கோபி, தேவியன்(தெய்வீகன்), அப்பன் என்ற புனைபெயர்களைக்கொண்ட மூவர் இலங்கை அரசபடைகளால் சுற்றிவளைக்க்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டனர். ஊடகங்களுக்கு இது பரபப்புச் செய்தியாகியது. அரசியல்வாதிகள் தங்களது சொந்தக் கருத்தை நடந்த சம்பவங்களோடு பொருத்திக்கொண்டார்கள். இவை அனைத்தினதும் பின்னணியில் பல உண்மைகள் மறைக்கப்பட்டன. இனியொருவிற்குக் கிடைத்த நம்பகமான தகவல்களையும் அவை குறித்த முடிவுகளையும் வெளியிடுகிறோம். கொல்லப்பட்டவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட்டம் ஒன்றை மீளத் தோற்றுவிக வேண்டும் என்ற அடிப்படையிலேயே 2009 ஆம் ஆண்டு வன்னியிலிருந்து தப்பித்த காலம் முழுவதும் முனைந்துள்ளனர்.
இன்றைய இலங்கைச் சூழல் 80 களில் இளைஞர்கள் இயக்கங்களில் இணைந்துகொண்ட காலம் போன்றதல்ல. 90 களில் இராணுவப் பிரசன்னம் அருகியிருந்த காலம் வேறுபட்டது. இன்று வடக்கும் கிழக்கும் முழுமையான இராணுவத்தின் நிர்வாகத்திற்கு உடப்படுள்ளது. மகிந்த ராஜபக்ச என்ற கோரமான பாசிஸ்ட்டின் தலைமையிலான இராணுவ ஆட்சி ஒவ்வொரு மனிதனையும் கண்காணிக்கும் பொறிமுறைகளைக் கொண்டுள்ள சிக்கல்கள் நிறைந்த காலம். இவ்வாறான நெருக்கடியான காலத்துள் கூக்குரல் எதிரொலிக்கும் எல்லைக்குளிருந்து ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்காக மட்டுமே மரணித்துப் போன இந்த மூவரதும் தியாகம் விலைமதிப்பற்றது.
மரணித்துப்போன மூவரும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அகதிகளாக வாழ்க்கையை ஆரம்பிக்கும் அத்தனை வசதிகளும் கிடைத்திருந்தும் அவர்கள் அவற்றை நிராகரித்துள்ளனர்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து சிக்கலான சூழலில் காடுகளில் மறைந்திருந்து, அரசிற்கு எதிரான சில சிங்களவர்களின் துணையோடு தமிழ் நாட்டிற்குச் சென்ற இவர்கள் மதுரைப் பகுதியில் தங்கியிருந்துள்ளனர். அங்கிருந்த வேளையில் ஐரோப்பிய நாடுகளிலுள்ள அவர்களின் நண்பர்கள் தொடர்புகொண்டு வெளி நாடுகளுக்கு செல்ல உதவுவதாகக் கூறியுள்ளனர். இனிமேல் ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றது என்றும் வெளி நாடுகளுக்குச் செல்லுமாறும் மூவரதும் நண்பர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
அதனை முற்றாக நிராகரித்த போராளிகள் மீண்டும் தாம்மால் இயலுமான வழிகளில் ஆயுதப் போராட்டத்தை உருவாக்கப்போவதாகவும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடப்போவதாகவும் கூறியுள்ளனர். நண்பர்கள் உறவினர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதைக்கூட அவர்கள் விரும்பவில்லை. இந்த நிலையில், இரண்டு வருடங்களினர் முன்னர் இந்திய உளவுத் துறையின் இவர்களைத் தொடர்புகொண்டு தமிழ் நாட்டில் தங்கியிருக்க வேண்டாம் என்றும் கேரளாவில் தங்கியிருக்குமாறும் அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர் நண்பர்களுடன் தொடர்புகள் அருகிப் போயின.
இறுதியாக இலங்கைஅ அரசு இவர்களைத் தேடுவதாக சுவரொட்டிகளை நாடுமுழுவதும் ஒட்டியது. முக்கிய ஊடகங்களில் அறிவித்தல்களை விடுத்தது.
பின்னர் 10ம் திகதி வியாளனன்று நெடுங்கேணியில் கொலைசெய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனிடையே ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து இவர்களின் வாழ்க்கைக்குப் பணம் சென்றதான உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின, இப் பணம் நெடியவன் குழுவிடமிருந்து சென்றதான தகவல்கள் பொய்யானவை.
(பாதுகாப்புக் காரணங்களுக்காக தகவல்கள் பெற்ற மூலங்களை வெளியிடவில்லை.)
மதுரையிலிருந்து கேரளாவிற்கு இவர்களை அழைத்துச் சென்ற இந்திய உளவுத்துறையான RAW இன் பங்கும் அதன் தொடர்ச்சியான நடவடிக்களும் மூவரும் கொலைசெய்யப்படுவதற்கு பிரதான காரணமாய் அமைந்தது.
தமிழ் நாட்டில் தங்கியிருந்த காலத்தில் இவர்களைக் கண்காணித்த இந்திய உளவுத்துறையினர் இவர்களைத் தமது நோக்கங்களுக்காக, இவர்கள் அறியாமலே பயன்படுத்தியிருப்பதற்கான வாய்ப்புக்களே அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் இலங்கை அரசைத் தனது கட்டுப்பாட்டிற்கு வைத்துக்கொள்வதற்கான இலகுவான வழிகளில் அழிக்கப்படக் கூடிய ஆயுதக் குழுக்களை உருவாக்குவதும் ஒன்றாகும். அதே வேளை இலங்கை அரசை ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கவும் ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்திக்கொள்ளும்.
80 களில் நடந்ததைப் போன்று பாரிய குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கி வளர்க்காமல் சிறிய குழுக்களைத் தோற்றுவித்து தேவையான நேரங்களில் பயன்படுத்தி அழிப்பது அவர்களின் வழிமுறைகளில் ஒன்று. இதற்கான பல்வேறு அரசியல் காரணங்கள் உண்டு.
இலங்கையில் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் மட்டுமன்றி சிங்கள உழைக்கும் மக்கள் மத்தியிலிருந்து எழுக்கின்ற போராட்டங்களைக்கூட திட்டமிட்டு அழித்ததில் இந்திய அரசின் பங்கு நிராகரிக்க முடியாதது.
ஆக, மதுரையில் போராட வேண்டும் என்ற உணர்வோடு தங்கியிருந்த நேர்மையான அப்பாவிப் போராளிகளை ஏமாற்றித் தமது வலைக்குள் விழுத்தி தேவையான நேரத்தில் இந்திய உளவுத்துறை பயன்படுத்தியிருக்கிறது. அந்த அடிப்படையில் அவர்களைக் கேராளாவில் பாதுகாப்பாக வைத்திருந்து தக்க சமயத்தில் வன்னிக்கு அனுப்பியிருந்திருக்க வேண்டும்.
வன்னிப் படுகொலைகளின் பின்னர் இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து போராட்டங்கள் முன்னெப்போது இல்லாதவாறு ராஜபக்ச அரசை அச்சம் கொள்ளச் செய்கின்றன.
இப் போராட்டங்களை எதிர்கொள்வதற்கு சிங்களப் பெருந்தேசியவாதத்தை முஸ்லீம்களுக்கு எதிராகவும் வட கிழக்குத் தமிழர்களுக்கு எதிராகவும் ராஜபக்ச அரசு தூண்டிவிட்டும் பலனளிக்கவில்லை.
கடத்த வருடத்தில் ராஜபக்ச இராணுவச் சர்வாதிகாரத்திற்கு எதிரான பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. வெலிவெரியப் படுகொலைகளின் பின்னர், பல்தேசிய வர்த்த நிறுவனஙகளின் நிலப்பறிப்பிற்கு எதிராகவும், நகர அபிவிருத்தி என்ற பெயரில் நடைபெறும் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை நடைபெற்றுள்ளன. கடந்த கடந்த 20 வருடங்கள் காணாத இப்போராட்டங்களை எதிர்கொள்ள ராஜபக்ச அரசிற்கு புலிகள் மீள்கிறார்கள் என்று சிங்கள மக்களை அச்சப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்காக இந்திய உளவுத்துறை பலிக்கடா ஆகியவர்களே இந்த மூவரும். இலங்கை அரசைக் காப்பாற்றுவதற்காக இந்திய அதிகாரவர்க்கம் அப்பாவிப் போராளிகளைப் பயன்படுத்திக்கொண்டது. ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் தனது ராஜபக்ச விசுவாசத்தை வெளிக்காட்டிய இந்திய அதிகாரவர்க்கம் அனுப்பிட பலியாடுகளே இந்த மூவரும்.
இதன் பின்னால் மற்றொரு நோக்கமும் உண்டு.
முள்ளிவாய்க்கால் அழிப்பிற்குப் பின்னர் இலங்கையிலும், இந்தியாவிலும் உலக நாடுகளிலும் மீண்டும் போராடுவதற்குத் தயாரானவர்களை அடையாளப்படுத்த வேண்டிய தேவை இலங்கை இந்திய மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளுக்குக் காணப்பட்டது. இலங்கை அரசினதும், ஐரோப்பிய, இந்திய அரசுகளதும் புலம்பெயர் உளவாளிகளின் வட்டத்திற்கு உட்படாத, களத்தில் மீண்டும் போராட்டத்தைத் தோற்றுவிக்க எண்ணும் பலரை அடையாளம் காணுவதற்கும் கொல்லப்பட்ட மூவரும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
கேரளாவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தவர்களை இலங்கைக்கு அனுப்பி அங்கே அவர்களது தொடர்பாளர்களை அடையாளம் கண்டு இலங்கை அரசிற்கு இந்திய உளவுத்துறையே அறிவித்திருக்க வாய்புக்கள் உண்டு. யாழ்ப்பாணத்திலும் வன்னிப் பகுதிகளிலும் பலரது கைதுகளின் பின்னணியை இவ்வாறுதான் புரிந்துகொள்ள முடியும்.
இறுதியாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு ஆதரவாக இந்திய அரசு தொடர்ச்சியாக செயற்படுவதற்கும் வட கிழக்கின் இராணுவமயமாதலை நியாயப்படுத்தவும் இச் சம்பவங்களைப் பயன்படுத்தலாம்.
வன்னியில் இனப்படுகொலையின் கோரப்பிடியிலிருந்து மீண்டு ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட வேண்டும் எனப் புறப்பட்ட இந்த முவரதும் உணர்வுகள் பெறுமதி மிக்கவை. இலாப வெறியும், பணத்தின் மீதான பசியும் மட்டுமே எஞ்சியிருக்கும் நம்மைச் சூழவர உள்ள சமூகத்தில், அவற்றையெல்லாம் உடைத்துக்கொண்டு போராடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை என்று சிந்தித்தவர்கள் மதிப்பிற்குரியவர்கள்.
ஆயுதப் போராட்டத்தின் மீது சதா விருப்புக்கொண்டிருப்பதற்கு மக்கள் மன நோயாளிகளல்லர். நிராயுத பாணிகளான மக்கள் மீது ஆயுதம் தாங்கிய அரச படைகள் தாக்குதல் நடத்தும் போது, அதிலிருந்து தற்காத்துக்கொள்ளவே மக்கள் ஆயுதமேந்துகிறார்கள். இலங்கையைப் பொறுத்தவரையில் அரச பாசிசத்தால் கட்டவிழ்த்துவிடப்படும் இராணுவ ஒடுக்க்குமுறையே மக்களை ஆயுதமேந்தத் தூண்டுகிறது. ஆக, ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாத நிகழ்வாகிவிட்டது.
ஆனால், அதன் அரசியலையும், நடைமுறைத் தந்திரோபாயத்தையும் திட்டமிடாவிட்டால் அது அரச பயங்கரவாதிகளதும் உளவுப்படைகளதும் பிடிக்குள் சிக்கி அழிக்கப்பட்டுவிடும். வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தின் தவறுகளிலிருந்தும் கற்றுக்கொள்வதனூடாகவே மனிதக்கூட்டம் புதிய கட்டத்தை நோக்கி முன்னேறுகிறது. அவ்வாறான முன்னோக்கிய வளர்ச்சியே வரலாற்றைப் படைக்கிறது. தவறுகளிலிருந்தும், அழிவு அரசியலின் விளைவுகளிலிருந்தும் கற்றுக்கொள்ள மறுப்பதைக் கோரும் பிழைப்புவாத அரசியலின் பிடியிலிருந்து சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் விடுவிக்கப்படுவதும், அதற்கான திட்டமிட்ட அரசியல் வகுக்கப்படுவதும் இன்று எம்முன்னால் உள்ள சமூகக்கடமையாகும்.
-இனியொரு…
ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்
உலகமயமாகும் கோத்தாவின் கொலைப்படைகள் : நிவேதா நேசன்
அரசபடைகளால் கொல்லப்பட்ட மூன்று போராளிகளுக்கும் வீர வணக்கங்கள்