
எமது நோக்கம் தமிழ் ஈழம் என்ற சுலோகமும் அதனை அடைவதற்காக “ஒற்றுமைப்படுங்கள்” என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படது. இந்தக் கோரிக்கைக்கான ஏகப் பிரதிநிதிகளாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மைப் பிரகடனபபடுத்திக் கொண்டனர்.
தமிழீழம் என்ற முழக்கத்தை வெற்றிகொள்வதற்கான ஒரே வழிமுறை என்பது இராணுவக் குழுக்களின் பலத்தைப் பெருக்கிக்கொள்வதும், இராணுவத் தாக்குதல்களை மேற்கொள்வதுமானதாக் அமைந்திருந்தது. தன்னுரிமைக்கான போராட்டத்தின் நண்பர்கள், எதிரிகள் போன்ற அடிப்படை விடயங்களைத் தீர்மானிப்பது கூட இராணுவ வலிமையை உயர்த்திக்கொள்வது என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தது.
புலிகளைப் பொறுத்தவரை, ஒரு புறத்தில் இலங்கை இராணுவ பலத்திற்கும் மறுபுறத்தில் விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்திற்கும் இடையேயான மோதல் என்ற ஒருங்கு புள்ளியில் போராட்டம் குறுக்கப்பட்டது.
இலங்கை அரசிடம் தனது அரசமைப்புக்களை பேணிக்கொள்வதற்கான அரச இயந்திரத்தின் கூறுகள், இராணுவ பலம் என்பதற்கு அப்பாலும் விரிவடைந்திருந்து. தாம் சார்ந்த நட்பு சக்திகள் குறித்து மிகத் தெளிவான வரைமுறைகளை கொண்டிருந்த இலங்கை அரசு உலகின் ஏனைய அனைத்து நாடுகளையும் போலவே பலமான அரசமைப்பு முறையையும் கொண்டிருந்தது.
ஏனைய அரசுகளைப் போலவே இலங்கை அரசின் நலன்களும் மக்கள் சார்ந்தவையல்ல. மக்கள் விரோதமானவை. இலங்கை அரசுடனான ஏனைய அரசுகளின் நட்பும், முரணும் அடிப்படையில் சந்தைப் பொருளாதாரத்தை மையப்படுத்தியதாக அமைந்திருக்கும் என்பது அரசியலில் பாலர் பாடம். குறிப்பாக வல்லரசுகளிடையேயான உள் முரண்பாடுகள், சந்தைப் பொருளாதாரத்திற்கான ஆதிக்கப்ப் போட்டியை அடிபடையாகக் கொண்டவை.
மக்களுடைய விடுதலைக்கான கட்சி அல்லது இயக்கம் என்பவற்றின் நலன்கள் மக்கள் சார்ந்தவை. அதிலும் ஒடுக்கப்படுகின்ற மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்தவை. இவை ஏக போக வல்லரசுகளதும், அதிகார அமைப்ப்புக்களதும் நலன்களுக்கு அடிப்படையில் முரணானவை; ஆக, மக்கள் சார்ந்து போராடுகின்ற எந்த அமைப்புக்களதும் நலன்கள் சார்ந்தவையல்ல.
இலங்கை அரசினதும், மக்கள் சார்ந்த போராட்டக் அமைப்புகளதும் நட்பு சக்திகள் வேறுபட்டவை. ஆனால், ஈழப் போராட்டத்தில் இதன் எதிர்மறையை மட்டுமே காணமுடியும்.
இலங்கை அரசு நட்புப் பாராடுகின்ற அத்தனை அரச அதிகாரங்களையும் 80 களின் பின்னர் இராணுவ வளர்ச்சி கண்ட இயக்கங்களும் நட்பு சக்திகளாகக் கருதிக்கொண்டன. இந்தியா, அமரிக்கா, ஐரோப்பா என்ற அனைத்து அதிகாரங்களும் ஏதாவது ஒரு சந்திப்பில் நட்பு சக்திகளாகவே கருதப்பட்டன.
