இவற்றில் குறிப்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (E.P.R.L.F) சமூக இயக்கத்தில் குறித்துக்காட்டத்தக்க பாத்திரத்தை வகித்திருந்ததை யாரும் மறுக்க முடியாது.
ஈழ விடுதலை இயக்கங்களைச் செயற்பாட்டுத் தளத்தில் ஆராய முற்படும் ஒவ்வொருவருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் என்று அறியப்பட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆரம்பகாலச் செயற்பாடுகள் நம்பிக்கை தருவனவாகவே அமைந்தன. அவர்களால் உருவாக்கப்படு பல கிராமங்களில் விரவியிருந்த கிராமியத் தொழிலாளர் சங்கம் பல கூலிப் போராட்டங்களையும், சாதியத்திற்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுத்தது. ஈழப் பெண்கள்விடுதலை முன்னணியில் போர்க்குண ம்மிக்க பல பெண்கள் இணைந்து கொண்டனர். வடக்கில் ஈழ மாணவர் பொது மன்றத்தின் கிளைகள் இல்லாத பாடசாலைகளைக் கண்டிருக்க முடியாது. இலங்கை ஆசிரியர் சங்கத்தில் கூட இவர்களின் கருத்தாதிக்கத்தைக் காணக்கூடியதாக இருந்தது.
தேசிய விடுதலை இயக்கம் என்ற அடிப்படையில் ஈ.பி.ஆர்.எல்.எபின் மத்திய குழு வரைக்கும் பல்வேறு வர்க்க சார்பு அணிகள் இணைந்து கொண்டனர். மத்திய குழுவிலிருந்து கீழணிகள் வரைக்கும் பல தத்துவார்த்த விவாதங்களும், முரண்பாடுகளும், மோதல்களும் தோன்றி மறைந்தன.
வெகுஜன அமைப்புக்கள் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் நேரடியான கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டுமா அன்றி சுயாதீனமாக அமைய வேண்டுமா என்பது 80களில் இயக்கத்தினுள் நடைபெற்ற தத்துவார்த்தப் போராட்டங்களில் பிரதானமானது.
சரி, தவறு என்ற விவாதங்களுக்கு அப்பால் அவர்கள் மக்கள் போராட்டங்களை நிறுவன மயப்படுத்திய முறைமையும், இயக்கத்தின் ஜனநாயக மத்தியத்துவமும், தத்துவார்த்த மோதல்களும் ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு நம்பிக்கை தரும் ஆரம்பமாக அமைந்திருந்தது.
83 இன் ஆரம்பத்தில் தமிழ்ப் பேசும்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கோடு இந்திய அரசு ஆயுதப் பயிற்சி வழங்குவதற்குவதற்கு நான்கு பிரதான இயக்கங்களைத் தெரிவு செய்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE), தமிழீழ விடுதலை இயக்கம்(TELO), ஈழப் புரட்சிகர அமைப்பு(EROS), ஈழமக்கள் விடுதலை முன்னணி (EPRLF)என்ற நான்கு அமைப்புக்களும் தமது பலத்தை நிரூபித்துக் காட்டுமாறு இந்திய உளவுத்துறை அழைப்பு விடுத்திருந்தது.
இராணுவப் பயிற்சிக்கான அறிகுறிகள் தென்பட்டதுமே தமிழீழ விடுதலை இயக்கத்தோடு செயற்பட்ட பிரபாகரன் மீண்டும் தனது விடுதலைப் புலிகள் அமைப்பை ஒழுங்கமைத்துக் கொண்டார். அதன் பலத்தை இந்திய அரசிற்கு நிறுவிக் காட்டும் வகையில் 83ம் ஆண்டு ஜூலை மாதத்தில் LTTE இயக்கதினர் இராணுவத் தொடரணி ஒன்றைத் தாக்கியழித்தது 13 இராணுவத்தினரைக் கொன்றனர்.
இதன் எதிரொலியாக யாழ்ப்பாணப் பகுதிகளில் இலங்கை இராணுவம் அப்பாவிப் பொதுமக்கள் பலரைக் கொன்றுபோட்டது. தெற்கில் இனப்படுகொலை கட்டவிழ்த்துவிடப்பட்டு ஜூலை மாதம் முழுவதும் இலங்கையில் இரத்த ஆறு ஓடிற்று. வெலிக்கடைச் சிறையில் ரெலோ இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் உட்பட பல அரசியல் கைதிகள் கோரமாகக் கொலைசெய்யபட்ட்டனர்.
இதே வேளை ஈ.பி.ஆர்.எல்.எப் தனது நிறுவன பலத்தைப் பிரச்சாரப்படுத்தும் நோக்கோடு, வெளிப்படையாகச் செயற்பட்ட வெகுஜன அமைப்புக்கள் அனைத்தும் தனது உப அமைப்புக்களாகப் பிரகடனப்படுத்தியது. தமது நிறுனவன பலத்தை இந்திய அரசிற்கு நிறுவிக்காட்டுவதற்கான வழிமுறையாக இவ்வியக்கம் இதனைப் பயன்படுத்திக்கொண்டது. சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், வெளியீடுகள் ஊடாக இப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய அரசின் இராணுவப் பயிற்சியையும் ஆயுதங்களையும் விடுதலைப் போராட்டத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறிக்கொண்டு வெகுஜன அமைப்புக்களைக் காட்டிக்கொடுத்தது ஈ.பி.ஆர்.எல்.எப். போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்களும், பெண்களும், உழைக்கும் மக்களும் தலை மறைவாக வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டது. அத்தோழு ஈ.பி.ஆர்.எல்.எப் இன் அனைத்துக் கட்டமைப்புக்களும் அழிந்து போய், எஞ்சியிருந்தவை அவ்வியக்கத்தின் தொங்குதசையாக மாற்றமடைந்தது.
