Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

செம்மொழி மாநாடு – உன்னை அறிந்தோ தமிழை ஒதினேன் ? : சிவா

“செம்மொழி மாநாடும் சிவத்தம்பியின் தடுமாற்றமும்!” என்ற தலைப்பில் 08. 12.2009 அன்று இனியொருவில் வெளியான கட்டுரை காலத்தின் தேவைகருதி மீள்பதியப்படுகிறது.

உலக தமிழராய்ச்சி நிறுவனம் 45 ஆண்டுகளாகச் செய ற்பட்டு வந்துள்ள ஒரு அமைப்பாகும். அதன் முதலாவது சர்வதேசத் தமிழராய்ச்சி மாநாடு 1966ம் ஆண்டு கோலாம்பூரில் நடந்தது. அதை நடத்துவதற்கு முன்னோடியாக இருந்தவர்களுள் இலங்கையரான தனிநாயகம் அடிகள் முக்கியமானவர். அந்த அமைப்பின் நோக்கம் தமிழ் மொழிக்குத் தொடர்பான பல்வேறு அம்சங்களிலும் ஆராய்வுகளை நடத்துவதும் அதன் எதிர்கால வளர்ச்சிக்கு வளஞ் சேர்ப்பதுமாகவே இருந்து வந்துள்ளது. அதன் மாநாடுகள் பின்னர் சென்னை (1968) பாரிஸ் (1970) யாழ்ப்பாணம் (1974) மதுரை (1981) கோலாம்பூர் (1987) மொறிஷஸ் (1989) தஞ்சாவூர் (1995) ஆகிய நகரங்களில் நடந்துள்ளன.

பின்னைய மாநாடுகளில் கனதியான ஆய்வுகளும் பயனுள்ள ஆலோசனைகளுமே மாநாடுகள் முன்வைக்கப்பட்டன என்று கூறுவது கடினம். ஏனென்றால் தமிழ் பற்றிய ஒரு உணர்ச்சி கலந்த பார்வையும் சில சமயம் ஒரு வெறித்தனமும் அதைவிட முக்கியமாகத் தமிழ் மொழி வெறியை அரசியலாக்குகிற போக்குக்களும் மாநாடுகளிற் குறுக்கிட்டுள்ளன. குறிப்பாகத் தமிழகத்தில் மாநாட்டைக் கட்சி அரசியல் நோக்கங்கட்காகப் பயன்படுத்துகிற முனைப்புக்கள் எப்போதுமே செயற்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சிகளின் மூலம் தமிழ் எவ்வளவு பயன்பெற்றது என்பது விவாதத்திற்கு உரியது என்றாலும் இம் மாநாடுகளின் மூலம் இயலுமான சந்திப்புக்கள் தமிழ் பற்றிய சர்வதேச அக்கறையை உயர்த்துவதிலும் தமிழ் மொழி ஆராய்வாளர்களிடையே தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் பெரும் பங்காற்றியுள்ளது. சோசலிச நாடுகளிலே பல கனதியான தமிழராய்ச்சியாளர்களும் அக்கறையுடைய தமிழ் ஆர்வாளர்களும் இருந்து வந்தனர் என்ற உண்மை கூடத் தமிழராய்ச்சி மாநாடுகள் மூலமே தமிழ்ப் பேசும் மக்களுக்குத் தெரிய வந்தது.

ஒவ்வொரு தமிழராய்ச்சி மாநாட்டையும் எந்த நாட்டில் எப்போது நடத்துவது என்பதைப் பற்றிய அடிப்படையான முடிவுகளை உலகத் தமிழராய்ச்சி மாநாட்டின் செயற் குழுவே எடுக்க வேண்டும். அதன் பின்பு அதன் செயற்படுத்தல் பற்றிய அலுவல்களை அந்த நாட்டுக்குரிய குழுவினர் முடிவு செய்ய வேண்டும். இம் முடிவுகளின் மீது பல்வேறு காரணங்களால் கடும் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. மாநாடுகள் அரசியல் நோக்கங்கட்காகப் பயன்படுத்தப்பட்டதன் விளைவான அனர்த்தங்களும் பின்னைக் கால முடிவுகளைப் பாதித்துள்ளன.

