சர்வதேச எழுத்தாளர் மகாநாடு நடந்துமுடிந்துவிட்டது. இப்போது ஆதரித்து கையெழுத்து போட்ட நபர்கள் தங்கள் கையெழுத்துக்களை வாபஸ் வாங்கும் படலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் சந்திப்பு ,சர்வதேச தமிழ் எழுத்தாளர்களை கொண்டிராவிட்டாலும் இலங்கையில் இருக்கும் தங்களை எழுத்தாளர்களாக கருதிக் கொள்ளும் பலருக்கு மேடையாக அமைந்திருந்தது.அத்தோடு முருக பூபதி, ஞானசேகரம், கம்பவாதி ஜெயராஐ போன்றோர்கள் ஆளுக்காள் மாறி மாறி முதுகு சொறிந்து புகழ்பாடி மகிழவும் இச் சந்திப்பு அமைந்தில் இவர்களுக்கு வெற்றியே.மற்றப்படியாக இந்த மகாநாட்டில் நாம் எதிர்பார்த்த மாதிரியே நடந்தேறியது.
ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டு மாநாடு நடத்தப்பட்டதிலிருந்து இங்கு நிகழ்வில் பங்குகொண்ட பலரிடம் தொக்கிநின்ற கேள்வி இதுதான் “இவ்வளவு செலவு செய்வதற்கு எங்கிருந்து பணம் வந்தது?” என்பதுதான். விடை எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான். ஆனால் மாநாட்டில் பணம் தனிநபர்களிடம் இருந்து பெறப்பட்டதாக அடிக்கடி கூறிக் கொண்டார்கள். இதிலிருந்தே உண்மை வெளிப்பட்டுவிடும் என்ற பயம் இவர்களிடம் மேலோங்கியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. அதே நேரம் இம் மாநாட்டுக்கு மறைமுகமாக கொடுக்கப்பட்டிருந்த அரச ஆதரவின் வெளிப்பாடு இங்கு துள்ளியமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.இதற்கு உதாரணமாக இவர்கள் நடாத்திய ஊர்வலத்தை குறிப்பிடலாம்.
சாதாரணமாக அரச ஆதரவின்றி இவ்வாறான ஒரு ஊர்வலத்தை இங்கு கொழும்பு மாநக ரில் நடத்துவதென்பது அதுவும் தமிழர்களால் என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியமாகும்.மற்றும் மகிந்தாவின் நேரடி ஏஜென்டுகளாகவும் இந்த மாநாட்டின் முக்கிய சூத்திர தாரிகளாகவும் இருக்கும் நோயல் நடேசன் என்பவரும் இராஜெஸ்வரி பாலசுப்பிரமணியம் என்பவரும் இந்த மாநாட்டின் பிரதம பேச்சாளர்களாக கலந்து கொண்டு தங்கள் மகிந்த விசுவாசத்தை நன்கு வெளிப்படுத்தினர்.அத்தோடு இங்கு இனப்படு கொலை நடந்தபோது இந்தியாவில் வைத்து பத்திரிகைகளுக்கு இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்று பேட்டி கொடுத்த ஜேர்மனியைச் சேர்ந்த சுசீந்திரன் என்பவரையும் இந்த மாநாட்டில் காணக்கூடியதாக இருந்தது. மொத்தத்தில் இதில் கலந்து கொண்ட அநேகர் மகிந்தாவின் விசுவாசிகள் என்பதில் ஐயம் கொள்ளவேண்டியதில்லை.அதே நேரம் பல பேர் பயத்தின் காரணமாக (அரச ஊழியர்களாக இருப்பதன் காரணமாக) இங்கு மாநாட்டில் வேண்டா வெறுப்பாக கலந்துகொண்டதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
மாநாட்டில் கேள்விப்படாத பெயர் கொண்ட “எழுத்தாளர்கள்”பலர் கலந்து கொண்டனர். அதிலும் தமிழ் நாட்டிலிருந்து கலந்து கொண்டவர்கள் பெயர்களை நாம் வாழ்நாளில் இங்குதான் அறிந்துகொண்டோம். விழா இந்து வெள்ளாள பெருங்குடி மக்களின் பெருவிழாவாகவே இது நடந்தேறியது. இதில் நமது கம்பவாதி ஜெயராஐ தனக்கு கிடைத்த நேரத்தை தன் பிற்போக்குத்தனமான கருத்துக்களை மேடையில் கொட்டித் தீர்ப்பதற்கு வழமைபோல் பயன்படுத்திக் கொண்டார்.
இதில் வேடிக்கை என்வென்றால் இம் மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பான்மை பார்வையாளர்கள் கம்பவாதி ஜெயராஐவின் பக்த கோடிகள்தான். இம்மாநாட்டில் பல வேடிக்கையான நிகழ்வுகள் இன்னும்பல நடந்தேறின. « பெண் எழுத்து » என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் பேசப்பட்ட விடயங்களுக்கும் இன்றைய பெண்ணியத்திற்கும் என்ன தொடர்போ புரியவில்லை. இவ் அரங்கில் “பெண்ணிற் பெருந்தக்க யாவுள” என்ற தலைப்பிலும் ஒரு உரை இருந்ததென்றால் பெண்ணியத்தின் புரிதலை நாம் என்னவென்பது?இதேபோல் தோழர் டானியலின் பெயரைக் கொண்டு அவர் பெயரில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.இங்கு பேசப்பட்ட விடயம் எண் தமிழ் / தாழ்த்தப்பட்டோர் சின்னஞ்சிறு கடவுள் வழிபாடு / ஸ்பெசல் நாடகங்கள் சில சிந்தனைகள் என்ற மூன்று தலைப்புக்களில் பேச்சுக்கள் நடந்தன.
தோழர் டானியலை இதைவிட இவர்கள் வேறு வகையில் அவமானப்படுத்தி இருக்க முடியாது. அந்த அளவிற்கு தலித்தியத்தோடும், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கையோடும் சம்பந்தம் இல்லாமல் இவர்களின் பேச்சு அமைந்திருந்தது. மாநாடு முழுக்க முழுக்க இந்து சனாதன வெள்ளாள பெருமையின் வெளிப்பாடகவே வெளிப்பட்டது. இல்லாவிட்டால் சாதியமான் ஆறுமுக நாவலரின் பெயரில் அரங்கு அமைத்து. விழா நடத்துவார்களா?
எந்த ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் இவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை. இவர்கள் மாநாடு நடத்தியதன் நோக்கம் அவர்களைப் பொறுத்தவரை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. தங்களைத் தாங்கள் புகழ்பாடவும், இலங்கையில் தமிழ் மக்கள் கொழும்பில் எந்நதவித பயமுமின்றி « ஜனநாயகத்துடனும் » « சுதந்திரத்துடனும் » இந்தளவுக்கு நடாத்துவதற்கு « மகிந்த அரசு ஜனநாயக மனிதாபிமான அரசாக » இருப்பதே காரணம் என்று கூறி இவர்கள் மகிந்தாவுக்கு சான்றிதழ் வழங்கி தங்கள் விசுவாசத்தை காட்டியுள்ளனர்.
சாரதி (கொழும்பு)
