Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு – புதிய போரின் முன்னறிவிப்பு : சபா நாவலன்

போர்க் குற்றவாளிகளின் சாம்ராஜ்யமாகத் திகழும் இலங்கைஇ ஏலவே நிறுவன மயப்பட்டிருந்த பெளத்த மேலாதிக்க வாதத்தின் கோரத் தீயில் எரிந்து கொண்டிருக்கிறது. பெளத்தத்திலிருந்து மதம் மாறிய சிங்களப் பெண்ணைச் சிறைப் பிடிக்கும் எல்லை வரை பெளத்த அடிப்படை வாதம் விரிவடைந்திருக்கிறது. வடபகுதியின் மழைக்காலக் காளான்கள் போல பெளத்த விகாரைகள் குறுகிய கால எல்லைக்குள் முளைத்தெழுகின்றன. இவை அமைதியின் சின்னங்களல்ல; அழிவின் முன்னறிவிப்பு. திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் அரச மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் உதவியோடு திட்டமிட்ட குடியேற்றங்கள் தமிழ்ப் பிரதேசங்களைச் சூறையாடுகின்றன.

சிங்கள பெளத்த சிந்தனையை  உருவாக்கிய பிரித்தானியா..

பிரித்தானிய காலனி ஆதிக்கதிற்கு எதிரான தேசிய உணர்வினையும் தேசியப் போராட்டங்களையும் மட்டுப்படுத்தும் நோக்கிலான; அமைப்புமயப்படுத்தப்பட்ட பெரும் பணச்செலவிலான கிறீஸ்தவ மதத்தினை நாடுமுழுவதும் பரப்பும் பணியில் ஈடுபட்ட ஆங்கிலேயர் இந்த முயற்சி குறித்த எல்லைக்கு அப்பால் வெற்றியடையாது போகவே உள் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்த ஆரம்பித்தனர்.
கிறீஸ்தவ மதத்தைப் பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஆங்கிலேய அரசு இந்த நடவடிக்கைகளுக்கு நடுவிலே பௌத்தமதத்தை முன்நிறுத்தும் பாளி மொழியில் எழுதப்பட்ட இந்து புராணக் கதைகளை ஒத்ததான இந்த மன்னர்களுக்கு எதிரான கருத்தோட்டத்தைக் கொண்டிருந்த மகாவம்சம் என்ற வரலாற்றுக் கதையை பாளி மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்க உத்தரவு பிறப்பித்தது.

இந்து மதத்தின் ஆதாரமாகக் கருதப்படும் வேத மந்திரங்கள் எந்தத் தென்னிந்திய மொழிகளிலும் ஆங்கிலேயரால் மொழிபெயர்க்கப்படவில்லை. பௌத்தமதத்தினை ஆதாரமாகக் கொண்ட தமிழ் இலக்கியங்களான மணிமேகலையும், குண்டலகேசியும் ஆங்கிலேயரால் வடமொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை.

ஆனால் மகாவம்சம் என்ற பாளிமொழியில் அமைந்த மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்க வல்ல வரலாற்று கற்பனைக் கதை ஆங்கிலேயரின் உத்தரவின்பேரில் அவசர அவசரமாக சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது.

மொழி மாற்றம் செய்யப்பட்ட மகாவம்சம்

1874ம் ஆண்டு இலங்கையில் இங்கிலாந்து அரசின் கவர்னராகப் பணியாற்றிய சேர் வில்லியம் கிரகரி  இங்கிலாந்து நாட்டில் கல்விகற்று வந்த இலங்கைப் பௌத்தர்களுடன் இணைந்து வண. ஹிக்கடுவ ஸ்ரீ சமுனன்கல நாயக்க தேரர் மற்றும் வண. பந்துவந்தாவ ஸ்ரீ தேவராக்கித்த தேரர் ஆகியோரைக் கொண்டு மகாவம்சம் என்ற பாளி மொழியிலமைந்த பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுக் கதைகளை சிங்கள மொழிக்கு மொழிப்பெயர்ச்சி செய்து கிராமமட்டங்கள் வரை இருந்த விகாரைகள் முழுவதுமாக விநியோகம் செய்தனர். இதனூடாக மொத்த மக்கள் மத்தியிலும் இந்த மகாவம்சம் பரப்பப்பட்டது.

மூலதன உருவாக்கத்துடன் கூடவே எழுந்த நாடுதழுவிய தேசிய உணர்வினை சீர்குலைத்து தமது பிரித்தாளும் தந்திரத்தினை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் பரவப்பட்ட மகாவம்சம் உருவாக்கிய முதலாவதும் முக்கியமானதுமாக அறியப்பட்ட மனிதன் தான் அனகாரிக்க தர்மபால என்னும் பௌத்த துறவியாவார்.

இன்றைக்கும் இலங்கை பேரினவாத அரசால் பௌத்தர்களின் நாயகனாகப் போற்றப்பட்டு பள்ளிப்பாடப் புத்தகங்களையும் தபால்தலைகளையும் ஆக்கிரமித்துள்ள இந்த அனகாரிக்க தர்மபால என்ற மகாவம்சத்தின் நவீனகால வாரிசான இவர்தான் புதிய இலங்கையின் பௌத்த பேரினவாதத்தின் கர்த்தாவானார்.
சிங்கள இனத்தைச் சார்ந்த கிறிஸ்தவ மதத்தவரான இவர் ஆரிய பௌத்த பேரினவாதக் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பினார்.

உருவாக்கப்பட்ட  சிங்கள பெளத்த பேரினவாதி

ஹெலனா பிளவாட்ஸ்கி என்ற மேற்கத்தையை தத்துவாசிரியரின் நேரடியான மேற்பார்வையில் உருவான அனகாரிக்க தர்மபால தமிழர்களைத் திராவிடர்கள் என்றும் சிங்களவர்களை ஆரியர்கள் என்றும் வகுத்து ஆரியர்களே ஆளப்பிறந்தவர்கள் என்று தமது ஆசிரியரின் கொள்கைகளைப் பரப்பி மக்களைக் கூறுபடுத்தினார். ஹெலனா பெற்றொவ்னா ஹான அல்லது ஹெலனா பிளவாட்ஸ்கி என்ற தத்துவவியலாளரின் எழுத்துக்களினால் அனகாரிக்க தர்மபால மட்டுமல்ல, ஹிட்லர் உட்பட மற்ற உலகத் தலைவர்களும் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தனர். 31.07.1831இல் ரஷ்யாவின் உக்ரெயின் பிரதேசத்தில் பிறந்த இவர் அமெரிக்காவின் நியு யோர்க்கிலும் ஜேர்மனியிலும் இறுதியாக இங்கிலாந்திலும் வசித்துவந்தார்.

பல தத்துவாசிரியர்களால் நவீன இனத்துவக் கருத்தியலின் ஆரம்பகர்த்தா என வர்ணிக்கப்பட்ட பிளவாட்ஸ்கி பல சர்ச்சைக்குரிய தத்துவங்களை முன்வைத்து அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுக்கவும் முனைந்தவர். குடியேற்ற நாடுகளில் தனது செயற்பாடுகளைத் தீவிரப்படுத்திய இவரின் கருத்துக்கள் இலங்கை என்ற அழகிய தீவை இரத்த ஆறுபாயும் கோர பூமியாக மாற்றியமைத்தது. மகிந்த ராஜபக்ச போன்ற போர்க் குற்றவாளிகளும் சமூக விரோதிகளும் இந்தத் தீவின் சிறுபான்மைத் தமிழ்ப் பேசும் மக்களை சட்டரீதியாகத் துவம்சம் செய்யவதற்கான ஆரம்பப் புள்ளியை ஹெலேனாவின் தத்துவமே உருவாக்கியது.

1874ம் ஆண்டு கேணல் ஒல்கோட் என்பவரை நியுயோர்க்கில் சந்தித்த ஹெலேனா அவருடன் ஒன்றாக வாழ ஆரம்பித்தார். பின்னதாக வேறொருவரைத் திருமணம் செய்துகொண்ட இவர் 1875ம் ஆண்டு வேதியல் குழுமத்தின் (வுhநழளழிhiஉயட ளுழஉநைவல) என்ற அமைப்பை கேணல் ஒல்கோட் உடன் இணைந்து ஆரம்பித்தார். இதன் கிளைகள் இன்றும் கொழும்பிலும் அடையாறிலும் இன்றும் இயங்குகின்றன.ஆரியர்கள் உயர் குலத்தோர் என்ற கருத்தை அடிப்படையாக முன்வைத்துச் செயற்பட்ட இவ்வமைப்பானது இலங்கையின் இனச்சிக்கலை உருவாக்குவதில் பிரதான பங்கு வகித்த புறநிலைச் சக்தி என்றால் அது மிகையானது ஒன்றல்ல.

ஹெலேனா யின் எல்லா எழுத்துகளுமே இனவாத, நிறவாதக் கருத்துக்களைக் கொண்டவையாக அமைந்திருந்தன. ‘வுhந ளுநஉசநவ ழக னுழஉவசiநெ’ என்ற நூலில் ஆரியர்களைப் பிறப்பால் மனித இனத்தின் உச்சநிலையிலுள்ள நாகரீகமடைந்தவர்களாகவும், அப்ரொஜின் இன மக்கள் போன்ற ஆதிக்குடிகளை அரை மிருகங்களாகவும் வர்ணிக்கிறார். இவ்வாறு இனவாதத்தையும் நிறவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டு மனித இனத்தைக் கூறுபோட முனைந்த இவர், இந்த நோக்கத்திற்காக இலங்கையில் தேர்ந்தெடுத்த மனிதர் தான் அநகாரிக்க தர்மபால என்பவராவார்.

1864ம் ஆண்டு செல்வாக்கு மிகுந்த ஒரு செல்வந்தரின் மகனாகப் பிறந்த அநகாரிக்க தர்மபாலவின் பிறப்புப்பெயர் டேவிட் ஹேவவிதாரண (னுயஎனை ர்நறயஎவையசயயெ) என்பதாகும். கிறீஸ்தவராகப் பிறந்த அநகாரிக்க தர்மபால தமது ஆரம்பக் கல்வியை கிறீஸ்தவக் கல்லூரிகளிலேயே மேற்கொண்டார். மகாவம்சம் ஆங்கிலேயர்களால் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட பின்னர், இலங்கையில் எழுந்த சிங்கள-பௌத்த எழுச்சியினால் உந்தப்பட்டார்.

இதே காலப்பகுதியில், 1882ம் ஆண்டில் ஹெலனா பிளவாட்ஸ்கியின் வேதியல் குழுமத்தின் தலைமையகம் தென் இந்தியாவிலுள்ள அடையாறு என்ற இடத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், வேதியல் குழுமத்தின் இனைச் சார்ந்தவர்கள் பௌத்த மதத்துடன் தமது ஆரிய இனவேறுபாட்டுத் தத்துவத்தை அடையாளப்படுத்த ஆரம்பித்தனர். ஹெலேனா பிளவாட்ஸ்கியும் ஒல்கோட்டும் உம் பௌத்தத்தை ஆரியர்களின் உயர்ந்த மதமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். இந்த இருவரினதும் இறுதிக்கால வாழ்க்கை பௌத்தக் கொள்கைகளுடன் எந்தச் சார்புநிலையிiனையும் கொண்டிராத போதிலும், பௌத்த மதத்தைச் சுற்றிய இவர்களது ஆர்வத்தினால் இலங்கைக்குப் பலமுறை பயணம் செய்தனர்.

ஒல்கோட் மட்டும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்த ஆங்கிலேய கவர்னர்களின் ஆதரவுடன் 300 பௌத்த பாடசாலைகளை ஆரம்பித்தார். இந்த நேரத்தில் தான் ஒல்கோட் இன் பௌத்தமதப் பிரச்சார வேலைகளுக்கு அநகாரிக்க தர்மபாலா ஆதரவாக இருந்தார். ஆரிய மேலாதிக்கவாத நாஸிச தத்துவத்தால் ஆட்கொள்ளப்பட்டார். ஹெலனா பிளவாட்ஸ்கியின் ஆளுமைக்கு உட்பட்ட இவர், அவரது ஆதரவுடன் பாளி மொழியைக் கற்றுத் தேர்ந்தார். அநகாரிக்க தர்மபாலவிற்கு 20 வயதாக இருக்கும்போது, 1884ம் ஆண்டில் ஹெலனா பிளவாட்ஸ்கிஅவரை தென் இந்தியாவிலிருந்த வேதியல் குழுமத்தின் இன் தலைமையத்திற்கு அழைத்துச்சென்றார்.

இதன் பின்னர் இலங்கை திரும்பிய அநகாரிக்க தர்மபால, இலங்கையிலிருந்த வேதியல் குழுமத்தின் இன் காரியாலயத்தில் தங்கி முழுநேரமாகப் பணியாற்றினார்.

1886ம் ஆண்டு  பௌத்த பாடசாலைகளை நிறுவும் நோக்குடன் ஒல்கோட் இலங்கைக்கு வந்தபோது, அவருடன் இணைந்து பணியாற்றிய அநகாரிக்க தர்மபால பின்னதாக பௌத்த துறவியாக மாறினார். மகாவம்ச மொழிபெயர்ப்பிற்கும், வேதியல் குழுமத்தின்  உருவாக்கத்திற்கும் பின்னதாக எழுந்த பௌத்த-சிங்கள மேலாதிக்க உணர்வின் ஆரம்பகர்த்தாவாகத் திகழ்ந்த இவரின் கருத்துக்கள் கிராமப்புறங்கள் வரை சென்று மிகவும் அடிமட்ட மக்களின் சிந்தனை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தின.

தேசியவாதம், மகாவம்சம், ஹெலனா பிளவாட்ஸ்கியின் சிந்தனைகள் ஆகியவற்றின் நச்சுக் கலவையான இவரின் கருத்துக்களும் பிரச்சாரங்களும் தான் பௌத்த-சிங்கள அடிப்படைவாதத்தினை சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவித்தது. அமைதியையும் சமாதானத்தையும் போதித்த பௌத்த விகாரைகள் இனவாதத்தையும் சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தையும் கக்கும் நெருப்பாக மாறின. இது ஆங்கிலேய அரசின் ஆதிக்கத்திற்கு மிகப் பாரிய வெற்றியைக் கொடுத்தது.

இந்தியாவில் உருவான தேசிய எழுச்சியினது தாக்கத்தாலும், பொருளாதார மாற்றத்தாலும் உருவான ஏகாதிபத்திய மூலதனத்திற்கு எதிரான இலங்கை மக்களது உணர்வலைகள் கூறுபோடப்பட்டு, தேசிய சக்திகளும், தேசிய உணர்வும் சீர்குலைக்கப்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கு அத்திவாரமிடப்பட்டது.

ஹெலனா பிளவாட்ஸ்கி யின் சிந்தனைகள் எவ்வாறு ஜேர்மனியில் ஹிட்லர் பரப்பிய நாஸிசத்தின் உருவாக்கத்திற்கான ;காரணிகளில் ஒன்றாக அமைந்ததோ, அதுவே காலனி ஆதிக்கத்தால் எற்கெனவே சீரழிந்துபோன இலங்கையிலும் அநகாரிக்கவில் ஆரம்பித்து பௌத்த சிங்கள மேலாதிக்கத்திற்கும் இனப்பிரச்சினையின் உருவாக்கத்திற்கும் காரணமாக அமைந்தது.
அநகாரிக்கவும், பிளவாட்ஸ்கி யைப் போலவே பிரித்தாளும் நோக்கத்திற்காக பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட ஆரிய தத்துவத்தை தமது எழுத்துக்களினதும் பிரச்சாரங்களினதும் அடிப்படையாகக் கொண்டிருந்தார்.

பிற்காலத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும், கிறீஸ்தவ மதத்திற்கும் எதிராக அநகாரிக்க கடும் பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் மேற்கொண்ட போதிலும் இலங்கையில் உருவாகிவந்த அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வையும், நாட்டின் சொந்த மூலதனத்தை அபிவிருத்தி அடையச்செய்யும் தேசியவாதத்தைக் கூறுபோட்டு, நாட்டைச் சீரழிப்பதில் அநகாரிக்கவின் பங்கானது, பிரித்தானிய பிரித்தாளும் தந்திரத்திற்கு பெரும் சேவையாற்றியதுடன், சிங்கள-பௌத்த தேசியவாதத்தையும், தமிழ் தேசிய வாதத்தையும் உருவாக்கி பெரும் தேசிய இன மோதல்களை ஏற்படுத்திற்று.

ஆரியர் கோட்பாட்டின் இலங்கைப் பிரதிநிதி

ஆங்கிலேயர் உருவாக்கிய ஆரியர் கோட்பாட்டின் முதலாவது சர்வதேசப் பிரதிநிதி ஹெலனா பிளவாட்ஸ்கிஎன்றால், அதன் இலங்கைப் பிரதிநிதி அநகாரிக்க தர்மபாலவாகத் திகழ்ந்தார்.
‘இந்த அழகான, பிரகாசமான தீவு ஆரியச் சிங்களவர்களால் சொர்க்க பூமியாக மாற்றப்பட்டிருந்தது. அதன் மக்களுக்கு மதசார்பற்ற நிலை பற்றித் தெரியாது. இந்துக்களும், கிறீஸ்தவர்களும் மிருகக் கொலைக்கும் களவுக்கும் பொய்க்கும் விபச்சாரத்திற்கும் பொறுப்பானவர்களாவர்’ என்று குறிப்பிடும் அநகாரிக்கவின் உரைகளில் ஒன்று மிகப் பிரபல்யம் வாய்ந்ததாகும்.

இவரின் உரைகள் இலங்கையின், கல்வி கலாச்சார அமைச்சினால் நூலுருவில் வெளியிடப்பெற்றுள்ளது.

ஒல்கோட்  மற்றும் ஹெலனா பிளவாட்ஸ்கிஆகியோரால் தொடர்ச்சியாக ஊக்குவிக்கப்பட்ட  அநகாரிக்க தர்மபால, தமிழர்களையும், முஸ்லீம்களையும் சிங்கள மக்களின் எதிரியாகக் காட்டுவதற்கு தம்மாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டதனூடாக, பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு மகத்தான சேவை செய்து வந்தார். துட்டகமுனு, எல்லாளன் போரைத் தமிழர்களுக்கு எதிரான போராகச் சித்திரித்து தமிழர்களை இலங்கையின் எதிரிகளாகக் காட்ட முற்பட்டார்.
மேலும், நிறவாதத்தைத் தூண்டும் நோக்குடன் சிங்களவர்களைத் தூய்மையான ஆரியர்களாகக் குறிப்பிட்ட இவர், தாம் வட இந்தியர்கள், ஐரோப்பியர்கள், ஈரானியர்களை ஒத்த ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்றும், தமிழர்கள் இரண்டாம்தர நாகரீகமடையாத திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள் என்றும் பிரச்சாரம் செய்தார்.

தமிழர்களையும், முஸ்லிம்களையும், ஏனைய சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களையும் இலங்கையை விட்டு வெளியேற்றி இலங்கையை மறுபடி பௌத்த சிங்கள ராஜ்யமாக்க வேண்டும் என்று இவர் ஆரம்பித்துவைத்த அமைப்புமயப்படுத்தப்பட்ட இனவாதம், இன்றைக்கு இலங்கையை பிணக்காடாக மாற்றியுள்ளது.

போருக்கான முன்னறிவுப்பு..

இந்திய அதிகாரத்தின் துணையோடு தமிழ்ப் பேசும் மக்களின் அடையாளம் அவசர அவசமாக அழித்துத் துடைக்கப்படுகின்றது. வன்னிப் படுகொலையின் தடயங்களை இன்னும் முற்றாக அழித்து முடிக்காத இலங்கை சோவனிச அரசதிகாரம் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடையாளத்தை அழிக்க ஆரம்பித்துவிட்டது.

இந்தத் திட்டமிட்ட அழிப்பிற்கு எதிரான வாக்குக் கட்சிகளின் வேலைத்திட்டம் என்னஇ இடது சாரிக் கட்சிகளின் வேலைத்திட்டம் எங்கே? இவைதான் சமூக உணர்வு கொண்ட அனைத்துத் தரப்பினதும் கேள்வி. போர்க்குறவாளிகளதும் சமூகவிரோதிகளதும் தத்துவார்தப் பின்புலம் நிறுவன மயப்பட்ட பெளத்த சிங்கள மேலாதிக்க வாதமே. இதற்கெதிரான இன்னொரு போர் தவிர்க்கவியாலாது என்பதை இலங்கை அரசு மறுபடி மறுபடி கூறுகிறது. அதனைத் தலைமை வகிப்பது முற்போகுத் தேசியவாதமா இல்லை குறுந்தேசிய ஆதிக்கமா என்ற சிக்கலை இடதுசாரிகள் மக்கள் முன்வைக்கும் வேலைத் திட்டம் தான் தீர்மானிக்கும். இன்றைக்கு வரை அது பேசாப் பொருள் என்பதை சுயவிமர்சனமாக முன்வைப்பதிலிருந்தே புதியதை நோக்கிப் பயணிக்க முடியும்.

Exit mobile version