எனினும் தமிழ் மொழி அறிஞர்கள் இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் எனப்படு வோருக்கு இம் மாநாடுகள் முக்கியமான நிகழ்வுகளாகவே இருந்துள்ளன. எல்லாரும் பங்குபற்றாவிடினும், எல்லாருக்கும் தமது துறையும் அக்கறைகளும் சார்ந்த நிகழ்வுகளும் பங்களிப்புக்களும் பற்றி அறியும் ஆவல் இருந்தே வந்தது. குறிப்பாக நவீன தமிழ்த் தொழில்நுட்பத் தேவைகளும் செயற்பாடுகளும் தமிழராய்ச்சிக்கு முக்கியமான விடயங்களாகின்றன. எனினும் மாநாட்டை எப்போது எங்கே நடத்துவது என்பதில் உள்ளுர் அரசியல் காரணமாக நீண்ட விவாதங்களும் விரைவில் முடிவெடுக்க இல்லாதவாறான முட்டுக்கட்டைகளும் தவிர்க்க இயலாதனவாகிவிட்டன.
உல கத் தமிழராய்ச்சி நிறுவனத் தலைமையகம் சென்னையில்

அமைந்திருப்பதால் அதில் தமிழக அரசியற் குறுக்கீடுகள் தவிர்க்க இயலாதனவாகவே உள்ளமை விளங்கிக் கொள்ள வேண்டியதாகும். பல்வேறு காரணங்களால் 1995ல் நடந்த 8ஆம் மாநாட்டின் பின்பாக மாநாடு நடை பெறாமல் இழுபட்டு 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழ கத்தில் தேர்தல் நடக்கும் என்பதால் அதைச் சிறிது பிற் போட நேரிடலாம் என அறியப்பட்டது.

இந்தப் பின்னணியிலேயே கருணாநிதி தமிழ்ச் செம்மொழி மாநாட்டை அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடத்த முற்பட்டார். அதற்கான ஒத்துழைப்பை அவர் தந்திரமான காய் நகர்த்தல்களின் மூலம் மேற்கொண்டார். முன்பு சி.பி.எம். ஆதரவாளராகத் தோற்றங்காட்டிப் பின்பு தி.மு.க. தலைமை க்குத் தன்னை நெருக்கமாக்கிக் கொண்ட பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி மூலம் பேராசிரியர் சிவத்தம்பியிடம் அவரது உடன்பாடு பெறப்பட்டது.

தமிழ் ஆர்வலர்கள் நடுவே செல்வாக்கிழந்து போனவரான கருணாநிதி தனது தமிழார்வத்தின் நம்பகத் தன்மையை வலுப்படுத்தவும் தனது ஆட்சியின் கீழேயே தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிட்டியது என்பதை நினைவூட்டவு மான அரசியற் காரணங்கட்காகவே இக் காய் நகர்த்தல் நடைபெற்றது. உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் இம் மாநாட்டை அங்கீகரிப்பதாக அதன் குழுவிற் பெரும்பான்மை யோர் ஏற்பதாகக் கூறுவது தமிழராய்ச்சி நிறுவனம் தனது உரிமைகட்குப் புறம்பாகச் செயற்படுகிற ஒரு காரியமாகும்.

தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பணி தனக்குட்பட்ட அமைப்புக்கள் மூலம் மாநாடு நடத்துவதே ஒழியப் பிறர் நடத்தும் மாநாடுகட்கு அங்கீகாரம் வழங்குவதல்ல. எனினும் இங்கே கருணாநிதியின் நேர்மையீனம் சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும்.

எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமையில் இருந்த அ.தி.மு.க ஆட்சி கலைக்கப் பட்டதால் 1981ம் ஆண்டுத் தமிராய்ச்சி மாநாட்டை மதுமையில் திட்டமிட்ட நாளில் நடத்த இய லாது போயிற்று. இந்திரா காந்தி மூலம் எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கவிழ்ப்பித்த கருணாநிதியால் அடுத்து வந்த தமிழகச் சட்டசபைத் தேர்தலில் வெல்ல இயலவில்லை. பிற்போடப்பட்ட மாநாடு, 1981இல் மதுரையில் நடந்தபோது கருணாநிதி தலைமையில் தி.மு.க. அதைப் பகிஷ்கரித்தது. இதுவே தமிராய்ச்சி மாநாட்டின் முதலாவது அரசியற் பகிஷ்கரிப்பாகும்.

1992 முதல் 1996 வரை ஜெயலலிதா ஆட்சியிலிருந்த போது அவருடைய விடுதலைப் புலி எதிர்ப்பு வன்மம் புலம்பெயர்ந்த தமிழர் மீதான கடுமையாகவும் இலங்கைத் தமிழருக்கு எதிரான பகையுணர்வாயும் வெளிப்பட்டது.

அவருக்கு ஆதரவாகச் செயற்பட்ட சோ. ராமசாமி போன்ற பிற்போக்காளர்களும் அதற்குத் தூண்டுதலாக இருந்தனர்.

1995ம் ஆண்டு தமிழராய்ச்சி மாநாடு நடந்த போது தமிழ் நாடு அரசு இலங்கைத் தமிழ் அறிஞர்கட்கு அழைப்பு அனுப்ப மறுத்தது. தமிழக அரசின் அழைப்பில்லாமல் மாநாட்டிற் பங்குபற்றலாம் என்று தமிழகத்திற்குச் சென் றிருந்த இலங்கைத் தமிழர்கள் மாநாட்டிற் பங்குபற்றத் தடைவிதிக்கப்பட்டது. அவ்வாறு மாநாட்டிற் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டவர்களில் பேராசிரியர் சிவத்தம்பியும் ஒருவராவார். முற்றிலும் அரசியல் மயப் படுத்தப்பட்ட இந்த தமிழராய்ச்சி மாநாட்டிற்குத் தமிழகத்திற் சில கண்டனக் குரல்கள் எழுந்தாலும், தமிழறிஞர்கள் எனப்பட்டோரிற் பெரும்பாலோர் ஜெயலலிதாவின் மூர்க்கத்தனத்தை எதிர்த்து மாநாட்டைப் பகிஷ்கரிக்க முன்வர வில்லை.

இம்முறை நடக்கவுள்ள கருணாநிதியின் அரசியல் லாபத்திற்கான மாநாட்டிற்குப் பேராசிரியர் சிவத்தம்பியிடம் ஆதரவு கோரப்பட்ட போது பேராசிரியர் குழந்தைசாமியிடம் தனது ஒப்புதலைத் தெரிவித்ததையும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் ஒப்புதல் வழங்காவிடின் மாநாட்டைச் செம்மொழி மாநாடாக நடத்தும்படியும் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. இராசேந்திரனுக்குச் சிவத்தம்பி ஒக்டோபர் 12 அன்று எழுதியுள்ளார். அதன் அடிப்படையிலேயே கருணாநிதி அவரை மாநாட்டுக் குழுவிலும் நியமித்துள்ளார்.

மாநாடு அறிவிக்கப்பட்ட பின்பு எழுந்த கடும் எதிர்ப்பின் பின்னணியில் 21ம் திகதி கலந்து கொள்வதில் தனது தயக்கத்தைத் தெரிவிக்கிற விதமாக ஒரு கடிதத்தை சிவத்தம்பி இராசேந்திரனுக்கு எழுதினார். சிவத்தம்பி கலந்து கொள்ளமாட்டார் என்ற விதமான கருத்துக்கள் பல ஊடகங்களில் வெளியான போது பேராசிரியர் சிவத்தம்பி அழைத்து வரப்படுவார் அல்லது (கருணாநிதிக்கு ராஜபக்ஷவிடம் உள்ள செல்வாக்கின் மூலம்) இழுத்து வரப்படுவார் என்று இந்திய மேலாதிக்க நிறுவனத்தின் ஏடான தினமணி எழுதியிருந்தது.

