Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சித்திரவதையச் சட்டபூர்வமாக்கும் இந்திய அரசு ::மெ.சேது ராமலிங்கம்

பல ஆண்டுகளாக மனித உரிமை அமைப்புகள் ,குடி உரிமை அமைப்புகளின் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக இந்திய அரசு சித்ரவதை தடுப்பு சட்டத்தை சட்ட முன் வரைவாக நிறைவேற்றி உள்ளது. இன்னும் இந்தியா ஐ.நாவின் சித்ரவதைக்கெதிரான உடன்பாட்டை ஏற்புறுதி செய்யவில்லை என்பது வேறு விசயம்.

ஐ.நாவின் எந்தவொரு மனித உரிமை உடன்பாடுகளையும் ( United Nations conventions) விருப்பு உடன்பாடுகளையும் (optional protocols) முதலில் அனைத்து நாடுகளும் கையெழுத்திட்டு பின்னர் ஏற்புறுதி (ratification) செய்ய வேண்டும.ஏற்புறுதி செய்துள்ள நாடுகள் தனது நாடுகளில் புதிய சட்டங்களையோ அலலது இருக்கின்ற சட்டங்களில் மாற்றத்தையோ கொண்டு வர வேண்டும்.இதுதான் வழமையான நடைமுறை.ஆனால் இந்தியா இதுவரை சித்ரவதைக்கு எதிரான ஐ.நா.வின்உடன்பாட்டை ஏற்புறுதி கூட செய்யாமல் அவசர அவசரமாக இந்த சட்ட முன்வரைவை கொண்டு வந்துள்ளது.

முதலில் இந்த சட்ட முன்வரைவினால் சித்ரவதையை ஒழித்து விட முடியுமா? எந்த சட்டத்தினாலும் அரசின் நடைமுறையை மாற்றிவிட முடியுமா? இங்கு சமூகத்தின் அன்றாட வாழ்வியலே சித்ரவதையை உள்ளார்ந்து ஏற்றுக்கொண்டுள்ளது. வலியவர் எளியவரை அடிப்பது வதைப்பது இயல்பான நடைமுறையாக உள்ளது.சமூகமே சாதிய சமூகமாக இயங்கும் போது சாதி இந்துக்கள் தலித் மக்களை அதுவும் குறிப்பாக அருந்ததியினரை உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் வதைப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதிய பண்பாடாக உள்ளது.இதிலிருந்து துவங்கி கணவன் மனைவியை அடிப்பது சகோதரன் சகோதரியை அடிப்பது ஆணாதிக்க சமூகத்தின் பிரிக்கமுடியாத வாழ்வியல் கூறாக உள்ளது.இதனுடைய இயற்கையான வெளிப்பாடாகவே மகளிர் காவல் நிலையத்தில் (மகளிர் காவல் நிலையங்கள் பெண்களைக் காக்க அமைக்கப்பட்டதாம்) சித்ரவதை செய்யும் கணவர் மீது புகார் கொடுக்கச் செல்லும் பெண்களிடம் புருஷன்தானே அடிச்சது என்று அறிவுரை கூறி அனுப்புவதைக் காணலாம் .குடும்பத்தில் அப்பாதானே அடித்தார் என்று கூறுவதும் இயல்பு.இதற்கு அடிக்கிற கைதான் அணைக்கும் என்ற நியாயப்படுத்தும் பழமொழியும் ஆதிக்க கலாச்சாரத்தின் பக்கபலமாக உள்ளது.

ஏதாவது ஒரு வகையில் பெண்களும் தலித்களும் உடல்ரீதியான உளவியல்ரீதியான வதைக்குள்ளாவது இங்கு தவறாகவே எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.இதன் நீட்சியாகவே நமது சினிமாக்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் ஊடகங்களில் கதாநாயகர்கள் கதாநாயகிகளிடமிருந்து கன்னத்தில் அறைந்தோ, கேலி செய்தோதான் காதலை வரவழைக்கிறார்கள்.கதாநாயகியை கதாநாயகன் அடிக்க வேண்டும் கேலி செய்து அழ வைக்க வேண்டும் என்பதற்காகவே திமிர் பிடித்த கதாநாயகியாக செதுக்குகிறார்கள்.

திரைப்படங்களில் காண்பிக்கப்படும் போலீசார் என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட்டுகளாக சாதாரணமாக வலம் வருகிறார்கள்.போலீஸ் நிலையங்களில் அடித்து சிதரவதை செய்யும் காட்சிகள் இல்லாமல் அன்றையவிஜயகாந்த் படங்கள் துவங்கி இப்போதைய கதாநாயகர்கள் விஜய்,விக்ரம் , அஜுத் படங்கள் வரை எந்த படங்களும் முழுமையடைவது இல்லை.ஆங்கில படங்களை அப்படியே நகல் எடுக்கும் கௌதம் மேனனின் படங்களில் கொடூரமான வதைக்காட்சிகள் வன்முறைகள் இன்றி காட்சிகளே இருக்காது.போலீஸ் நிலையங்களில் சித்ரவதைக்கு சிறப்பு பின்புலம்(special effects)வேறு அமைப்பார்கள்.

