கடந்த 26-12-2009 அன்று யாழ் நகரில் இடம்பெற்ற “ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் மக்களின் எதிர்காலமும்” என்னும் தலைப்பிலான பகிரங்க அரசியல் கருத்தரங்கின் உரை:
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களில் எவர் வெற்றி பெற்றாலும் உழைக்கும் மக்களின் பொருளாதார வாழ்க்கை நெருக்கடி தீரப்போவதும் இல்லை தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்போவதும் இல்லை. இதனை உணர்ந்து கொள்ளாது இப்பிரதான வேட்பாளர்களில் ஒருவரைத் தெரிவு செய்வது மக்கள் தமக்கான மேலும் பலத்த அடிகளைத் தரக்கூடிய ஒருவரைத் தெரிவு செய்வதாகவே அமையக் கூடியதாகும். சவுக்கால் அடிவாங்குவதா அல்லது இரும்புச் சப்பாத்தால் உதை வாங்குவதா என்பதைத் தீர்மானிப்பதற்கான நிர்ப்பந்தம் மிக்க தேர்தலாகவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காணப்படுகிறது. இத்தகைய தேர்தலில் மக்கள் யாருக்கும் வாக்களிக்காது தேவைதானா என்பது ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியதாகும். எனவே தான் மக்கள் இத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காது வாக்குச் சீட்டுக்களைச் செல்லுபடியற்றதாக்கித் தமது எதிர்ப்பையும் வெறுப்பையும் தெரிவிக்க வேண்டும் என எமது கட்சி வேண்டிக் கொள்கிறது.
இவ்வாறு யாழ் நகரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் மக்களின் எதிர்காலமும் என்னும் தலைப்பில் நடைபெற்ற புதிய ஜனநாயக கட்சியின் பகிரங்க அரசியல் கருத்தரங்கில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் சி. கா. செந்திவேல் கூறினார். பெருந்தொகையான அரசியல் ஆர்வலர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்ட மேற்படி கருத்தரங்கு யாழ் – ப. நோ. கூ. சங்க மண்டபத்தில் 26.12.2009 அன்று பிற்பகலில் இடம்பெற்றது. வட பிரதேசச் செயலாளர் கா. கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்ற இவ் அரசியல் கருத்தரங்கில் அரசியல் குழு உறுப்பினர் தோழர் க.தணிகாசலம் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் செந்திவேல் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் போட்டியிட்டு நிற்கும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் ஒரே யுத்தத் தேரில் இருந்து யுத்தத்தை முன்னெடுத்தவர்கள். இவர்கள் இருவரினதும் பிரதான பிரச்சாரம் யார் யுத்த வெற்றிக்கு வழிவகுத்தவர் என்பதேயாகும். அத்தகைய கோர யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
தத்தமது பாராளுமன்றப் பதவிகளுக்கும் அமைச்சர் பதவிகளுக்கும் ஏனைய வசதி வாய்ப்புகளுக்குமாகவே பிரதான வேட்பாளர்களின் பக்கம் தமிழ், முஸ்லிம, மலையகத் தலைமைகள் ஆதரவு நிலைப்பாடு எடுத்து வருகிறார்களே தவிர தாம் பிரதிநிதித்துவம் செய்யும் ஏகப் பெரும்பான்மையான மக்களின் நலன்களுக்காகவோ அன்றி விருப்பத்திற்காகவோ இல்லை என்பது தெளிவானது. இத்தகைய சூழலிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் சார்புநிலை நின்று முடிவெடுக்க முடியாது நின்று திண்டாடி வருகிறது. அவர்கள் வடக்கு, கிழக்கில் சென்று தமிழ் மக்கள் மத்தியில் அபிப்பிராயத்தைப் பெறமுடியாத கையறு நிலையில் இருந்து வருகிறார்கள். காரணம் நடந்து முடிந்த பேரழிவு யுத்தத்திற்கும் தொடரும் பேரவலங்களுக்கும் இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ள ஐந்து தமிழ் கட்சிகளும் பொறுப்பும் பதிலும் கூறவேண்டியவர்களேயாவர். அவர்கள் முப்பத்துமூன்று வருடங்களுக்கு முன்பு வைத்த தவறானதும் சாத்தியமற்றதுமான தமிழீழக் கோரிக்கையான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மோசமான எதிர்விளைவையே இன்று தமிழ் மக்கள் அனுபவித்து நிற்கின்றனர்.
