசியல் என்பது சீரழிந்த கலாச்சாரத்திற்கு எதிராக பிபோக்குக் கலாச்சாரத்தை நிறுத்துவதிலிருந்தே தனது ஆதரவுத் தளத்தைக் கட்டமைக்கிறது. . இந்த அரசியலின் இயங்கு சக்திகள் 20 அல்லது 30 வருடங்களின் முன்பதான சம்பவங்களை தமமது புலம்பெயர் சூழலுக்கு ஏற்றவாறு மறுபடி மறுபடி இரை மீட்பவர்களாகவே காணப்படுகின்றனர்.

குடியுரிமை பெற்ற இரண்டாவது மூன்றாவது சந்ததிகள் கூட நிறவாதத்தாலும், வர்க்க ஒடுக்குமுறையாலும் பாதிக்கப்படுகின்றது. கலாச்சார ஒடுக்குமுறையும் கூட இதன் ஒரு அங்கமே.  இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பிற்போக்கு நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை எதிர்கால சந்ததிக்கு அறிமுகப்படுத்துவது தீர்வல்ல. இலங்கையிலும் உலகெங்கிலும் ஒடுக்கப்படும் மக்களின் அங்கமாக எம்மையும் அறிமுகப்படுத்திக் கொள்வதே தீர்வாகும்.

இந்த நூற்றாண்டின் தெற்காசியாவின் மிகப்பெரிய மனித அவலத்தைச் சந்தித்திருக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் “புலம் பெயர் அரசியல்” தொலைதூரத் தேசிய உணர்விலிருந்து விடுதலை செய்யப்பட்டு மனித நேயம் மிக்க அரசியலாக மாற்றமடையே வேண்டும். ஆப்கானிஸ்தானிலும், காஷ்மீரிலும் மனிதர்கள் கொல்லப்படும் போது அதன் வலியையும் நாம் உணர வேண்டும்.

புலிகளின் அழிவின் பின்னர் தொலைதூரத் தேசியத்தைப் பயன்படுத்திக்கொள்ள முனையும் ஐரோப்பிய அரசோ, இந்திய- இலங்கை அரசுகளோ நமது நண்பர்கள் அல்ல என்பதை அவர்கள் உணரவேண்டும். இதுதான் தொலைதூரத் தேசியம் , இதுவரைக்கும் தோற்றுப் போகாத சர்வதேசிய வாதமாக மாற்றம் பெறுவதற்கான ஆரம்பப் புள்ளியாக அமைய முடியும்.

தவறுகளைத் தர்க்கரீதியான ஆய்விற்கும் விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உட்படுத்துவதனூடாக தேசிய வாதத்தின் முற்போக்குக் கூறுகளை வளர்த்தெடுக்க முடியும். இலங்கைப் பேரினவாதப் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சார்ந்த புலம்பெயர் தமிழ்ப் பேசும் மக்களின் பங்களிப்பு குறைந்தபட்சம் மக்கள் போராட்டத்திற்கான ஜனநாயகச் சூழலை இலங்கையில் உருவாக்குமாயின் போராடத்தின் புதிய திசைவழியில் ஒரு மைற்கல்.

————————————————————————————————-

Gardner, K., 2002. Age, Narrative and Migration: The Life Course and Life
Histories of Bengali Elders in London. Oxford: Berg.

Gardner, K., 1995. Global Migrants, Local Lives: Travel and
Transformation in Rural Bangladesh. Oxford: Clarendon Press.
Nationalism, Minorities and Diasporas: Identity and Rights in the Middle East Library of Modern Middle East Studies by Kirsten E. Schulze, Martin Stokes, and Colm Campbell
Glick Schiller, N. and G. Eugene Fouron, 2001. Long-Distance Nationalism

Exit mobile version