பல தேசங்களின் கூட்டான ஒரு நாட்டில் ஒரு தேசம் பிரிந்து செல்ல விரும்பினால் அதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது தெளிவான உலக விதி. அதற்காக மற்றைய அனைத்து இனக்குழுக்களையும் விட நாங்கள் மேலானவர்கள் என்றும் நாங்கள் இணைந்து வாழவே விரும்பமாட்டோம் என்றும் கூறுவது பிரிவினை வாதம். அடிப்படையில் அது ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறை.
உதாரணமாகப் பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்பட்டால், வடக்கிலும் கிழக்கிலும் வாக்கெடுப்பு நடத்தி மக்களின் விருப்பின் அடிப்படையில் பிரிந்து செல்வது என்பது ஜனநாயகம்.
பிரிந்து செல்லும் உரிமை வென்றெடுக்கப்படும் காலத்தில் இலங்கையின் புறச்சூழல் மக்கள் இணைந்து வாழ்வதற்குரிய தன்மைகளைக் கொண்டிருக்குமானால் மக்களின் விருப்பின் அடிப்படையில், பிரிந்து செல்லும் உரிமையைப் பேணிக்கொண்டே இணைந்து வாழலாம். தேவையேற்படும் போது பிரிந்து செல்லலாம்.
இக் கோரிக்கையை ஐ.நா உட்பட உலகில் எந்த நாடும் சட்ட அடிப்படையில் நிராகரிக்க முடியாது. இலங்கை அரசு பிரிவினைக்கு எதிரான சட்டமியற்றினாலும் பிரிந்து செல்லும் உரிமையைச் நிராகரிக்க முடியாது.
பிரிந்து செல்லும் உரிமைக்கு எதிரானவர்கள் யார்?
முள்ளிவாய்க்காலில் எமது போராட்டத்திற்கான நியாயத்தை சாட்சியின்றி. பகல்வெளிச்சத்தில் மண்ணோடு மண்ணாகப் பேரினவாதிகள் புதைதுவிடுவதற்கு முன்பிருந்து இன்று வரை தமிழர்களை உலக மக்களுக்குப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தலைமைகள் என்ன சொல்கின்றன?
தமிழீழமே முடிந்த முடிபு என்கிறார்கள்! அதாவது பிரிந்து செல்லும் உரிமையை வழங்குங்கள் நாம் பிரிந்து செல்லவதா இணந்து வாழ்வதா என்பதை மக்களின் விருப்பின் அடிப்படையில் தீர்மானித்துக்கொள்கிறோம் என்று கேட்பதற்குப் பதிலாக பிரிந்து செல்வது மட்டுமே எமது நோக்கம் என்கிறார்கள்.
வேறு வழிகளில் சொன்னால், இலங்கையில் இணைந்து கூட்டாட்சி நடத்தும் சூழல் ஏற்பட்டால் கூட பிரிந்து சென்று வாழ்வதே எமது ஒரே நோக்கம் என்கிறார்கள். பிரிந்து செல்லும் உரிமையைப் பேணிக்கொண்டே இணைந்து வாழ்வதற்கு அவர்கள் விரும்பவிலை. இதற்கான காரணங்களாக, தமிழர்கள் மேலானவர்கள், ஆண்ட தமிழர்கள் மீண்டும் ஆளவேண்டும், ஏனைய தேசிய இனங்களை விட நாமே மேலானவர்கள் போன்றவற்றை அடுக்கிக்கொண்டே செல்கிறார்கள்.
இதனால் உலக மக்கள் தமிழர்களைப் பிரிவினைவாதிகளாகவே கருதும் நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள். சிங்கள மக்கள் மத்தியிலிருக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகளை விலகி ஓடிவிடச் சொல்கிறார்கள்.
தமிழீழம் என்பது தாகம், கனவு, சொர்க்கபுரியின் வாசல் என்று அழகான உணர்ச்சியூட்டும் வார்த்தைகளால் மக்களின் ஒரு பிரிவினரை உணர்ச்சிவசப்படுத்தி தமது பிழைப்பை நடத்திக்கொள்கிறார்கள்.
பிரிந்து செல்லும் உரிமையை ஏற்றுக்கொள்பவர்கள் கூட இவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இதனால் இக் கும்பல்கள் தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிப்பதற்குத் திரை மறைவில் செயற்படுகின்றன என்பது ஆயிரம் காரணங்களை முன்வைத்து விளக்கவேண்டிய தேவையில்லை.
சுய நிர்ணைய உரிமையோ அன்றி அதன் கோட்பாட்டு வெளிப்பாடான தேசியமோ மொழியை மட்டும் சார்ந்ததல்ல. வரலாற்று வழிவந்த கலாச்சாரம், அரசின் எல்லைக்குட்பட்ட பிரதேசம், தேசிய இனப்பகுதிக்கு என் தனியான சந்தைப் பொருளாதாரம் போன்றவற்றையும் சார்ந்ததாகும். இதனை மொழி சார்ந்தாகக் குறுக்க முற்படுவது இஸ்லாமியர்கள் தமது பிரச்சனைகளை மதம் சார்ந்து குறுக்கிக்கொண்டதற்கு ஒப்பானது.
சுய நிர்ணைய உரிமைக்கு எதிரான இவர்களின் செயற்பாடுகள் பல்வேறு ஆதரங்களைக் கொண்டது.
நாளை மிகுதி பதியப்படும்…