இத்தகைய குற்ற உணர்வே தமிழ்க் கூட்டமைப்பை தமிழ் மக்கள் மத்தியில் தலைகாட்ட விடாது தடுத்து வருகிறது. அன்று செய்த தவறை இன்று சுயவிமர்சன ரீதியில் ஏற்றுக் கொள்ளவோ மறுபரிசீலனை செய்யயவோ தயாரில்லாத நிலையில் அவர்கள் மற்றொரு பாரிய தவறையும் துரோகத்தையும் மீண்டுமொரு முறை தமிழர்களுக்குச் செய்வதற்குத் துணிந்துள்ளார்கள். அதன் போக்கிலேயே பிரதான இரண்டு வேட்பாளர்களுடன் பேசி வருகிறார்கள். இவர்கள் தவறான முடிவுகளை எடுத்து அவற்றைத் தமிழ் மக்கள் மீது திணிக்கவே முற்படுவார்கள் என்றே எதிர்பார்க்க முடியும்.
எனவே தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் மத்திக்கு வந்து மக்களின் கருத்தறிந்து முடிவை எடுக்க இயலாமல் கொழும்பில் இருந்தவாறே தமிழ் மக்களுக்கு ஆணையிடும் ஆதிக்க அரசியலையே தொடர்கிறார்கள். இந் நிலையில் தமிழ் மக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம். கடந்த காலங்களில் இணக்க அரசியல், எதிர்ப்பு அரசியல், போராட்ட அரசியல் என்றெல்லாம் கூறிவந்த நிலைகளால் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியவில்லை. இப்போது சலுகை அரசியலை முன்னெடுக்க சிலர் முற்படுகிறார்கள். இது உருப்படியான அரசியல் தீர்வைக் கோராது முன்னெடுக்கப்படும் அடிமைத்தன அரசியலாக இருக்க முடியுமே தவிர தமிழ் மக்கள் இதுவரை கொடுத்த இழப்புகளுக்குரிய விலையாக இருக்கப் போவதில்லை.
எனவே தான் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கு இன்று தேவைப்படுவது மாற்று அரசியல் மார்க்கமாகும். அந்த மார்க்கம் உழைக்கும் மக்கள் அனைவரினதும் ஐக்கியப்பட்ட வெகுஜனப் போராட்ட மார்க்கமாகவே அமைய முடியும். தமிழ்த் தேசிய இனம் எவ்வகையிலும் தனது சுயநிர்ணய உரிமைக்கும் ஜனநாயகத்திற்கும் சமத்துவத்திற்குமான கோரிக்கையைக் கைவிடவோ சமரசத்திற்கு உள்ளாகவோ முடியாது. ஆதலினாலேயே எமது புதிய-ஜனநாயக கட்சி தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஐக்கியப்பட்ட இலங்கையில் பல்லினத் தேசியத்தை ஏற்றுக்கொள்ளும் சுயாட்சி முறை வழங்கப்பட வேண்டும் என்பதை வற்புறுத்தி நிற்கிறது. இதனை வென்றெடுப்பதற்கு
தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் இளந் தலைமுறை கடந்த காலங்களின் வரலாற்றுப் பாடங்களின் பட்டறிவால் குறைந்தது ஒரு முற்போக்கான தமிழ்த் தேசியத்தையாவது முன்னெடுக்க முன்வரல் வேண்டும். இதுவரையான பிற்போக்கு பழைமைவாத தமிழ்க் குறுந் தேசியவாதத்தை நிராகரித்து தமிழ் மக்கள் மத்தியிலான அனைத்து மக்கள் பிரிவினரையும் ஐக்கியப்படுத்தக் கூடிய முற்போக்கு தேசியத்தை முன்னெடுக்க முன்வருமாறு நாம் அறைகூவல் விடுக்கின்றோம். வெறுமனே இனமொழி உணர்ச்சிகளை பழைமைவாதநிலை நின்று எழுப்பி சுயநலப் பதவி வழியிலான பாராளுமன்ற ஆதிக்க அரசியல் செய்யும் பழைய நிலைப்பாடு நிராகரிக்கப்பட வேண்டும்.