அப்படி வெளியிடப்பட்டு உள்ள வேலைகள் பட்டியலில் சாக்கடைக்குள் இறங்கித் துப்புரவு செய்யும் தொழிலும் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அது மட்டும் அல்ல; துப்புரவுத் தொழிலின் விவரணையாக (description), மூங்கில், இரும்புக் கம்பி ஆகியவற்றைக் கொண்டு சாக்கடையைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றும், துடைப்பத்தையும் முறத்தையும் கொண்டு மலத்தை அள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இவ்வேலை தீவிரம் இல்லாத அபாய வகையைச் சேர்ந்தது என்று வேறு குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பில் உள்ள கொடூரமான நகைச்சுவைப் பகுதி என்னவென்றால், சோதிடமும் இதே போன்ற அபாயகரமான தொழில் என்று குறிப்பிடப்பட்டு இருப்பது தான். சாக்கடைக்குள் இறங்கிச் சுத்தம் செய்வதில் நுரையீரல் நோய்,(lung respiratory), நரம்புக் கோளாறுகள் (neurological diseases), தொற்று நோய் (infection), மூச்சுத் திணறல் (suffocation), களைப்பு (fatigue) ஆகியவை ஏற்படுகின்றன என்றால், சோதிடத் தொழிலில் இதய நோய்கள் (heart diseases), உற்சாகமின்மை (depression), மனக்கவலை (anxiety), களைப்பு (fatigue) மன அழுத்தம் (stress) ஆகியவை ஏற்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
வேலை தேடிக் கொண்டு இருக்கும் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள், நாட்டில் உள்ள ஒன்பது இலட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்களில் வேலை பெறுவதற்கு இந்தப் பட்டியல் பயன்படும் எனறும், இந்திய சமூகத்தில் தொழிலாளர்களுக்கு “உரிய மரியாதை” கிடைப்பதற்கு இது வழி வகுக்கும் என்றும் பிரதம மந்திரி நரேந்திர மோடி கூறி உள்ளார்.
இதைப் பற்றி, கிளிஃப்டன் டி ரொஸாரியோ (Clifton D’ Rozario) என்ற வழக்கறிஞர் 3.8.2015 அன்று பெங்களூருவில் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவில் நடைமுறையில் உள்ள சாதிய ஒடுக்கலின் வெளிப்பாடு தான் இது என்றும், இது இந்திய அரசின் தரம் தாழ்ந்த ஒடுக்குமுறை மனநிலையை வெளிப்படுத்துகிறது என்றும் கூறினார். மேலும் மனிதர்கள் சாக்கடைக்குள் இறங்கிச் சுத்தம் செய்வதைத் தடுக்கும் 2013ஆம் ஆண்டுச் சட்டத்திற்கும் , உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் இது எதிரானது என்றும் அவர் கூறினார்.
இப்பிரச்சினையை மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள், தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணையத்தின் முன் கொண்டு சென்று உள்ளனர். இவ்வாணையத்தின் தலைவர் எம்.சிவண்ணா (M.Shivanna) இது நிச்சயமாகத் தவறு என்றும், இதைப்பற்றி விளக்கம் கேட்டு 5.8.2015 அன்று தாக்கீது (Notice) அனுப்பப்படும் என்றும் கூறினார்.
இது மட்டும் அல்ல; வீட்டு வேலைக்காக அமர்த்தப்படும் வேலைக்காரர்கள் (domestic servants) பொதுவான வீட்டு வேலைகளைச் செய்வதுடன், வேலை அளிப்பவரின் தனிப்பட்ட சவுகரியங்களையும் கவனிக்க வேண்டும் (performing the general household duties and attending to the personal comforts of masters or employers) என்றும் இப்பட்டியலின் விவரணையில் கூறப்பட்டு உள்ளது. அதாவது வேலைக்காரர்கள் / வேலைக்காரிகள் வீட்டு வேலைகளைச் செய்தால் மட்டும் போதாது. எஜமானரின் தனிப்பட்ட சவுகரியங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த அரசு வழி கோலுகிறது. அதாவது எஜமானரின் மீது வரம்பு மீறிய நடத்தை பற்றி எந்தப் புகாரையும் சட்ட ரீதியாகக் கொண்டு செல்ல முடியாதபடி வசதிகள் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
இவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்தால், படிப்படியாக மனு அநீதிச் சட்டத்தை வெளிப்படையாகவே நடைமுறைக்குக் கொண்டு வர மெதுவாகவும், உறுதியாகவும் பார்ப்பனர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று எளிதாக உணரலாம்.
மகாத்மா ஃபுலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோருடைய போராட்டங்களின் பயனாக முன்னேற்றம் அடைந்து உள்ள, ஒடுக்கப்பட்ட மக்கள் இதை நுணுக்கமாகக் கவனிக்க வேண்டும். இப்பொழுது இந்திய அரசு அறிவித்து இருக்கும் மனிதத் தன்மைக்கு எதிரான இந்த நோக்கங்கள், தங்கள் சந்ததியினருக்கும், தாங்கள் சார்ந்த சமூக மக்களுக்கும் அளவிட முடியாத கேடுகளை எதிர்காலத்தில் விளைவிக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும். “முன் காலத்தில் போல் இல்லை; இப்பொழுது நாம் படித்து முன்னேறி இருக்கிறோம்” என்ற நினைப்பு மிகவும் தவறாக முடியும். மெதுமெதுவாக நம் சந்ததியினர் ஆட்சி அதிகாரக் கல்வியை முற்றிலும் பெற முடியாதபடியான நிலைமையைப் பார்ப்பனர்கள் உருவாக்குவார்கள்.
அது சரி! பார்ப்பன ஆதிக்க ஆட்சியாளர்கள் இப்படி எல்லாம் அயோக்கியத்தனமாகச் சிந்திக்கிறார்களே? செயல்படவும் முனைகிறார்களே? அது எப்படி முடிகிறது? அதிகார மையங்களில் பார்ப்பனர்களும், ஆசையினாலோ, அச்சத்தினாலோ பார்ப்பனர்களிடம் சோரம் போகிறவர்ளும் மட்டுமே இருப்பதால் தான் இப்படிப்பட்ட துணிச்சல் வருகிறது. ஆதிகார மையங்களில் பார்ப்பனர்களை வெல்லும் அளவான எண்ணிக்கையில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இருந்தால் இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான எண்ணங்கள் முளை விட முடியாமலேயே மடிந்து விடும்
ஆகவே இது போன்ற சதித் திட்டங்களை முறியடிக்க ஒரே வழி, அரசுத் துறை, தனியார்த் துறை, சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மத சிறுபான்மையினர், உயர்சாதிக் கும்பலினர் ஆகியோருக்கு அவரவர் மக்கள் தொகை விகித்தில் கல்வி, வேலை மற்றும் பிற வாய்ப்புகள் அனைத்தையும் பங்கிட்டுக் கொடுப்பதே. இவ்வாறு செய்வதால், சமூக, பொருளாதார முடிவுகளை எடுக்கும் வழிகளில் (decision making process) பார்ப்பனர்களின் சதித் திட்டச் செயலாற்றலுக்கு வலுக் குறைவு ஏற்படும். ஒடுக்கப்பட்ட மக்களின் அடைந்து கிடக்கும் திறமைகள் வெளிப்பட்டு, நாட்டு முன்னேற்றததிற்காகச் செய்யும் செயலாற்றல் வலுப்படும்.
(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.8..2015 இதழில் வெளி வந்துள்ளது)