Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொலைகளும் தற்கொலைகளும் நிறைந்த கொடுங்கனவாய் மாற்றப்பட்ட தமிழீழம் : ஜமாலன்

“எங்களை உள்நாட்டில் இடம் பெயர்ந்த மனிதர்களாக பார்க்கவில்லை உள்நாட்டில் இடம் பெயர்ந்த கைதிகளாகவே பார்க்கிறேன். முன்பு பிரபாகரன் (LTTE தலைவர்) கட்டுப்பாட்டில் இருந்த சிறையில் இருந்தோம். இப்போது அரசாங்க கட்டுப்பாட்டு சிறையில் இருக்கிறோம்.” – இலங்கையில் உள்ள அகதிமுகாமில் 3 மாதங்களாக மணைவி மற்றும் பெண் குழந்தையுடன் பிடித்துவைக்கப்பட்டுள்ள பிரேம்குமார் என்பவர் மனித உரிமை ஆணையத்திடம் கூறியது.

(Sri Lankan Government Stalls On Release Of Tamil Detainees – By Sarath Kumara http://www.countercurrents.org/kumara040809.htm)

“மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.”

– தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் – நவம்பர் 27 2008 மாவீரநாள் உரை.

பரவலாக எழுதப்படும் ஈழம் பற்றிய எழுத்துக்களில் புலி ஆதரவு-எதிர்ப்பு உரையாடலை (உரையாடல்கூட அல்ல விவாதத்தை) ஒரு நிரந்தரப் பத்தியாக போட்டுவிடலாம் என்று தோன்றும் அளவிற்கு பேசி பேசி சலித்துவிட்டது. சமீபகாலங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்ட ஈழம் குறித்த எழுத்துக்களை வாசித்தால், நாம் எதிர்கொள்ளும் ஒரு அலுப்புட்டும் பிரச்சனை புலி-ஆதரவு எதிர்ப்பு நிலைபாடுகள். இதற்குள் உள்ள அரசியலை நுட்பமாக அவதானித்தால் தெரியும், புலிகளும், அரசும் என்ன சாதிக்க விரும்பினார்களோ அதற்கு எல்லோரும் பலியாகி உள்ளோம் என்பதுதான். அதாவது “தமிழீழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் தமிழீழம்” என்கிற “நெடுமாறன் நிலைப்பாடு”-தான் அது. தமிழகத்தில் புலிகள் மீது ராஜிவ் கொலைக்கு பிறகு ஏற்பட்ட மனவிரிசலை சமன் செய்ய நெடுமாறன் தனது புலி ஆதரவு நிலைபாட்டால், தமிழீழப் போராட்டத்தையே புலிகளின் போராட்டமாக அல்லது புலிகளுக்கான போராட்டமாக மாற்றிவிட்டார். ஒருவகையில் அளப்பறிய முறையில் இதனை விடாது பல தொடர் அரசு ஒடுக்கமுறைகளுக்கு மத்தியில் அவர் செய்து வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக தமிழீழம் என்கிற சொல்லாடல் மாறி புலிகள் என்கிற சொல்லாடலாக வெளிப்படத் துவங்கியது. ஒருகட்டத்தில் தமிழீழம் என்பதே புலிகள் என்கிற அமைப்பு குறித்த நிலைப்பாடாக மாறிப்போனது. இதற்கான புறச்சூழல்களையும் புலிகள் தங்களது ஆள் மற்றும் ஆயுத பலத்தின் மூலம் ஆரம்பம் முதல் உருவாக்கி வந்தார்கள். தமிழீழத்தின் கனிந்து வந்த அக மற்றும் புறச் சூழல்களை தங்களக்கு சாதகமாகவும், தங்கள் கைவசத்திலும் வைத்திருந்தனர். புலிகளின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்த தமிழீழத்தின் வன்னிப் பகுதிகள் ராஜபக்ஷே வர்ணித்த இந்த “இறுதிப்போரில்”(?) முற்றிலுமாகத் கொத்தெறிக் குண்டுகளால் சிதைத்து அழிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக போர் எந்திரமாக மாற்றப்பட்ட சிங்கள – தமிழின உடல்கள் ஒன்றை ஒன்று மோதி அழித்துக் கொண்டன. இந்த இறுதிப்போரில் மனித நாகரீகமே தலைகுனியும் அளவிற்கு சிங்கள இராணுவ உடல்கள் தமிழ் இன உடல்களை அழித்தொழித்தன. பொதுமக்கள் புலிகள் என்கிற எந்த வேறுபாடுகளும் இன்றி கொன்று குவித்தன.

இன்று புலிகள் என்கிற அமைப்பு காட்சிப்புலத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்ட நிலையிலும்கூட, புலிகளை ஒட்டியும் வெட்டியுமே ஈழம் பற்றிய நிலைப்பாடுகள் அலசப்படுகின்றன. ‘நலன்புரி முகாம்’ என்று திறக்கப்பட்ட அகதி முகாம்களில், புலிகளை களையெடுப்பதாகக்கூறி எண்ணற்ற அப்பாவித் தமிழர்கள் கொன்றும், காணமாலும் அழிக்கப்படுகிறார்கள். இளைஞர்களைப் பிரித்து கொன்றொழிக்கும் கொடும்பாதக செயலை ராஜப்க்ஷே அரசு செய்துகொண்டுதான் உள்ளது. பெண்களை தினமும் எடுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்வதும், இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்ட ஆட்கள் காணாமல் போய்விடுவதும், எந்த அடிப்படை வசதிகளுமற்ற முகாம்களில் கடுமையான நோய்த் தொற்றுகள் எற்பட்டு மருத்துவ வசதி, உணவின்மை, சுகாதாரமின்மை என மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருப்பதுமான ஒரு அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். புலிகளை ஒழிப்பதாகச் சொல்லி ஒட்டுமொத்த தமிழினத்தையே கருவறுக்கும் செயலில் ஈடுப்பட்டுள்ளது. ஊடகங்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்பதுடன், அரசிற்கு எதிராக உண்மை நிலைகளை எழுதுபவர்களை நாட்டைவிட்டு வெளியெற முடியாமல் விசா தராமல் செய்துவிடுவதாக மிரட்டி வருவதாக தெரிவிக்கிறது சரத் குமாராவின் கட்டுரை. (http://www.countercurrents.org/kumara040809.htm) பிரபாகரனின் அல்லது புலிகளி்ன் இருப்பு தமிழ் மக்களைவிட ராஜபக்ஷேவிற்கும், சிங்கள அதிகார வர்க்கத்தி்ற்க்கும்தான் அவசியப்பட்டிருக்கிறது என்கிற கசப்பான உண்மையை பிரபாகரன் மரணம் பற்றிய மர்மத்திலும், அகதி முகாம்களில் புலிகளின் இருப்பு என்கிற அறிவிப்புகளின் வழியாக தமிழ் மக்களை சிங்கள இனவெறி அரசு கொன்றொழிப்பதிலும் காணமுடிகிறது.

