Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீனா – இந்தியா இறுகும் முடிச்சு : சபா நாவலன்

இலங்கையில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையிலும் அதன் பின்னான அரசியல் சூழலிலும் சீன – இந்திய நாடுகளின் ஒருங்கிணைவு பலராலும் அவதானிக்கப்பட்டது. இந்த இணைவு இவ்விரு நாடுகளுக்கும் ஒரு பரிசோதனைக் களம் போலவே அமைந்திருந்தது. மக்களையும் மரணங்களையும் கூறுபோட்டு உரிமை கோரிய கொலைக்களம் இலங்கை.

சீனாவின் செய்தி நிறுவனமான சென்குகாவிற்கு உதவி வெளிநாட்டமைச்சர் ஹூ சென்கயூ தெரிவிக்கையில், சீனாவும் இந்தியாவும் தமது பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதற்கு உலகத்தில் போதுமான அளவிற்கு இடம் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால் உலகைப் பங்குபோட்டுக்கொள்ள சீன இந்திய அரசுகள் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்கிறார்.

இற்றைக்குப் பத்தாண்டுகளுக்கு முன் வரைக்கும் தமது பொருளாதார விரிவாக்கத்திற்காகவும், மேலாதிக்கத்திற்காகவும் அமரிக்காவும் ஐரோப்பாவும் மட்டுமே போர் நடத்திக்கொண்டிருந்தது. அமரிக்காவையும் ஐரோப்பாவையும் மையமாகக் கொண்டுதான் திட்டமிட்ட மனிதப் படுகொலைகள் நடந்தேறின. பிராந்திய நலனுக்காவோ அன்றி தேசிய, சர்வதேசிய தேவைக்காகவோ மக்கள் அழிக்கப்படும் போதெல்லாம் இந்த ஏகபோக மையங்களின் கட்டுப்பாட்டில், அவற்றின் கண்காணிப்பின் அடிப்படையிலேயே அவை நடந்தேறின.

உலகத்தைத் தமது பொருளாதார மேலாதிக்க நலன்களுக்காகக் கூறுபோடுவதற்கு அமரிக்க ஐரோப்பிய ஏக போக மையங்களோடு புதிதாக உருவாகியிருப்பவை தான் சீன – இந்திய துருவ வல்லரசுகள். தமது கோர முகங்கள் அமரிக்க ஐரோப்பிய வல்லரசுகளுக்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல என்பதை இவ்விரு துருவ வல்லரசுகளும் தீர்க்கமாக நிறுவிக் காட்டிய செயற் தளம் வன்னிப் படுகொலைகள்.

சீன வங்கிகள் புதிய தொகுதித் திட்டங்களுடன் இந்தியாவின் எல்லைக்குள் முதலீடுகளை ஆரம்பிபதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகிவிட்டன என்றும் இரண்டு நாடுகளின் இணைந்த பொருளாதார உலகத்திற்கு இது ஒரு மைற்கல் என்றும் கூறுகிறார் நியுயோர்க் பல்கலைக் கழகத்தின் ஆசிய விவகாரங்களுக்கான பேராசிரியர் ராஜன் மேனன்.

இந்தியாவின் வளர்ச்சியை சீனா ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்தில் பார்ப்பதோடு, அதன் வளர்ச்சியை ஒரு வாய்ப்பாகவுமே கருதுகிறோம் என்கிறார் சீனப் பிரதமர்.

இந்தியாவின் மிகப் பெரிய இருதரப்பு வர்த்தப் பங்கு நாடு சீனா. இதன் இந்த வருட பெறுமானம் 60 பில்லியன் டொலர்கள் எனக் கருதப்படுகிறது. உள்கட்டுமான வேலைகளுக்கான சீன முதலீடுகள் ஒரு ரில்லியன் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்ப்படுகிறது.

தவிர, சீன பிரதமர் வென் ஜியாபாவோ, வருகிற புதன்கிழமையன்று இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில், கிழக்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான இந்திய வெளியுறவுத்துறை இணைச் செயலர் கௌதம் பம்பவ்லே, இரு நாடுகளும் நிதிச் சேவை ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதுவரை SBI உட்பட பத்து இந்திய வங்கிகள் சீனவில் தமது முதலீட்டுச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன. சீனாவின் அரசுடைமையான நான்கு வங்கிகள் இந்தியாவில் தமது செய்ற்பாடுகளை ஆரபிப்பதற்கான ஒப்பந்தங்களை சீனப் பிரதமரின் வருகையின் பின்னர் மேற்கொள்ளவுள்ளன.

ஐரோப்பிய அமரிக்கப் பொருளாதார நெருக்கடி தனது உச்ச நிலையை எட்டியுள்ளது. மேற்கில் மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைப்பதன் வழியாகவும் அவர்கள் போராடிப் பெற்ற உரிமைகளான வேலையற்றோருக்கான மானியம், இலவசக் கல்வி, இலவச மானியம் போன்றவற்றை அழிப்பதனூடாகவுமே தமது சமூக அமைப்பைத் தற்காலிகமாகப் பேணுகின்ற நிலையை நோக்கி இந்த நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.

இதன் மறுபகுதியாக இந்தியா சீனா போன்ற நாடுகள் இணைந் ஆசியப் பொருளாதாரம் ஐரோப்பியப் பொருளாதாரத்தை உள்வாங்கிக் கொள்கின்றன. சீன இந்திய இணைவும், ஆசியப் பொருளாதாரத்தின் உருவாக்கமும் ஐரோப்பிய ஜனநாயக முறைமைகளிலிருந்து வேறுபட்ட ஆசிய மாதிரியை உருவாக்குகின்றன. இவ்வாறான பல துருவங்களாகப் பிரிந்து செல்கின்ற வல்லரசுகளிடையேயான உறவுகள் புதிய உலகச் ஒழுங்கைத் தீர்மானிக்கும் என்கிறது அமரிக்க உளவுத்துறை ஆலோசனை மையத்தின் அறிக்கை.

எது எவ்வாறாயினும் உலகம் முழுவதிலும் இவர்கள் தமது எதிரிகளைத் தாமே உருவாக்கியுள்ளனர். ஐரோப்பாவில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களும் அவற்றினூடான மக்களின் இணைவும் உலகத்தைத் திகிலடையச் செய்திருக்கிறது.

இந்தியா முழுவதும் புதிதாக உருவாகும் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் நாளாந்தம் தமது வாழ்க்கைக்காகப் போராடுகின்ற சூழலை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் இணைவு மாபெரும் மக்கள் சக்தியாக உருவெடுக்கும். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் இந்தச் சக்திகளுடனான இணைவு முன்னேறிய முற்போக்குத் தேசியத்தை உருவாக்கும்.

Exit mobile version