Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சூரியன் மீண்டும் கிழக்கு கரையில் உதிக்கும்?!……..: S​.G.ராகவன்

தமிழ் தேசியம் கொண்டிருக்கக் கூடிய உள்ளக முரண் பாடுகள் எவ்வாறு தோற்றம் பெறுகின்றன அது எவ்வாறு ஆழமான பிளவுகளை, ஆபத்தான வழிமுறைகளை பின்பற்றுகின்றன, ஏன் அவை நடை பெறுகின்றன என்பதற்கு விளக்கம் பெறுவதற்கு இனியொருவில் பதியப்படும் பின்னூட்டங்களே போதுமான படிப்பினைகளை தரக் கூடியது.

போதிய சமூக அறிவு குறித்த தெளிவின்மை, போதிய அரசியல் தெளிவின்மையும் அதனூடாக வரக் கூடிய மந்த கரமான

நிலைமை ஒரு பரந்துபட்ட பார்வையையோ புரட்சிகரமான அசைவியகத்தையோ ஒரு போராளியிடமோ அல்லது போராளிஅமைப்பிடமோ தோற்றுவிக்காது. இதுதான் ஈழப் போராட்டத்திலும் ஏற்பட்டது ஈழப் போராட்டத்தின் வெற்றியும் தோல்வியும் இதில்தான் தங்கியும் இருக்கின்றது.

ஒவ்வொரு போராட்ட அமைப்பும் தமக்கு(ள்) விளங்கியவற்றையே பொது அரசியலாக மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றனர். மக்கள் மத்தியில் இருந்து மக்களுக்கான அரசியலை எந்தவொரு அரசியல் விடுதலை போராட்ட அமைப்பும் சீரான முறையில் எடுத்துச் செல்லவில்லை. கடந்த காலத்தில் சில அமைப்புகள் செய்த சில வேலைத்திட்டங்களை ஒரு வெற்றிகரமான முன்னெடுப்பாக கருத முடியாது.

ஈழப் போராட்டத்தின் ஆரம்ப கால கட்டங்களில் இந்தியாவின் சாக்கடை அரசியலுக்குள் பல(ம்)ன் பெறமுயன்ற ஈழப் போராட்ட அமைப்புகள் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டு MGR ,கருணாநிதி போன்றோரின் (இந்திய அரசினதும்) ஆதரவினை பெற முந்தி அடித்தனர். குறைந்த பட்சம் அந்த போக்கிரிகளின் போக்கிரித்தனமான அரசியலை விளங்கி கொள்ளமுடியாத அரசியலைத்தான் எல்லா ஈழப் போராட்ட அமைப்புகளும் கொண்டிருந்தன.

MGR அரசில் இருந்த பலர் இலங்கை புலனாய்வுத் துறையிடம் நேரடியான தொடர்புகளை பேணினர் என்பது ஒன்றும் இரகசியமானது அல்ல பிரபாகரனின் 1984 இல் எடுக்கப்பட்ட மிகப் பிந்திய படம் ஒன்றை இலங்கை புலனாய்வு பிரிவு தேவாரம் என்கின்ற காவல் துறை அதிகாரியிடமே பெற்றுகொண்டனர் என்ற செய்தி மிகப் பழைய பகிரங்கமான செய்தி.

இதனை நான் பின்னூட்டம் ஒன்றில் குறிப்பிட்டது யாரினதும் குதத்தில் வெடி சொருக அல்ல, அன்றி விரும்பாத மணம் பரப்ப, அது குத வழிச் செய்தியும் அல்ல. இவ்வாறன விடயங்களை யாரும் சொல்லும் போது அதன் தர்க்க நியாயங்களை ஆராய்ந்து பார்க்கும் அறிவை வளர்க்க வேண்டும் அதனை விடுத்துவிட்டு தங்களின் தோழர்களுடனான தொடர்புகள் எவ்வாறு இருக்கின்றது என என்னை கேட்பதில் என்ன விளக்கம் இருக்கின்றது என எனக்கு விளங்கவில்லை.

ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூற விரும்புகின்றேன் விடுதலை இயக்கங்கள் எல்லாம் ஏனையவர்களை பற்றிய சரியான முடிவுகள் எடுப்பதில் மேற்கூறிய மனநிலையில் உள்ளவர்களின் ஆலோசனையை பெற்றிருப்பார்கள் போல் தோன்றுகிறது இவ்வாறன நிலையில் எத்தகைய பகுப்பாய்வும் இன்றிநாம் எத்தனை பேரை துரோகியாக்கி தூர விலக்கி வைக்கப் பட்டிருக்க கூடும் அன்றி தெருவில் தூக்கி வீசப் பட்டிருக்கக் கூடும்?

நான் உட்பட எமது சமூகமும் சேர்ந்து இத் துரோகி அரசியலை எவ்வளவு லாவகமாக பற்றி பிடித்தோம். இது எமது அரசியல் வரட்டுத்தனத்தின் வங்குரோத்து நிலைமை.

பகுப்பாய்வு அரசியல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காய் டி.சிவராம், மு.திருநாவுகரசு குறித்து எனது மதிப்பீடுஒன்றைச் செய்திருந்தேன் அதில் வாதப் பிரதி வாதங்கள், இருக்கலாம், டி.சிவராம் பகுப்பாய்வு அரசியல் மூலமே பத்தி எழுத்துக்களை எழுதுபவர், எனவே அவரையும் கதை விடுதல் என்பதில் அடக்க முடியுமா?.

தினமுரசு ஆசிரியர் காலஞ் சென்ற அற்புதனும் அதே வகை ஆளுமையை கொண்டிருந்தவர்,ஆனால் அவரது ஆக்கங்கள் பலவும் தீர்க்க தரினமாகவே அமைந்திருந்தன.

தவறு எது சரி எது என்பதை பகுப்பாய்வு செய்தல், நிகழ்வுகளை உய்த்து அறிதல் என்பன ஒரு பொது புத்தியை ஏற்படுத்தும் தூய நோக்கம் ஒன்றுக்காக இருக்கவேண்டும் என்பதே எனது அவா.

பெரும் விடுதலை அமைப்பாக பலம் பொருந்தி காணப்பட்ட புலிகள் அமைப்பு யாருமே நம்ப முடியாத வகையில்(?) சாய்ந்த போது மீள் எழுவதற்கு வாய்ப்பின்றி அதன் அடுத்த நகர்வுகள் கூட மிக மோசமான முறையில் தோல்வியை சந்தித்து அல்லல் படும் போத தலைவர் வருவார் அவர் நல்ல தலைமை தருவார் என்று சொல்வதை கேட்க நான் ஒன்றும் நக்கீரன் கோபாலின் வாசகனல்ல.

இந்த கதைவிடுதல் கலாச்சாரம் கொடிகட்டி பறக்கின்றது, ஆனால் மீள் எழுந்து வரப் போகும் அத்தலைவரும் அவர் சார் சக்திகளும் ஈழத்தில் தற்போது நிகழ்ந்து வரும் மிக மோசமான நிலப் பறிப்புகள் மக்கள் அவலங்கள் இன அழிப்புகள் குறித்து புலத்திற்க்கு வெளியிலாவது கவன ஈர்ப்புகளை மேற் கொள்ளலாம் அல்லவா? சிலவேளைகளில் ஜதார்த்தவாதியான மகிந்த ராஜபக்சே பற்றிய நன் மதிப்பீடு இன்னும் இவற்றுக்கு குறுக்கீடாக எங்களது தலைவர்களுக்கு இருக்கின்றதோ தெரியவில்லை.