அதன் பின்னதாக முழுமையான தலைமறைவு இயக்கமாக, மக்கள் சாராத ஆயுதக் குழுவாக அழிந்து சிதைந்து போனது.
ஈ.பி.ஆர்.எல் எப் இந்தியா வழங்கிய இராணுவத் தளபாடங்களுக்காகவும், பயிற்சிக்காகவும் தன்னை அழித்துக்கொண்ட பின்னர், வட கிழக்கில் மக்கள் திரள் அமைப்புக்களிலும் மக்கள் போராட்டத்திலும் நம்பிக்கை கொண்ட, செயற்பாட்டுத்தளத்தில் எந்தப் பிரதான குழுக்களும் உருவாகவில்ல. என்.எல்.எப்.ரீ போன்ற சிறிய அமைப்புக்கள் தமது அரசியல் வேலைத் திட்டம் குறித்த எந்தத் தெளிவான கருத்தையும் கொண்டிருக்கவில்லை. மக்கள் திரள் அமைப்புக்களை உருவாக்குவது என்பது தமக்கு ஆட்சேர்த்துக்கொள்வது என்பதே அவர்களின் புரிதலாக அமைந்திருந்தது.
ஏனைய அமைப்புக்களைப் போன்றே அப்பட்டமான குழுவாதப் போக்கைக் கொண்டிருந்த என்.எல்.எப்.ரி போன்ற அமைப்புக்கள் ஏனைய அமைப்புக்களில் இருந்து தம்மை வேறுபடுத்திக்கொள்ளவே மார்க்சிய – இடதுசாரிக் கருத்துக்களை முன்வைத்தனர்.
இவற்றிற்கு மத்தியில் பாசறை என்ற சிறிய மார்க்சியக் குழுவின் அரசியல் இந்த இடைவெளியை நிரப்புவதாக அமைந்திருந்தாலும் அதன் செயற்பாடு குறித்த எல்லைகு மேல் நகர முடியாத நிலையே காணப்பட்டது.
இந்திய இராணுவப் பயிற்சித் தலையீட்டுக்கு முன்னதாகவே தமிழீழ விடுதலைப் புலிகள், ரெலோ போன்ற அமைப்புக்கள் தீவிர வலதுசாரி சிந்தனைகொண்ட இராணுவக் குழுக்களாக காணப்பட்டன. இந்த நிலையில் இந்தியத் தலையீடு ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அது முன்வைத்த அரசியலையும் சிதைத்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்தியா தலையிட்ட மறுகணமே அழிக்கப்பட்டுவிட்டது.
ஈ.பி.ஆர்.எல்.எப் 83ம் ஆண்டில் அரசியல்ரீதியாகச் சிதைவடைந்த பின்னரும், இந்தியத் தலையீட்டிற்கு எதிராகவும், மக்கள் அமைப்புக்களின் சிதைவிற்கு எதிராகவும் அவ்வியக்கத்தின் அனைத்து மட்டங்களிலும் உட்கட்சிப் போராட்டங்கள் எழுந்ததன. இப் போராட்டங்களில் ஜனநாயக முற்போக்கு சக்திகளிற்கு பாசறை போன்ற சிறிய குழுக்கள் ஆதரவு வழங்கின.
ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்தை அதன் தளபதியாகவிருந்த டக்ள்ஸ் தேவானந்தா கையகப்படுத்திக் கொள்ள முற்பட்ட போது, அதன் செயலளாரராவிருந்த
அதன் பின்னர் மக்கள் விடுதலை குறித்துப் பேசிய இடதுசாரி அமைப்பான ஈ.பி.ஆர்.எல்.எப் இந்தியாவின் துணை இராணுவக் குழுவாகச் செயற்பட ஆரம்பிக்கிறது.
இந்திய இராணுவ பயங்கரவாதம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட போது ஈ.பி.ஆர்.எல்.எப் உம் அதற்குத் துணை போனது. இடதுசாரி இயக்கமாக தன்னை அடையாளப்படுத்திய அமைப்பு பயங்கரவாதிகளாக உருமாறிய தலைகீழ் மாற்றம் இது.
இந்திய இராணுவத்தோடு இணைந்து புலி சார் சந்தேக நபர்களைக் கொலை செய்வதற்காக சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் ஒரு கொலைகாரக் குழுவே இயங்கியது. இளைஞர்களைக் கட்டாய இராணுவ சேவைக்கு அணிதிரடிய ஈ.பி.ஆர்.எல்.எப் இறுதியில் புலிகளுக்கு அவர்களை இரையாக்கியது.
அழகான ஆரம்பமும் அருவருப்பான அழிவையும் வரலாறாகக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இன்று மூன்று குழுக்களாக சிதைந்துள்ளது. சுரேஷ் பிரேமச்ச்ந்திரன் தலைமையில் கடந்த வியாளன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் வருடாந்த மாநாடு நடைபெற்றது.
இவ்வேளையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆரம்பம் முதல் 83 ஆம் ஆண்டு இந்தியத் தலையீடு வரையான செயற்பாடுகளை மீளாய்விற்கு உடபடுத்தினால் இன்றைய தேவையை இலகுவாகப் புரிந்துகொள்லலாம். தேசிய இன முரண்பாடு புதிய அரசியல் தலைமையைக் கோரி நிற்கின்றது. தோற்றவற்றிலிருந்து கற்றுக்கொண்டு புதிய அரசியல் வழிமுறையை உறுதியாக முன்வைக்க விரும்பும் புதிய தலைமுறைக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் இன் அழிவு நிறையக் கற்றுத் தரும்.