Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுய விமர்சனம் என்றால் என்ன ?

இப்போது பலர் மற்றவர்களை நோக்கிச் “சுய விமர்சனம் செய்” என்று ஆணையிடுகிற தொனியிற் பேசுவதை அறியக் கூடியதாகவுள்ளது. இணையத்தளங்களில் நடக்கிற விவாதங்களில் இதை அடிக்கடி அவதானிக்கலாம்.

எதையாவது யாரேன் கண்டித்தோ விமர்சித்தோ கருத்து வெளியிட்டால் அக் கண்டனத்தையோ விமர்சனத்தையோ திசை திருப்புவதற்காகக், கருத்துக் கூறியவர் மீது ஏதாவது குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. அல்லது அதற்கும் அப்பாற் சென்று நீ முதலிற் சுய விமர்சனம் செய்து விட்டுப் பேசு என்று சொல்லப்படுகிறது.

பொதுவாக மற்றவர்களைச் சுயவிமர்சனம் செய்யுமாறு ஆணையிடுகிறவர் என்றாவது தன்னைச் சுயவிமர்சனம் செய்தவராக இருப்பதில்லை. எனவே, சுயவிமர்சனம் என்பது, ஒருவர், தான் குற்றவாளி என்று உலகறியச் சொல்லுகிற ஒரு காரியமாகவே இவர்களாற் காணப்படுகிறது. இதற்கான காரணங்கள் எவையாயிருந்தாலும், சுயவிமர்சனம் என்கிற மாக்சிய லெனினிய நடைமுறைக்குப் பயிற்றப்படாமை அவற்றுள் ஒன்று என்றே கூற வேண்டும்.

முக்கியமான விவாதங்கள் அவற்றுக்குரிய விடயச்சார்பாக அமையாமல் தனி மனிதர்களது சுய முக்கியத்துவஞ் சார்ந்த மோதல்களாக அமைய மேற்கூறியவாறான அணுகுமுறை வழி செய்கிறது. விவாதங்களில் ஈடுபடுகிற ஒவ்வொருவரும் தன்னையும் தன்னைச் சார்ந்த ஒரு சிலரையும் புனிதர்களாகவும் பிறரைத் தீயோராகவும் காட்ட முற்படுவதையும் நோக்குகிற போது, சுய விமர்சனம் என்ற பதமும் தோழர் என்ற சொல்லைப் போலவே தவறாகப் பயன்படுகிறது எனத் தெரிகிறது.

சுய விமர்சனம் என்பது ஒரு மனிதரோ அமைப்போ தனது கடந்த காலத்திலிருந்து கற்பதற்கான ஒரு நடைமுறை. எந்த ஒருவரும் தவறுகட்கு அப்பாற்பட்டவரல்ல. எந்த அமைப்பும் தவறுகட்கு அப்பாற்பட்டதல்ல. தெரிந்தும் தெரியாமலும் கருதியும் கருதாமலும் தவறுகள் நிகழுகின்றன. தவறுகளிலிருந்து கற்பதன் மூலம் ஒருவர் தன்னை முன்னேற்றிக் கொள்கிறார். கற்க மறுப்போர் முன்னைய தவறுகளை மீண்டும் செய்வதுடன் புதிய தவறுகளையும் தவிர்க்க இயலாதோர் ஆகின்றார்கள்.

சுய விமர்சனம் என்பது சிலர் நினைப்பது போல ஒரு சடங்கல்ல. மதங்கள் பரித்துரைக்கும் பூசை வழிபாடு, தொழுகை என்பன போன்ற காரியமல்ல. பாதிரியாரிடம் போய்ப் பாவ மன்னிப்புக் கேட்கிறது போன்றதுமல்ல. எங்கள் நடுவே உள்ள சில ‘அரசியற் பாதிரிமார்’ தங்களைப் புனிதர்களாகக் கருதுவதாலே தான் பிறர் தம்மிடம் வந்து சுய விமர்சனம் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்களே தெரியவில்லை.

எனினும் ஆரோக்கியமான சுய விமர்சனம் ஒரு ஆரோக்கியமான சூழலிலேயே இயலுமானது. ஒருவரே ஒரு அமைப்போ மேற்கொண்ட ஒரு பணியோ ஒரு வேலைத் திட்டமோ எதிர்பார்த்த விளைவுகளைத் தராதபோது, அல்லது எதிர்பார்த்ததற்கு மாறான விளைவுகளைத் தருகிறபோது, அது ஏன் என்று அறிவது அவசியமானது. அல்லாமலும் தமது செயற்பாடுகளின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து அவதானிப்பதும் அவற்றின் சரியான பக்கங்களையும் தவறான பக்கங்களையும் காலத்துக்குக் காலம் கணிப்பெடுத்து நடைமுறையைச் சீர்செய்வதும் அவசியமானவை. எல்லா அமைப்புக்களும் ஏதோ வகையான சுயவிமர்சனத்தைச் செய்கின்றன. தனி மனிதர்களும் செய்கின்றனர். எனினும் தனிமனிதவாதமும் அகங்காரமும் தவறுகளை ஒப்புக் கொள்ள விடாமல் மறிக்கின்றன. மாறாக அவற்றை மூடி மறைக்கப் பிறரைப் பழி சொல்லுமாறு தூண்டுகின்றன.

மாக்சிய லெனினியக் கண்ணோட்டத்திலான சுய விமர்சனம் முற்றிலும் வேறுபட்டது. அது சுயவிருப்பின் அடிப்படையிலானது. அது வற்புறுத்தலுக்காக மேற்கொள்ளப்படுகிற ஒரு சடங்காராசாரமான செயல்ல. அது விமர்சனம்-சுயவிமர்சனம் என்ற அடிப்படையிலேயே பொதுவாக மேற்கொள்ளப் படுவது. அதை விடவும், விமர்சனம் என்பது கண்டனமல்ல. சுய விமர்சனம் என்பது காவல் நிலையத்தில் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலமுமல்ல. முக்கியமாக எதிர்பாராத அல்ல விரும்பத்தகாத விதமான விளைவுகளின் பின்னணியிலும் ஒரு செயற்பாட்டின் குறைநிறைகளை அறியும் போக்கிலுமே சுய விமர்சனம் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே அது பிறர் குற்றங்கண்டு தண்டிக்கிறதற்காகவோ அவமதிப்பதற்காகவோ செய்யப்படுவதில்லை. ஒருவர் தனது தவறுகளிலிருந்து தானும் பிறருங் கற்கக் கூடிய விதத்தில் செய்கிற சுய விமர்சனம் ஒரு நல்ல தோழருக்கு மனநிறைவு தருகிற அனுபவமாக அமையலாம்.

சுய விமர்சனம் நீதிமன்ற நடவடிக்கை போன்றதல்ல. ஏனெனில் அமைப்பிலுள்ள அனைவருமே ஒரு விசாரணைக்கு உரியவர்களாகின்றனர். அனைவருமே அதன் போக்கில் நல்ல முடிவுகளை வந்தடைகிறார்கள். ஒரு தோழரின் தவற்றுக்கு அவர் சார்ந்துள்ள அமைப்பும் பிற தோழர்களுங் கூடப் பங்களித்திருக்கலாம். எனவே நேர்மையான சுயவிமர்சனம் மற்றவர்களையும் சுய விமர்சனஞ் செய்யத் தூண்டலாம். எனவே சுய விமர்சனம் என்பது தனியே ஒருவரையன்றி ஒரு அமைப்பையும் கறை நீக்குகிற நடவடிக்கையாகிறது.