“தமிழர் பிரச்சினையில் முதல்வருக்கு உறுதியான நிலைப்பாடு இல்லை ” என்று குறிப்பிட்டு அதன் விளைவாகவே மாநாட்டுக்கு எதிர்ப்புக் கிளப்பியிருப்பதாகச் சிவத்தம்பி கூறியது 1.11.2007 ஞாயிறு வீரகேசரியில் கொட்டை எழுத்துத் தலைப்புடன் வெளியாகியிருந்தது.

சிவத்தம்பி சொல்வது தவறு. கருணாநிதிக்கு மிக உறுதியான நிலைப்பாடு உண்டு. ஈழத் தமிழர் எக்கேடு கெட்டாலும் தமிழகத்தில் தனது குடும்ப ஆட்சியை நிலை நிறுத்த டில்லிக்கு உடன்பாடாகவே செயற்படுவது பற்றிக் கருணாநிதிக்கு ஒரு தடுமாற்றமும் இல்லை. தடுமாற்றமெல்லாம் சிவத்தம்பிக்குத்தான். தனக்கு உதவுகிறவர்களும் கருணாநிதியை அண்டிப் பிழைக்கிறவர்களுமான ஒரு தமி ழகப் பேராசிரியர் கூட்டத்தைப் பகைக்காமலும் தமிழ் மக்கள் மத்தியில் கருணாநிதியின் மீதான வெறுப்பு மாநாட்டு எதிர்ப்பாக விருத்தி பெற்றுள்ளதால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் தன்மீது வெறுப்பு ஏற்படாமலும் எப்படிக் காய் நகர்த்துவது என்றும் சிவத்தம்பி இப்போது கணக்குப் போடுகிறார்.

தினமணி சொல்வது தவறு. சிவத்தம்பியை அழைக்கவும் வேண்டியதில்லை. இழுக்கவும் வேண்டியதில்லை. தானாகவே போய்ச் சேருவதற்கு அவர் வழி தேடிக் கொண் டிருக்கிறார். எதிலும் உறுதியான நிலைப்பாடு இல்லாதவர் கருணாநிதியல்ல, சிவத்தம்பி தான்.

இவை ஒரு புறமிருக்க, மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்ற விவாதம் தமிழகத்தில் களைகட்டியுள்ளது. இ.அ.தி.மு.கவும் ம.தி.மு.கவும் போவதில்லை என்றும் பா.ம.க வும் பாராளுமன்ற இடதுசாரிகளும் போவது என்றும் அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.

நடக்கப் போகிற மாநாடு தமிழ் பற்றிய மாநாடல்ல. தமிழக அரசியல் என்கிற மட்டரகமான கூத்தொன்றின் மேடையேற்றம் என்பதையே இந்த நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

குலோத்துங்க சோழனிடம் “உன்னை அறிந்தோ தமிழை ஒதினேன் ?” என்று காறி உமிழ்ந்த கம்பனைப் போல நெஞ்சுரத்துடன் இந்தக் கருணாநிதிச் சோழனிடமும் தமிழகத்தைச் சுரண்டிப் பிழைக்கும் ஏமாற்றுத் தலைமைகளிடமும் சொல்லக் கூடிய தழிழறிஞர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழக அரசியற் சகதியிலிருந்து தன்னை மீட்டெடுத்துத் தமிழ் பற்றிய கனதியான ஆய்வுகட்கும் தமிழரின் எதிர்கால வளர்ச்சிக்குரிய ஆக்கமான சிந்தனைகட்குமான களமாகத் தன்னை அமைத்துக் கொள்ள வேண்டும்.

Exit mobile version