தற்கொலைப்படைத்தாக்குதல் என்கிற வெடித்துச் சிதறும் போர் எந்திரமாக மனித உடலை கட்டமைத்து, உலக பயங்கரவாதத்திற்கு ஒரு புதிய தொழில்நுட்பத்தை அளித்தது விடுதலைப் புலிகள் இயக்கம். அதன் உச்சமாக நிகழ்ந்த இஸ்லாமிய தீவிரவாதத்தின் 9/11 நிகழ்வின் வழியாக, உலக பயங்கரவாதம் என்கிற சொல்லாடலை புஷ்ஷின்-அமேரிக்கா கையில் எடுத்து உலகின் எல்லாவித விடுதலை மற்றும் மக்கள் உரிமைக்கான இயக்கங்களையும் பயங்கரவாதிகள் என ஒருபடித்தான சொல்லாடலுக்குள் கொண்டுவந்தது. ஈழத்திற்கு எதிரான ராஜபக்ஷேவின் ‘இறுதிப்போர்’ இந்த உலக அரசியல் மாற்றத்துடன் அதாவது “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்கிற புஷ்-அமேரிக்க நலனைக் கொண்ட இணையெதிர்மை-அரசியலால் (binary politics) நிகழ்த்தப்பட்ட ஒன்று. அமேரிக்க குடிமகனான மகிந்தாவின் சகோதரர் கோத்தபாயாவும் புஷ்ஷின் இந்நிலைபாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்தப் போரை நடத்தினார். இந்நிலைப்பாட்டின் அடிப்படையில் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்ட பிறகு, இந்த இறுதிப்போர் துவக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் அனைத்து சர்வதேச நேர்முக, முறைமுக உதவிகள் நிறுத்தப்பட்டன என்பதுடன், புலிகளின் அரசியலற்ற இராணுவ முனைப்பு, அவர்களை மக்களிடமிருந்தும் தனிமைப்படுத்தியது.

அடிப்படை போர் அறங்கள் அனைத்தும் கைவிடப்பட்ட நிலையில் மக்களை பலிகடாவாக்கி இந்த போர் ‘பிரபாகரன் மரணம்’ என்கிற நிகழ்வுடன் நிறுத்தப்பட்டது. ஒரு திரைப்படத்தின் அல்லது நாடகத்தின் அல்லது கதையின் உச்சக்கட்டக் காட்சியைப்போல அந்த நிகழ்வு நடந்து முடிந்தது. இந்தியா தேர்தலி்ல் மூழ்கியிருந்தபோது, புலிகளின் நிலப்பகுதி முற்றிலுமாக நெருக்கிப் பிடிக்கப்பட்டு, கொத்தெறி குண்டகளை விசி கூட்டம் கூட்டமாக மக்களைக் கொன்று குவித்து, அழிததொழிப்பு நாடகத்தை எந்த எதிர்ப்புமின்றி நடத்தி முடித்தது சிங்கள இராணுவம். இந்திய தேர்தலில் காங்கிரசின் வெற்றியுடன் பிரபாகரன் மரண அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இலங்கை இந்திய ஆதிக்க வர்க்கம் ஒருசேர வெற்றிக் களிப்பில் மிதக்கிறது. அந்த செய்தி வெளிப்பட்ட சில கணங்களில் தமிழகத்தில் ஒரு வெறுமை, ஒரு திகைப்பு. மனதிற்குள் எல்லோரிடமும் ஒரு சொல்லவியலாத துயர் இருந்ததை உணர முடிந்தது. வழக்கமான கதாநாயக மனோபாவத்தில் திளைத்த தமிழர்களின் ‘திரைத்தனம்’ என்ன செய்வது என்ற தெரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டு ஒரு “அழுகாச்சி காவியம்” பாடக்கூடத் திராணியற்றிருப்பதைப்போல இருந்தது. தனது ரசிக மணோபாவத்தில்கூட எதிர்ப்புகளை செய்ய இயலாமல், அஞ்சலிகளை நடத்தவிடாமல் செய்திகளை ஊடகங்கள் குழப்பியடித்தன.

உண்மையில், சிங்கள-இந்திய அதிகார வர்க்கம் ஊடகங்களின் வழி இந்த குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றியும் கண்டது. தமிழீழப் பிரச்சனைக்கான ஒரு துருப்புச் சீட்டாக புலிகளை பயன்படுத்துவதற்கான ஒரு மர்மத்தை காப்பாற்ற வேண்டிய தேவை அவைகளுக்கு என்றைக்கும் இருந்துகொண்டே இருக்கும் என்பதையும் இவை நமக்கு தெரிவிக்கின்றன. அதை ஊடகங்களின் வழியாகவும், அவற்றின் “உண்மை அறிந்து சொல்லும் தார்மீகப் பொறுப்பு” என்கிற கசிவுகள் வழியாகவும் சிறப்பாக செய்தன. ஒரு போராளியின் மரணம் பற்றிய செய்தி ‘புலிவருது புலிவருது’ என்கிற பள்ளிப் பாடசாலைக் கதையாக மாற்றப்பட்டுவிட்டது என்பது பேரவலங்களில் ஒன்று. புலி வருமா வராதா? என்பதைவிட புலி இருப்பிற்கான இந்த கதையாடல் என்னென்றைக்கும் ஏற்படுத்தும் கிலி போதுமானது சிங்கள/தமிழ் இணை எதிர்மை அடையாள அரசியலை நடத்த சிங்கள இனவெறி அரசிற்கு என்பதே இதில் அவதானிக்க வேண்டிய விடயமாகும்.

பிரபாகரன் மரணம் என்பதில் உள்ள பலவிதமான விவாதங்களை புறந்தள்ளிப் பார்த்தால், புலிகள் நம்பிய கருத்தியலின் ஒரு முடிவாக அது அமைந்தவிட்டது என்பதே உண்மை. அரசியல்நீக்கம் செய்யப்பட்ட மரபான இராணுவப் போர்ப்பாதை என்கிற புலிகளின் கருத்தியல் தோல்வியாகவே அது முடிந்தது. மையமற்ற கொரில்லா போர்முறையிலிருந்து விலகிச் சென்ற புலிகள் இயக்கம், மையப்படுத்தப்பட்ட இராணுவமாகியதும், கொரில்லாக்களின் அடிப்படை கருத்தியலான மக்களிடம் தங்கியிருத்தல் என்பதிலிருந்து விலகியதுமே ஒரு முக்கிய காரணம் எனலாம். கொரில்லாக்களின் பதுங்கு குழிகள் எப்பொழுதும் மக்கள்தான் என்பதை மறந்து அதனை நிலங்களில் தோண்டியதன் விளைவாக மக்களிடம் அதிகாரம் செலுத்தும் மரபான இராணுவ வடிவமாக மாறியது என்பதே புலிகளின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது எனலாம். இந்த மாற்றத்திற்கு புலிகளின் மக்களை புறந்தள்ளிய தனிமனிதவாதத்தின் அது ஏற்படுத்திய கவர்ச்சிகர சாகசக் கருத்தியலின் விளைவு எனலாம். புலிகளின் மறைவிற்கு பின்பு தமிழீழத்தின் எதிர்காலம் என்ன? என்பது இன்று “மில்லியன் டாலர் கேள்வி” என்பார்களே அதைப்போன்றதொரு கேள்விக்குறியாக மாறி உள்ளது. அல்லது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டம் அதன் துவக்கப் புள்ளியிலிருந்து பின்னோக்கி வெகுதூரத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது.

இந்தப் போர் விடுதலைப்போராக போராளிகளுக்கும் அரசிற்கும் இடையில் துவங்கி, நிலத்தை கைப்பற்றவும், காப்பாற்றவுமான இரண்டு இராணுவங்களுக்கு இடையிலானதாக நிகழ்ந்து, வழக்கம்போல் வலுவுள்ள இராணுவம் வென்றுள்ளது. மக்களுக்கான போர் என்பதிலிருந்து நிலத்திற்கான போராக மாறியதுதான் புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம் எனலாம். மக்கள் போராளிகள் மக்களின் மனசாட்சியாக இருக்க வேண்டுமே தவிர மக்களின் மரணசாட்சியாக இருக்கக்கூடாது என்பது மிகவும் அடிப்படையான கோட்பாடாகும். இதன்பொருள் மக்களின் கருத்துக்களை போராளிக் குழுக்கள் பிரதிபலிக்க வேண்டும் அல்லது தங்களது கருத்தியலை மக்களிடம் பிரதிபலிக்கச் செய்ய மக்களை பயிற்றுவிக்க வேண்டும். போராளிக் குழுக்கள் அரசாக மாறுவது என்பது மக்கள் மீது சுமத்தப்படும் மற்றொரு விலங்கே. அந்த விலங்கை முற்றாக அனுபவித்தவர்கள் தமிழீழ மக்கள், குறிப்பாக போரின் இறுதி 3 மாதங்களில் பலிகடாவாக்கப்பட்ட 3 லட்சம் ஈழமக்கள்.

போராளிகள் இராணுவமாகியதுதான் இந்தப் போரின் இறுதிக் கட்ட காட்சிகளை நாம் காணும்படிச் செய்தது. ஒருவகையில், போராளிகளான புலிகளை இராணுவ மயப்படுத்தியதில் நம் அனைவருக்கும் பங்கு உண்டு. அது தமிழ் மறம், போர், பரணி, இராஜஇராஜசோழன், சங்ககாலம், நெஞ்சை வாளால் கிறியது, புலியை முறத்தால் அடித்தது உள்ளிட்ட பல தமிழ்-தேசிய-பிம்பங்களின் மிகை-உருவகங்கள் வழி கட்டப்பட்டது. அதில் தமிழகத் தமிழர்களுக்கு மிக, மிக முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக தமிழக அறிவுஜீவிகள் பங்கும் அதில் சளைத்தது அல்ல.

தமிழ் அல்லாத இந்திய மற்றும் சிங்கள அறிவுஜீவிகளுடன் ஒரு உறவை இதுவரை தமிழ் அறிவஜீவிகள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. காவிரிப் பிரச்சனைக்காக அல்லது முல்லைப் பெரியாருக்காக யாராவது தமிழரல்லாதவர் குரல் கொடுக்கிறாரா பாருங்கள். காரணம், மற்ற மாநில பிரச்சனைகளுக்காக நாம் குரல் கொடுப்பதில்லை. இதுதான் இனவாத அரசியிலின் பேரழிவு விளைவுகளில் ஒன்று. இடதுசாரி அமைப்புகளும்கூட மற்றொருவகை பிராந்திய வாதத்தால் பீடிக்கப்பட்டுள்ளது. இப்படிப் பார்ப்போம் இந்திய கம்யுனிச கட்சிகள் சிங்கள கம்யுனிச கட்சிகளுடன் ஒரு நல்லுறவை வளர்த்து வந்திருந்தால், இன்று ஒரு பொது உரையாடலை உருவாக்க அது வாய்ப்பாக இருந்திருக்கும். அதை அவர்களும் செய்யவில்லை, அவர்களை விமர்சித்த மற்றவர்களும் செய்யவில்லை. சீட்டுப் பிரச்சனைகளை தாண்டி சிந்திக்க அவர்களுக்கும் நேரமில்லை என்ன செய்ய?

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் உள்ளிட்ட பல போராட்டங்கள் எதிர்எதிரான அமைப்புகளான காங்கிரஸ் துவங்கி பிஜேபி வரை தமிழகத்தில் நடத்தின. ஒருவகையில் இப்போராட்டங்கள் எல்லாம் உள்ளீடற்ற ஒரு உணர்விலிருந்து கிளைத்து வந்தன அல்லது அரசியல் சுயலாபங்கள் மற்றும் ஓட்டுகள் குறித்ததாக மாறின. முத்துக்குமார் என்கிற ஆதித் தமிழ்ச் சடங்கிலிருந்து கிளைத்த தொன்மமும் (இதை அவர் பிரதியில் எழுதி உள்ளார். கூட்டமாகத் தற்கொலை செய்யாமல் தினம் ஒருவராக அதிகாரத்தின் முன் தற்கொலை செய்துகொண்டு ஒரு இனமே அழிந்துபோகும் ஆதிச்சடங்கு பற்றி) ஒரு கட்டத்தில் உள்ளீடற்றதாக மாறிவிட்டதையே ஈழத்தை பெற்றுத் தருவேன் என்று சூழரைத்த கட்சிகள் இந்திய தேர்தலில் அடைந்த தோல்வி நமக்குச் சொல்கிறது. அவரது பிரதி முன்வைத்த பல அரசியல் தெரிவுகள் அவர் சிதைப் புகையுடன் மறைந்து போய்விட்டது. மாணவர்கள் முத்துக்குமார் என்கிற தொன்மத்தின் அடிப்படையில் அவரது பிரதியை முன்வைத்து போராடவோ அல்லது அதற்கு வழிகாட்டவோ அமைப்புகள் இல்லாமல் தன்னெழுச்சியாக மாறி நீர்த்தப்போயின. மாணவர்களையும் ஈழப்போராட்டத்தையும் நீர்த்துப்போகச் செய்தததில், பலனை அறுவடை செய்ய முயன்ற கட்சிகள் மற்றும் ஈழ ஆதரவு இயக்கங்களின் பங்கு முக்கியமானது எனலாம்.

இவ்வியக்கங்கள் பிரபாகரனின் மரணச் செய்தி தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்க வேண்டிய தன்னெழுச்சியைக்கூட, அவரது மரணத்தை பற்றிய அய்யங்கள், யூகங்கள் வழியாக ஒன்றுமில்லாமல் செய்துவிட்டன. தொப்புள்கொடி தாயக தமிழகம் என்றெல்லாம் வம்சாவழி அரசியல் பேசுபவர்கள் யாரும், ஈழ அகதிகள் தமிழக அரசு மற்றும் இந்திய அரசால் படும் சொல்லொண்ணாத்துயர் பற்றிப் பேசுவதில்லை. தமிழகத்தை பின்புலமாக்கி ஈழத்தமிழர்களுக்கு ஒரு நல்வாழ்வு தரும்படி இந்திய தமிழக அரசுகளை யாரும் நிர்பந்திக்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உருப்பினரான தோழர் ரவிக்குமார் ஈழ அகதிகள் குறித்து சட்டமன்றத்தில் பேசினார், அரசு சார்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து அளித்தார். அரசின் கவனத்தை அகதிகள் பக்கம் திருப்ப அவர் எடுத்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கது. அவரது முயற்சி தவிர்த்து மற்ற தமிழினம் பேசும் அரசியல்வாதிகள் ஈழ அகதிகளுக்காக என்ன செய்தார்கள் என்பது குறித்த அதிகமாக அறியக் கிடைக்கவில்லை. ஆனால் நிறைய பேசினார்கள் அல்லது ஈழத்தமிழில் சொன்னால் நிறைய கதைத்தார்கள். ஈழத்தில் அல்லல்படும் மக்களின் அளவிற்கு சற்றும் சளைத்ததல்ல அகதிகள் என்ற பெயரில் இங்கு அவர்கள் படும் அவலங்கள். அது குறித்து அதிகமாக யாரும் பேசவும் இல்லை, கதைக்கவும் இல்லை. தமிழக அறிவஜீவிகள்கூட ஈழப்போராட்டத்திற்கு குரல் கொடுத்த அளவிற்கு அகதிகள் பிரச்சனையை அதிகமாக கவனத்திற்கு கொண்டுவரவில்லை. புலியை மையமாக வைத்து ஆதரிப்பதா எதிர்ப்பதா என்கிற எரிந்தகட்சி எரியாத கட்சி விவாதத்திலேயே காலம் கடந்துவிட்டது.

புலிகளின் அளப்பறிய அர்பணிப்பும், போராட்டமும், உயிரிழப்பும் கணக்கில் கொள்ள வேண்டிய அதே நேரத்தில் அவர்களது அரசியலற்ற இராணுவ முனைப்பால், தங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொண்டதாலும், அடிப்படையில் ஜனநாயகத் தன்மையற்ற சர்வாதிகார வாதத்தை நம்பியதாலும் அவ்வியக்கத்தின் கருத்தியல், இன்று தமிழீழப் பிரச்சனையை அதன் மக்களை ஒரு நகரமுடியாத இறுக்கத்தின் முனையில் அல்லது முட்டு சந்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இதன் மற்றொருபுறம் சிங்கள அப்பாவி மக்கள் மீது நடத்திய பல தாக்குதல்கள், சிங்கள-தமிழின உறவிற்கோ உரையாடலுக்கோ சாத்தியமற்ற நிலையை உருவாக்கி உள்ளது. இலங்கை-இந்திய இராணுவக் கூட்டினால் கொன்றழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும், தமிழ் ஈழ-சிங்கள அப்பாவி மக்களை அகதிகளாக்கிய, அணாதைகளாக்கிய கொடுமைகளையும் கணக்கில் கொண்டு இந்தியன் என்ற முறையில் தமிழக தமிழர்களுக்கு இந்தப் பிரச்சனையில் கூடுதல் பொறுப்பு உள்ளது. இலங்கை இராணுவம் தனது தேசிய வெறியால் சிங்கள மக்களை ஒரு பெருந்தேசியவெறி மயக்கத்தில் வைத்திருந்தபோதிலும், தொடர் போரில் அவர்களது இழப்பும், அரசின் இராணுவச்செலவை தலையில் சுமக்கும் பாரமும் ஒரு பெருந்துயராக மாறியுள்ளது. இந்நிலையில் எந்தவித அரசியல் உரையாடலுக்கும் சாத்தியமற்ற நிலையே உருவாக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, இந்த 25 ஆண்டுகளில் சிங்களிரிடமிருந்து நமக்கான ஒரு ஆதரவுக் குரலை உருவாக்குவதில் தமிழக அறிவுஜீகள் மற்றும் தமிழக அரசியல் சக்திகள் பங்காற்றவில்லை என்பதுடன் அதை ஒரு ஜனநாயகக் கடமையாகக்கூட உணரமுடியாமல் இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருந்தனர் என்பது முக்கியம். நமக்கான நியாயத்தை நாம் முன்வைப்பது என்பது பிறருக்கான நியாயத்தை எந்த அளவு அஙகீகரிக்கிறோம் என்பதிலிருந்தே ஏற்கவும், பரவலாக்கமும், பலமும் பெற்றதாக மாறுகிறது. அப்படி ஒரு பலத்தை “தமிழ் ஈழ சுயநிர்ணய உரிமைக்கான” போராட்டத்திற்கு நாம் வழங்காமல் விட்டது ஒரு வரலாற்றுப் பிழையாகும். அதாவது தமிழ் ஈழ சுயநிர்ணய உரிமைப் போரின் நியாயப்பாட்டை, சிங்கள மக்களின் பல அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதன் வழி கொண்டு சென்றிருக்க வேண்டும். அப்படி ஒரு சாத்தியத்தை தமிழக தமிழர்களோ அல்லது ஈழத் தமிழர்களோ உருவாக்கவில்லை. அந்த பிழையை சரி செய்ய, தமிழர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் ஈழத்தமிழர்களின் உரிமைப்போரில் பங்கெடுப்பதும் காத்திரமாக இப்பிரச்சனையை முக்கியமான அவதானிப்புகளுக்கு கொண்டு செல்வதும் இன்று அவசியம்.

அதேநேரத்தில் இந்த 25 ஆண்டகளில், இந்திய ஆதிக்கச் சக்திகள் ஆரம்பம் முதல் ஈழப்பிரச்சனையில் தமிழின விரோத நிலைப்பாட்டை அல்லது தமிழ் இனத்திற்கான போராட்டம், தனிநாடு என்பதில் எதிர்நிலைப்பாட்டையே கொண்டிருந்தன. இனஉணர்வு பேசும் திராவிடக்கட்சிகள் கடந்த 40 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்தபோதும், அயலுறவுக் கொள்கையில் ஆதிக்கம் செலுத்தும் வண்ணமோ அல்லது அயலுறவுக் கொள்கையில் ஒரு நிலைபாடோ இன்றியே இருந்து வந்துள்ளன. குறைந்தபட்சம் நடுவண் அரசிடம் ஒரு அயலுறவு அமைச்சரைக் கோரிப்பெறுவதையோ அல்லது இந்திய அயலுறவுக் கொள்கையில் ஆதிக்கம் செலுத்தும் வண்ணம் ஒரு ‘கோர’-த்தையோ அல்லது அதிகாரிகளையோ உருவாக்கவில்லை. பணம் கொழிக்கும் கப்பல் மற்றும் போக்குவரத்துத்துறை கிடைக்கவில்லை என உள்ளிருப்பு மெளனப் போராட்டம் நடத்திய திராவிடத் தலைவர், அயலுறவுக் கொள்கை மற்றும் அயல்உறவுத் துறைபற்றிய எந்த அக்கறையுமற்று இருந்துவிட்டு, கடிதமும், கண்ணீருமாக காலம் கழித்தார். விளைவு இந்திய-சீன புவிசார் அரசியல் முரண்பாட்டைப் பயன்படுத்தி, எம். கே. நாராயண துவங்கி சிவசங்கர் மேனன், விஜய் நம்பியார், பிரணாப் முகர்ஜி மற்றும் இந்து ராம், மாலினி பார்த்தசாரதி, சுப்ரமண்யசாமி, சோ. ராமசாமி (இவர்கள் அனைவரும் உயர்சாதி மற்றும் பார்பனியர்களாக இருப்பது யதேச்சையானது அல்ல) என ஒரு அதிகார வர்க்க கூட்டமைப்பு தமிழகத்திற்கும், தமிழ் இனஉணர்வு மற்றும், தமிழீழ நிலைப்பாட்டிற்கு எதிராக உருவாகி அதிகாரம் செலுத்துவதாகவும் அமைந்தன. இந்த நிலமைகளே ஈழப்பிரச்சனையை இறுதியில் ராஜபக்ஷேவின் ஹிட்லர் பாணியிலான ‘இறுதி தீர்வு” (Final Solution) என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தின.

இந்தியாவை தனது எதிரி நாடாக கணித்தும், பலநிலைகளில் இந்திய எதிர்ப்பு வெறியை சிங்கள மக்களிடம் வளர்த்தும் வரும் சிங்கள அரசமைப்பானது, அடிப்படையில் இந்திய எதிர்ப்பு நிலைக் கொண்டது என்பதையும், அதற்கு எதிராக எழுந்த தமிழ் இனப் போராட்டத்தை ஆதரிப்பதன் வழியாக சிங்கள அரசை தனது நிர்பந்தங்களுக்கு கொண்டு வரமுடியும் என்கிற இந்திராவின் இராஜதந்திரத்தை கைகழுவி விட்டு, சீனாவின் ஆதரவைக் கொண்ட சிங்கள அரசிடம் இந்திய அரசு நட்பு பாராட்ட முனைவது என்பதுதான் முரண்நகை. இந்திய அரசு தனித் தமிழீழம் அமைப்பதற்கான போராட்டச் சூழலை வளர்த்துவிட்டதும் அதன் வழியாக சிங்கள அரசை நிர்பந்தித்து வந்ததும், ராஜிவ் எடுத்த சிங்கள அரசு சார் அமைதிப்படை நிலைபாட்டுடன் மாற்றமுற்ற நிலையில், ஈழப்போராட்டம் ஒரு சிக்கல் மிகுந்த புவிசார் அரசியலுக்குள் நுழைந்தது. அந்த சிக்கலை தனது ‘தனிமனித அழித்தொழிப்பு’ என்கிற அரசியலற்ற இராணுவக் கருத்தியலால் வழிநடத்தப்பட்ட புலிகள் இயக்கம், இராஜிவ் படுகொலையால் மேலும் சிக்கலாக்கியது. விளைவு, இந்திய ராஜதந்நதிரம் என்பது, சிங்கள – சீனக் கூட்டால் தீர்மாணிக்கப்படுவதாக மாறி, இன்று சிங்கள அரசின் நிர்பந்தத்திற்கு உட்பட்டதாக இந்திய அரசு மாறிவிட்டிருக்கிறது. இதன் விளைவாக உலகின் மிகப்பெரும் போர்க் குற்றவாளியான சிங்கள இராஜபக்ஷே அரசிற்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை தோற்கடித்து, சிங்கள அரசின் தீர்மானத்திற்கு சீனாவுடன் சேர்ந்து வாக்களிக்கும் நிலைக்கு இந்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்திய -சீன வல்லரசு கனவுக்குள் சிக்கிக் கொண்டுவிட்டனர் இன்றைய ஈழ மற்றும் தமிழக மக்கள்.

ஆக, இலங்கை மற்றும் தமிழீழப் பிரச்சனை என்பது மற்றொருவகையில் இந்தியப் பிரச்சனையே என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. “எவன் செத்தா எனக்கென்ன? இராமன் ஆண்டாலும் இராவணண் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல” என்கிற இந்திய ‘சாத்வீக’ மனோபாவத்திற்கு இது ஒரு எச்சரிக்கைதான் என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.

