Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீனா குறித்த அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : இதயச்சந்திரன்

மாலைதீவில் சார்க் கூட்டமைப்பின் 17ஆவது உச்சி மாநாடு நடைபெறுகிறது. 1985 இல் முதல் மாநாடு கூட்டப்பட்டாலும் 1991, 1998, 2008இல் இலங்கையில் இது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையை உள்ளடக்கிய இவ்வமைப்பு இந்து சமுத்திர பிராந்திய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துவதைக் காணலாம். 2007 இலிருந்து பார்வையாளர் அந்தஸ்தினைக் கொண்ட அமெரிக்காவானது இம்முறை தெற்கு மற்றும் கிழக்காசிய விவகாரங்களிற்கான உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக்கை அனுப்புகிறது. அவரோடு அண்மைக்காலமாக விக்கிலீக்ஸில் குறிப்பிடப்படும் முக்கிய நபரான இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புடினீசும் கலந்து கொள்கிறார். ‘ உறவுப் பாலத்தை கட்டியெழுப்புதல்’ என்கிற பல்லவியோடு ஆரம்பமாகியுள்ள இம் மாநாட்டில், இருதரப்பு உறவுகளை கட்டியெழுப்பக் கூடிய வகையில் அதில் பங்கு பற்றும் நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும், பார்வையாளராக உள் நுழைந்துள்ள அமெரிக்கா, பாகிஸ்தான் -இந்திய உறவினைப் பலப்படுத்த தீவிர முயற்சியினை மேற் கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளை மாநாடு ஆரம்பமாவதற்கு இரு தினங்களுக்கு முன்னர், பூரண இராஜதந்திர அந்தஸ்த்தோடு கூடிய தூதரகத்தை சீன மக்கள் குடியரசு திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் கொலையோடு ஆரம்பமாகிய அமெரிக்க-பாகிஸ்தான் முறுகல் நிலை, இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கிடையே புதிய அணிகளை உருவாக்கும் சாத்தியப்பாடுகள் தென்படுவதால், சீனாவும் தனது காய்களை நகர்த்த ஆரம்பிப்பதை உணரக் கூடியதாகவிருக்கிறது.

அத்தோடு இந்தியாவைச் சூழவுள்ள பிராந்தியங்களில் சடுதியான மாற்றங்கள் நிகழ்வதை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். யூரேசியாவில் (EURASIA), ஐந்தில் மூன்று பரப்பளவைக் கொண்ட அல்லது 30 மில்லியன் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைக் கொண்ட சீனா, ரஷ்யா, கசகஸ்தான், ரஜிகிஸ்தான், உஸ்பேஸ்கித்தான் மற்றும் கைகிஸ்தான் நாடுகளை உள்ளடக்கிய சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organization) 10ஆவது மாநாடு அண்மையில் நடைபெற்றது. அனேகமானவை சீனாவுடனான எல்லைகளைத் தொட்டுச் செல்லும் நாடுகள். இந்த 6 உறுப்பு நாடுகளின் சனத்தொகை 1.525 பில்லியனாகும். சாங்காயில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் மாநாட்டில் பாகிஸ்தான், மங்கோலியா, இந்தியா, ஈரான் போன்றவை பார்வையாளர் அந்தஸ்தோடு கலந்து கொள்கின்றன.

