இலங்கை அரசிற்கு சார்பான அல்லது தேசிய இன ஒடுக்குமுறை குறித்து மென்மையான போக்கை தனது அரசியல் நிலைப்பாடாகக் கொண்ட பி.பி.சி தமிழ் ஓசையும் இது குறித்த செய்திகளைப் பிரதானப்படுத்தி வெளியிட்டிருந்தது. பி.பி.சி இராணுவத்தில் பெண்கள் பலவந்தமாக இணைக்கப்படவில்லை என சாட்சியமளித்த மன நோய் வைத்தியர் சிவதாசனின் நேர்காணலையும் வெளியிட்டிருந்தது. இந்த நேர்கணல் வெளியானதும் உற்சாகமடைந்த இலங்கை அரச எடுபிடிக் கும்பல்களும், அன்னிய தேசங்களின் பண வழங்கலில் இயங்கும் அடியாட்படைகளும், தமது தாக்குதல்களை ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு எதிராக முடுக்கிவிட்டன.
‘சிவதாசனா கொக்கா’ என்ற பாணியில் தமது பிரச்சாரங்களை முடுக்கிவிட்ட இவர்கள் பெண்களை ஊடகங்களே வல்லுறவிற்கு உட்படுத்தியதாகவும் இராணுவம் அப்பாவித்தனமானது எனவும் நம்பக் கோரினர். வழமைபோல இலங்கை அரசுக்கு எதிரான உறுதியான அரசியலை முன்வைப்பவர்களை ‘புலிப் பினாமிகள் ‘ என பிரச்சாரங்களை முடுக்கிவிட்டனர்.
இதன் பின்னர் அனுராதபுரத்தில் மருத்துவ அதிகாரியாகக் கடமையாற்றும் சிவசங்கர் என்ற மருத்துவர், பலவந்தமாக இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண் ஒருவரை தொடர்ந்து கல்விகற்ற அனுமத்குமாறு இராணுவ முகாமிற்கு சென்று கோரிக்கைவிடுத்தார். யாழ்.பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்தது போன்று சிவசங்கருக்கு மனநோய் என கைது செய்து சிறையில் அடைத்தது இராணுவம். சிவசங்கருக்கு மனநோய் என உறுதிப்படுத்தியவரும் சிவதாசனே.
இவை குறித்து சிவதாசனின் உரையாடல்கள் இனியொருவில் வெளியாகியிருந்தன.
மக்களின் வரிப்பணத்தில் கல்விகற்று, கொன்றுபோடப்பட்ட மக்களின் பிணங்களின்மேல் நடந்துவந்து அகதிகளாகி புலம்பெயர் நாடுகளில் மருத்துவ சேவையாற்றி வாழ்வாங்கு வாழும் யாழ்,பல்கலைக்கழக பழைய மாணவர்களோ, இலங்கை மருத்துவர் சங்கமோ சிவசங்கரின் கைது குறித்து மூச்சுக்கூட விட்டதில்லை.
பலவந்தமாக இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் விடயத்தில் அரச ஆதரவு சமூகவிரோதிகளுக்கு ஏடு தொடக்கி எழுத்தாணியையும் கொடுத்த பிபிசி தமிழோசையின் நம்பகத் தன்மை இப்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
சிவதாசன் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய நேர்காணலில் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்களுக்கு நல்ல அடி போட்டிருந்தால் கூட குணமாகியிருப்பார்கள் எனத் தெரிவித்திருந்தார் . முன்னுக்குப் பின் முரணான பல நேர்காணல்களை வழங்கியிருந்த சிவதாசனின் உச்சபட்ச அரச விசுவாசமாக இது வெளிப்பட்டிருந்தது. மருத்துவ சமூகத்திற்கு அவமானமான இந்த நேர்காணை பி.பி.சி தமிழோசை எந்தத் தயக்கமும் இன்றி வெளியிட்டது மட்டுமன்றி தனது இணயத்தில் இரண்டு மாதங்களின் மேலாகப் பதிவு செய்திருந்தது.
இந்த நிலையில் பிபிசி தமிழோசை குறித்து பல இணையங்களில் வெளியான எதிர்வினைகளும் புறக்கணிக்கப்பட்டது. பின்னதாக சில ஆரவலர்கள் மனித உரிமை மீறும் இச் செய்தியை தொடர்பான எதிர்ப்பை அதன் (BBC World) உலகச் சேவை தலைமையகத்திற்கு முறைப்பாடாகத் தெரிவித்தனர்.
அதன் பிரதி:
இதனைத் தொடர்ந்து சிவதாசனின் அடிப்படை மனித உரிமை மீறும் நேர்காணலை நீக்குமாறு பிபிசி உலகச் சேவை அதன் தமிழ் பிரிவினைக் கேட்டுக்கொண்டது. பிபிசிக்கு வழங்கிய முறைப்பாடிற்கு நன்றி தெரிவித்து அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் பிரதி:
Upon reflection, and away from the pressures of the news environment, this last claim by the psychiatrist could have been challenged more robustly by our reporter.
“We have in the meantime, and in view of these concerns, taken the interview off our webpage and the Head of the Tamil service has spoken to the journalists concerned and told them to be more careful in the future.”
thank you for the taking the time, and making the effort, of writing and “keeping us on our toes”.
இதன் பின்னர் நேர்காணல் நீக்கப்பட்டுள்ளது.
கைதான சிவசங்கர் எங்கே?, இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்களின் நிலை என்ன?? போன்ற பல கேள்விகள் தொக்கு நிக்க இன்னொரு புதிய வினா எழுகிறது. பிபிசி தமிழோசையில் இவ்வளவு நாட்களும் செத்துக்கிடந்த இந்த அவமானகரமான தகவலுக்காக அதனை வாசித்த ஆயிரக்கணக்கான வாசகர்களிடம் பிபிசி மன்னிப்புக்கோருமா? இனிமேல் இவ்வாறான தவறுகள் திட்டமிட்ட வகையில் நடைபெறாது என்பது உறுதிப்படுத்தப்படுமா?
ஒடுக்கப்படும் மக்களும் ஒடுக்கும் சிறுபான்மையுமாக உலகம் பிழவுண்டுள்ள நிலையில் நடுநிலைமை என்பது சாராம்சத்தில் ஒரு பக்க வாதம் அது ஒடுக்குமுறையாளர்களின் பக்கம். பிபிசி உட்பட வியாபார ஊடகங்களின் நடுநிலைமையின் நசிவில் உலகம் முழுவதும் மனித் உயிர்கள் பலியாகின்றன.
தொடர்பான பதிவுகள்: