Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சண்முகதாசனை மதிப்பிடுவதன் மூலம் புரட்சிகர பாட்டாளிவர்க்க கட்சியை கட்டுவதற்கான சீராக்கல் இயக்கத்தை முன்னெடுக்கலாம் : இ.தம்பையா

1963 ம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவினை அடுத்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி(Ceylon communist party) அமைக்கப்பட்டு அதன் தலைமைப் பொறுப்பை தோழர் நா.சண்முகதாசன் ஏற்று அன்றைய சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வர்க்க சமரசம், முதலாளித்துவத்துடன் சோசலிசத்தின் சமாதான சக ஜீவனம் சாத்வீகமான வழியில் சோசலிசத்தை ஏற்படுத்தல் போன்ற திரித்தல் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் நிராகரித்து தோழர் மாவோ சேதுங்கின் நிலைப்பாட்டை வழிகாட்டி கோட்பாடுகளாக ஏற்று சர்வதேச தளத்திலும் இலங்கை தளத்திலும் செயற்பட்டு வந்தார். 1980 களில் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட திரிபுவாத நிலைப்பட்டை நிராகரித்து அன்வர் ஹொசாவின் தலைமையிலான அல்பேனிய தொழிலாளர் கட்சியின் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான துரோகத்தையும் தோலுரித்து காட்டினார். குறிப்பாக மாவோவினால் முன் வைக்கப்பட்டதாக கூறப்பட்ட 3ம் உலக கோட்பாட்டை பாட்டாளி வர்க்க சர்வதேசத்திற்கு எதிரானதாக எடுத்துக்காட்டி அதனை நிராகரித்தார். இலங்கையில் ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாத நிலைப்பாட்டிற்கு எதிராகவும், லங்கா சமமாஜ கட்சி உட்பட அனைத்து டிரொஸ்கியவாத கட்சிகள் குழுக்களுக்கு எதிராகவும் தத்துவார்த்த போராட்டங்களை இடையராது செய்து வந்தார்.

1984ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புரட்சிகர சர்வதேச இயக்கத்தின் நிறுவன அங்கத்தவர்களில் ஒருவராகவும் செயற்பட்டு வந்தார்.

1976ம் ஆண்டு விடுதலை கூட்டணியின் தமிழர் வட்டுக்கோட்டை தீர்மானமான தனி தமிழ் நாட்டுக்கான கோரிக்கையை நிராகரித்ததுடன் அதற்கு எதிராக மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளின் மூலம் தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை நிராகரித்த போதும் 1980 களின் பிக்கூற்றில் தமிழ் மக்களுக்கு பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தேசிய சுயநிர்ணய உரிமை இருப்பதாக ஏற்றுக்கொண்டார். தொழிலாளர் வர்க்கப்பப் புரட்சியிலும் சோசலிச கட்டுமானத்திலும் பண்பாட்டு புரட்சியின் முக்கியத்துவத்தை உயர்த்தி பிடித்திருந்தார்.

இவ்வாறான தோழர் சண்முகதாசன் 1993ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 8ம் திகதி காலமான போது அவரின் தலைமைத்துவத்தால் கட்டியெழுப்பப்பட்ட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பெயரளவில் அன்றி இயங்கு தளத்திலோ ஸ்தாபன தளத்திலோ இருக்கவில்லை என்பது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மையாகும். இந்த கட்சியின் தோற்றம், எழுச்சி , வீழ்ச்சி பற்றி இயங்கியல் பொருள் முதல்வாத அடிப்படையில் பகுப்பாய்வதும் அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்வதும் இலங்கையின் தொழிலாளர் வர்க்க சோலிச புரட்சியில் நம்பிக்கை கொண்டுள்ளவர்களுக்கு அடிப்படை தேவையாகும். பொதுவாக தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் சுரண்டப்படுகின்ற வர்க்கங்கள் ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்கள், பெண்கள் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் போன்றவற்றின் விடுதலைக்கும் தவிர்க்க முடியாத தேவையாகிறது.

பிளவுகள்

1960 களில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நடைபெற்ற திரிபுவாதத்திற்கும் புரட்சிகர போராட்ட பாதைக்கும் இடையிலான போரட்டத்தில் புரட்சிகர பாதையை தேர்ந்தெடுத்த உலக நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்திலும் சிறு சிறு தத்துவார்த்த அடிப்படையில் ஏற்பட்ட பிளவுகளை போன்றும் சந்தர்ப்பவாத பிளவுகள் போன்றும் துரதிஷ்டவசமான வரலாற்றை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் கொண்டுள்ளது. இத்துடன் புரட்சியினுள் புரட்சி என்று பிரான்சில் டெரிடா போன்றவர்களினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களினாலும் கியூப புரட்சி தாக்கங்களினாலும் யாந்திரீகமாக இலங்கையில் நடவடிக்கைகளை முன்னெடுத்த ரோஹண விஜயவீரவின் தலமையிலான ஜே.வி.பி என்ற இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவு இலங்கை புரட்சிகர இயக்கத்தில் ஏற்பட்ட பாரிய பின்னடைவாகும்.

இந்த ஜே.வி.பியின் பிளவு மட்டுமன்றி அதனுடைய 1971ம் ஆண்டு ஆயுத கிளர்ச்சியினை அடுத்து இலங்கையின் ஆளும் வர்க்கம் இந்தியா உட்பட ஏனைய நாட்டு ஆளும் வர்க்கங்களின் உதவியுடன் மேற்கொண்ட கம்யூனிஸ்டுகளுக்கும் இடதுசாரிகளுக்கும் எதிராக மேற்கொண்ட அழிப்பு, அடக்குமுறை நடவடிக்கைகளினாலும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பாரிய பின்னடைவுகளை சந்தித்தது.

1963, 64 களில் சீனா பின்பற்றிய பாதையை கட்சி பின்பற்றி இருந்தாலும் வடகொரிய, கியூப, வியட்நாமிய, இந்திய நக்ஸல்பாரி புரட்சி பாதைகளை இலங்கைக்கு ஆதர்சமாக கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டில் பல குழுக்கள் கட்சிக்குள் இயங்கி இருந்தன. கொரிய பாதையை பின்பற்றியதாக சொல்லிக்கொண்டு பிரேமலால் குமாரசிறி தலைமையில் 1964ம் ஆண்டு பிரிந்த குழுவினர் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி இலங்கையின் தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு தலைமைதாங்குவதாக கூறிக்கொண்டு அக்கட்சியுடன் இரண்டர கலந்துவிட்டனர். 1964ல் இன்னொரு பிரிவினர் தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகர கட்சியாக வளர்ச்சியடைய போவதில்லை என்று கூறிக்கொண்டு கட்சியிலிருந்து வெளியேறினர். இவர்களில் ஒருவர் தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக இருந்து வருவதுடன் இன்னும் மாவோ சேதுங் சிந்தனையை ஏற்றுக்கொள்வதாக கூறுகிறார். கியூப புரட்சி மாதிரியை ஏற்றுக்கொண்டவர்கள் ரோஹண விஜயவீரவின் தலைமையை ஏற்றுக்கொண்டவ்ர்கள் கட்சியில் இருந்து கொண்டே வெளியில் இரகசிய வேலையில் ஈடுபட்டு வந்தனர். 1965ம் ஆண்டு டட்லி-செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக இனவாதிகளும் சுதந்திர கட்சியினரும், ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமமாஜ கட்சி நடத்திய ஊர்வலத்தில் ரோஹண விஜேவீரவும் அவரது குழுவினரும் கலந்து கொண்டதை அடுத்து அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்கள். அதன் பின் ஜே.வி.பி வெளிப்படையாக கட்டப்பட்டது.

