Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சனாநாயம் பேசுவோர் எங்கே? – மக்கள் தேடுகிறார்கள் : விஜய்

கடந்த வருடம், ஊடகவியலாலர், ஓவியர், அரசியல் ஆய்வாளர் பிரகீத் எக்னலியகொட காணாமல் போயிருக்கிறார். கொலை மிரட்டல் காரணமாக லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியர் சந்துருவன் சேனாதீர ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சமடைந்திருக்கிறார்.

பிரகீத் எக்னலியகொடவின் மனைவி சந்தியா எக்னலியகொட கணவர் கடத்தப்பட்டு ஒரு வருடம் கழிந்து விட்ட நிலையில், கடந்த ஜனவரி 24 ஆம் திகதி கொழும்பலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் காணமல் போனது தொடர்பாக மனுவொன்றையும் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையிலேயே நேற்று திங்கட் கிழமை அதிகாலை இனந்தெரியாத குழுவினரால் லங்கா ஈ நியூஸ் இணையத்தள காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இனந்தெரியாத நபர்கள், இணையத்தள அலுவலகத்திலுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் ஓரிடத்தில் குவித்து தீவைத்து அனைத்தையும் எரித்துள்ளனர். முக்கிய ஆவணங்கள், பெறுமதியான புத்கங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த வைப்பகமும் முற்றாக எரிக்கப்பட்டுள்ளதாக இணையத்தள செய்தி ஆசிரியர் பேர்னாட் ரூபசிங்க தெரிவித்திருக்கிறார்.

இவை ஊடகத்துறை மீதான அடக்குமுறைகளின் கோரமுகங்களைக் காட்டும் சம்பவங்களாகும். ஆனால் சனநாயகத்திற்காகப் போராடும் இலங்கையின் அரசியல் தலைமைகள் பல இச்சம்பவங்கள் குறித்து காட்டும் அக்கறை விசனத்திற்குரியவை. சனநாயகத்தினை விரும்பும் சிலர் வழமையான சில எதிர்ப்பு நடவடிக்கைகளுடன் தங்கள் சனநாயகம் மீதான காதலை வெளிப்படுத்தி விட்டு தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டுவிடுகிறார்கள். இன்னொரு ஊடகம் அல்லது இன்னொரு ஊடகவியலாளர் மீதான தாக்குதல் நடக்கும் வரை சனநாயகத்தின் மீதான காதலர்கள் வேறு பணிகளில் மூழ்கியிருப்பார்கள்.

லங்கா ஈ நியூஸ் இணையத்தள காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டித்துள்ள ஆறு ஊடக அமைப்புக்களின் ஒன்றியம், இச்சம்பவத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியையும் நடாத்தியிருக்கிறது.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், சுதந்திர ஊடக அமைப்பு, ஊடகத் தொழிலாளர் சங்க சம்மேளனம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், சம்பா ஆகியவற்றின் பிரதிநிதிகள் கொண்ட ஊடக அமைப்புக்களின் ஒன்றியம் இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்திருப்பதோடு, தீவைப்புச் சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டோரை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கிறது.

ஊடக இயக்கங்களின் ஒன்றிய ஏற்பாட்டளாரான சுனில் ஜயசேகர, இத்தாக்குதலானது மீண்டும் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலான சூழலையே வெளிப்படுத்துகின்றது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதே வேளை ஐ.தே.க. சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, இது தொடர்பில் நீதியான விசாரணைகளை நடத்தி குறற்வாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக் கூறியிருக்கிறார். அதே வேளை ஐ.தே.க. கருஜெயசூரிய ஒரு கணனித் தொகுதியை அன்பளிப்பு வழங்கியிருப்பதுடன், தாங்கள் இந்த ஊடகத்துடன்; இணைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த “வழமையான நடவடிக்கைகளால்” நிலவுகின்ற ஊடகத்துறைக்கெதிரான சனநாயக அடக்குமுறைகளை நீக்கிவிடமுடியாது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இதற்கு மேலாக, ஜனாதிபதி இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துமாறும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருக்கிறார். ஊடகத்துறை அமைச்சர் ரம்புக்வெல, இந்தச் சம்பவமானது அரசுக்கு மக்கள் மத்தியிலுள்ள நல்ல பெயரை நாசமாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியென கூறியுள்ளார்.

லங்கா ஈ நியூஸ் இணையத்தளமானது அரசுக்கு பிடிக்காத செய்திகளை அதிகம் வெளியிட்டு வந்ததுடன், 2010 ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவும் வழங்கியுமிருந்தது என்ற பின்னணியைக் கொண்டது என்ற நிலையில் எல்லாம் வழமை போல முடிந்து விடும் என்றே கூறத்தோன்றுகிறது.

ஊடகம் மீதான அடக்குமுறைகள் தொடரும். அதனை வன்மையாகக் கண்டிப்பதும், எதிர்ப்புக்களை வெளியிடுவதும் தொடரும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கூறப்படும். இனந்தெரியாத நபர்களின் நடவடிக்iகைள் மிக நீண்டகாலமாகவே சுதந்திரமாக இடம்பெற்று வருகிறது.

பிரகீத் எக்னலியகொட காணாமல் போய் ஒரு வருடங்களாகியும் அவர் பற்றிய தகவல்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை என்பது ஒரு புறமிருக்க அவரின் காணாமல் போனமைக்கு எதிராக இன்றுவரை வலுவான ஒரு எதிர்ப்பு முன்வைக்கப்படாமலுமிருக்கிறது என்பது சனநாயகத்திற்கான போராட்டத்தின் பலவீனமே.

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தினமும் ஒடுக்கு முறையின் தீவிரத்தை அனுபவிக்கும் சூழலில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து எழவில்லை. ஜனநாயகம் குறித்து தினமும் கண்ணீர்வடிக்கும் ஒடுக்கப்பட்ட் தமிழ்ப் பேசும் மக்களின் தேசியக் கட்சிகள் அனைத்தும் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. தேர்தல் வியாபாரத்தில் அவர்கள் தீவிரமாக மூழ்கிவிட்டார்கள்.

Exit mobile version