ஆனால் இதனையே சாட்டாகவைத்து அகதிகள் மீதான வெறுப்புணர்வாகவும், நிறவெறிப் பேச்சாகவும் மேற்குலகில் சில அரசியல்வாதிகளும், பல ஊடகவியலாளரும் கருத்துத்தெரிவித்துவருகின்றனர். அத்துடன் கொலோன் நகரில் சில ஆர்ப்பாட்டங்களும் நடைபெறுகின்றன.
இக்குற்றச்செயலில் ஈடுபட்டவர்களின் உடை, மொழிநடையினைக்கொண்டு அவர்கள் அரபு, ஆபிரிக்க பிரதேசத்தினைச் சேரந்த முஸ்லீம்கள் என்றே கூறப்படுகிறது. இந்த ஊகம் சரியாகவிருக்கலாம் என்றால்கூட அவர்கள் ஐேர்மனிக்கு புதிதாக அனுமதிக்கப்பட்ட அகதிகள் என்பதற்கு எந்த ஆதாரமில்லை. ஒரு வாதத்திற்கு இக்குற்றவாளிகள் எல்லோரும் புதிதாக வந்த அகதிகள் என்று எடுத்துக்கொண்டாலும் அவர்களின் தொகை புதிதாக வந்த மொத்த அகதிகளின் தொகையில் ஒரு வீதம் கூடவில்லை, எனவே எவ்வாறு இதனைச்சாட்டாகக்கொண்டு அகதிகள் பிரச்சனையினை அணுகமுடியும் .
ஐேர்மனிய காவல்துறையால் முதற்கட்டமாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 பேரில் சில ஐேர்மனியப்பிரசைகளும், ஒரு அமெரிக்கபிரசையும் கூட அடங்குகிறார்கள். இந்த நிலையில் இச் சம்பவத்திற்கும், அகதிகள் விவகாரத்தினையும் தொடர்புபடுத்துவது பொருத்தமற்றது. சிரியாவில் யுத்தநிலமை மோசமடைந்து அங்குள்ளவர்கள் புல்களையும் வளர்ப்புப் பிராணிகளையும் சாப்பிடும் நிலையில் அங்கிருந்து வரும் அகதிகளிற்கெதிராக இவ்வாறு கூச்சல் போடுவது நிலமையினை மேலும் சிக்கலாக்கி பலரினை மேலும் IS தீவிரவாதத்தினை நோக்கியே தள்ளும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் சில தமிழ் ஊடகங்களும் சிரிய அகதிகளை அனுமதித்த அஞ்சலோ மேர்ச்சலிற்கு இந்த சம்பவம் நல்லபாடம் என தலையங்கம் தீட்டி செய்திவெளியிட மற்றைய தமிழ் ஊடகங்கள் கள்ள மௌனம் காத்தன. இவ் ஊடகங்களிற்கு நாளையே இந்த நிறவெறி தமக்கு எதிராகவும் திரும்பும் என்ற அடிப்படை விளக்கம்கூட இருக்கவில்லை.
இன்று இப்பிரச்சனை கண்டம்விட்டு கண்டம்பாய்ந்து கனடாவில்கூட அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் சிரிய அகதிகளை வரவேற்கும் நிகழ்வில் அகதிகள் மீது தாக்குதல் நடாத்துமளவிற்கு சென்றுள்ளது. அங்குள்ள வலதுசாரிகளிற்கு குடியேற்றத்தின் விளைவு பற்றிய சந்தேகங்கள் ஏதாவது இருக்குமாயின் அங்கு இன்னும் செவ்விந்தியர்கள் யாராவது எஞ்சியிருந்தால் அவர்களிடம் கேட்டு தெளிந்துகொள்ளலாம்.