இந்தச் சொற்றொடர் 1980களில் பெருமளவும் அரசியலிலிருந்து மக்களை அந்நியப்படுத்துகிற நோக்குடன் பரவலாக்கப்பட்டது. இன்று ஏகாதிபத்தியத்தின் முகவர்களாக, அல்லற்படும் சமூகத்தின் உயிர்ச்சத்தை உறுஞ்சிச் சொகுசு வாழ்க்கை வாழும் என்.ஜி.ஓ.புல்லுருவிகள் சிவில் சமூகம் என்பதை இரண்டு நோக்கங்கட்காகப் பயன்படுத்துகின்றனர். முதலாவது பொது மக்களை அரசியலினின்று தனிமைப்படுத்துவது. மற்றது சிவில் சமூகத்தின் சார்பில் பேச வல்லவர்களாகத் தம்மை நிலைநிறுத்துவது.
சிவில் சமூகம் என்ற பொது அடையாளத்தின் மூலம் சமூகத்தின் வர்க்க வேறுபாடுகளையும் பலபேரின் உழைப்பை ஒரு சிலர் சுரண்டுவதால் ஏற்படுகிற முரண்பாடுகளையும் மூடி மறைக்க என்.ஜீ.ஓக்கள் தீவிரமாக முயலுகின்றனர். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகாரத்துவம் வழங்குவது, சிவில் சமூகத்தின் குரலை வலுவூட்டுவது என்றவாறான புனைவுகள் மூலம் என்.ஜீ.ஓக்கள் செய்ய முயல்வது என்ன? தமது ஆளுமைக்குட்பட்ட சமூகப்பிரிவினருக்கு உதவி வழங்குகிற பேரில் அவர்களது சுய முயற்சிக்குக் குழிபறிக்கிறார்கள். என்.ஜீ.ஓ நிதியுதவியில் தங்கியிருக்கும்படி உதவி பெறும் சமூகங்கள் பழக்கப்படுத்தப்படுகின்றன. சமூகங்களுள் என்.ஜீ.ஓக்களால் உருவாக்கப்படுகிற தலைமைத்துவம் என்பது என்.ஜீ.ஓக்களிடம் உயர்ந்த ஊதியம் பெற்று மக்களை அரசியலிலிருந்து விலக்குகிற பணியை முன்னெடுக்கும் எடுபிடிகளையே தோற்றுவிக்கிறது. இந்தக் கூலிப்படைகள் செய்கிற சீரழிவு வேலைகள் பற்றி இப்போது நிறையவே எழுதப்பட்டுள்ளன. அண்மையில் ‘உதவி என்ற பேரில் உபத்திரவம்” என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை ஒன்று எல்லாரும் படிக்க உகந்தது.
வெகுசன இயக்கங்கள் செயற்பட வேண்டிய இடைவெளியை என். ஜீ. ஓக்கள் எப்படித் தங்களுடையதாக்க முடிகிறது என்பது நம் கவனத்துக்குரியது. சிவில் சமூகம் என்ற பேர் என். ஜீ. ஓக்கள் அணிந்து கொள்ளுகிற ஒரு முகமூடி என்பதை நாம் கவனிக்க வேண்டும். அது உண்மையான சிவில் சமூகத்திற்கு அரசியல் செயற்பாட்டை மறுக்கும் நோக்குடன் பாவிக்கப்படுகிறது.
எல்லா என்.ஜி.ஓக்களும் ஒரே வகையானவையல்ல. சிலவற்றின் மோசடிகள் அப்பட்டமானவை. வேறு சில மிகவும் தந்திரமானவை. என்றாலும் எல்லா என்.ஜீ.ஓக்களும் பொருளாதார வசதியுள்ள நாடுகளில் இருந்து நிதியைப் பெறுகின்றன. இவற்றிற் பெரும்பாலானவற்றின் தாய் நிறுவனங்களும் நிதி வழங்கும் அமைப்புக்களும் நேரடியானதும் மறைமுகமானதுமான அந்நிய அரச கட்டுப்பாட்டுக்கும் நெருக்குவாரங்கட்கும் உட்பட்டவை. பல அமைப்புக்களின் பின்னால் சி.ஐ.ஏ. போன்ற அந்நிய அரசாங்க உளவு- குழிபறிப்பு அமைப்புக்களின் முகவர்கள் செயற்படுகின்றனர். பொதுமக்களிடமிருந்து நிதி பெறுகிற என்.ஜீ.ஓக்களும் தமது அரசாங்கங்களது கட்டுப்பாடுக்கட்கும் அயல் விவகாரக் கொள்கைகட்கும் முரணாக எதையும் செய்ய முடியாது.
