Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சந்திரசேகரனிற்கு அஞ்சலி – மலையக உரிமைப் போரின் பின்னணியில் : பி.ஏ.காதர்

மறைந்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திர சேகரன் அவர்களின் மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த துயரடைந்திருக்கும் நான் அவரைப் பற்றிய நினைவுகளை எனது மனத்திரையில் ஓடவிட்டுப் பார்க்கிறேன்.

அவரைப் பற்றிய சரியான மதிப்பீடும், விமர்சனமும் பிற்காலத்தில் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படலாம். நானும் ஒரு விரிவான மதிப்பீட்டை காலக்கிரமத்தில் மேற்கொள்ளலாம் ஆனால் இப்போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் நேரம். அவரது வரலாற்றுப் பாத்திரம் குறித்த ஒரு மேலோட்டமான குறிப்பை மாத்திரம் இங்கு வெளியிட விரும்புகிறேன்.

 

பின்னணி:

பெரியசாமி சந்திரசேகரன் 16.04.1957 இல் தலவாக்கலையில் பிறந்தார். அவருடைய தந்தையார் பெரிய சாமி அவர்கள். அவர் தலவாக்கலை பஞ்சலிங்கம் ஸ்டோர்ஸின் உரிமையளர். எனவே அவர் நடுதர – வசதியான – குடும்பத்தில் பிறந்தவர். இவருடன் உடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகள். இவர் மாத்திரமே ஆண்பிள்ளை.

பஞ்சலிங்கம் ஸ்டோர்ஸ் ஒரு புடவைக் கடையாக இருந்தாலும், நகை ஈடுபிடிக்கும் பிரிவு ஒன்றும் அதில் இருந்தது. அத்துடன் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட தமிழ் புத்தகங்களும் சஞ்சிகைகளும் அதில் விற்கப்பட்டன. இலத்திரன் ஊடகங்கள் அரங்கிற்கு வராத அந்த காலகட்டத்தில் அச்சு ஊடகங்களின் செல்வாக்கே ஏகபோகம் செலுத்தியது. சந்திரசேகரனிடம் தமது புத்தகடைக்கு வரும் சஞ்சிகைகளையும் புத்தங்களையும் ஆர்வத்தோடு படிக்கும் பழக்கம் சிறுவயது முதலே இருந்து வந்தது. கடைசிவரை அவரிடம் இந்த பழக்கம் தொடர்ந்தது.

இவரது ஆரம்ப கல்வி தலவாக்கலை சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் தொடங்கியது. அதன் பின்னர் ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் முடிவடைந்தது.

இவருக்குப் பதினெட்டு வயதாகும் போதே அவரது தந்தையைப் பறிகொடுத்தார். குடும்பச் சுமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலில் அவர் தனது கல்வியை க.பொ.த உயர் தரத்துடனேயே நிறுத்திக் கொள்ள நேர்ந்தது. இவர் பாடசாலையில் திறமைமிக்க மாணவனாகவும் விளையாட்டு வீரராகவும் சிறந்த பேச்சாளராகவும் நல்லதொரு கவிஞனாகவும் திகழ்ந்தார்.

இவரது சிந்தனை ஓட்டத்தைச் இவர் கல்விகற்ற காலகட்டமும் அப்போது அங்கு நிலவிய அரசியல் சூழ்நிலையும் செப்பனிட்டன. இவர் கல்விகற்ற ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் தான் மலையக தேசியவாதத்தின் முன்னோடியான மலையக இளைஞர் முன்னணியின் ஸ்தாபகரான காலஞ்சென்ற இரா.சிவலிங்கம் அதிபராக பணியாற்றினார். இவர் அப்போது தொண்டமனை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார். அவர் விதைத்த மலையக தேசியவாதம் சந்திரசேகரனை நிரந்தரமாகப் பாதித்தது.
அதே வேளை சந்திரசேகரனுடைய தந்தைக்கும் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானுக்குமிடையே தனிப்பட்ட நட்பு இருந்தது.

சந்திரசேகரன் குழந்தையாக இருந்த போது தொண்டைமானின் மடியில் அவர் விளையாடியிருக்கிறார். அவரது கடைக்கும் வீட்டிற்கும் தொண்டைமான் பல தடவை விஜயம் செய்திருக்கிறார். ஆகவே சிறு வயதிலிருந்தே தொண்டைமானை அவருக்குத் தெரியும். அவர்மீது ஒரு அபிமானம் அடிமனதில் இருந்து வந்தது.