இவ்வாறான சுயவிமர்சன மனப்பாங்கு யாருக்கும் தானாகவே வருவதில்லை. அமைப்பின் மீதான நம்பிக்கையும் அமைப்பிலுள்ள பிற தோழர்கள் மீதான நம்பிக்கையும் வலுவடையும் போது அதற்கமைவான சூழல் உருவாகிறது. தனது தவறுகளை ஒப்புக்கொள்வதால் தான் தாழவில்லை உயர்வதற்கான வாய்ப்பையே உருவாக்கிக் கொள்கிறேன் என்ற எண்ணம் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு. தவறுகளை மூடி மறைத்தாலே பிறர் தன்னை மதிப்பர் என்ற எண்ணம் தன்னம்பிக்கையீனத்தின் அடையாளம் தற்குறிகளாகவும் சுய விளம்பரகாரராகவும் இருப்பவர்கள் உண்மையிற் தன்னம்பிக்கைக் குறைபாடு உடையவர்களே.

ஒரு அமைப்பினுள் ஒருவர் விமர்சனத்திற்கு முகங் கொடுத்துத் தவறுகளைத் திருத்துவது தொடக்க நிலை. தனது தவறுகளைப் பிறர் சுட்டிக்காட்ட முதலே உணரும் ஆற்றலைச் சுயவிமர்சன நடைமுறை வழங்குகிறது.

மேன்மையான இந்தக் கோட்பாடு தமிழ் இளைஞர் இயக்கங்களுக்குள் எவ்வாறு சீரழிக்கப் பட்டுள்ளது என்பதை அறிய வேண்டுமானால் எடுத்ததற்கெல்லாம் இன்னார் இதற்காகத் தன்னைச் சுய விமர்சனம் செய்ய வேண்டும் என்ற விதமான ஆணைகளைக் கவனித்தாற் போதுமானது.

சில இயக்கங்களுடைய அராஜகத்துக்கும் முரட்டுத்தனமான நிறுவனக் கட்டுப்பாட்டுக்கும் அதிகாரப் போட்டிக்கும் தனிமனிதவாதத்துக்கும் பழக்கப்பட்டுப் போனவர்கள் உள்ளனர். தம்மை மிஞ்சிய புரட்சிகரத் தூய்மையோ அறிவோ ஆற்றலோ உள்ளவர் யாரும் இல்லை என்று காட்டிக் கொள்ள அவர்கள் விரும்புவதன் ஒரு வெளிப்பாடு தான், பிறர் சுயவிமர்சனம் செய்ய வேண்டும் என்னும் தொடர் தொடரான ஆணைகள்.

புரட்சிகர அமைப்புக்கள் தம்மைச் சுயவிமர்சனம் செய்கிற போதும் சகோதர அமைப்புக்களை விமர்சனம் செய்கிறபோதும் அந்த விமர்சனங்களின் தேவையும் பயனுங் கருதியே அவ் விமர்சனங்களை அறிய வேண்டியோரிடம் அறியத் தருவர். அமைப்புச் சார்ந்த தனி மனிதர் விடயத்திலும் அவ்வாறே நடக்கிறது. விமர்சனமும் சுய விமர்சனமும் எதிரிகளின் பயன்பாட்டுக்கானவையல்ல. குறிப்பாகச் சுய விமர்சனம் நட்புச் சக்திகட்கு வரையறுக்கப்பட்ட ஒன்று.

சிலர் சில விடயங்கள் பற்றிக் கேள்விகட்கு விளக்கம் வேண்டும் என்றோ தமது உடன்பாட்டின்மையை வெளிப்படுத்தவோ பிறரிடம் சுயவிமர்சனம் கோருவதுண்டு. இது சுயவிமர்சனம் என்றால் என்ன என்று அறியாததன் விளைவு. எனினும் இப்போது நடப்பது என்னவென்றால் தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டுச்சென்ற விடுதலை இயக்கக்காரர்களும் அவர்களது முகவர்களும் இன்று தாம் எதிர்கொள்ளுகிற கடும் விமர்சனங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புகிற விதமாகச் சுயவிமர்சனம் என்பதை ஒரு கேடயமாக்க முனைகின்றனர். இது பரிதாபமானது.

-புதியபூமி

Exit mobile version