1968ம் ஆண்டு காமினி யாப்பா, விமல் வீஜேயகோன் போன்றவர்கள் கட்சியிலிருந்து விலகி கீழைக்காற்று இயக்கம் என்ற பெயரில் இயங்கினர். 1971 கிளர்ச்சிக்கு பிறகு சண்முகதாசன் சிறையிலிருக்கும் போது வீ.ஏ கந்தசாமி, ஆரியவன்ச குணசேகர, வொட்சன் போன்றோர் விசேட மாநாடு ஒன்றை நடத்தி சுதந்திர கட்சியை தேசிய முதலாளித்துவ சக்திகளின் தலைமையாக அங்கீகரித்து கட்சியிலிருந்து வெளியேறினர். அவ்ர்கள் பின்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாக்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்) என்ற பெயரில் இயங்கினர். இவர்களுடன் உடன்பட்ட தோழர் ஓ.ஏ ராமைய்யா செங்கொடி சங்கத்தை கட்சியிலிருந்து பிரித்து தனியாக இயக்கினார். சண்முகதாசன் சிறையிலிருந்து வெளியில் வரும் போது பெரும்பாலும் சிங்கள மக்கள் மத்தியில் கட்சி ஸ்தாபனம் மிகவும் பலவீனப்பட்ட நிலைமையிலே இருந்தது அல்லது இல்லை என கூறலாம். வடக்கில் கட்சியும், மலையகத்தில் புதிய செங்கொடி சங்கத்தின் கீழும் கட்சி வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. 1978ம் ஆண்டு தோழர் கே.ஏ சுப்பிரமணியம் தலைமையில் பிரிவினர் கட்சியிலிருந்து விலகி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி(இடது) என்று இயங்கினர். மாவோவினால் முன்வைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட மூன்றுலக கோட்பாட்டை கட்சி ஏற்கவில்லை என்ற அடிப்படையிலேயே இந்த பிளவு ஏற்பட்டது.

இக்காலகட்டத்திலேயே தோழர் சண்முகதாசன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) சுயநிர்ணய உரிமையை வெளிப்படையாக ஏற்காவிட்டாலும் சுயாட்சி உரிமையை வலியுறுத்தியது. இக்கட்சி பின்பு புதிய ஜனநாய கட்சியாக பெயர் மாற்றப்பட்டு சீனாவின் மீள் முதாலாளித்துவ மயமாதல் பற்றியும் மூன்றுலக கோட்பாடு பற்றியும் விமர்சனங்களை முன்வைத்தது. இது தற்போது புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிச கட்சி என்ற பெயரில் இயங்குகின்றது.

இது ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை என்பதை முன்வைக்கிறது.இந்த 1978ம் ஆண்டு பிளவு இ.க.கட்சியை முற்றாக செயலிழக்க வைத்தது எனலாம். மலையகத்தில் இ.க.கவின் கீழ் இயங்கிய புதிய செங்கொடி சங்கமும் தொழிற்சங்க போட்டிக்கும் பாராளுமன்ற போட்டிக்கும் முகங்கொடுக்க முடியாது செயலிழந்தது. இப்பிளவுகளில் ரோஹண விஜயவீர, காமினி யாப்பா போன்றோரின் பிளவுகளை தவிர ஏனையவற்றை சீன கம்யூனிஸ்ட் கட்சி அங்கீகரித்ததுடன் அப்பிளவுபட்ட குழுக்களின் தலைவர்களுக்கு சீன விஜயத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது.

1968ல் பிளவுபட்ட காமினி யாப்பா குழுவினர் நக்கிள்ஸ் மலைதொடர்களில் தளமாக கொண்டு ஆயுத நடவடிக்கைகளை முன்னெடுத்து தோல்வி கண்ட நிலையில் பிற்காலத்தில் அரசு சார்பற்ற நிறுவனங்களாக (NGO) இயங்கி சீரழிந்து போனது. 1972ம் ஆண்டு பிளவு பட்டவர்களில் பெரும்பாலானோர் ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சியில் மீள சேர்ந்து கொண்டனர். ஆரியவன்ச குணசேகர தலைமையிலானோர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களை முன்னெடுத்து சீரழிந்து போயினர். வி.ஏ கந்தசாமி, சிவதாசன் போன்றோர் தமிழர் இளைஞர் இயக்கங்களுடன் இணைந்து கொண்டனர்.

இலங்கையில் புரட்சி

மாவோ சேதுங் சிந்தனை அடியொற்றி இலங்கையின் புரட்சி காலகட்டங்களை இரண்டாக பிரித்து வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்ட்து. அதாவது சோசலிச புரட்சிக்கு முன்னர் புதிய ஜனநாயக புரட்சி காலகட்ட்த்தை கடக்க வேண்டியது முன் நிபந்தனையாக கொள்ளப்பட்ட்து.

மாவோ சிந்தனையை ஏற்றுக்கொண்ட ஏறக்குறைய எல்லா உலக நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்நிலைப்பாட்டை எடுத்திருந்தன. 1969ம் ஆண்டு நடைபெற்ற இ.க கட்சியின் 9வ்து மாநாட்டில் விடுதலை பிரதேசங்களை ஏற்படுத்தி மக்கள் யுத்த பாதையில் புரட்சியை முன்னெடுப்பது அவசியமென விசேட தீர்மானம் முன்னெடுக்கப்பட்ட்து.

இது தீர்மானவாகவே இருந்த்தே அன்றி நடைமுறையில் எவ்வித வேலையும் முன்னெடுக்கப்படவில்லை என்ற விமர்சனம் இதுவரையும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் 1971ம் ஆண்டு கிளர்ச்சியை அடுத்து தோழர் சண்முகதாசனும் ஏனைய தோழர்களும் கைது செய்யப்பட்டமைக்கு மாத்தறையிலும் பொலன்னறுவையிலும் யாழ்ப்பாணத்திலும் ஆயுத நடவடிக்கைகளையும் இ.க.க எடுத்திருந்த்து என்ற சந்தேகம் காரணமாக சொல்லப்பட்ட்து. பின்னர் அந்த நடவடிக்கைகள் யாவும் ஜே.வி.பி யினதாக இருக்கலாம் என்று சொல்லப்பட்ட்து. இது பற்றி உறுதியாக எதனையும் கூற முடியாவிட்டாலும், அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பதை மறுதலிக்க முடியாது ஏனெனில் 1965, 1966களில் சாதியத்திற்கு எதிரான போராட்டங்களில் ஆயுதங்கள் பாவிக்கப்பட்டுள்ளன. 1971 க்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட அரச அடக்குமுறைகள் இனவாத சூழல் 1977, 1983 இன வன்முறைகள், தமிழ் இளைஞர் அமைப்புகளின் ஆயுத நடவடிக்கைகள் போன்றன இ.க.கவின் நடவடிக்கைகளை முடக்கின. இதற்கு இன்னொரு வலுவான காரணம் தேசிய இனப்பிரச்சனையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அதனடிப்படையில் போராட்ட வழிமுறைகளை வகுக்காததுமாகும்.

இ.க.கவில் ஏற்பட்ட பிளவுகள் தலைமைப்போட்டியின் அடிப்படையில் அமைந்ததும் இனவாத ரீதியான அடிப்படை கொண்ட்துமாக (78 பிளவு தவிர) அமைந்த்தும் ஜே.வி.பியினுடைய பேரினவாத நிகழ்ச்சி நிரலும் பாரிய சவாலாக அமைந்த்து எனலாம். சிங்கள இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் அரச சார்பற்ற நிறுவன பண்பாடு, பின் நவீனத்துவ போக்கு என்பனவும் மாக்சிய-லெனினிசத்தை சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுக்க முடியாமல் போனமைக்கு இன்னொரு காரணமாகும்.

இ.க.க அமைக்கப்பட்ட போது பெரும்பாலான தொழிற்சங்கங்களும் வெகுஜன அமைப்ப்புகளும் அதன் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த போதும் 1968ம் ஆண்டு கட்சிக்குள் நடைபெற்ற தொழிற்சங்க, வெகுஜன அமைப்புகளை நிராகரிக்கும் போக்கு மற்றும் தொழிற்சங்க இயக்கத்தில் பிரிக்க முடியாதிருந்த பொருளாதாரவாதம் தொழிற்சங்கவாதம் போன்றன காரணமாக மக்கள் மத்தியில் கட்சி செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. பாரளுமன்ற தேர்தல்களை முற்றாக பகிஷ்கரிக்கும் கட்சியின் நிலைப்பாடும் இதற்கு காரணமாகும்.

