“அம்மா, வியாபாரம் எப்படியிருக்கிறது?”
எனது பயணத் தோழன் கேட்ட கேள்விக்கு, அவர் வெறுமனே புன்னகைத்தார். எனினும் அடுத்த கேள்விக்கு தந்த பதிலோடு அவர் எங்களுடன் உரையாடத் தொடங்கினார்.
“எனது ஊர் பூந்தோட்டம், பிள்ளை. இந்தப் பிள்ளைகளைக் கண்டவுடன் எனக்கு எனது மகன் நினைவுக்கு வந்தார்.”
எனச் சொன்னவர், தனது இரு கன்னங்களையும் நனைத்தபடி, வடிந்துகொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். அம்மா என அழைத்த குரலோடு எழுந்த மூன்று வருடங்களுக்கு முந்தைய ஞாபகங்களுக்கு, அவர் எம்மை அழைத்துச் சென்றார்.
அவரது பெயர் வீ. செல்லம்மா. யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த அவர் யுத்தம் நடைபெற்ற காலத்தில், வவுனியா, பூந்தோட்டம் கிராமத்துக்குச் சென்று ஒரு மண்குடிசையாவது அமைத்துக் கொண்டு வாழ வேண்டுமெனத்தான் தனது வீட்டைக் கைவிட்டு விட்டு வந்தார். அன்றுதான் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு முடிவு கிடைத்தது.
புதிய இடத்தில் வசிக்க ஆரம்பித்த குறுகிய காலத்துக்குள்ளேயே செல்லம்மாவுக்கு, அவரது கணவரை இழக்க நேரிட்டது. குடலில் ஏற்பட்ட காயம் உக்கிரமாகி அவர் இறந்துபோனார். செல்லம்மாவின் குடிசையைப் போலவே, விவசாய நிலமும் பாழடைந்து போயிற்று. மகள்மார் மூவர் மற்றும் ஒரே மகன் என செல்லம்மா மீது சுமத்தப்பட்ட சுமையானது இலேசுப்பட்டதல்ல. மகனான நிலேஷ் குமார் அச் சுமையைக் குறைப்பதற்காக சிறிய அளவில் ஒரு கோழிப் பண்ணையை ஆரம்பித்தார். தனது சகோதரிகளின் திருமணம் நிறைவேறும் வரையில் பண்ணையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை அக்காவுக்கும், தங்கைகளுக்கும் ஆபரணங்களைச் செய்வதற்காகச் செலவளித்தார்.
இறுதியில் அவ் வீட்டில் செல்லம்மாவும் குமாரும் மட்டுமே எஞ்சினர். செல்லம்மா சுகவீனமுற்ற நேரங்களிலெல்லாம் மருந்துகள் கொண்டு வந்துகொடுப்பதுவும், சமையலறையைக் கவனிப்பதுவும் குமார்தான். பாதையோரத்திலிருந்து வெற்றிலை விற்க வேண்டி வருமென செல்லம்மா அக் காலத்தில் ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை.
2008.06.02 அன்று, அந்த இருண்ட தினம் உதித்தது. அம்மா இருட்டில் இருப்பார் என நேரகாலத்துடன் வீட்டுக்கு வந்து குப்பி விளக்கையேற்றும் மகன், அன்றைய தினம் வவுனியா நகருக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பவில்லை. அம்மா மட்டும்தான் வீட்டிலிருப்பார் என்பதனால், அவர் எக் காரணத்தை முன்னிட்டும் முன்னர் ஒருபோதும் வீடு திரும்பாமல் இருந்தவரல்ல. சோற்றுப் பானை அடுப்பிலிருக்க, மகன் வரும்வரை வழி பார்த்து உறங்காமல் காத்திருந்த செல்லம்மா பசியை உணரவேயில்லை. அக் கொடிய இரவின் பின்னர், அடுத்த நாள் விடிகாலை வவுனியா நகருக்கு மகனைத் தேடி வந்த செல்லம்மாவுக்கு, வெள்ளை வேனில் வந்த ஒரு குழுவினர் தேவாலயத்துக்கு முன்பாக வைத்து தனது மகனைக் கடத்திச் சென்ற செய்தி கிடைத்தது.
அவர் இது தொடர்பாக, வவுனியா காவல்நிலையத்துக்குச் சென்று முறையிட்ட போதும், முறைப்பாடானது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மூன்று தினங்கள் தொடர்ந்து வவுனியா காவல்நிலையத்துக்குச் சென்று முறையிட்டு, நான்காவது தினமே அவரது முறைப்பாடானது, காவல்துறை முறைப்பாட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொள்ளப்பட்டது.