மறுபுறத்தி;ல் 1970 களில் இவர் கல்விகற்ற ஹட்டன் நகரம், மறைந்த சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சண்முகதாசனின் கோட்டையாகத் திகழ்ந்தது. அங்கு அதன் செங்கொடிச் சங்கம் தலைமையகத்தைக் கொண்டிருந்தது. இங்கு தான் சண்முகதாசனின் மகள் ராதா மருமகன் டாக்டர் தம்பிராஜா மற்றும் மறைந்த கரவை கந்தசாமி உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் வாழ்ந்தனர் துடிப்பாக செயற்பட்டுக் கொண்டிருந்தனர். தோட்டத் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவத்தில் செங்கொடிச்சங்கம் அக்காலத்தில் முக்கிய பங்காற்றியது. அத்துடன் அப்பகுதியில் கல்விகற்ற அனைத்து இளைஞர்கள் மனதிலும் கருத்தியல் தாக்கத்தை அது ஏற்படுத்தியது. புதிய செங்கொடிச் சங்கத்தின் சிவப்பு நிறம் எல்லோருடைய மனதையும் செம்மைப் படுத்திக்கொண்டிருந்த காலகட்டம் அது. அக்காலகட்டத்திலே பல்வேறு கருத்தரங்குகள், கல்விவட்டங்கள், கலை கலாச்சார முன்னெடுப்புக்கள் போன்ற எல்லாத் துறைகளிலுமே சண்முகதாசனின் முத்திரை பதிந்திருந்தது. அதன் தாக்கம் சந்திரசேகரனின் மனதிலும் பதிந்தது.

அத்துடன் சர்வதேச அளவில் புரட்சிகர தேசியவாத சிந்தனைகள் மேலோங்கியிருந்த 70 களின் தாக்கமும இவரைப் பாதித்தது. அவர் மாணவனாக இருந்த காலப்பகுதியில் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் ‘கனல்’ என்ற பெயரில் கையெழுத்துச் சஞ்சிகை ஒன்று புதிய சிந்தனைக் கொண்ட மாணவர்களால் வெளியிடப்பட்டது. அச்சஞ்சிகை குழுவில் சந்திரசேகரனும் ஒருவர். கனலில் இவர் வடித்த கவிதைகள் கனல் கக்கின. சமூக அநீதிக்கு எதிரான ஆத்திரமும் அதற்கெதி;ராக போராடவேண்டும் என்ற தீவிரமும் அவற்றில் வெளிப்பட்டன. அப்போது நான் ஒரு ஆசிரியனாக தலவாக்கெலை பகுதியிலே பாடசாலை ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் துணைத்தலைவராகவும் இருந்தேன். தலவாக்கெலை வரும்போதெல்லாம் சந்திரசேகரனுடன் பஞ்சலிங்கம் ஸ்டோர்ஸில் தங்கிவிடுவேன்.

என்னோடு அவர் மார்க்ஸிசம் பற்றியும் உள்நாட்டு சர்வதேச அரசியல் நிலைமை பற்றியும் ஆர்வத்தோடு கலந்துரையாடுவார். அவருக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் இனவாதத்திற்கு எதிரான கொள்கைம மீது தனி மரியாதை இருந்தது. இச்சங்கத்தைச் சேர்ந்த பல இடதுசாரி சிங்கள ஆசிரியர்கள் இவருக்கு நண்பர்களாயினர்.

 புறச்சூழலின் தாக்கம்:

 70 களிலே அடிக்கடி மாறிய நாட்டின் புறச் சூழலோடு சந்திர சேகரனின் வளர்ச்சியை நாம் பார்க்கவேண்டும். ஆரம்பத்தி அவர் சண்முகதாசனின் கருத்துக்களால் பாதிக்கப்பட்டார். ஆனால், பிற்காலத்தில் மலையகத்திலே தேசிய ஒடுக்குமுறை ஸ்ரீமா ஆட்சியில் உக்கிரமடைந்தபோது அதற்கு எதிராக தலைமை கொடுக்க தவறியதால் சண்முகதாசனின் கட்சி தனிமைப்பட்டுப் போனது. ஒரு புறத்தில் அவர் கல்விகற்ற ஹட்டன் வர்க்கப் போராட்ட சித்தனையின் குவிய மையமாக அமைந்திருந்த அதேசமயம் அவர் வாழ்ந்த தலவாக்கலை தேசிய இனப்பிரச்சினையின் குவிய மையமாக மாறியிருந்தது.

 சந்திரசேகரனின் மனதை உறுத்திய தேசிய இனப்பிரச்சினை தொடர்பான கேள்விக்களுக்கு சண்முகதாசனின் தலைமையிடம் பதில் கிடைக்கவில்லை. அதன் பின்னர் அவரது அபிமானம் தேசியவாதிகளை நோக்கி திரும்பியது.

