Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சர்வதேச எழுத்தாளர் மாநாடின் பின்னணியில் .. : சபா நாவலன்

தகவல் தொழில்நுட்பம் ஒவ்வொரு தனி மனிதனதும் படுக்கையறைவரை நுளைந்து தனிமனித விவகாரங்கள் வரை விபரம் திரட்டுகின்ற இந்த நூற்றாண்டில் ஒரு பிரதேசத்து மக்களையே சாட்சியின்றிக் கொன்றொழித்த கோரம் இலங்கையில் நடந்தேறியிருப்பதை மறுபடி மறுபடி தமிழ்ப்பேசும் மக்களுக்குச் சொல்லத் தேவையில்லை. ஆயிரமாயிரமாய்ச் செத்துப்போன அப்பாவிகளின் குருதியுறைந்து போகும் முன்னமே எஞ்சியவர்களை சிறுகச் சிறுகக் கொலைசெய்து கொண்டிருக்கிறது ராஜபக்ச குடும்ப ஆட்சி.

சாட்சியின்றி இலங்கையின் இதயப் பகுதியில் பேரினவாதம் நிகழ்த்திய கோரத்தாண்டவம் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை என்று கூறி பாசிசத்தின் வேர்களை மனிதகுலத்தின் வாழ்விடங்களிலெல்லாம் படரவிடுகிறது ஒரு கூட்டம்! இலங்கை இனப்படுகொலை வெறுமனே இலங்கையின் ஏதோ ஒரு மூலையில் நடந்த தற்செயல் சம்பவமல்ல.

அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் முன்னெழும் போதெல்லாம் ஆயிரமாயிரமாய் மக்களைக் கொன்று குவித்துவிட்டு பயங்கரவாதத்தை அழித்துவிட்டோம் என மார்தட்டிக்கொள்ளலாம் என உலகின் அரச பயங்கரவாதிகளுக்கெல்லாம் ராஜபக்ச அரசு முன்னுதாரணத்தை வழங்கியுள்ளது. இவற்றையெல்லாம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு மௌனம் சாதிக்கும் மனிதன், ஒன்றில் ஏலவே செத்துப் போனவன் அல்லது மனித குலத்தின் விரோதி என்பதைத்தவிர வேறேதுமில்லை.

முருகபூபதியின் மறுப்பு

“சர்வதேச” அரசுகளுக்கெல்லாம் கொலைசெய்வது எப்படி என்ற முன்னுதாரணத்தை வழங்கியிருக்கும் இலங்கை அரசின் எல்லைக்குள், அது வரித்திருக்கும் சர்வாதிகார வரம்புக்குள் “சர்வதேச” தமிழ் எழுத்தாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்த எழுத்தாளர் முருகபூபதி இலங்கை அரசிற்கு ஜனநாயக முகத்தைத் சன்மானமாக வழங்கும் எழுத்தாளர் சமூகத்தின் முன்னோடி; மாநாட்டின் பிரதான ஏற்பாட்டாளர்.

ஊடகவியாளர்களை அனாதைப் பிணங்களாக தெருவோரத்தில் பேரினவாத நரிகளின் பசிக்குப் புசிக்கக் கொடுக்கும் இலங்கை அரச பாசிசத்தின் எல்லைக்குள்ளேயே எழுத்தாளர் மாநாடு நடத்தி கேள்விகேட்கப் போகிறார்களோ என ஒரு கணம் சிந்திக்கத் தோன்றியது. தமிழ்ச் சங்கம் அமைத்து மன்னர்களிடமே வினாவெழுப்பிய  போர்குணத்தின் மரபில் பிறந்ததல்லவோ “சர்வதேச” தமிழ் எழுத்து மரபு! ஆக, ராஜபக்சவின் காலடியில் நடைபெறும் இந்த சர்வதேச விழா முன்னோடி முருக பூபதியிடம் தொடர்புகொண்டு இரண்டு விடயங்களை தெளிவுபடுத்தி அறிக்கைவிட்டால் சிக்கல்கள் தெளிவாகும் எனக் கோரியிருந்தேன்.

1. இலங்கை அரசின் இனப்படுகொலையை “சவதேச” எழுத்தாளர் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கண்டிக்க வேண்டும்.
2. மாநாடு நடப்பதால் இலங்கை அரசின் இனப்படுகொலையையோ போர்க்குற்றங்களையோ ஏற்றுக்கொள்வதாகாது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

அரசியல்?

இவை நியாயமானவை தான் என்றும் மாநாட்டுக் குழுவிடம் பேசிவிட்டு உடனடியாகவே பதில் தருவதாகவும் முருகபூபதி குறிப்பிட்டார். பின்னதாக நாம் அரசியலில் தலையிட விரும்பவில்லை என்றார்.

அரசியலில் அவர்கள் தலையிட விரும்பவில்லை என்பதன் பின்புலத்தில் புரையோடியிருக்கும் அரசியல், இலங்கை அரசின் பாசிச அரசியல்! இலங்கை அரசு சர்வதேசத்திற்கு வழங்கிய மனிதவிரோத அரசியல்!! இலங்கைத் தெருக்களிலே கொலைசெய்யபட்டு வீசியெறியப்பட்ட ஊடகவிலாளர்களின், எழுத்தாளர்களின் பிணங்களை மிதித்துக்கொண்டு கொழும்பில் மாநாடு போடத் தயாராக இல்லாத எழுத்தாளர்களை எல்லாம் அவதூறு செய்கின்ற அடக்குமுறையாளர்களின் அரசியல்!!!

தமிழகத்தை அன்னியப்படுத்தல்

அறுபது ஆண்டுகளாத் தொடரும் இன அழிப்பின் ஒவ்வொரு பிரதான காலத்திலும் தமிழ் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் தன்னலமற்ற போராட்டம் நடந்திருக்கிறது. பெரினவாதம் கொன்று போடும் ஒவ்வொரு மனிதனதும் கடைசி நம்பிக்கைகளில் ஒன்றாக தமிழகம் இருந்திருக்கிறது. இதனால் தான் இலங்கை அரசு கூட தமிழக மக்களுக்குப் பயந்தது போல இதுவரை யாருக்காகவும் அச்சமடைந்ததில்லை எனலாம். இந்திய அரசோடு இணைந்து பல அரசியல் நாடகங்களை ஏற்பாடுசெய்துதான் தமிழகத்தின் எழுச்சியைக் கட்டுப்படுத்தினோம் என்று படுகொலைகளின் முக்கிய சூத்திரதாரி கோதாபய ராஜபக்சவே ஒத்துக்கொள்கிறார்.

தமிழகத்தை கையாள்வதற்காகவும் போராட்டங்களைத் திசைதிருப்பவும் மில்லியன்களை செலவு செய்திருக்கிறது இலங்கை அரசு.

கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்களை இனச்சுத்திகரிப்புச் செய்யும் இலங்கை அரசிற்கு எதிராக மரணபயத்தின் மத்தியிலும் சிறுகச் சிறுகப் போராட்டங்கள் உருவாகின்றன. இன்று இலங்கை அரசினதும் அதன் அடிவருடிகளதும் பிரதான நோக்கங்களில் ஒன்று சாகடிக்கப்படும் ஈழத் தமிழர்களை தமிழகத் தமிழர்களிடமிருந்தும் புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தலாகும்.

புலம் பெயர் தமிழர்களைப் பிரிப்பதற்காக வருடத்திற்கு மூன்று மில்லியன் பவுண்ட்ஸ் பணத்தை வழங்கும் ஒப்பந்தம் ஒன்றை பொரிங்க்டர் என்ற நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ளது ராஜபக்ச அரசு. புலம் பெயர் அரச ஆதரவு லும்பன்கள் இந்த நிறுவனத்தின் பணியைத் தாம் கையிலெடுத்துக்கொண்டு கச்சிதமாக நிறைவேற்றுகிறார்கள். இலங்கை அரசு இன்ப்படுகொலை நிகழ்த்திய போது மூச்சுகூட விடத் திரணியற்றிருந்த இவர்களில் பலர், இப்போது தமிழ் நாட்டைச் சார்ந்த யாரும் மாநாடு குறித்து வாய் திறக்கக் கூடாது என்கிறார்கள். இலங்கை அரச பிரித்தாளும் தந்திரத்தின் எழுத்தாளர் வேடம் இது.

இறுதி நோக்கம்

“சரவதேச” எழுத்தாளர் மாநாடு குறித்து ஏனைய எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும், போராளிகளும், கட்சிகளும், தமது கருத்துக்களைச் சொல்லவே உரிமை மறுக்கும் இந்த அரச ஆதரவுக் கும்பல், இலங்கை அரசு தமிழ்ப் பேசும் மக்கள் மீது நடத்தும் உளவியல் யுத்தத்தின் தமிழ்ப் பேசும் பிரதினிதிகள். மாநாட்டின் உள் நோக்கம் குறித்தோ அன்றி இலங்கை அரசின் அடக்கு முறை குறித்தோ பேச முற்படும் ஒவ்வொரு மகக்ள் பற்றுள்ள மனிதனையும் “புலி” ஆதரவாளர்கள் என முத்திரை பதித்து அன்னியப்படுத்த முனைகிறார்கள்.

ஆக மாநாட்டின் இறுதி நோக்கம்,

1. இலங்கை அரசின் இனப்படுகொலையையும் இனச் சுத்திகரிப்பையும் அங்கீகரித்தல்.
2. இலங்கை அரச பாசிசத்தை மறைத்து அது ஜனநாயக அரசு என அறிவித்தல்.
3. இலங்கை அரச எதிர்ப்பாளர்களைப் புலிகள் என அடையாளப்படுத்தி அன்னியப்படுத்தல்.
4. தமிழ் நாட்டு மற்றும் புலம் பெயர் அரச எதிர்ப்பாளர்களிடையே பிளவுகளை உருவாக்குதல்.

இவற்றை ஏற்பாட்டளர்களோ அல்லது மாநாட்டின் ஆதரவாளர்களோ மறுக்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் அரசியல் பேச மாட்டார்கள்!

அவர்கள் முக்கியமான அரசியலைப் பேசியிருக்கிறார்கள். நாங்கள் நிர்வாணமான பிற்போக்குக் கூட்டம் என்றும் கொலை செய்யும் அரசியலைக் கூட நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம் என்றும் அவர்களின் முகத்தில் அவர்களே அறைந்து கூறியிருக்கிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள்:

இனப்படுகொலை ஆதரவாளர்களின் கொழும்பு மாநாடு – எச்சரிக்கை!

இந்திய இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம்

Exit mobile version