மக்கள் மீது நம்பிகையற்ற கோழைத்தனமான இந்தச் சார்பு நிலை உலகின் அத்தனை சமூகப் பற்றுள்ள அமைப்புக்களிடமிருந்தும் ஈழப் போராட்டத்தை அன்னியப்படுத்திய போது அதன் பலவீனம் ஆரம்பமானது.
ஆக, இலங்கை அரசும் 90 களின் பின்னர் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. இரண்டு பகுதியினரதும் நண்பர்கள் ஒரு வகையானவர்களே.
இலங்கை அரசிற்கும், ஏக போக நாடுகளுக்கும் இடையாயான உள் முரண்பாடென்பது புதிய ஒழுங்கு வடிவத்தை எடுத்த வேளையில் புலிகள், அவர்கள் நண்பர்களாகக் கருதியவர்களாலேயே அழிக்கப்பட்டனர். அழிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட அரசியல் வியாபாரிகள், புலிகளின் முன்னை நாள் உறுப்பினர்கள் போன்றோர் அழிப்பிற்கான நிகழ்ச்சித் திட்டத்தை இலகுபடுத்தப் பயன்படுத்தப்பட்ட முகவர்களே தவிர, அதன் சூத்திரதாரிகள் புலிகள் நண்பர்களாகக் கருதிக்கொண்ட நாடுகளும் அதிகார மையாங்களும் மட்டுமே.
உலக மயமாதலின் பின்னதாக உருவாவன புதிய சந்தைப் பொருளாதார ஆதிக்கப் போட்டியில் புலிகளிடம் தமது நண்பர்களுக்கு வழங்குவதற்கு எதுவும் இருந்ததில்ல்லை. இலங்கை அரசிடம் ஒரு நாட்டின் பயன்படுத்தப்படாத வழங்களும், சந்தையும் காத்துக்கொண்ட்ருந்தது.
இதற்கு முன்னைய காலங்களில் கூட புலிகளை தமது நலன்களுக்காக் கையாண்ட ஏகபோகங்களும், பிராந்திய விஸ்தரிப்பு வாத அரசான இந்தியாவும் பல மனித உயிர்களைப் பலிகொண்டன.
புலிகளின் இராணுவ வெற்றிகள் தோல்விகள் என்ற அனைதையுமே அதிகார வர்க்கம் நிர்ணயித்துக்கொள்ள, புலிகள் வெறுமனே ஏவல்களாகவே தொழிற்பட்டனர். எவ்வைகையான அரசியல வேலைத்திட்டமுமின்றிய இராணுவ வெற்றிகளை நோக்கமாகக் கொண்டிருந்த புலிகளைப் பயன்படுத்திக் கொள்வதென்பது மிகவும் இலகுவான செயன்முறையாகவிருந்தது.
இவ்வகையான போராட்டங்களிலிருந்து கற்றுக்கொள்வதையும் குறைந்தபட்சம் தமது சார்பு நிலைகளை மறுசீரமைத்துக்கொள்வதையும் முற்றாக நிராகரிக்கின்ற அமைப்பாக நாடுகடந்த தமிழீ அரசு புலிகளின் அழிவின் பின்னதாக உருவாகிறது.
வெற்று முழக்கங்களையும், அதற்கான கோரிக்கைகளையும் முன்வைத்து உருவான நாடுகடந்த அரசின் நண்பர்கள் யாரோ அவர்களே இலங்கை அரசின் நண்பர்களுமாகின்றனர். இந்திய மேலாதிக்க வல்லரசு, அமரிக்க ஏகாதிபத்தியம், ஐரோப்பிய நாடுகள் என்ற அதே பட்டியல் மறுபடி வரையப்படுகின்றது. புலிகளின் அழிவிற்குக் காரணமான அவர்களின் நண்பர்கள் மீண்டும் தமிழ் மக்களின் நட்பு சக்திகளாகப் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். சிஐஏ இன் சிலந்தி வலைக்குள் நாடுகடந்த அரசு “பெருமைக்குரிய” பாராளுமன்றத்தைக் கூடுகிறது.