1972 இல் அமுலாக்கப்பட்ட நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் அமைச்சர் கொப்பேகடுவ மலையகத்தில் ஆடிய கோரத்தாண்டவத்தை நாங்கள் இங்கு நினைவு கூர வேண்டும். கொப்பேகடுவின் நிலச் சீர் திருத்ததின் குழந்தை தான் சந்திரசேகரனை என ஒருவிதத்தில் கூறமுடியும். அவரது அரசியல் பயணம் மலையக மண் யாருக்குரியது? மலையக மக்களின் தேசிய அடையாளம் என்ன? அவர்களது இனஓடுக்கு முறைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு யாது? ஆகிய மூன்று அடிப்படை கேள்விகளுக்கு விடைகாணும் தேடலில் இருந்து ஆரம்பமானது.
தோட்ட தொழிலாளர் குடியிருக்கும் நிலம் கண்டிசிங்களவர்களுக்கு சொந்தமானது. கோப்பியும் தேயிலையும் பயிர் செயவதற்காக அவர்கள் துரத்தியடிக்கப் பட்டு அவர்களிடமிருந்து அபகரிக்கப்பட நிலமே இது. அதனை மீட்டு சிங்களவர்களுக்கு மீண்டும் திருப்பிக் கொடுப்பதே தனது லட்சியம் என ஸ்ரீமா ஆட்சியில் அமைச்சர் கொப்பேகடுவ மேடைதோறும் முழங்கினான். சிங்கள இனவாதம் தமிழ் தோட்ட தொழிலாளருக்கு எதிரரக தூண்டிவிடப்பட்டது. அந்த சித்தாந்தத்திற்கு அடிமையான அப்பாவி சிங்கள மக்கள் கூட தமிழ் தோட்ட தொழிலாளரை ஆக்கிரமிப்பாளராகவும் தமது நிலத்தை அபகரித்த கொள்ளைக்காரர்களாகவும் கருதத் தொடங்கினர். அவர்களை அடித்துத் துரத்திவிட்டு ‘தமக்குச் சொந்தமான – தமது மூதாதையரிமிருந்து அபகரிக்கப்பட்ட – நிலத்தை மீட்டெடுப்பது தமது தேசிய கடமை’ என நம்பத் தொடங்கினர்.

இதன் விளைவாக சிங்கள கடையார்களால் பூணடுலோயா பகுதியிலிருந்த சில தோட்டங்களிலிருந்து தமிழ் தோட்ட தொழிலாளர் ஒரிரவுக்குள் அடித்து விரட்டப்பட்டனர். கம்பொல பகுதியிலிருந்த டெல்டா சங்குவாரி தோட்டங்களில் தி.மு. ஜயரத்னவின் கடையர்களால் தமிழ் தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்த லயன்கள் தீக்கிரையாக்கப்பட்டன. நடு தெருவிலே ஓட்டாண்டிகளாய் அவர்கள் தூக்கி எறியப்பட்டனர். வாழ்ந்த வீட்டையும் செய்த தொழிலையும் கண்மூடி திறப்பதற்குள் பறிகொடுத்துவிட்டு அவர்கள் வீதியெங்கும் பிச்சை எடுத்துத் திரிந்தனர்;. தொண்டமானுக்கு சொந்தமான பல தேயிலைத் தோட்டங்கள் கூட தேசிய மயம் என்ற பெயரில் பறித்தெடுக்கப்பட்டன. மலையகமெங்கும் பதற்றமும் பீதியும் அராஜகமும் தலைவிரித்தாடியது.

இதன் உச்சகட்டமாக அப்போதுதான் அரசியலில் பிரவேசம் செய்திருந்த ஸ்ரீமா பண்டாரநாயக்கவின் மகன் கொப்பேகடுவையின் மருமகன் அனுர பண்டாரநாயக்க அடுத்த தேர்தலில் நுவரெலிய மஸ்கெலிய தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக முஸ்தீபு செய்து வந்தான். தனது வாக்கு வங்கியை விரிவாக்கிக் கொள்ளும் பொருட்டு தலவாக்கொலைக்கு அருகே தேயிலை பயிர் செய்யப்பட்டிருந்த டெவன் தோட்டத்தில் பெருமளவு நிலத்தை சுவீகரித்து ஆயிரக்கணக்கான சிங்கள குடியேற்றவாசிகளைக் குடியேற்ற முயன்றான். இக்குடியேற்றம் இடம் பெற்றிருந்தால் அந்த பகுதி தமிழ் தோட்ட தொழிலாளர்களின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும். இந்நில அபகரிப்பை அப்பகுதி மக்கள் தீரத்தோடு எதிர்த்து தடுத்து வந்தார்கள். அந்நிலத்தை அளக்க வந்த நில அளவையாளர்கள் வழிமறிக்கப்பட்டு திருப்பியனுப்பப் பட்டனர்.

அதுவரை சிங்கள காடையர்கள் வன்முறையில் இறங்கினால் அவர்களுக்கு அஞ்சி ஓடுவதுதான் வழக்கமாக இருந்து வந்தது. டெவன் தோட்டம் அந்த வரலாறை மாற்றியது. காடையர்களின் வன்முறைக்கு வன்முறை மூலம் பதில் கொடுக்க டெவன் தோட்ட தொழிலாளர்கள் துணிந்தனர். விரட்டியடிக்கப்பட்ட நில அளவையாளர்கள் ஹட்டன் பொலிசாரின் பாதுகாப்போடு திரும்பிவந்து நிலத்தை அளக்க முயன்றனர்;. அவ்வளவுதான். மலைமேடுகளில் இருந்து தோட்டத் தொழிலாளர் கற்களால் தாக்கத் தொடங்கினர். அவர்கள் மனதில் துணிச்சலைத் தூண்டி முன்னால்; நின்று போராடி இந்த அதிசயத்தை செய்த வீர இளைஞன் பொலிசாரின் துப்பாக்கி வேட்டுக்கு பலியாகி அம்மண்ணில் வீழ்ந்;தான். அவனது பெயர்தான் சிவனு லட்சுமணன். அவனது உயிர் அந்த இடத்தில் பிரிந்தது. அவனது இரத்தத்தால் சிவந்தது அந்த மண் மாத்திரமல்ல முழுமலையகமும் தான்.

சிவனு லட்சுமணனின் வீர மரணம் தூங்கிக்கிடந்த மலையகத்தை தட்டி எழுப்பியது. அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் வேலை நிறுத்தங்கள் மலையகமெங்கும் நடைபெற்றன. கொப்பே கடுவையினதும் அநுர பண்;டாரநாயக்கவினதும் கனவு இவ்வாறுதான் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இவ்வாறான நிலக்கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆனால் சிங்கள இனவாதிகள சிவனு லட்சுமணனினை அவன் இறந்த பின்னரும் கூட மன்னிக்க் தயாராக இருக்கவில்லை. அவனது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு தமது வீரவணக்கத்;தையும் அனுதாபத்தையும் செலுத்துவதற்காக அலையலையாய் அங்கு திரண்ட ஆயிரக்கணக்கன தொழிலாளர்களை தலவாக்கலையில் வைத்து ஒரு சிங்களக் காடையர் கும்பல் அடித்துக் கலைத்தது.

சிவனு லட்சுமணனன் படுகொலையைக் கண்டித்து ஊர்வலம் சென்ற தமிழ் மாணவர்கள் சிங்கள தீவிரவாதிகளால் பொலிசார் துணையோடு தாக்கப்பட்டனர். இதை தடுத்து நிறுத்த மலையக மக்களுக்கு துணிச்சலுடன் தலைமை கொடுக்க எந்த தலைமையும் இல்லாத அந்த அரசியல் நிர்வாணகோலத்தை இளம் சந்திரசேகரன் ஆத்திரத்தோடு அவதானித்துக் கொண்டிருந்தான். இன்னும் பல சிவனு லட்சுமணன்களை உருவாக்க வேண்டும் வேண்டும் என அவன் அன்று தீர்மானித்தான்.

அதுவே சந்திரசேகரனை நேரடியாகப் பாதித்து அவரை அரசியலில் பிரவேசிக்கத் தூண்டிய வரலாற்று திருப்பமாகும்.

திரு.பி.ஏ.காதர் அவர்கள் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர். 70 களில்  இலங்கை ஆசிரியர் சங்கத்தில் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரலெழுப்பியவர். இலங்கை ஆசிரியர் சங்கம் மட்டும்தான் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தி தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டது. அதற்கான பிரேரணையை முன்மொழிந்தவர் பி.ஏ.காதர் அவர்களே. இலங்கையின் இடதுசாரி அரசியலில் விரல்விடு எண்ணக்கூடிய   மார்க்சிய ஆய்வாளர்களில் இவரும் ஒருவர். இரண்டு தடவை சிறை சென்று  ஏழு வருடங்களைச்  சிறையிலேயே வாழ்ந்தவர். ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அனைத்துத் தளத்திலும் தீர்க்கமான பங்கு வகித்தவர். மலையக மக்களின் போராட்டத்தை தொழிற்சங்க வாதம் என்ற தளத்திலிருந்து அரசியல் தளத்திற்கு நகர்த்திய வரலாற்றுப் பாத்திரம் காதருக்கும் உண்டு. மலையக மக்கள் குறித்தும், சுய நிர்ணய உரிமை குறித்தும் இவரின் நூல்கள் அறியப்பட்டவை. திரு.சந்திரசேகரம் அவர்களின் மறைவை ஒடுக்குமுறைக்கு எதிரான மலையக மக்களின்  போராட்டங்களின் பகைப்புலத்தில் ஆய்வுசெய்கிறார், இந்த ஆய்வின் முதல் பகுதி இது.
(இன்னும் வரும்…)

Exit mobile version