இதற்கிடையே அவரால் செல்ல முடிந்த எல்லா இராணுவ முகாம்கள், காவல் நிலையங்களின் வாயில்களில் வீழ்ந்த அவரது கண்ணீர்த் துளிகள் எண்ணிலடங்காதவை. இறுதியாக கொழும்பு ‘தீவிரவாத விசாரணைப் பிரிவு (TID)’ க்கும் சென்று இது குறித்து முறையிட்ட போதும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தனது ஒரே மகனை இழக்க நேர்ந்த செல்லம்மா, அவ்வாறுதான் நடுத் தெருவுக்கு வர நேர்ந்தது.
செல்லம்மாவை நாங்கள் சந்தித்த இத் தினத்தில், கொழும்பு காலிமுகத்திடலில், யுத்த வெற்றியின் இரண்டாண்டுக் கொண்டாட்டங்களின் கௌரவ வேட்டுக்கள் சுடப்படுகின்றன. யுத்த வெற்றியின் உபசார விழாக்கள் நிறைவுறாத இக் கணத்தில், செல்லம்மாவுக்கு இன்னும் தனது மண் குடிசைக்குள் ஒழுங்காக உணவு சமைத்துக் கொள்ள முடியவில்லை.
“மகனைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக வாழ வேண்டும்.”
இவ்வாறு மட்டுமே எண்ணும் செல்லம்மா, ஒரு பாக்குவெட்டியை மாத்திரமே எடுத்துக் கொண்டு வவுனியாவுக்கு வந்திருக்கிறார். ஒரு நாளைக்கு 40 வெற்றிலைச் சுருள்களை விற்கும் அவர், அதிலிருந்து கிடைக்கும் சிறிய இலாபத்தைக் கொண்டு வடையொன்றைச் சாப்பிட்டு, தண்ணீர் குடிப்பதன் மூலம் பகல்வேளையை சமாளித்துக் கொள்கிறார்.
“மகனில்லாமல் என்னால் அந்த வீட்டில் இருக்க முடியாது. நான், உறவினர்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் ஒரு குடிசையில் வசிக்கிறேன். பிள்ளையே, நான் வெற்றிலையை விற்றபடி இச் சனத்துக்குள்ளிருந்து மகன் வருவானா எனத்தான் தெருவைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். நான் இப்பொழுது வேறொரு இடத்தில் குடியிருக்கிறேன். மகனுக்கு இப்போது நானிருக்கும் இடம் தெரியாதுதானே? மகன் வந்தால், மகனுடனே வீடு செல்ல நான் காத்திருக்கிறேன்.”
இக் காத்திருப்பு மூன்று வருடங்கள் கடந்தும் இன்னும் முடிவடையவில்லை.
“என் மகன் மட்டும் இருந்திருந்தால் எனக்கு இப்படி வெயிலில் காய்ந்திருக்க நேர்ந்திருக்காது.”
புழுதி படிந்த முகத்தின் மீது அடைமழையெனப் பெய்யும் கண்ணீர்த் துளிகள், வெற்றிலை மீது விழுந்திடா வண்ணம் அவர் சேலை முந்தானையால் துடைத்துக் கொள்கிறார். விடியற்காலையில் வவுனியா வரும் அவர் மாலையாகும்போது இரண்டு அப்பங்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறார்.
“நான் இப்பொழுதும் உணவில் ஒரு பங்கை மகனுக்கென வைத்துவிட்டு, காலையில் வீசி விடுகிறேன். எனது மகன் எனக்கு இல்லாமல் போன பிறகு, அம்மா என நீங்கள் அழைத்தபோது என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.”
செல்லம்மா அவ்வாறு சொல்கிறார். 28 வயதான நிலேஷ் குமார் எங்கிருக்கிறார்? செல்லம்மா தனது மகனை சந்திப்பாரா? நடுத்தெருவில், புழுதிக் காற்றில் இன்னும் தனது மகனைத் தேடும் இந்த ஆஸ்த்மா நோயாளிக்கு ஒரு மாத்திரையொன்றையாவது கொண்டு வந்து கொடுப்பது யார்?
காணாமல் போன மகன் வரும்வரை சூரியகந்தையில் குஸுமாவதி அம்மா ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார். செல்லம்மாவும் ஆண்டுகள் மூன்று கடந்தும் இன்னும் எதிர்பார்ப்பைக் கைவிடவில்லை. இவ்வாறான துயரங்கள் வேறு எவருக்குமே நிகழக் கூடாதென வானம் நோக்கிக் கேட்கும் பிரார்த்தனைகளும், ஊமையாகவுமில்லை. நிற்கவுமில்லை. உண்மையாகவே இழப்புக்களால் நிறைந்த, பறித்தெடுப்புக்களால் தாக்கப்பட்டுள்ள இவ்வுலகத்தை மாற்றும்படி, குஸுமாவதி அம்மாவினதும் செல்லம்மாவினது கண்ணீர்த் துளிகள் எம்மிடம் வேண்டி நிற்கின்றன.
– தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை