மனிதர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அப்பட்டமான வியாபாரிகள் அவலங்களின் மத்தியிலிருந்து முளைத்து அகோரமாகக் காட்சிதருகின்ற துயர்படிந்த காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
உலகத் தொழிலாளர்களை பிய்த்துப் பிளந்து கூறுபோட்டு கொலைகளின் களமாக உலகத்தை மாற்றியிருக்கிறது. உலகக் கொலைக்களத்திற்கு இலங்கை இன்று உலகிற்கு முன்னுதாரணம். பல் தேசியப் பெருமுதலைகளாலும் சிங்கள இராணுவக் குடியேற்றங்ளாலும், சிங்கள பௌத்த திட்டமிட்ட குடியேற்றங்களாலும் சுறையாடுப்படும் நிலப்பரப்பு நாளுக்கு நாள் பெருகிச் செல்கிறது.
இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் வடக்கில் தமிழ்ப்பேசும் மக்கள் சிறுபான்மையாகிவிடுவார்கள். அதற்கான அத்தனை முரண்பாடுகளும் கூர்மைப்படுத்தப்பட்டுக் கையாளப்படுகின்றன. தெற்கில் எட்டிப்பார்க்கும் மனித முகங்களையும், அப்பாவி சிங்கள உழைக்கும் மக்களையும் கொன்று போடுவதற்கும் பேரினவாத அரசு தயாராகிறது.
மனிதக் கசாப்புக்கடை இலங்கை முழுவதும் ராஜபக்ச குடும்பத்தின் தலைமையில் நடத்தப்படுகிறது. அவர்கள் தெளிவாக முரண்பாடுகளைக் கையாள்கிறார்கள்.
மாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் கிழக்கில் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை நிறைவேற்றிய நீண்டகால தரவுகள் எம்முன்னே விரவிக்கிடக்கின்றன.
அதுவரை காலமும் உள்வீட்டுச் சண்டையும் சகோதரத்துவமாக வாழ்ந்த தமிழ்ப் பேசும் சிறுபான்மை இனங்களான முஸ்லிம்களுக்கும் பூர்வீகத் தமிழர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை இடதுசாரிகளோ, ஈழ விடுதலை இயக்கங்களோ தமது போராட்டங்களுக்காகக் கையாண்டதில்லை. இலங்கை அரசாங்கம் கையாண்டது. முரண்பாடுகளைத் திட்டமிட்டுக் கூர்மைப்படுத்தி வன்முறையாகவும் மோதலாகவும் மாற்றியது.
இந்த மோதலின் இடைவெளியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மகாவலித் திட்டத்தின் ஊடாக இலங்கை அரசு நிறைவேற்றியது. கிழக்கில் தமிழர்கள் சிறுபான்மையானார்கள். இதன் மறுபக்கத்தில் ஈழ விடுதலை இயக்கங்கல் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துவதில் இலங்கை அரசிற்கு ஆதரவாகச் செயற்பட்டன. உலகின் அத்தனை உளவு நிறுவனங்களாலும் உள்வாங்கப்பட்டிருந்த ஈழ விடுதலை இயக்கங்களின் வரலாற்றுத் துரோகத்தின் மற்றொரு விளைபலன் கிழக்கில் இலங்கை அரச ஆக்கிரமிப்பு நோக்கத்திற்குத் துணைபோனதாகும்.
இதே ஆக்கிரமிப்புத் தந்திரோபாயத்தின் மறு வடிவம் இன்று வடக்கில் நிறைவேற்றப்படுகின்றது.
வடக்கு முரண்பட்ட சாதிகளின் கூட்டமைப்பு மட்டுமல்ல, ஆதிக்கசாதி வேளாள அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தது. கடந்த முப்பது வருடங்களில் தேசிய இன ஒடுக்குமுறை இராணுவ ஒடுக்குமுறையாகக் கொலைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருந்த ஒவ்வொரு கணமும், வெளித் தெரியாமல் அமிழ்த்தப்பட்டிருந்த சாதிய முரண்பாடுகள் சமாதானக் காலம் ஒவ்வொன்றிலும் ஆங்காங்கு வன்முறைகளாக வெடித்திருக்கின்றன.
எதிர்காலம் குறித்த எந்த அக்கறையும் அற்ற நிலப்பிரபுத்துவ மனோபாவம் கொண்ட குழுவாதிகளான எந்த ஈழ விடுதலை இயக்கத்திடமும் சாதிய முரண்பாடுகளைக் கையாள்வதற்கான குறைந்தபட்ச திட்டம்கூட இருந்ததில்லை. இளைஞர்களை துப்பாக்கிகளோடு கோரமான எதிரிக்கு இரையாகத் தீனிபோட்டு இராணுவ வெற்றிகளை மட்டுமே அரசியலாக்கிய விடுதலைப் புலிகள் வரை கிழக்கில் முஸ்லிம்களுடனான முரண்பாடுகள் குறித்து அரசியல் முன்வைக்கப்படாதது போன்றே வடக்கில் சாதிய முரண்பாடுகள் குறித்தும் அரசியல் இருந்ததில்லை.
அந்த முரண்பாடுகளை தனக்குச் சார்பாக பேரினவாத அரசு கையாளும் வழிகள் அனைத்தையும் தேசிய விடுதலை இயக்கங்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் திறந்து விட்டிருந்தன.
இன்று சாதிய முரண்பாடுகளை மிகவும் திட்டமிட்ட வகையில் பேரினவாத அரசு கையாள்கிறது. அரசிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு நிலையில் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த முரண்பாட்டை இலங்கை அரசு கையாள்வதற்கான அனைத்து கதவுகளையும் அகலத் திறந்து வைத்துள்ளது.
ஜீவசிங்கம் சிவகுமார் என்பவர் யாழ்ப்பாண பிரதேச சபை உறுப்பினராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றிபெற்றார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இவரை ஒரு வருடங்களின் முன்னர் சாதி அடைமொழிகளோடு கூட்டமைப்பின் உயர்மட்ட உறுப்பினர்கள் திட்டியிருக்கிறார்கள். தேசியக் கூட்டமைபின் மேலாதிக்க வன்முறைக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து கடந்த ஒரு வருடமாக கூட்டமைப்பு அதனைப் புறக்கணித்தது. போரின் பின்னரான அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக யாழ்ப்பாண மேட்டுக்குடி வேளாளர்கள் தமது அதிகார நிலைகளை உறுதிப்படுத்த ஆரம்பித்திருந்தனர்.
இலங்கை அரசினதும் உலக ஏகாதிபத்தியங்களதும் உள்ளூர்ச் சண்டியர்களாகத் தொழிற்படும் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கசாதி வெள்ளாளர்களின் தற்காலிகத் தங்கு மடம். அவர்கள் பல ஆண்டுகளாகப் பிரதிநிதித்துவப்படுத்திய வெள்ளாள மேலாதிக்கம் மீண்டும் அதிகாரப் போட்டியில் சாதி வெறியையும் மேலாதிக்கத்தையும் நிறுவ முற்படுகின்றது. தமிழ் தேசியம் என்பது இவர்களின் அடிப்படை முழக்கமாகவிருந்த போதும் வடக்கில் தமிழ்ப்பேசும் மக்களைப் பிளவுபடுத்தி தமது குறுகிய அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள முற்படுகின்றனர்.
தேசிய வாதிகள் தமது சந்தை நோக்க்கங்களை நிறைவேற்றிக்கொள்ள சாதிய ஒடுக்குமுறைய தவிர்க்க முடியாமலாவது நிராகரிப்பது வழமை. மக்களை தமது தலைமையில் ஒன்றிணைப்பதற்கான தந்திரோபாயமாக தேசிய ஒருங்கிணைவு பயன்படுவதுண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் தேசிய வாதிகள் அல்லர். தேசியத்திற்கு அடிப்படையில் எதிரான விதேசிகள். மக்கள் மத்தியிலுள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதே இவர்களின் வழிமுறை.
இவர்களின் நோக்கம் தமது அதிகாரத்திற்காக நேரரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கை அரசுக்கும் அதன் பின்புலத்தில் இயங்கும் அனைத்து ஏகபோக அரசுகளுக்கும் சேவையாற்றுவதே.
மக்கள் மத்தியிலான முரண்பாடுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும் தெளிவான தத்துவ விசாரணைகள் எம்முன் உள்ளன. இவற்றை அறிந்துகொள்ளாத பலரும் தெரிந்துகொள்ள விரும்பாத பிழைப்புவாதிகளும் ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை அழித்து அடிமைகள் சமூகமாக மாற்றுவதற்குத் துணைபோகிறார்கள்.
கடந்த முப்பதுவருட ஆயுதப் போராட்டங்களின் ஆழத்துள் வெளித்தெரியாமல் உறங்கிக்கிடந்த சாதிய ஒடுக்குமுறையை முன்வைத்துப் பிழைப்பு நடத்துவதற்காக புலம்பெயர் நாடுகளில் சில குழுக்கள் ஏற்கனவே தம்மைத் தயார்படுத்திக்கொண்டிருந்தன. ஏகாதிபத்திய நிதிவளத்தில் இயங்கும் தன்னார்வக் குழுக்களோடு நேரடியான உறவுகளைக் கொண்ட இக்குழுக்கள் தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அடையாள அரசியல் என்ற அழுகிப்போன கோட்பாட்டை முன்வைத்து தமது இனப்படுகொலை ஆதரவு அரசியலை ஏற்கனவே ஆரம்பித்திருந்தனர்.
யாழ். மேலாதிக்கத்தின் கிழக்கு மக்கள் மீதான ஒடுக்குமுறையைப் பயன்படுத்தி கிழக்கைத் தனிமைப்படுத்துவதற்கான கருணா, பிள்ளையான் போன்ற குழுக்களை உருவாக்குவதில் புலம்பெயர் பிழைப்புவாதிகள் கணிசமான வெற்றி கண்டிருந்தனர். இந்த அனுபவங்களிலிருந்து, வன்னிப்படுகொலை முடிந்ததும் பிரான்சை மையமாகக் கொண்டு செயற்படும் தலித் முன்னணிக்கு இலங்கை அரசு முக்கியத்துவம் கொடுத்து, வடக்கில் அவர்களை முடுக்கிவிட்டது.
வடக்கில் ஏற்கனவே டக்ளஸ் குழு இந்தத் தளத்தில் தனது செல்வாக்கைச் செலுத்தியிருந்தது. டக்ள்ஸ் குழுவின் அரசியல் துறைப் பொறுப்பாளர் கிருஷ்ணபிள்ளை போன்றவர்களின் நீண்டகால அனுபவம், செல்வாக்கு என்பன தலித் முன்னணி போன்ற சாதிச் சங்க அமைப்புக்கள் ஒரு எல்லைக்கு மேற்செல்லாமல் தடுத்திருந்தது. தவிர, தமிழ் நாட்டைப் பிரதியெடுத்திருந்த இவர்களின் ‘தலித்’ முழக்கம் முற்றிலும் அன்னியமாகிய நிலையிலேயே சுதந்திர இளைஞர் முன்னணி செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தது.
தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் சனசமூக நிலையங்களூடாகத் தொடர்புகளை கிராமங்களோடு சாதீய அடிப்படையில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சுதந்திர இளைஞர் முன்னணி ஆறாயிரம் உறுப்பினர்களைக் கொண்டது என சொல்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் தங்களை அறியாமலேயே இன அழிப்பிற்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் துணைபோகிறார்கள் என்பதே உண்மை. இன்று பசில் ராஜபக்ச அரசின் முழுமையான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்ட இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்றே பெரும் அழிவுகளை ஏற்படுத்த வல்லவர்கள்.
அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகா சபை என்ற அமைப்பு தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரதிநித்துவப் படுத்துகிறோம் என்று உருவாகித் தோல்விகண்ட வரலாற்றை மீண்டும் நினைவிற்குக் கொண்டுவருகிறது சுதந்திர இளைஞர் முன்னணி. ஜூவல் போல் போன்ற தாழ்த்தப்படோர் மத்தியிலிருந்த மேல் மத்தியதர வர்க்கத்தினர் உருவாக்கிய மாணவர் அமைப்பு பின்னர் சிறுபான்மைத் தமிழர் மகாசபையாக தேர்தல் வெற்றிகள் சிலவற்றோடு பிளவடைய ஆரம்பித்தது. பஞ்சமர்கள் என்று இலங்கையில் அழைக்கப்பட்ட நளவர், பள்ளர், பறையர், அம்பட்டர், வண்ணார் என்ற ஐந்து சாதிகளையும் தாழ்த்தப்பட்ட சாதிகளாக இணைத்து இன்றைய தலித் அமைப்புக்கள் போன்றே தோற்றம்பெற்ற சிறுபான்மைத் தமிழர் மகாசபை தனக்குள்ளேயே மோதும் முரண்பாடுகளின் களமானது. பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வெளியேறி திருவள்ளுவர் சபை என்ற ஒரு அமைப்பை உருவாக்கினர்.