போராடுகின்ற மக்கள் பிரிவினரிடமிருந்தும், புரட்சிகரப் புத்திசீவிகளிடமிருந்தும், ஜனநாயக, மனிதாபினாமன, முற்போக்கு சக்திகளிடமிருந்தும் தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் மறுபடி அன்னியபடுத்தப்படுகிறது.
2010 இற்குப் பின்னான காலப்பகுதி போராட்டங்களுக்கானதென அமரிக்க உளவுத்துறை “எச்சரிக்கிறது”. எதிர்கொள்ள முடியாத அளவிற்குப் போராட்டங்கள் உலகம் முழுவதும் உருவாகலாம் என எதிர்வு கூறுகின்றது. தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்தவரை இது சரணடைவிற்கான இன்னொரு காலம்.
இப்போது நாடுகடந்த தமிழீழம் முன்வைக்கும், “தேசியத் தலைவர்”, “தமிழீழ தாயகம்” போன்ற வெற்று முழக்கங்களைப் பயன்படுத்தியே மக்களின் எதிரிகளின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கை அரச தொடர்பாடலும், கே,பியுடனான தொடர்பும் இந்த எல்லைக்குள் இருந்தே மேற்கொள்ளப்படுகிறது. இவற்றைக் கையாள்வதற்காக உருத்த்திரகுமார் ஈறான பல சந்தர்ப்பவாத முகவர்கள் ஒழுங்குபடுத்தப்படுகின்றனர்.
இப்போது நாடுகடந்த தமிழீழம் இரண்டுபட்டுள்ளது. ஜனநாயக அணி என்ற புதிய பிளவு அதே முழக்கங்களோடும், கோரிக்கைகளோடும், முன்னைய ஏகாதிபத்திய நண்பர்களோடும் உருவாக்கப்படுள்ளது. இவர்களின் பிளவிற்கு கொள்கை அடிப்படையில் எவ்வகையான முரண்பாடுகளையும் காணமுடியாது, வெறும் நிர்வாக மட்டத்திலான முரண்பாடுகள்.
தமிழ்ப் பேசும் மக்களை அவர்களின் எதிரிகளிடம் ஒப்படைப்பதற்கு ஜனநாயக அணி எதற்கு? உருத்திரகுமார் அணியே போதுமானாது!
இலங்கை இந்திய அரசுகளுக்கு அழுத்தங்கள் வழங்கவும், ஐரோப்பிய அமரிக்க அரசுகளை எதிர்கொள்ளவும், உருவாகவல்ல புதிய அரசியல் சிந்தனை வழியாக நாடுகடந்த அரசின் அடிப்படைக் கருத்தியல் அழிக்கப்பட வேண்டும். அழிவிலிருந்து கற்றுக்கொண்ட புதிய அரசியல் தலைமை உருவாக வேண்டும்.
இலங்கையில் மக்கள் அமைப்புக்களை உருவாக்குவதற்கான ஜனநாயக் இடைவெளிக்கான போராட்டங்களை இந்திய, இலங்கை ஜனநாயக, முற்போக்கு சக்திகளோடு இணைந்து முன்னெடுக்க வேண்டும்.
ஐரோப்பிய அமரிக்க போராடும் முற்போக்கு, ஜனநாயக, மனிதாபிமான சக்திகளுக்கு எம்மை புதிய அரசியலோடு அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும். அன்னியமாகிப் போன, சந்தர்ப்பவாதமாகக் கருதப்படுகின்ற, அதிகாரவர்க்கத்தை நம்பிய எமது போராட்டத்தின் புதிய முகம் மக்களின் எதிரிகளுக்கு எதிரான திட்டமிட்ட போராட்டங்கள் ஊடாகவே சாத்தியமானதாகும்.