இவர்கள் கட்டமைக்கும் கதாநாயக பிம்பங்களின் ஆண்மைத்தனம்(masculinity)  வன்முறையையும் சித்ரவதையையும் அடிப்படையாக கொண்டுள்ளன.

எல்லாவற்றையும் எதிர்மறையாக ஏன் பார்க்கீறிர்கள்? அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தில் நல்ல விடயமே கிடையாதா? இந்த சட்டம் சித்ரவதையை ஒழிப்பதற்கு ஒரு முன் நகர்வுதானே என்று ஆதங்கப்படுகிறார்கள் சிலர்.அவர்களின் வாதப்படியே இந்த சட்டத்தை பரிசிலிப்போம்.

முதலாவதாக, இந்த சட்ட முன்வரைவு  சித்ரவதை மற்றும் பிற குரூரமான வகையில் அவமானப்படுத்துதல் அல்லது தண்டனை அளிப்பதற்கு எதிரான ஐநாவின் உடன்பாட்டினை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐ.நாவின் உடன்பாடு சித்ரவதைகளுக்கு எந்த விதி விலக்கும் அளிப்பதில்லை.ஆனால் இந்த சட்டமுன்வரைவு அனைத்து வகை சித்ரவதைகளையும் விதிவிலக்குகளாக்கி விடுகிறது.

பிரிவு 3 சித்ரவதையை இப்படி வரையறுக்கிறது; வதை என்பது உள்நோக்கத்துடன் உயிருக்கோ உடல் உறுப்புகளுக்கோ, உடல் ஆரோக்கியத்திற்கோ கொடுங்காயத்தையோ அல்லது ஆபத்தையோ ஏற்படுத்தினால் அது வதையாக வரையறுக்கப்படுகிறது.இங்கே இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 320 ன்படி கொடுங்காயம் என்பது ஒரு கண்ணையோ காதையோ நிரந்தரமாக இழப்பது, அவற்றை சிதைப்பது ,எலும்பை உடைப்பது காயமேற்படுத்துவது ஆகும்.அவை 20 நாட்களுக்கு அல்லது அதற்கு மேலாகவோ வலி ஏற்படுத்தினால்தான் கொடுங்காயமாகும் .அதாவது சித்ரவதையானது 20 நாட்களுககு வலி ஏற்படுத்துமாறு கொடுங்காயத்துடன் இருக்க வேண்டும்.சுருக்கமாகச் கூறினால்,சித்ரவதை என்பதற்கு மிக உயர்ந்த வரையறை முன் வைக்கப்பட்டுள்ளது.

வதையினால் உளவியல் பாதிப்பிற்கு இந்த வரையறையில் இடமே இல்லை என்பது அதிர்ச்சிக்குரிய விடயம்.உடல் பாதிப்புகளும் கூட நமது நீதிமன்றங்கள் அங்கீகரிக்கும் அறிந்த நோய்களால் ஏற்படும் பாதிப்புகள்தான்.ஆக சித்ரவதை செய்யும் குற்றவாளியிடம் 20 நாட்களுக்கு வலி நீடிக்குமாறு சித்ரவதை செய்யுமாறு பாதிக்கப்படுவர் கேட்டுக்கொள்ள வேண்டுமா?மாண்பு மிகு அமைச்சர்களும் அதிகாரிகளும்தான் பதில் சொலல வேண்டும்.

ஐ.நா.வின் சித்ரவதைக்கெதிரான உடன்பாடு உடல்ரீதியாகவோ உளவியல் ரீதியாகவோ கடுமையான வலியை அல்லது துன்பத்தை ஏற்படுத்தும் ஏற்படுத்தும் எந்த செயலும் சித்ரவதை என்று விரிவாக அனைத்தையும் உள்ளடக்கி வரையறுக்கிறது.சித்ரவதை என்பது வலியை உருவாக்கும் செயலாக பார்க்க வேண்டுமே அன்றி இத்தனை நாட்களுக்கு வலி நீடிக்க வேண்டும் என்பது குருட்டுத்தனமானதே.இந்த வரையறையின் படி நீரில் மூழ்கடித்து வதைத்தாலோ,பாலியல்ரீதியாக துன்புறுத்தினாலோ

உணவளிக்கவோ, குடிநீர அளிக்க மறுத்தாலோ,து£ங்க விடாமல் தடுத்து துன்புறுத்தினாலோ அது வதையாகாது.ஐ.நா.வின் உடன்பாடு கூறும் மனிதத் தன்மையற்ற பிற குரூரமான அவமரியாதை அல்லது தண்டனைகள் பற்றி மூச்சு கூட விடவில்லை.

இன்னும் மோசமாக சட்டம் கூறுகிறது.ஒரு குற்றத்தைக் கண்டுபிடிப்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதற்கு வதைக்கப்பட்டால்தான் வதையாகுமாம்.உதாரணமாக ஒரு போலீஸ் அதிகாரி குற்றம் சாட்டப்பட்டவரை மிரட்டுவதற்கு அடித்து நொறுக்கினாலோ அவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும முன்விரோதம் இருந்து தனிப்பட்ட முறையில் பாடம் கற்பிக்க கையை காலையோ ஒடித்தாலோ அது வதை கிடையாது.