ஆனாலும் இங்கு, இலங்கைக்கும் பெலரூசிற்கும் (BELARUS) ‘பேச்சுவார்த்தை பங்காளிகள்’ என்கிற அந்தஸ்த்து வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டில் பொருளாதார மற்றும் பாதுகாப்பு குறித்து பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன. இருப்பினும் இருதரப்பு பொருளாதார உடன்பாடு என்பதற்கு அப்பால், நாடுகளுக்கு இடையேயான திறந்த பொருளாதார கோட்பாட்டின் அடிப்படையில் உறவினை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்கிற விவகாரங்களே முக்கிய விவாதக்கருப்பொருளாக இருந்தது. இந்நாடுகளுடன் கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் வர்த்தகம், 12.1 பில்லியன் டொலர்களிலிருந்து 90 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளதை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இந்நாடுகளின் மத்திய வங்கிகள், சீன நாணயம் சார்ந்த சொத்துக்களில் முதலீடு செய்யக்கூடிய உடன்பாடுகளை சீனக்குடியரசு அனுமதிக்கிறது. ஆசியாவிற்கு அப்பால் முதன் முதலாக, ஆஸ்திரியா (AUSTRIA) வுடன் இவ்வாறான முதலீடு குறித்த உடன்படிக்கையில், கடந்த வியாழனன்று சீனா கைச்சாத்திட்டதை நோக்கலாம். றென்மின்பி (RENMINBI) அல்லது யுவான் என்கின்ற தனது சொந்த நாணயத்தில் சகல பொருண்மிய உறவுகளையும் கட்டியெழுப்ப சீனா முயல்வது, புதிய பரிமாணமொன்றினை உலக நிதியியல் சந்தையில் நிகழ்த்தப் போகின்றது. அடுத்ததாக யூரோசியாவில் நடக்கும் மாநாடு, மாலைதீவில் நடக்கும் சார்க் உச்சிமாநாடு என்பவற்றுக்கு அப்பால், “நட்புறவு 2011′ என்கிற குறியீட்டுப் பெயருடன் சீனா பாகிஸ்தான் இராணுவங்கள், இஸ்லாமாபாத்திற்கு அருகில் போர்ப் பயிற்சியொன்றில் ஈடுபடப் போவதை அவதானிக்கலாம்.

நவம்பர் 16ஆம் திகதி ஆரம்பமாகும் பயங்கரவாதத்திற் கெதிரான இக் கூட்டுப் போர்ப் பயிற்சி, இந்தியாவைக் குறிவைக்கும் மறைமுக நிகழ்ச்சி நிரலைக் கொண்டதென அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் இராணுவ உயர் பீடத்தினரை இந்திய இராஜதந்திர கொள்கை வகுப்பாளர் எப்போதும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது வழமையானது.

அதேவேளை டைம்ஸ் ஒவ் இந்தியாவில் வெளி வந்த ஆய்வறிக்கை ஒன்றில் சீனாவானது பாகிஸ்தானிற்கான ஆயுத வழங்கலை அதிகரித்துள்ளதோடு, டாங்கிகளை தரமுயர்த்தி, ஆளில்லா விமானங்களையும் விநியோகிக்கிறதென குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு நேரெதிராகவுள்ள பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பாலைவனப் பிரதேசத்தினுள் சீன இராணுவம் கள மிறங்கி இருப்பதாக அப்பத்திரிகை கூறுகிறது. சர்வதேச எல்லையிலிலிருந்து 13 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள சீனர்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிப் பணியில் ஈடுபடுகிறார்களென பாகிஸ்தானும் அதற்கான வியாக்கியானத்தை வழங்குகிறது. தன்னைச்சுற்றி நாலாபுறமும் சீனா விரிக்கும் பொறியாக இதனை இந்தியா பார்க்கிறது. அண்மையில் கலாநிதி சுபாஸ் கபிலா எழுதிய கட்டுரையொன்றில், அமெரிக்கா -பாகிஸ்தான் -இந்தியா என்கிற மும்மூர்த்திகளின் மூலோபாயக் கூட்டிற்காக நடைமுறைச் சாத்தியமற்ற கனவில் (Utopian Dream) அமெரிக்கா மூழ்கி இருப்பதாக குறிப்பிடுகின்றார்.

அதாவது சீனாவை ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதற்கு இவ்வகையான கடினமான மூலோபாயக்கூட்டு அமெரிக்காவிற்கு அவசரமாகத் தேவைப்படுகிறது என்பதுதான் உண்மை. அதற்கு ஏற்றவகையில் பாகிஸ்தானின் இராணுவ ஜெனரல்களோடு உறவினை ஏற்படுத்தக் கூடிய வகையில் நாம் இறங்கிச் செல்ல வேண்டுமென புதிய இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கருதுவதாக, கலாநிதி கபிலா கவலைப்படுகின்றார். பாகிஸ்தான் உடனான உறவினை மேம்படுத்த மாற்று வழி முறையொன்றினை முன் வைக்கிறார்கள் வேறொரு தரப்பினர். அதாவது ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களை கைவிட்டு, அதற்கு பிரதியுபகாரமாக பாகிஸ்தானிலிருந்து வரும் பயங்கரவாத செயற்பாடுகளை அதன் இராணுவத்தினர் தடுத்து நிறுத்த வேண்டுமென்கிற வேண்டுகோளை முன்வைக்கலாமென்பதே அத்தரப்பினர் வாதம். இவ்விரு நாடுகளுக்கிடையே சுதந்திரமடைந்த காலம் முதல் நிலவி வரும் நம்பிக்கை குறைபாடு , சரியான கொள்கைத் தெளிவினை பெற முடியாமல் அமெரிக்கா தடுமாறுகிறதா வென்கிற கேள்வியை எழுப்புகிறது.

அதே வேளை இந்தியாவை ஒரு வட்டத்துள் அடைத்து நகர முடியாமல் தடுக்கும் சீனாவின் பாரிய மூலோபாய நோக்கிற்கு பாகிஸ்தான் பயன்படுத்தப் படுகிறது என்பதை அமெரிக்காவும் புரிந்துகொள்ளும். தலிபான்களுக்கு பாகிஸ்தானின் உளவுப் பிரிவினர் நிபந்தனையற்ற ஆதரவினை வழங்குகிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தும் அமெரிக்கா, இவ்வழுத்தங்களினூடாக பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதோடு, இந்தியாவோடு சமரச உடன்பாட் டிற்கு வர இவ்வழுத்தம் ஊக்கியாக தொழிற்படுமென அமெரிக்கா எண்ணுகிறது. அதாவது சீனாவோடு சங்கமமாகாமல், நீண்ட பகையாளியான இந்தியாவுடன் எவ்விதத்திலாவது பாகிஸ்தான் இணைய வேண்டுமென்பதையே அமெரிக்கா விரும்புகிறது. சார்க் மாநாட்டிற்கு சென்றுள்ள றொபேர்ட் ஓ பிளேக் இத்தகைய சமரசக் களத்தினை உருவாக்க பாடுபடுவாரென நம்பலாம். இந்த மும்மூர்த்திகளின் கூட்டு பலமடைந்து நேர் கோட்டில் பயணித்தால், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்க முயற்சிகள் பலவீனமடையும். அத்தோடு இலங்கையின் சீனா நோக்கிய சரிவும் தடுத்து நிறுத்தப்படும். ஆகவே ஆசியாவின் தலைவாசலில் நிலை கொண்டுள்ள இந்து சமுத்திரப் பிராந்தியத்தில், இரு அணு ஆயுத நாடுகளை இணைத்த புதிய மூலோபாயச் சமன்பாட்டினை நிறுவ அமெரிக்கா முயற்சிக்கும் அதே வேளை, ஐரோப்பிய நிதி நெருக்கடிச் சிக்கலைத் தீர்ப்பதற்கு சீனாவின் பேருதவியை நாடி நிற்கிறது மேற்குலகம். இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு சீனாவிற்கு பயணம் செய்துள்ளார் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவி கிறிஸ்டின் லகார்ட் . பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச நிதி தொடர்பான ஆய்வரங்கில் உரையாற்றிய லகார்ட் அம்மையார், உலக நிதி நிலைமை மோசமடைந்து செல்வதாகவும், ஆசியப் பொருளாதாரங்கள் அதற்கெதிராக தற்காப்பு நிலையை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார். அத்தோடு ஈரோவலய நாடுகளின் கடன் நெருக்கடிக்கு உதவு முகமாக உருவாக்கப்பட்டுள்ள ஈ.எவ்.எஸ்.எவ். (European Financial Stability Facility) என்கிற பிணை மீட்பு நிதியத்திற்கு சீனாவின் பங்களிப்பு அவசியமென்று வலியுறுத்தினார்.

அதாவது உலகின் மிகப்பெரிய வெளிநாட்டு நாணயக் கையிருப்பாக 3.2 ரில்லியன் அமெரிக்க டொலர்களை வைத்திருக்கும் சீனா, இந் நிதியத்தில் முதலீடு செய்யவேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும் விரும்புகின்றனர். ஏற்கனவே கிரேக்க தேச நெருக்கடியால் அந்த நாட்டில் முதலீடு செய்த ஜேர்மனி, பிரான்ஸ் நாட்டு வங்கிகள் இயங்க முடியாமல் தள்ளாடுகின்றன. அடுத்த வருடமளவில் கிரேக்கத்தின் தேசியளவிலான மொத்த கடன், உள்நாட்டு மொத்த உற்பத்தியின் (GDP) 198 சதவீதமாக இருக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. இத்தாலியிலிருந்து புதிதாக ஒரு பெரும் தலைவலியும் புகுந்துள்ளது. அங்கு ஆளையும் மாற்றி ஆட்சியினையும் மாற்றினால் கடன் பிரச்சினை தீருமாவென பரீட்சித்துப் பார்க்கிறார்கள்.

தயவு தாட்சண்யமின்றி மக்கள் மீது அதிகளவு வரிச் சுமையை செலுத்துவோரும் மானியங்களை குறைப்போருமே ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இப்போது தேவையான ஆட்சியாளர்கள். உதவி கோரிப் போன கிறிஸ்டின் லகார்ட் அம்மையார், கொதிப் பேறக்கூடிய சில கதைகளையும் சீனாவிடம் கூறியுள்ளார். அதாவது சீனா தனது யுவான் நாணயத்தின் பெறுமதியை வேண்டுமென்றே குறைத்து வைத்திருப்பதாகவும், இந்த மதிப்புக் குறைந்த பணத்தைக் கொண்டு சீன ஏற்றுமதியாளர்கள் அதிக நன்மையடைவதாகவும், அதனால் சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சியுறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடிய வரி விதிக்கவேண்டுமென அமெரிக்க செனட் சபை எடுத்த தீர்மானத்தால் கோபமடைந்த சீனாவிற்கு, லகார்ட் அம்மையாரின் குத்தல் பேச்சு வெந்த புண்ணில் கத்தியால் கீறியது போல் இருந்திருக்கும். 2007 இல் உருவாக்கப்பட்ட சீன முதலீட்டுக் கூட்டுத்தாபனமானது (China Investment Corp.), அமெரிக்காவின் மோர்கன் ஸ்ரான்லி (MORGAN STANLEY) என்கிற முதலீட்டு வங்கியிலும், பிளக்ஸ்ரோன் (BLACKSTONE) என்கிற சொத்து முகாமைத்துவ நிறுவனத்திலும் பெரும் முதலீட்டினை செய்து, 2008 இல் நடந்த உலக பொருளாதார வீழ்ச்சியினால் சுமார் 400 பில்லியன் டொலர்களை இழந்தது. ஆகவே ஏற்கனவே சூடு கண்ட சீனா, குறைந்தபட்சம் அனைத்துலக நாணய நிதியத்தின் உத்தரவாதம் இல்லாமல் இந்த ஐரோப்பிய நிதியத்தில் முதலிட முன்வராது. ஆகவே இங்கு மேற்குலகைப் பொறுத்தவரை தெளிவானதொரு இரட்டை நிலைப்பாட்டை நாம் பார்க்கலாம். மேற்குலகின் நிதி நெருக்கடியை சமாளிக்க சீனாவின் பொருண்மிய உதவி தேவை.

ஆனால் இந்து சமுத்தரப் பிராந்தியத்தில் அதன் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த இந்திய-பாகிஸ்தான் உறவு தேவை. மத்திய கிழக்கில் ஈரானைச் சுற்றிவளைக்க அமெரிக்கா நகர்த்தும் வியூகங்கள். ஆசியாவில் சீனாவிடம் பலிக்குமாவென்பதை ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடிகளே தீர்மானிக்கப் போகிறது.

Exit mobile version