இந்நிலையில், புலிகளை எதிர்ப்பது/ஆதரிப்பது என்கிற இந்த இரண்டு பாதைகளை தவிர்த்த ஒரு மூன்றாவது பாதையை குறித்து உரையாடவும், அகதி முகாம் அல்லது தடுப்புமுகாம் வடிவில் செயல்படும் ‘நலன்புரி’ முகாம்களிலிருந்து மக்களை திரும்ப சாதரண வாழ்விற்கு திருப்புவது குறித்தும் இன்று நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். இங்கு நாம் ஒன்றை கவனிப்பது அவசியம். ஒரு எதேச்சதிகார அரசாக சிங்கள அரசு அதன் அடிப்படை பரிணாமத்திலேயே பரிணமித்திருந்தாலும், ஒரு வெளிப்படையான நிறுவனம் என்கிற முறையில் இலங்கை அரசு குறைந்தபட்சம் சர்வதேசத்தால் கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ அல்லது உரையாடலுக்கான சாத்தியத்தையோ கொண்டிருந்தது. அப்படி கட்டுப்படுத்துவதில் சர்வதேச அமைப்புகள் காட்டிய மெத்தனம் ஒருபக்கம். இலங்கை அரசை போர்குற்றவாளியாக நீதிவிசாரணை செய்வதற்கான பிரேரணை சர்வதேச அமைப்புகளால் குறிப்பாக இந்தியா உள்ளிட்ட மற்றொரு அணியாக உருவான கிழுக்குலக நாடுகளால் நிராகரிக்கப்பட்டது இன்னொரு பக்கம். இந்த சூழலில், இறுதிவரை பிற நாடுகளின் குரல்களை மதிக்காது பாசிசப் போக்கை சிங்கள அரசு கடைபிடித்து வந்த போதிலும், அது போரின் ஆரம்பத்தில் பேச நிர்பந்திக்கக்கூடிய வகையில் இருந்தது. ஆனால், புலிகளை நிர்பந்திப்பதற்கோ அல்லது அவர்களை உரையாடலுக்கு கொண்டுவந்து பொதுநீரோட்டத்தில் பிரச்சனைகளை அனுகுவதற்கோ போர் ஆரம்பித்த நாள் முதல் இறுதிவரை சாத்தியம் இல்லாமலே போனது. காரணம் ‘சூரிய – சந்திரக் குலத்தில் பிறந்தவன் முன்வைத்த காலை பின் வைக்கமாட்டான்’ என்கிற நாடக வசனம்பேசிய இந்திய புலி ஆதரவு காகிதப்புலிகளால் ஏற்பட்ட ஒரு மிகைநவிற்சியின் விளைவே எனலாம். இறுதிக்கட்டத்தில் புலிகள் சார்பாக எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் என்பது எதேச்சாதிகார சிங்கள அரசின் இன்வெறிக்கு முன்பு ஏதுமற்றதாக போனது என்பதுடன், அது அவர்களின் வெற்றிக்கான ஒரு பச்சைக்கொடியாகவே மாறிப்போனது. புலம் பெயர்ந்த தமிழர்களின் நடவடிக்கைகள் இறுதிவரை, புலிகளை நிர்பந்தித்து ஒரு இடைக்கால சமாதானப்பாதைக்கு செல்ல முயற்சி செய்யாமல், போர்பரணிப்பாடி புலிகளின் போரை துரிதப்படுத்தி சாவு முனைக்கு தள்ளியதாக மாறிப்போனது. போரில் ஈடுபட்ட இரண்டு அமைப்புகளிடமும் இறுதிவரை எந்தவித உத்தரவாதமோ நம்பகத்தன்மையோ ஏற்படவேயில்லை. இந்தப் போரின் இறுதிவிளைவாக, தற்பொழுது அங்கு சிக்கியுள்ள 3 லட்சம் மக்களின் எதிர்காலம் என்ன? என்பது குறித்த ஒரு தீர்வை எட்டமுடியாத நிலை என்பதுதான் எல்லாவற்றையும்விட பேரவலமாக உள்ளது.

இம்மூன்று லட்சம் மக்களை பல முகாம்களில் அடைத்து வைத்துள்ளது சிங்கள அரசு. அடிப்படை மனித அறத்திற்கு எதிரான பல ஒடுக்குமுறைகளை அம்மக்கள்மீது செய்துவருகிறது. இந்த ஒடுக்குமுறைகள் வழியாக தன்னை எதிர்த்த ஒரு இனத்தின் மீதான, தனது அரசின் இறையாண்மையை கட்டமைக்க முயல்கிறது. தனி ஈழம் கேட்ட மக்களுக்கு இன்று ஒரு தனி நிலப்பரப்பாக முகாம்களை ‘நலன்புரி முகாம்கள்’ என்கிற பெயரில் உருவாக்கி, அதற்கு தமிழ் தலைவர்கள் பெயர்களை சூட்டியும், இதர தமிழ் பகுதிகளுக்கு தேர்தலை நடத்துவதன் வழியாக தனது ஒடுக்குமுறைக் குறித்த ஒரு கருத்தாடலை முன்வைக்க முனைகிறது. தமிழர்களின் தனி ஈழக்கனவு என்பது நாகார்ஜீனன் குறிப்பிட்டதைப்போல ஒரு எதிர்-கனவாக மாறிவிட்டிருக்கிறது(http://nagarjunan.blogspot.com/2009/05/blog-post_10.html – எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம்). முகாம்கள் என்கிற நிலப்பரப்பு, தனிஈழம் என்கிற நிலப்பரப்பின் ஒரு மாற்றீடாக, அதாவது நாகார்ஜீனன் வார்த்தைகளில் சொன்னால் ஒரு ‘புலக்குலைவாக’, ‘முகிழாப்பிறப்பாக’ மாறிவிட்டிருக்கிறது என்பதுதான். விடுதலைப் புலிகளின் எழுச்சிக்குப்பின்பான 25 ஆண்டுகால தமிழீழப் போராட்டத்தின் இன்றைய விளைவாக மிஞ்சியிருக்கும் அவலம்தான் இந்த முகாம்கள்.

இன்று ‘எல்லைக் கடந்த தேசம்’ என்கிற ஒரு சொல்லாடலை தமிழீழம் பற்றியப் பேச்சில் பலர் கட்டமைக்க முயல்வதைக் காணமுடிகிறது. இதன்பொருள் தமிழீழம் என்பது முகாம்களாக எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எல்லைக்கு வெளியே உள்ள தமிழர்கள் சி்ங்கள இறையாண்மைக்கு உட்பட்டவர்கள். எல்லைக்கு உள்ளே இருப்பவர்கள் மனித அறத்திற்கு வெளியே சிங்கள இனவெறி அரசின் இறையாண்மைக்கு தங்களது உடல்களின் உயிர் ஆற்றலை முதலீட செய்துகொண்டிருக்கும் அகம்பன் கூறும் ‘அம்மண உயிர்நிலை’ (bare life) என்கிற வெற்று உடல்களைக் கொண்ட மனித உடல்கள். மூன்றாவதாக இவ்விரண்டு பரப்பிற்கும் வெளியில் உள்ள புலம் பெயர் தமிழர்கள் தங்கள் எல்லைக்கடந்த தேசமான ஈழம் என்கிற கனவைக் கொண்டவர்கள். ஈழத் தமிழர்கள் என்கிற ஒரு இனம் இன்று இந்த மூன்று எல்லைக்களாகச் சிதறடிக்கப்பட்டுள்ளது. அதாவது 1. நீதிபரிபாலன அமைப்புகள் மற்றும் சட்டங்கள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முகாம்கள், 2. சிங்கள அரசின் இறையாண்மைக்கு உட்பட்ட நீதிபரிபாலன – சட்டங்கள் ஆளும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி தமிழர்கள், 3. சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட புலம் பெயர் தமிழர்களின் எல்லைக் கடந்த தேசம். இவற்றில் எந்த சட்டவரம்பிற்குள்ளும் இல்லாத முகாம்களில் இருத்திவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் நிலைதான் இன்றைய பெயருந்துயராக நம்மைச் சூழ்ந்துள்ளது.

முகாம் என்கிற வடிவம் தேச உருவாக்கத்தின் ஒரு பக்க விளைவாக உருவானதே. இதனை அகம்பென் தேச உருவாக்கத்தின் நான்காம் அலகு என்கிறார். முகாம் என்பது அடிப்படையில் தேசம் என்கிற எல்லைகளை எல்லைப்படுத்துவதற்கான ஒரு குறியமைப்பாக உள்ளது எனலாம். காரணம், முகாம் என்பது தேசங்களிலிருந்து எல்லை நீக்கம் செய்யப்பட்ட ஒரு பிரத்யேக பரப்பாக உள்ளது. முகாம் என்பது ஒரு தேச அரசின் இறையாண்மைக்கு வெளியில் உள்ள ஒரு நிலப்பரப்பு. இவ்வடிவத்தின் சமூகவியல் மற்றும் கோட்பாடுகளை அகம்பென் போன்ற அறிஞர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.

முகாம் என்பது 3 முக்கிய செயலியக்கத்தைக் கொண்டது. 1. உயிர் ஆற்றல் கொண்ட தனிஉடல்களை எந்தவித அரசியல் உரிமையும் இன்றி அம்மண உயிர்நிலைக்கு குறைக்கிறது. 2. சுவர்களால் அல்லது கண்காணிப்பு கம்பி வலைகளால் பிரிக்கப்பட்டு வடிகட்டப்பட்ட தினவாழ்வு என்பதை உருவாக்கி, மனித உடல் மீதான அடக்குமுறைகளை இயல்புநிலைக்கு மாற்றியமைக்கிறது. 3. அசாதரண அரச நிலை என்பதை உருவாக்கி இறையாண்மையின் மறு -பிறப்பு என்பது நிகழ்கிறது. மனிதனின் வாழ்வுரிமை என்பது இனிமேலும் ஒரு புலன் அறிப்பொருளாகவோ, இலக்காகவோ இல்லலாமல், அது அரசு அதிகாரத்தின் ஒரு ஒடுக்கப்பட்ட தன்னிலையாக மாற்றப்படுகிறது.

முகாம்களின் எல்லை என்பது உள்ளே வெளியே இன பிரிக்கப்பட்ட இரண்டு புலங்களாக அல்லது ஒரே தேசத்தின் எதிரெதிர் வடிவங்களாக பிரிக்கப்பட்ட புலங்களாக, ஒன்று சட்டத்தி்ன் ஆட்சியும் மற்றது சட்டங்களோ நீதியோ உரிமையோ அற்ற ஆட்சியும் கொண்டதாக உள்ளது. இது உள்ளிருப்பு/வெளயிருப்பு என்கிற இரு இருப்பு நிலைகளை வேலிகளால் அல்லது சுவர்களால் பிரித்து உருவாக்கப்படுகிறது. முகாம் என்கிற வெளிக்குள் சட்டத்தின் ஆதிக்கம் செயல்படுவதில்லை. உள்ளிருக்கும் மனித உடல்கள் தங்களது மனித இருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவர்களது வாழ்வு மற்றும் சாவிற்கான உரிமையை அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் புறவெளியின் அரசு முற்றும் முழுதாக எடுத்துக் கொள்கிறது. முகாமிற்குள் அரசும் அதன் அதிகாரமும் மட்டுமே செயல்படக்கூடியதாக மாற்றப்படுகிறது. முகாமிற்குள் கொலைகள், படுகொலைகள், பாலியல் வனகொடுமைகள் அனைத்தும் சாத்தியமாக்கப்படுகிறது. அங்கு நிலவும் அசாதாரண அரசுநிலை என்பது சட்டத்தின் செயல்பாட்டை மட்டும் நிறுத்தி வைப்பதில்லை எது சட்டத்திற்கு உட்பட்டது, எது சட்டத்திற்கு வெளியில் உள்ளது என்பதை பற்றிய தெளிவற்ற குழப்பத்தை நீட்டிக்கச் செய்கிறது. அது ஒரு சோதனைக் கூடத்தைப் போன்ற வடிவமாக மாற்றப்பட்டு அங்குள்ள உடல்கள் தேச – அரசின் முற்றான அதிகாரத்தை செயல்படுத்துவதற்கான சோதனைக் களமாக மாற்றப்படுகிறது. உலகெங்கிலும் அரசு மற்றும் அதிகாரத்திற்கு எதிரான பாமர மக்களின் மனங்களுக்குள் ஒரு அசாதாரணமான அச்சத்தை உருவாக்கும் நினைவிலிப்புலக் கட்டமைப்பை செய்கிறது.

தனது அரசியல் அடையாளத்தை ஒரு தனி உடல் இழந்துபோகும், அம்மண உயிர் நிலையை உருவாக்கும் ஒரு வெளியை திறந்து விடுகிறது முகாம் என்கிறார் அகம்பென். மனிதன் என்பவன் ஒரு அரசியல் உயிரியாக கட்டமைக்கப்பட்ட இந்த உலகில், அவனது அரசியல் அடையாளத்தை இழக்கச் செய்த அடையாளமற்ற ஒருவெளியில் வாழக்கூடிய ஒரு அம்மண உயிர்நிலை என்பதை உருவாக்குகிறது. முகாம்களில் உள்ள உடல்கள் என்பது ஏதுமற்ற ஏதிலிகளாக ஆக்கப்படும் நிலையில் அவர்கள் மீதான முற்றான அதிகாரத்தை கையில் எடுக்கிறது அரசு. அவர்கள் மனிதர்களின் இவ்வுலக வாழ்விலிருந்து பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள். சிறைச்சாலை என்கிற அமைப்பில் உள்ள அடிப்படையான சில உரிமைகள்கூட மறுக்கப்பட்ட நிலையில் வாழ வைக்கப்படுகிறார்கள். அரசின் சட்டத்திற்கு முன்பு குற்றமற்ற அந்த மக்கள் ஏதிலிகளாக ஒரு அரசியல் குற்றவாளிகளாக மாற்றப்பட்டு, அவர்களது உயிர் ஆற்றலை முற்றிலுமாக அதிகாரம் தனது இறையாண்மைக்கான முதலீடாக மாற்றிக் கொள்கிறது.