வதை செய்யப்பட்டதற்கான வழக்கு 6 மாதத்திற்குள் தொடரப்பட வேண்டும். இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் வதையினால் பாதிக்கப்படுவர்கள் பெரும்பாலோர் சாதாரண மக்களோ அல்லது மிகவும் சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் தான். சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட பின்னர் உடலும் மனமும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வேலை மற்றும் வாழ்வாதாரங்கள் இழந்த நிலையில் மீண்டும் பழைய நிலைக்குதிரும்புவதற்கு பல காலம் எடுக்கலாம்.இது வதையின் தன்மையை பொறுத்தது.இதில் கால அவகாசம் நிர்ணயிப்பது யாரைத் தப்பிக்க வைக்க ?மேற்கூறிய விடயங்கள் இந்திய அரசு இச்சட்டத்தினை கொண்டுவருவதன் நோக்கம் சித்ரவதையை ஒழித்து மனித உரிமை கலாச்சாரத்தை பரப்புவதல்ல . பல விதிவிலக்குகள் அளிப்பதன் மூலம் உள் நோக்கத்துடனே மறைமுகமாக சித்ரவதையை அங்கீகரிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.அப்படியானால் சித்ரவதையை எப்படி ஒழிப்பது?

அரசியல் அற்ற முறையில் வெறும் சட்ட வாதக் கண்ணோட்டத்துடன் சித்ரவதையை அணுகுவதால் எந்த தீர்வையும் பெற முடியாது.அது மட்டுமல்ல இப்பிரச்சினையின் ஆழத்தையும் புரிந்து கொள்ள முடியாது.மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக அரசு சாரா நிறுவனங்களின் பின்னணி கொண்டவை சித்ரவதை ஒழிப்பு என்றபெயரில் அரசியல் அற்ற பிரச்சாரங்களை மேற்கொள்வதோடு நிறுத்திக் கொள்கின்றன. முதலாளிகள் நடத்தும் (தமிழகத்தில் பல நகைக்கடை முதலாளிகள் கூட இவ்வமைப்புகளின் புரவலராக உள்ளனர்) மனித உரிமை அமைப்புகளும் கழகங்களும் சித்ரவதையை மட்டுமல்ல எந்த மனித உரிமை மீறல் குறித்தும் அக்கறை கொள்வதில்லை.

உண்மையில் சித்ரவதை என்பது மனித குல வரலாற்றில் வர்க்க அரசு தோன்றும்போதே அதன் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக உருவாகி விட்டது. ஒடுக்குமுறை கருவிகளான சிறை,போலீஸ் ,இராணுவம் போன்றே வதையும் ஒரு கருவியாகும்.அரசு எந்திரங்கள் செயல்படவும் அவற்றின் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும் உடல்ரீதியாகவோ உளவியல் ரீதியாகவோ வதை அவசியமாகிறது.

எந்த அரசும் வதையை கைவிடும் என்று எதிர்ப்பார்ப்பதே புலி சைவமாகி விடும் என்ற கதைதான்.அரசையும் வதையும் பிரிப்பது எப்போதுமே முடியாது.உலக முதலாளியம் எவ்வளவுதான் விஞ்ஞான முன்னேற்றத்தை அனுமதித்தாலும் காட்டுமிராண்டித்தனமான வதை முறைகளை மட்டும் கைவிடுவதில்லை.புதிய,புதிய மிக நுட்பமானதும் குரூரமானதுமான வதை முறைகள் உலகம் முழுவதும் நாள்தோறும் கண்டுபிடிக்கப்பட்டு வருவதே இதற்கு சிறந்த எடுத்து காட்டாகும்.நாட்டையே உலுக்கிய முக்கிய வழக்குகளில் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வதைக்கப்படுவது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் பண்பாடாக எங்கும் நிலவுகிறது.

உதாரணமாக ராஜுவ் கொலை வழக்கு,மும்பை தாக்குதல் வழக்கு நக்சல்பாரிகள் மீதான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நடத்தப்பட்டதை கேள்வி கேட்காத கடுமையான மௌனமே நிலவியது என்பதை கவனிக்க வேண்டும் நீண்ட கால நோக்கில் அரசு எந்திரங்கள் ஒழிக்கப்படும்போதே வதை என்பது ஒழியும் என்றாலும் வதையும் அரசும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை மக்களிடம் அம்பலப்படுததிக் கொண்டே இருப்பது நமது உத்தியாக இருக்க முடியும். ஒவ்வொரு வதைகளையும் நிகழ்வுகளுடன் ஆவணப்படுத்தி உலகளாவிய அளவில் அரசுகளை அம்பலப்படுத்தும் போதே குறைந்த பட்ச நிவாரணங்களையாவது பெற முடியும்.

Exit mobile version