என்.ஜி.ஓக்களின் செயற்பாட்டை இயலுமாக்குவதற்கு முதலில் பின்தங்கிய பொருளாதார நிலையில் உள்ள நாட்டில் சமூக நலன் பணிகளில் அரசாங்கத்தின் பங்கு குறைக்கப்பட்டு முடியுமானால் இல்லாமலாக்கப்படுகிறது. பல நாடுகளில் பொருளாதாரச் சீர் குலைவுக்குக் காரணம் உலகின் ஏகாதிபத்தியச் சந்தையில் விலைகளையும் சந்தை நிலவரங்களையும் வலிய முதலாளிய நாடுகள் தீர்மானிப்பதாகும். அயற் சந்தையில் தமது ஏற்றுமதிகளின் விலை விழும்போது விலைச் சரிவை ஈடுகட்ட மேலும் உற்பத்தி செய்து அயற்சந்தை மீது தங்கியிருக்கும் படி நாடுகள் கட்டாயப்படுத்தப்படுகின்றன. அப்படியும், ஏற்றுமதி வருமானத்தை விட இறக்குமதிச் செவுகள் கூடுகின்றன. நாட்டின் உற்பத்திப் பெருக்கத்திற்கு மூலதனம் தேவைப்படுகிறது. எனவே நாடுகள் கடனாளிகளாகின்றன. கடன் வழங்கும் நாடுகளும் அவற்றை விட முக்கியமாக அந் நாடுகளின் முகவர்களுமான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவை கடனை மீட்க இயலாது தடுமாறும் நாடுகளின் வட்டியைச் செலுத்த மேலும் கடன் வழங்கிக் கடன் சுமையை ஏற்றுகின்றன. அதே வேளை, அதிக கடன் வழங்குவதற்கு முன் நிபந்தனையாகப் பலவேறு ‘சீர்திருத்தங்கள” முன்வைக்கப்படுகின்றன. தனியார்மயமாக்கல் கல்வி, உடல் நலம், சமூக நலன் போன்ற துறைகளில் அரசாங்கச் செலவைக் குறைத்தல் என்பன இவற்றுள் முக்கியமானவை.
அரசாங்கங்கள் பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளுர் அரசியல் நெருக்குவாரங்கட்கும் இடையே நெரிபட்டு முடிவில் வேறு வழியின்றிச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துமுகமாக இடதுசாரி இயக்கங்களை ஓரங்கட்டுகிற விதமாக பேரினவாத அரசியல் போன்றவையும் மதவெறியும் கிளறிவிடப்படுகின்றன. தொழிற்சங்கங்கள் போன்ற அமைப்புக்களின் வலிமையைப் பறிக்கும் விதமாகத் தொழிலாளர் உரிமைகட்கு ஆப்பு வைக்கிற காரியங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சட்டங்களை மாற்றியும் தொழிற்சங்க உரிமைகளற்ற அயல் மூலதனக் கம்பனிகளை நிறுவியும் தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையைச் சீர் குலைத்தும் தொழிலாளரது போராட்ட வலிமை நசிவுக்குட்படுத்தப்படுகிறது.
வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சனைகளும் வரட்சி, சுனாமி, வெள்ளம், புயல் போன்ற அனர்த்தங்களும் தலை தூக்கும் போது மக்கள் தமது ஒற்றுமையாலும் சரியான சமூக- அரசியல் வழிகாட்டல்களாலும் பிரச்சனைகளைத் தீர்க்க இயலாத விதமாக என். ஜி. ஓ நிதி குறுக்கிடுகிறது. அரசாங்கத்திடம் பொருளாதார வசதி போதாத சூழ்நிலையில், அரசாங்கமே என். ஜி. ஓக்களின் குறுக்கீட்டை ஒரு வசதியான குறுக்கு வழியாகக் கையாளுகிறது. நேரடியாக அந்நிய அரசாங்கங்க உதவி போலில்லாது, பன்னாட்டுத் தரும ஸ்தாபனம், உள்ளுர் தருமஸ்தாபனம் என்ற விதமான ஏற்பாட்டுகளின் கீழ், மக்கள் சந்தேகப்பட இயலாத விதமாகக் குழிபறிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
பலவேறு சமூக சேவைகள் முதலாகக் கலை இலக்கியத் துறைகள் வரை என்.ஜி.ஓக்களின் ஊடுருவலுக்கு உட்படுத்தப்படுகின்றன. இவை போக, மக்களைக் கொதிப்புறச் செய்கிற ஏகாதிபத்தியச் சுரண்டல் தொடர்பான பிரச்சனைகளிலும் என். ஜி. ஓக்களின் சமூக அமைப்புக்கள் நுழைந்து கொள்கின்றன. அதன் மூலம் எந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டுமோ அந்த ஏகாதிபத்தியத்தின் கருவிகளான என்.ஜி.ஓக்கள் மூலம் அந்த எதிர்ப்பு வழி நடத்தப்படுகிறது. இலங்கையிற் போன்று பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளது தவறுகளால் இடதுசாரி இயக்கம் வலுவிழந்து பேரினவாத அரசியலால் இடதுசாரிகளின் எழுச்சிக்கு முட்டுக்கட்டை இடப்பட்டுள்ள நாடுகளிலும் இடதுசாரி இயக்கம் இன்னமும் வளர்ச்சி பெறாத நாடுகளிலும் மக்கள் இடதுசாரிகளின் பக்கம் திரும்பாமல் கவனித்துக் கொள்வதே உள்ளுர் என்.ஜி.ஓ. அமைப்புக்களின் பிரதான பணியாகும். அனுராதபுர மாவட்டத்தில் எப்பாவெலையில் உள்ள பொஸ்பேற் படிவுகளைத் தனியார் கம்பனியிடம் பொறுப்பளிப்பதற்கு எதிரான போராட்டத்தில், என்.ஜி.ஓக்களின் குறுக்கீடு காரணமாக அப் போராட்டம் தனது அரசியல் பரிமாணத்தை, அதாவது ஏகாதிபத்திய விரோதப் பண்பை, இழந்தது. அதனால், அரசாங்கம் அதே திட்டத்தை இரகசியமாக நிறைவேற்றக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகும் போது, மக்களின் எதிர்ப்பு பிசுபிசுத்துப் போய்விடும். ஏனெனில் என்.ஜி.ஓக்களின் அக்கறை பிரச்சனையின் ஆணிவேரைத் தாக்குவதல்ல. மாறாக, அரசாங்கத்துடனும் அந்நியக் கம்பனிகளுடனும் சமரசம் செய்கிற ‘சிவில் சமூக” தலைமைகளை உருவாக்கிப் போராட்டப் பண்புடைய வெகுசனத் தலைமைகளை ஓரங்கட்டுவதே என்.ஜி.ஓக்களது நோக்கமாகும்.
‘சிவில் சமூகம்” என்கிற அடையாளத்தில் என்.ஜி.ஓக்கள் மக்கள் சார்பாகப் பேசுகிற புதிய பிரமுகர்களை உருவாக்குகிறார்கள். தலைமைத்துவத் திறமைகளை வளர்ப்பது என்ற பேரில் என்.ஜி.ஓக்களின் சித்தாந்தத்தை உள்வாங்கிய புல்லுருவிகளை உருவாக்குகின்றனர். அரசியற் கட்சித் தலைவர்கட்கு மாற்றாக எவ்வகையிலும் மக்களால் தெரிவு செய்யப்படாத என்.ஜி.ஓ. அலுவலர்களும் முகவர்களும் தங்களைச் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளாக நிலைநாட்ட முயலுகின்றனர். சகட்டுமேனிக்கு அரசியல் சார்பற்ற தொழிற்சங்கங்கள் எனப்படுவனவற்றின் பிரமுகர்களும் இவர்களுடன் சேர்ந்து கொள்வதால், சிவில் சமூகப் பிரதிநிதிகள் என்ற மாயையை வலுப்படுத்த முடிகிறது.
நாட்டில் ஒழுங்காகக் கணக்கு வழக்குக் காட்ட வேண்டிய தேவையற்ற அமைப்புக்களான என்.ஜி.ஓக்களின் கையில் தாராளமாக நிதி புரளுவதால், மேலிடத்து அங்கீகாரத்துடனும் சிலசமயம் அது இல்லாமலும் சமூகத்தில் உள்ள சில பிரமுகர்களை விலைக்கு வாங்க என்.ஜி.ஓ. முகவர்கட்கு இயலுமாகிறது.