சகோதரர்களே இனியொரு சொல்கின்றது இது மாற்று அரசியலுக்கான உரைவெளி என்று அது என்ன மாற்று அரசியல்? ஏன் அவ்வாறு ஒரு சொற்பதம் பாவிக்கப்படுகின்றது? யாவரும் பேசக் கூடிய சிந்திக்கக் கூடிய பொது அரசியல் ஒன்றை போராடும் சக்திகள் ஏற்படுத்தத் தவறியதால் அன்றி மதிக்கத் தவறியதால், அன்றி அதனை மறுத்ததால் மாற்று அரசியல் பேசும் நிலைமையை தோற்றுவித்தது.

இந்த பொது அரங்கத்தில் பேசும் போது நாம் பலவற்றை மனம் விட்டு கதைக்கின்றோம் ஈழப் போராட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல் இருக்கும் பார்வைகள் பலவாக இருக்கும் இதனை ஒருமுகப் படுத்தி பொது அரசியலை முன்னெடுப்பதில் தக்க தலைமைத்துவம் வளர்த்தெடுக்கப் படவேண்டும்.

மக்கள் எல்லாம் தலைவன் பக்கம் மக்கள் படை என்றும் அவன் பக்கம் தான் நிற்கும் என்ற வார்த்தை பிரயோகங்களில் அமிழ்ந்து வாழாது, தனிமனித துதி பாடாது தலைவனோ தலைமையோ மக்கள் பக்கம் நிற்பதன் மூலம் மக்கள் எழுச்சி தன் விடுதலை பாதையில் வெற்றி அடையும்.

நாங்கள் மக்களாவே மக்களோடு போராடியிருப்பின் எங்களை யாரும் தோற்கடித்து இருக்க முடியாது, என்று நாம் சீருடையில் புகுந்து மக்களிடம் இருந்து அன்னிய பட்டமோ அன்று நாம் மக்களின் எஜமானர்களாக மாறி மக்கள் போராளிகள் என்ற தன்மையை இழந்து விடுகிறோம்.

விடுதலை போராட்டம் என்பதை என்று உனக்கானதாகவும் உனது குளுவுக்கானதாகவும் மட்டும் பேசவும் கதைக்கவும் குறுக்கி கொள்கிறாயோ அன்றே அது குறுகிச் செத்து விட ஆரம்பிக்கிறது அதுவே குழுவாதமாகவும் சர்வாதிகாரமாகவும் பயணிக்கிறது.
நான் உனது சோதரன் என்பதை என்று நீ நம்ப மறுக்கிறாயோ அன்றே உன்னில் மக்கள் சக்தி தங்க மறுத்து விடுகின்றது. அதன் பின்பு யாவரும் துரோகியாவர் யாவரும் எதிரியாவர். இந்த மனித பலவீனம் எல்லோரிடமும் வரலாம் ஆனால் அதனை வராமல் தடுக்கும் உளவியலை நாம் கொண்டிருக்க வேண்டும்.

இறுதியாக, நாம் எல்லோருமாக தேடவிளையும் பொதுப் பாதை எது என்பதில் இன்னும் நாம் முடிவுக்கு வரமுடியாமல் இருக்கின்றோம் பாதையை காட்ட யாரும் இல்லை!. இதோ வருகிறார் அதோ வருகிறார் பாதையை காட்ட என ஜேசு சபையினர் சொல்வது போன்று காலம் கடந்து போகிறது. நட்டாற்றில் நாம் திசை தெரியாது அலையவேண்டும் என பலர் விரும்புகின்றனர், அதில் இந்திய இலங்கை ஆளும் வர்க்கம் மிக்க கவனமாகவே இருக்கின்றது. போராளிகள் குறித்த பூச்சாண்டியை அவர்கள் தமது நிகழ்ச்சி நிரலுக்கு தேவையானபோது வெளிவிடுகிறார்கள்.

முள்ளி வாய்க்காலில் மேற்கு கரையில் மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கு கரையில் உதிக்கும் என்ற செய்தியை தவிர ஜதார்த்தவாதி மகிந்த ராஜபக்சே ஆட்ச்சியில் தமிழர்களுக்கு வேறு நம்பிக்கைகள் ஏதுமில்லை.

Exit mobile version