கட்சியின் தலைமையில் புரட்சிகர புலமை சார் பண்பாடு கட்டி வளர்க்கப்படாமையும் தொழிற்சங்கவாத பாராளுமன்றவாத கண்ணோட்டங்கள் தலைமைத்தோழ்ர்களிடம் காணப்பட்டமையும் கட்சியின் புரட்சிகர தன்மை சீரழிவதற்கு காரணமாயின. பாரிய கட்சியாக தோற்றமளித்த போதும் கட்சியின் ஸ்தாபன பொறிமுறை இல்லாமல் தனித்தனி தோழர்களிடமே பொறுப்புகள் காணப்பட்டன. ஸ்தாபன கட்டமைப்பில் பொறிமுறை இருப்பது முதலாலித்துவ முறையென நிராகரிக்கப்பட்ட்தனால் தனிந்பர்களின் தான் தோன்றித்தனமும் பொறுப்பு கூறக்கடமைப்படாமையும் கட்சியை ஒரு முகமாக பலமானதாக வைத்திருக்க முடியவில்லை. இந்த குறைபாடுகளுக்கு தோழர் சண்முகதாசன் மட்டுமே பொறுப்பு என்று குற்றம் சுமத்திவிட முடியாது. ஆனால் அவரது தனிப்பட்ட அர்ப்பணிப்பும் தியாகமும் உழைப்பும் கட்சியின் நலனை தவிர வேறு எதனையும் இலக்காக்கி இருக்கவில்லை என்பதனை சந்தேகத்திற்கு இடமின்றி சொல்ல முடியும்.

கூட்டுத்தலமையும் புரட்சிகர கட்டமைப்பும் பொறிமுறையும் கட்டி வளர்க்க படாமையும் அடுத்தடுத்த மட்டங்களில் தலைமைத்துவ பொறுப்புகளை ஏற்க்க்கூடியவாறு தோழர்கள் வளர்க்கப்படாமையும் வளராமையும் தோழர் சண்முகதாசனையே சகலதுக்கும் நம்பிய்ருக்க வேண்டிய நிலைமை கட்சியில் இருந்தமை ஆரோக்கியமானதல்ல. அதனால் உட்கட்சி போராட்டங்கள் அனைத்தும் அவரை இலக்கு வைத்த்தாகவே முன்னெடுக்கப்பட்டிருந்திருக்கின்றன. அவரும் அவ்வாறே அவற்றை விளங்கிக் கொண்டிருந்தார் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. இதனால் புரட்சிகர கட்சி ஒன்றை வளர்ப்பதற்கான நீண்ட கால முயற்சிகள் விரையமாகின.

அத்துடன் புரட்சிகர சக்திகளுடனான ஐக்கிய செயற்பாட்டிற்கோ ஜனநாயக, இட்துசாரி சக்திகளுடனான ஐக்கிய செயற்பாட்டிற்கோ வேலைத்திட்டஙகள் கட்சியிடமிருக்கவில்லை.

புரட்சிகர ஆளுமை

Mao Zedong (L) talked with the visiting Member of the Political Bureau of the Central Committee of the Communist Party of Ceylon N. Sanmugathasan on June 6th, 1967

மாக்சிச- லெனினிச த்த்துவங்களை இலகுவாக இயங்கிய முறையில் விளங்கப்படுத்து ஆற்றல் தோழர் சண்முகதாசனும் இருந்த்தாக அவரது அரசியல் வகுப்புகளில் கலந்து கொண்டவர்களும் அவருடனான கலந்துரையாடல்களில் கலந்து கொண்டவர்களும் இன்றும் நினைவு கூர தவறுவதில்லை. த்த்துவார்த்த போராட்டங்களையும் அவர் இலகுவாகவும் ஆளமாகவும் செய்து வந்துள்ளார். அவரிடம் இருந்த வரலாற்று பட்டப்படிப்பும் அறிவும் தமிழ் சிங்கள ஆங்கில மொழிப்புலமையும் மேலும் அவரது தலைமைத்துவ பண்பை உறுதி செய்திருந்தன.

அவரது வாழ்க்கை முறை பற்றி சிலர் அபாண்டங்களை தெரிவித்து வந்தாலும் அவரிடம் நிலப்பிரபுத்துவ பழமைவாத முதலாளித்துவ வாழ்க்கை முறை இருக்கவில்லை. அவர் கொள்கையில் உடன்பாடாதவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தாரே அன்றி ஒட்டி உறவாடி வர்க்க சமரசம் செய்யாமல் கறாராக இருந்திருக்கிறார். இதை பல முறை அவர் வெளிப்படையாக சொல்லியுமிருக்கிறார்.

அரசியல் கலந்துரையாடல்கள் விவாதங்களில் அவரிடம் ஜனநாயகமும் மத்தியத்தியத்துவமும் குறைந்து மத்தியத்துவம் மட்டுமே மேலோங்கி இருந்த்தாக அவருடன் நெருங்கி இருந்தவர்கள் சொல்லுகிறார்கள்.

அவரது முதலாவது திருமணம் அவரது பெற்றோர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் செய்யப்பட்ட்து என்பது குறிப்பிட்த்தக்கது. அந்த துணைவியாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ள முடியாத்தால் சுமுகமாகவே மணவிலக்கு செய்யப்பட்ட்து.

பின்னர் பலவிதமான பழமைவாத விமர்சனத்திற்கு மத்தியிலும் அவர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் ஒருவ்ரது மறைவையடுத்து அவரது மனைவியை மணம் செய்து கொண்டார். இந்த மணத்தை அங்கீகரிக்காத சில கட்சி தோழர்களும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தோழர்களின் விவகாரங்களிலும் கவனமெடுத்து உதவி புரிந்த்தாக சொல்லப்படு அவர் இறுதி நாட்களில் தொடர்பற்ற நிலைமையில் லண்டனில் இருந்தார் என்பது தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.

தேசிய இனப்பிரச்சனையும் ஜனநாயக புரட்சியும்

தமிழ் தேசியவாதிகள் முன்வைத்த தனி நாட்டு கோரிக்கை இலங்கை வாழ் தொழிலாளர்கள் உழைக்கும் விவசாயிகள் என்போரின் ஐக்கியத்தை குலைத்துவிடும் என்ற முன்னெச்செரிக்கையுடன் எதிர்த்தார். அந்த அடிப்படையில் இ.க.கவும் தமிழ் மக்களின் சுயநிர்ணய போராட்ட்த்தை ஆரம்பத்தில் ஏற்று அங்கீகரிக்கவில்லை.

1980களின் இறுதியில் அவர் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டார். அவரது கட்டுரை ஒன்றிலிருந்து பின்வரும் பகுதியை வாசிப்பதன் மூலம் விளங்கிக் கொள்ள முடியும்.

“இலங்கை அரசாங்கமும் சிங்களப் பேரினவாத சக்திகளும் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடரறா ஒரு நிலப்பரப்பில் மிக நீணட காலமாக வாழ்ந்து வரும் ஒரு தேசம் என்ற உண்மையையும் அதனால் அவர்களுக்கு சுயநிர்ணயத்திற்கான உரிமை உண்டு என்பதையும் ஏற்க மறுக்கின்றமையே இன நெருக்கடிக்கு தீர்வு காண முடியாமல் இருப்பதற்கான பிரதான காரணமாகும். இந்த உரிமை ஏற்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டாலொழிய இன்றைய தமிழர் பிரச்சனைக்கு தீர்வு எதுவுமே இருக்க முடியாது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தான், அந்த மக்களிடம் முற்போக்கான சிங்கள சக்திகள் , ஒரு தனி நாட்டை அமைப்பதற்காக அச்சுயநிர்ணய உரிமையை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதை தமிழ் பேசும் மக்களின் மொழிவழி பிரதேசமாகிய, வடக்கு , கிழக்கு மாகாணங்களை கொண்ட சமஷ்டியாகவோ அல்லது பூரண பிரதேச சுயாட்சியாகவோ பிரயோகிக்கும் படியும் கேட்டுக்கொள்வதற்கான அருகதையை கொண்டிருக்க முடியும். சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதானது சிங்கள தமிழ் மக்கள் மத்தியிலிருந்து சாதி மத மொழி வேறுபாடுகளின்றி புரட்சிகர சக்திகளை ஒன்று திரட்டுவதை வேண்டி நிற்கும் ஜனநாயக புரட்சியின் ஒரு பகுதியாகும்”

இந்த ஆரோக்கியமான அடிப்படையில் இ.க.க அடியெடுத்து வைக்க முடியாமல் போனமைக்கு காரணம் இந்நிலைப்பாட்டை எடுக்கின்ற போது கட்சி முற்றாக சீர்குலைந்து விட்ட்து.

சர்வதேசியம்

தோழர் சண்முகதாசன் மாக்சியம்-லெனினியம் , மவோ சேதுங் சிந்தனை என்பவற்றை அடிப்படை வழிகாட்டி கோட்பாடாக ஏற்றுக்கொண்டு, இலங்கை புரட்சி பற்றிய புரிதலை கொண்டிருந்தார். அப்புரிதல் மாவோ சேதுங் சிந்தனையுடனும், சீனப்புரட்சியுடனும் நெருங்கியதாக இருந்த்து. சீனாவில் முன்னெடுக்கப்பட்ட சோலிச புரட்சிக்கு முந்திய புதிய ஜனநாயக புரட்சியை இலங்கையில் முன்னெடுக்க வேண்டுமென உறுதியாக இருந்தார். ஆனால் சீனாவில் நட்த்தப்பட்ட அதே பாணியிலான புதிய ஜனநாயக புரட்சி இங்கு நட்த்துவது பொருத்தமானதா என்பது பற்றிய ஆழமான ஆய்வுகளோ விவாதங்களோ நட்த்தப்படவில்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த லியூ சோசி இலங்கையின் புதிய ஜனநாயக புரட்சிக்கு தேசிய முதலாளித்துவத்தை பிரதிநித்துவம் செய்யும் சுதந்திர கட்சி பிரதான பங்கை வகிக்க முடியும் என்று கூறியதை தோழர் சண் நிராகரித்தார்.

ஆனால் இலங்கை போன்ற பிற்படுத்தப்பட்ட நாட்டில் சோசலிச புரட்சிக்கு முன் நிபந்தனையாக ஜனநாயக புரட்சிகர காலகட்டம் தேவையென்பதை வலியுறுத்தியிருந்த போதும் முற்போக்கான தேசிய சக்திகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் அடக்கப்படும் தேசிய இன்ங்கள் ஜனநாயக இட்துசாரி சக்திகள் போன்றவற்றை ஐக்கியப்படுத்தி போராட்ட்த்தை முன்னெடுக்க இ.க.க உரிய வேலைத்திட்ட்த்தை முன் வைக்கவில்லை. அத்துடன் உடனடியான தந்திரோபாய ரீதியான தேசிய ஜனநாயக வேலைத்திட்டம் பற்றியும் கரிசனை கொள்ளவில்லை(இதற்கு காரணம் தேர்தல்களை முற்றாக பகிஷ்கரித்தமையாக இருக்கலாம்).

சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் செள என் லாய் , லியூ சோசி, டெங் ஷியவோ பிங் போன்றோரை நிராகரித்த்தும் 1980களில் மாவோவின் இறப்பிற்கு பிறகு சீனா மீள முதலாளித்துவ பாதையில் செல்வதை அம்பலப்படுத்தியதும் சோவியத் திரிபுவாத்த்தை நிராகரித்த்தும், அல்பேனியாவில் அன்வ்ர் ஹோசாவை நிராகரித்த்தும் அவ்ர் தூர நோக்குடன் மேற்கொண்ட நடவ்டிக்கைகள். குறிப்பாக மூன்றுலக கோட்பாட்டை நிராகரித்தும் குறிப்பிட்த்தக்கது.

ஆனால் மவோவின் காலத்திலிருந்தே சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் உள் நாட்டு விவகாரங்களில் எடுத்து கொண்ட அக்கறையை சர்வதேச பாட்டாளி வர்க்க புரட்சியில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் சோவியத் திரிபு வாத்திற்கு எதிரான போரட்ட்த்தில் உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளில் பெரும்பாலானவற்றை தன் பக்கம் இழுத்து கொண்டிருந்தாலும் அவ்ற்றை சோவியத் யூனியனை தாக்கவும் சீனாவை பலப்படுத்தவும் பயன்படுத்தியதே அன்றி சர்வதேச பாட்டளிவர்க்க புரட்சிக்கோ தேசிய விடுதலை போராட்டங்களுக்கோ பக்கபலமாக இருக்கவில்லை என்பதை அவர் அடையாளம் காண தவறியிருக்கிறார். இ.க.க பலவீனப்படுத்தப்பட்டமைக்கு சீனா இ.க கட்சிப்பிளவுகளை அங்கீகரித்தமை ஒரு காரணமாகும். இது மாவோவின் காலத்திலேயே நடைபெற்றது. அத்துடன் சீன கம்யூனிஸ்ட் கட்சி இலங்கை அரசை நியாயப்படுத்தி வந்திருக்கிறது. 1965ம் ஆண்டு மே 1ம் திகதி வெசாக் பெளர்ணமி தினமாக இருந்த்தால் அன்றைய அரசு மே தினக்கூட்டங்களுக்கு தடை விதித்திருந்த்து.

அத்தடையை மீறி கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் மே தினக்கூட்டங்களையும் ஊர்வலங்களையும் இ.க.க நட்த்தியது. இதனை சீன க.க விமர்சனத்திற்கு உள்ளாக்கியிருந்த்து. அதாவது பெளத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையில் பெளத்த மத முக்கிய தினமான அன்று தடையை மீறி மே தினத்தை நட்த்தியது சரியா என்பதை விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்றும் சீன.க.க வின் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்த்தாக அறிய முடிந்த்து.

தோழர் சண் புரட்சிகர சர்வதேச இயக்கத்தை (R.I.M) கட்டுவதில் முன்னின்று உழைத்த போதும் அவ்வியக்கம் இன்று மவோயிசம் என்பதை ஏற்றுகொண்டுள்ள கட்சிகளை மட்டுமே கொண்டிருப்பதால் கம்யூனிஸ்ட் சர்வதேச இயக்கத்தை கட்டுவதற்கு ஆரோக்கியமாக இல்லை.

நிறைவு

இங்கு தோழர் சண் பற்றி சில பதிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவரையும் இ.க.க வையும் மதிப்பிட்த்தவறுவது இலங்கையில் தொழிலாளர் வர்க்க புரட்சிகர கட்சியை கட்டுவதற்கு இடையூறாகவே இருக்கும். இன்றைய சூழ்நிலையில் இலங்கையின் அரசின் தன்மை தொழிலாளர் வ்ர்க்க புரட்சிக்கான முன்னேறிய அணியினர் நேச அணியினர் போன்றன பற்றியும் ஜனநாயக புரட்சியில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரட்டமும் அடக்கப்படும் தேசிய இன்ங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போரட்ட்மும் தனித்தனியாகவும் கூட்டாகவும் முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டம் பற்றியும் சிந்தித்தல் அவசியம்.

புரட்சிகர கட்சியை கட்டுவதற்கு தடையாக இருந்த பிளவுகள் பற்றியும் ஆழமாக பார்க்க வேண்டியது அவசியம். குறிப்பாக ஜே.வி.பி யினது தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை(முன்னிலை சோசலிச கட்சி உட்பட) பற்றியும் அதனால் புரட்சிகர இயக்கத்திற்கு நிலவும் முட்டுக்கட்டை பற்றியும் விலாவாரியாக விமர்சன்ங்கள் முன்வைக்கப்பட்டு புரட்சிகர கட்சியை கட்டுவதற்கான நேர்மையான சீராக்கல் இயக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

Exit mobile version