பார்வை, கேட்டல்;, மணம், சுவை, தொடுகை ஆகியவற்றுக்கான உறுப்புக்களான மனிதனது ஐம்புலன் உறுப்புக்களின் வழியே புற உலகின் எண்ணற்ற இயல்நிகழ்வுகள் மனித மூளையிற் பிரதிபலிக்கின்றன. முதலில் அறிவு புலனணர்வு சார்ந்தது. போதிய அளவு அறிவு திரண்டதும், கருக்துருவ அறிவை, அதாவது சிந்தனையை, நோக்கிய பாய்ச்சல் நிகழ்கிறது. விளங்குதல் என்பதில் இது ஒரு செய்முறையாகும். விளங்குதல் எனுஞ் செயற்பாடு முழுமைக்கும் இதுவே முதற் கட்டமாகும். புறநிலைப் பொருளிலிருந்து அகஞ் சார்ந்த உணர்வுநிலைக்கும் இருத்தலிலிருந்து சிந்தனைக்கும் இட்டுச் செல்லுங் கட்டமாகும். ஒருவரது உணர்வுநிலையோ (கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும் உட்பட்ட) கருத்துக்களோ புறநிலையான வெளி உலகின் விதிகளைச் சரியாகப் பிரதிபலிக்கின்றனவா இல்லையா என்பது, அவை சரியானவையா இல்லையா என நிச்சயிக்க இயலாத இந்தக் கட்டத்தில், இன்னமும் நிறுவப்படாதுள்ளது.
அதையடுத்து அறிதலின் இரண்டாவது கட்டமாக உணர்வுநிலையினின்று பொருளுக்குத் திரும்பச் செல்லுவதான, கருத்துக்களிலிருந்து இருப்புக்குத் திரும்பச் செல்லுவதான கட்டம் வருகிறது. இங்கே, கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும் எதிர்பார்த்த வெற்றியைத் தந்தனவா என உறுதிப் படுத்துவதற்காக, முதலாவது கட்டத்திற் பெறப்பட்ட அறிவு சமூக நடைமுறையிற் பிரயோகிக்கப் படுகிறது. பொதுவாகச் சொன்னால் வெற்றி பெறுபவை சரியானவை தோல்வி பெறுபவை தவறானவை. இயற்கையுடனான மனிதனது போராட்டத்தில் இது சிறப்பாகச் சரியானது.
சமூகப் போராட்டத்தில் முன்னேறிய வர்க்கத்தின் பிரதிநிதியான சக்திகள் சில சமயங்களிற் தோல்வியடைகின்றன. அதன் காரணம் அவர்களது கருத்துக்கள் தவறானவை என்பதல்ல, மாறாகப் போராட்டத்திற் சம்பந்தப்பட்ட சக்திகளின் சமநிலையில் அப்போதைக்குப் பிற்போக்குச் சக்திகளினளவுக்கு அவை வலியனவாயில்லை என்பது தான். எனவே அவை தற்காலிகமாகத் தோற்கடிக்கப் படுகின்றன. ஆனால் அவை இன்றோ நாளையோ வெல்லப் போகின்றவை.
மனிதனின் அறிவு, நடைமுறைச் சோதனை மூலம் இன்னோரு பாய்ச்சலுக்கு உட்படுகிறது. இப் பாய்ச்சல் முன்னையதை விட முக்கியமானது. ஏனெனில் இது மட்டுமே முதலாவது பாய்ச்சல். அதாவது புறநிலையான வெளி உலகைப் பற்றி யோசிக்கும் போக்கில் முடிவான கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும், சரியா இல்லையா என நிறுவ முடியும். உண்மையைப் பரீட்சிக்க வேறு வழியில்லை. மேலும், பாட்டாளி வர்க்கம் உலகத்தை அறிவதன் ஒரே ஒரு நோக்கம் அதனை மாற்றுவது தான்.
பல வேளைகளிற், பொருளிலிருந்து உணர்வுநிலைக்கும் மீண்டும் பொருளுக்கும், அதாவது நடைமுறையிலிருந்து அறிவுக்கும் மீண்டும் நடைமுறைக்குங்;, கொண்டு செல்லும் செயற்பாட்டைப் பலமுறை திரும்பத் திரும்பச் செய்வதன் மூலமே சரியான ஒரு கருத்தை வந்தடைய முடிகிறது. அறிவு பற்றிய மாக்ஸியக் கொள்கை, அறிவு பற்றிய இயங்கியற் பொருள்முதல்வாதக் கொள்கை, அத்தகையது.
நம்மிடையே பல தோழர்கள் அறிவு பற்றிய இக் கொள்கையை இன்னமும் விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களது கருத்துக்களதும் அபிப்பிராயங்களதும் கொள்கைகளதும் செய்முறைகளதும் திட்டங்களதும் முடிவகளதும் விவரணமான உரைகளதும் நீண்ட கட்டுரைகளதும் தோற்றுவாய் ஏதென்று கேட்டால் அவர்கள் அக் கேள்வி விசித்திரமானது என நினைக்கிறார்கள். அவர்களால் அதற்கு மறுமொழி கூற இயலாதுள்ளது. பொருள் உணர்வுநிலையாகவும் உணர்வுநிலை பொருளாகவும் மாற்றப்படுவதுமான பாய்ச்சல் அன்றாட வாழ்க்கையில் நிகழ்வான போதும், அத்தகைய மாற்றம் இயலுமென அவர்கட்கு விளங்குவதில்லை.
எனவே, நமது தோழர்கள் தமது சிந்தனையைச் சரியான திசைப்படுத்தி விசாரித்தலிலுங் கற்றலிலும் அனுபவங்களைத் தொகுத்தலிலும் வல்லோராகிச் சிரமங்களை எதிர்கொண்டு தவறிழைத்தலைத் குறைத்துத் தமது வேலையைச் சிறப்பாகச் கெய்து சீனாவை உயர்வான வலிய சோசலிச நாடாகக் கட்டியெழுப்பி நமது மாபெரும் சர்வதேசக் கடமையை நிறைவுசெய்யுமுகமாக உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்படும் பரந்துபட்ட வெகுசனங்கட்கு உதவவும் நமது தோழர்கட்கு அறிவு பற்றிய இயங்கியற் பொருள்முதல்வாதக் கொள்கையிற் பயிற்றுவிக்க வேண்டியுள்ளது.
(தோழர் மாஓ சேதுங்கின் நெறிப்படுத்தலின் கீழ் வரையப்பட்ட “நமது தற்போதைய கிராமப்புறப் பணிகளிலுள்ள சில பிரச்சனைகள் பற்றிச் சீனக் கம்யூனிஸ்ற் கட்சி மத்திய குழுவின் வரைவுத் தீர்மானம்” எனும் ஆவணத்தினின்று பெறப்பட்ட பகுதி. இப் பகுதியைத் தோழர் மாஓ சேதுங் எழுதியிருந்தார்)