பறையர் சமூகத்தின் மேல்தட்டுவர்கத்தினரால் தோற்றம்பெற்ற திருவள்ளுவர் சபை, வறியவர்களைப் புறக்கணித்தது. இதனால் தோன்றிய முரண்பாடுகள் திருவள்ளுவர் சபையை செயலிழக்கச் செய்தது.
தெற்காசியாவின் சாதிய ஒடுக்குமுறை காணப்படும் நாடுகளுக்கே முன்னுதாரணத்தை வழங்கும் போராட்டங்களை நடத்தியது தீண்டாமை ஒழிப்பு இயக்கம்.மார்க்சிய லெனினியக் கட்சி அரசியலால் தலைமை தாங்கப்பட்ட இவர்களின் போராட்டங்கள் இலங்கையில் சமூக அசைவை ஏற்படுத்தியது. ஒடுக்கப்பட்ட கூலி விவசாயிகளாகப் பெருமளவு தொழிலில் ஈடுபடும் பள்ளர் சமூகத்தின் பங்கு இந்தப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்கது. இறுதியில் இந்தப் போராட்டங்களுக்கு வறிய மற்றும் கூலி விவசாய வர்க்கத்தைச் சார்ந்த ஏனைய சமூகத்தின் பங்களிப்பையும் காணக்கூடியதாகவிருந்தது.
சிங்கள மக்கள் மத்தியில் கூட இடதுசாரி இயக்கங்களின் பங்களிப்பே சாதிய ஒடுக்குமுறையின் கோரத்தைத் தணித்தது என்பது வரலாற்று உண்மை. எது எவ்வாறாயினும் இன்றும்கூட கொய்கம ரதள போன்ற ஆதிக்க சாதிக் குழுக்களைச் சார்ந்தவர்களே ஆளும்வர்க்கத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை ஜனாதிபதித் தேர்த்தலில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகிறோம் பேர்வளிகள் என்று சாதிச் சங்கங்கள் இனக்கொலையாளி ராஜபக்சவோடு ஒட்டிக்கொண்டார்கள். அதே தேர்த்தலில் மீன்பிடி கராவ சமூகத்தைச் சேர்ந்த சரத் பொன்சேகாவிற்கு எதிராக தனது கொய்கம ஆதிக்கசாதி வெறியை அவிழ்த்துவிட்ட மகிந்த ‘நான் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன் என்மீது மீன் வாடை வீசாது’ என்று மார்தட்டிக்கொண்டார். அப்போதே இவர்களின் தலித் முகமூடி ராஜபக்சவின் காழுத்தில் மாலையாக விழுந்து தொங்கியது.
வெற்றிபெற்ற முன்னுதாரணங்களை நிராகரித்து தோல்வியடைந்த வழிமுறைகளையே மீளமைக்கும் முன்னணி போன்ற சாதிச்சங்களின் நோக்கம் சாதி நிக்கம் செய்வதல்ல. சாதி ஒடுக்குமுறையை ஆழப்படுத்துவதே, அதுவே அவர்களின் பிழைப்புவாத அரசியலுக்கு வசதியனது. இலங்கை இனப்படுகொலை அரசு தனது இனப்படுகொலை நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள இவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறது.
கடந்த தேர்தலில் சாதிச்சங்கமான சிறுபான்மைத் தமிழர் மகாசபை போட்டியிட்ட போது இலங்கை அரசும் தலித் முன்னணியும் ஆதரவு வழங்கியது.
இலங்கை பாசிச அரசின் சிங்கள பௌத்த நிலப்பறிப்பிற்குத் துணைபோகும் அரச ஆதரவுக் குழுக்களாக வளர்ச்சியடையும் சாதிச் சங்கங்களுக்கு மாற்றாக தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை வழங்கும் வர்க்க அரசியலே இவர்களை அழிப்பதற்கான ஒரே வழி. இனச்சுத்திகரிப்பைத் துரித்தப்படுத்துவதற்கு சம்பந்தனோடும் சரவணபவனோடும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் தலித் தன்னார்வக் குழுமங்கள் அபாயகரமானவை. ராஜபக்ச பாசிசம் நிலப்பறிப்பை தீவிரப்படுத்த சாதிய முரண்பாடுகளைப் பயன்படுவதற்கு இவர்கள் அனைவருமே துணை போகிறார்கள்.