இந்த நாடுகளின் அழிப்பு நடவடிக்கைகள் நிறைவுற்ற பின்னர், அவர்களாலேயே தயார்படுத்தப்பட்ட நபர்கள், ஐக்கிய நாடுகள் சபை, தன்னார்வ நிறுவனங்கள் போன்றன தங்கள் பங்கிற்கு களத்தில் இறங்கும். அவை மனிதாபிமான நடவடிக்கைகள், அபிவிருத்தி குறித்த நடவடிக்கைகள் போன்ற பல படங்கள் காண்பிக்கப்படும்.
ஏகாதிபத்திய நாடுகளின் பிடியில் திட்டமிட்ட மனித அழிப்புக்கள் நடந்து முடிந்த பின்னர், எஞ்சியிருக்கும் விரக்தியும்வெறுப்பிலும் இருந்து புதிய போராட்ட சக்திகள் உருவாகிவிடக் கூடாது என்பதில் அவர்கள் அவதானமாகக் காய்களை நகர்த்துவார்கள்.
1. தாங்கள் நடத்திய மனிதப் படுகொலைகளுக்கு எதிராக தங்களைச் சார்ந்தவர்களை வைத்தே பேசுவார்கள். அமரிக்க அரசின் உப கூறுகளான ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித் உரிமை கண்காணிப்பகம், ரான்ஸ்பரன்சி இன்டர் நாஷனல் போன்ற அமைப்புக்கள் மனித உரிமையைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும்.
2. தாங்கள் நடத்திய படுகொலைகளுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளையும் தாங்களே முன்னெடுப்பார்கள். பிரித்தானியாவின் அத்தனை ஆக்கிரமிப்புக்களையும் படையெடுப்புக்களையும் நியாயப்படுத்தும் சனல் 4 போன்ற வலதுசாரி ஊடகங்கள் பிரச்சார நடவடிக்கைகளைக் கையகப்படுத்தியமை இங்கு சிறந்த உதாரணம்.
3. மேற்சொன்ன இரண்டும் நடைபெறும் அதேவேளை தமக்குச் சார்பான தலைமையை தோற்றுவித்துக் கொள்வார்கள். இலங்கையிலும் ஐரோப்பிய நாடுகளிலும் அவர்கள் தோற்றுவித்த தலைமைகள் இதற்கு சிறந்த உதாரணம்.
இந்ததச் சூழலில் ஏமாற்றப்படுவது தெரியாமலே மக்கள் ஏமாற்றப்படுவார்கள்.
எல்லா சந்ததர்ப்ப வாதிகளும் வியாபாரிகளும் ஒருங்கிணைந்து கொள்வார்கள். வாக்குப் பொறுக்கிகள், தேசிய வியாபாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரச ஆதரவாளர்கள், ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் போன்ற அனைவரும் ஒரே நேர்கோட்டில் இணைந்து கொள்வார்கள்.
எரிக் சோல்கையிம் கூறிய அனைத்தையும் வைத்துக்கொண்டு அதெல்லாம் அவரது தனிப்பட்ட இயல்பே தவிர ஏகாதிபத்தியங்களின் அழிப்பு நடவடிக்கைகள் எனபதெல்லம் பொய் என்ற முடிவுகளை சந்தர்ப்பவாதிகள் முன்வைப்பதை இங்கு காணலாம். இவர்கள் எரிக் சொல்கையிமின் தனிப்பட்ட இயல்புகள் குறித்துப் குறை கூறுவதும் புலிகளை அவர் தவறாகக் கூறிவிட்டார் என்று குறுக்குவதும் ஏகாதிபத்தியங்களைக் காப்பாற்றவே.
இவை அனைத்தையும் மீறி மக்கள் மத்தியில் புதிய விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் இன்று ஏகாதிபத்தியங்கள் தமது விடுதலைக்கு எதிரானவை என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். வியாபாரிகளை இனம் கண்டுகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலையில் மக்களை மீண்டும் மாயைக்குள் வைத்திருக்க முற்படும் கூட்டம் எரிக் சொல்கையின் நல்லவரா கெட்டவரா, பிரபாகரன் துரோகம்செய்தாரா இல்லையா என்ற எல்லைக்குள் மட்டுமே இந்த விவாதங்களை முடக்க முற்படுகின்றது.
இதனூடாக தமது எஜமானர்களுக்கு இவர்கள் சேவையாற்ற முற்படுகின்றனர்.
எரிக் சோல்கையிம் தனது நேர்காணலில் பல தவறுகளை இழைத்த்ள்ளார். முதலில் ‘2009-ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதிவடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச பேச்சாளர் குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரை தடுத்துவிட்டார்.எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர்’ என்று பேச்சோடு பேச்சாகச் சொல்லிவைக்கிறார் சோல்கையிம்.
இங்கு மிக முக்கியமான விடயம் கே.பி என்ற சர்வதேச புலனாய்வு நிறுவனமான இன்ரர் போலால் இன்று வரைக்கும் தேடப்படும் சடவிரோத நபர் வசிக்கும் இடமும் அவரின் நடமாட்டத்தையும் நெருக்கமாகத் தெரிந்து வைத்திருந்திருக்கிறார்கள். ஆக, இவர்கள் சர்வதேச சட்டவிதிகளுக்கு முரணாக நடந்துள்ளார்கள் என்பது ஒரு புறமிருக்க இன்ரர்போலிற்கும் அமரிக்கவிற்கும் தெரியாமல் இந்த நாடகத்தை இவர்கள் நடத்தியிருக முடியாது.