இலங்கையின் என்.ஜி.ஓ. ஊடுருவலை இயலுமாக்கியது எது? 1977 முதல் யூ. என். பி. ஆட்சி படிப்படியாகச் சனநாயக உரிமைகட்குக் குழிபறித்து இன ஒழிப்புப் போரொன்றைத் தொடங்கி அதைக் காரணங் காட்டி ஒரு அடக்குமுறை ஆட்சியை நிறுவியதே அதை இயலுமாக்கியது எனலாம். எதிர்க்கட்சிகள் பலவீனப்பட்டும், சில செயலிழந்தும், செயற்பட்ட சில பலவேறு மிரட்டல்கட்கும் வன்முறைக்கும் உட்பட்டும் இருந்த சூழ்நிலையில், ஊடகத் துறையில் இருந்த இடைவெளியை மேஜ் எனும் ஒரு என்.ஜி.ஓ தனதாக்கிக் கொண்டது. அது போலவே, அரசாங்கத்தின் பண்பாட்டுத்துறைச் செயற்பாடுகள் மிகவும் பாரபட்சமானவையாயும் மாற்று அரசியல் அடையாளமுடையவை நிதிவசதியின்மை உட்பட்ட பலவேறு நெருக்கடிகளால் இயங்குவதில் சிரமங்களை எதிர் நோக்கிய வேளை பலவேறு என். ஜி. ஓக்கள் கலை- இலக்கிய- நாடகமேடைச் செயற்பாடுகளின் புரவலர்களாத் தம்மை அடையாளம் படுத்துவது எளிதாயிற்று. அதுபோலவே, சமூக சேவைகள், சமூகக் கொடுமைகட்கு எதிர்ப்பு என்பனவற்றிலும் என்.ஜி.ஓக்கள் தங்களையே சமூகச் செயற்பாட்டாளர்களாகக் காட்டிக்கொள்ள இயலுமாயிற்று.
மேற்கூறியவாறு பலவேறு முனைகளில் உண்மையான சிவில் சமூகம் தன் அரசியற் குரலை மீட்பதற்குப் போராடத் தொடங்க வேண்டிய வேளையில் சிவில் சமூகத்திற்கு அரசியலை மறுக்கிறவிதமாக என்.ஜி.ஓக்களின் ‘அரசியலின்மை” யின் அரசியல் அரங்கிற்கு வந்தது.
என். ஜி. ஓக்களின் எழுச்சிக்கும் திட்டமிட்ட முறையில் அவை தம்மை சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் என்று தம்மை முன்னிறுத்தி வருவதற்கும் வாய்ப்பாகத் திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவான சமூக அவலங்கள் மிகவும் உதவுகின்றன. உலகமயமாதல் உதவுகிறது. என்.ஜி.ஓ. முகவர்கள் பம்மாத்தாக ஏகாதிபத்தியம் உலகவங்கி போன்றனவற்றுக்கு எதிரான கருத்துக்களை இடையிடையே சொன்னாலும். அவற்றை எதிர்த்து மக்கள் போராடுவதையோ. அரசியல் அடிப்படையில் அணிதிரளுவதையோ அவர்கள் எதிர்க்கின்றனர். ஏனெனில், என்.ஜி.ஓக்கள் ஏகாதிபத்திய உலகமயமாதல் திட்டத்தினின்று பிரிக்க இயலாத ஒரு பகுதியினர்.
என். ஜி. ஓக்களை அம்பலப்படுத்துகிறது கடினமல்ல. எனினும் வெகுசன சனநாயக நோக்கில் மக்களின் அடிப்படையிலான வெகுசன நலன் பேணும் அமைப்புக்கள் மீளக் கட்டியெழுப்பப் படாமல் என்.ஜி.ஓக்களை முறியடிப்பது கடினமானது. ஆயினும், இன்று அவசியமானது.
சிவில் சமூகங்களும் என்.ஜீ.ஓகளும் தொடர்பான முன்னைய பதிவுகள்:
தன்னார்வ நிறுவனங்கள்(NGO) – எரியும் உலகம்!
என்.ஜி.ஓ. – விச விருட்சங்களின் விழுதுகள்:நமன்
Published on: Jan 25, 2009 @ 10:46Edit