பின்னதாக கோலாலம்பூருக்கே சென்று கே.பி ஐச் சந்தித்தாகக் கூறுகிறார் சொல்கையிம். அதனை உறுத்திப்படுத்துகிறார் ருத்ரகுமார். இன அழிப்பு நடந்து முடிந்த பின்னரும் கூட கே.பி என்பவர் சனல் 4 தொலைக்காட்சி, பி.பி.சி செய்திச் சேவை, அவுஸ்திரேலிய வானொலி ஆகியவற்றிற்கு நேர்காணல்களை வழங்குகிறார். அதாவது தேடப்படும் சர்வதேசக் குற்றவாளி இந்த நேர்காணல்களை வழங்குகிறார். கே.பி இன் நடமாட்டம், இருப்பிடம், தொடர்பு முகவரி ஆகியவற்றைத் தெரிந்து வைத்திருக்கும் நோர்வே, அதன் எஜமான நாடு அமரிக்கா ஆகிவற்றின் அனுசரணையோடே இவை நடைபெற்றிருக்க வேண்டும்.
இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட அமரிக்கா, நோர்வே, போன்ற நாடுகள் பார்த்துக்கொண்டிருக்க அவர்களின் ஆதரவோடு கே.பி சுவிட்சர்லாந்திற்கு வந்து புலிகளின் ஆதரவாளர்களைச் சந்திக்கிறார். அதற்கும் நோர்வே தான் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்ததா என்பது தெளிவில்லை. அதே வேளை நாடுகடந்த தமிழ் ஈழம் என்ற அமைப்பு உருவாக்கப்படுகிறது.
ஆக, அமரிக்கா, நோர்வே ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் சர்வதேச உளவு நிறுவனங்கள் போன்றவற்றின் அனுசரணையோடே நாடுகடந்த தமிழ் ஈழம் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் என்பது தெளிவாகிறது. அதாவது இன அழிப்பை நடத்திய நாடுகளின் துணையுடனேயே நாடு கடந்தத தமிழ் ஈழம் உருவாகியிருக்கிறது என்பது இங்கு முதலாவதும் முக்கியமானதும் ஆகும்.
சுவிட்சர்லாந்துக்கு வந்து சென்ற கே.பி ஒகஸ்ட் மாதம் ஐந்தம் திகதி 2009 ஆண்டு கோலாலம்பூரில் வைத்து இலங்கை அரசால் கைது செய்யப்ப்பட்டு இலங்கைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
இன்டர்போல் போன்ற உளவு நிறுவனங்களின் கைப்பிள்ளையான நோர்வே இன் நிழலில் வாழ்ந்த கே.பி, ஹம்பாந்தோட்டை தாதாவான மகிந்த ராஜபக்சவினால் நடத்தப்படும் அரசால் கோலாலம்பூரில் வைத்துக் கைது செய்யப்படுவது ஒன்றும் தற்செயலானது அல்ல.
கே.பி இன்ரர்போலின் அனுசரணையோடு நோர்வேயின் தரகு நடவடிக்கைகளின் பின்னர், புலம்பெயர் மக்களைக் கையாளும் நோக்கோடு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கே.பி இப்போது வெளிப்படையாகச் செயற்படும் நிலையில், இனடர்போல் நிறுவனம் மூச்சுக்கூட விடாமல் பார்த்துக்கொண்டிருப்பதே இதனை உறுதிப்படுத்துகிறது.
இலங்கைக்குச் சென்ற கே.பி அங்கிருந்து ஒவ்வொருவராக இலங்கை அரசை நோக்கிக் கவர்ந்திழுக்கிறார். மிகவும்பாதுகாப்பான சூழலில் அவர் வாழ்கிறார். புலிகள் இன்னும் இருக்கிறார்கள் என்று இலங்கை அரசு பிரச்சாரம் செய்ய நாடுகடந்த தமிழீழம் பயன்பட்டுப் போகிறது. கே.பி அதனை இலங்கையிலிருந்தே வழி நடத்துகிறார் என்பது இலகுவன சமன்பாடு.
தவிர, இன்னும் சற்று பின்னோக்கி ‘பிளாஸ் பாக்கில்’ பார்த்தால் இறுதிக்கட்ட சரணடைவு நாடகங்களை கோலாலம்பூரில் இருந்தவாறே நோர்வே அமரிக்கா இந்தியா போன்ற நாடுகளின் ஆலோசனையுடன் கே.பி நடத்தியிருக்கலாம். உருத்திரகுமாரினதும், கே.பியினதும் அறிக்கைகள் இவ்வாறான பல சந்தேகங்களை நிறுவும் பாணியில் உள்ளது. இது தவிர விக்கிலீக்ஸ் கேபிளில் கூறப்பட்ட தகவலின் அடிப்படையில், இறுதிக் கட்டத்தில் புலிகளின் தலைவர்கள் சரணடைய விரும்பியிருக்கிறார்கள். இந்த சரணடைவிலும் கொலைகளிலும் கே.பி., நோர்வே, இந்தியா மற்றும் பலர் பங்காற்றியிருக்கலாம் என்பது தெளிவாகிறது.
தமிழ் ஈழத்திற்கான போராட்டம் கூர்மையடைந்த காலத்திலிருந்தே அது ஏகாதிபத்தியங்களால் பயன்படுத்தப்பட்டது. இறுதியில் பல்லாயிரம் மனிதர்களோடு அது மறைந்துபோனது. இதுவரை மக்களை வஞ்சித்தவர்கள், அழித்தவர்கள், மற்றும் அவர்களின் எடுபிடி முகவர்கள் போன்றோரை இனம்கண்டு கொள்வதன் ஊடாகவே புதிய அரசியல் தலைமை உருவாக முடியும். தீர்க்கமான அரசியல் முன்வைக்கப்படுமானால் உலக மக்களின் ஆதரவோடு தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் வெற்றிபெறும்.