இந்நிலையி்ல் இப்பொழுது போரில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பது என்கிற அடிப்படையை பிரச்சனையாகக் கொண்டு, அதற்க்கான உடனடித் தீர்வு என்ன? என்பதிலிருந்து உரையாடலைத் துவங்குவது அவசியம்.

முதலில் உரையாடலை இப்படி தொகுத்துக் கொள்ளலாம்.

1. இரண்டு இராணுவங்களுக்கிடையிலான மூர்க்கமான போரினாலும், இந்திய மற்றும் உலக ஆதிக்கத்தின் புவிசார் அரசியலிலும் சிக்கிக்கொண்டுவிட்ட மூன்று லட்சம் அப்பாவித் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும். நலன்புரி முகாம் என்கிற வடிவில் உருவாக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம் ஒரு ஒருங்கிணைப்பு வதை முகாமாக மாறி யூதர்களுக்கு எதிரான நாசிகளின் வதைமுகாம்களாக செயல்படுவதை சர்வதேச பார்வைக்கு கொண்டு சென்று அந்த வடிவத்தை கைவிடவும், உலக நாடுகள் அதற்கு நிதி உதவி அளிப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

2. சிங்கள இராணுவத்தில் பங்கு பெற்ற இராணுவப் பணியாளர்களது குடும்பங்கள் மற்றும் இராஜபக்ஷே அரசால் பாதிக்கப்பட்ட சிங்கள அப்பாவி மக்கள், அரசின் பாசிசத்தன்மையை உணர்ந்து அரசு எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கச் செய்ய வேண்டும். அதாவது, சிங்கள ஜனநாயக சக்திகளின் குரல்களை அடையாளங்கண்டு அவற்றுடன் ஒன்றிணைவது அவசியம்.

3. அகதி முகாம்களுக்குச் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் போய் அதன் உண்மை நிலைகளை கண்டு அறிவிப்பதும், அவர்களிடையே சர்வதேச உதவிக்குழுக்கள் பணியாற்றி அவர்களது பிரச்சனைகளை சீர் செய்வதற்கு இலங்கை அரசு முன்வரவேண்டும். அல்லது சர்வதேச அமைப்புகள் இலங்கை அரசை இதற்கு பணியவைக்க வேண்டும்.

4. பத்திரிக்கைகள் மற்ற ஊடகங்கள் அங்கு சென்று உண்மை நிலையைக் கண்டறிய இலங்கை அரசிற்கு நிர்பந்தங்களை தமிழர்கள், சர்வதேச அமைப்புகள் மட்டுமின்றி புலம் பெயர்வாழ் தமிழர்களும் செய்யவேண்டும்.

5. இலங்கை போர்ச்சூழலிருந்து விலகி ஒரு சாதரண வாழ்விற்கான அடிப்படை ஆதாரங்களைக் கொண்டதாக மாற்றப்பட வேண்டும் என்பதை முன்வைத்து போராட்டங்கள் தொடரப்பட வேண்டும். முகாம்கள் திறக்கப்பட்டு மக்கள் திரும்பவும் தங்களது ஊர்களுக்குத் திரும்பி அரசு அல்லது சர்வதேச அமைப்புகள் உதவியுடன் தங்களது வாழ்வைத் துவங்க ஆவண செய்யவேண்டும்.

6. இலங்கை அரசு என்பது ஒரு தேசிய அரசிற்கான சட்ட அமைப்பைக் கொண்டதோ அல்லது ஒரு நவீன தேசிய அரசு வடிவத்தையோ கொண்டதாக இல்லை. பல அடக்குமுறைச் சட்டங்கள் வழியாகவே அதன் ஆளுகை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த எதேச்சதிகார சட்டமுறைக்கு எதிராக சிங்களர்கள் மத்தியில் உருவாகும் அமைப்புகளுடன் தமிழ், கிறித்துவ, தலித் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் இணைந்த ஒரு ஒருங்கிணைந்த முன்னணிக்கான சாத்தியங்களை உருவாக்க வேண்டும். கிறித்துவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்கிலேயக் காலனியக் காலகட்டம் முதல் பெளத்த-சிங்கள பேரினவாதம் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. காலனிய ஆட்சிக்குப்பிறகு அது தமிழர்களுக்கு எதிரான இனவாதமாக வெளிப்பட்டுள்ளது. இன்று இனவாதம் பின்னுக்குத்தள்ளப்பட்டு, அது மீண்டும் ஒரு மதவாதமாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சிங்கள உழைக்கும் மக்களை இனவாதத்தால் மயக்கி உண்டு கொழுத்த ஆதிக்க வர்க்கம், இனி அந்த துருப்புச் சீட்டை ‘பிரபாகரன் மரணம்’ என்கிற நிகழ்வின் மூலம் இழந்துவிட்டதால், அடுத்து முஸ்லிம், கிறித்தவர்கள் மீதான மதக்காழ்ப்புகளை, வகுப்புவாதத்தை கட்டமைக்க முயலலாம். அதன் ஒரு கூறாக, தமிழினம் என்பதை இந்துமதவாதமாக மாற்ற முயலலாம். இக்கூறுகள் மிகவும் ஆபத்தான அடையாள அரசியல் உள்ளடக்கங்களைக் கொண்டவை என்பதால் அதனை உடனடியாக அரசியல் தளத்தில் முறியடிப்பதும் சிங்கள-தமிழ்-முஸ்லிம்-கிறித்துவ ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதும் அவசியம். அல்லது பன்முக அடையாளங்களையும் உள்ளடக்கிய வர்க்க அரசியலை முன்னெடுப்பது ஒரு மாற்று அரசியலாக அமையுமா என்பதையும் இதனுடன் இணைத்து சிந்திக்க வேண்டும்.

7. இலங்கை அரசு அடிப்படையில் சிங்கள மக்களுக்கே எதிரானது என்கிற உணர்வை சிங்களரிடம் உருவாக்குவதும், இதை முன்வைத்து அம்மக்களை இனவாத அரசியலிலிருந்து பொது நீரோட்டத்திற்கு கொண்டு வருவது அவசியம். தற்போதைய ஈழத் தமிழ் மக்கள், அந்த மனநிலைக்குத்தான் வந்திருப்பார்கள் என்பதும், தேசிய-இனவாதமற்ற தமிழர்கள் உலக அளவில் இந்த சிந்தனைப் போக்கையே கொண்டிருப்பார்கள் என்பதும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு பரந்த ஜனநாயக முன்னணியை உருவாக்குவது அவசியம். பாசிச ராஜபக்சேவிற்கு எதிரான ஒரு முன்னணியை இன்று புலிகள் அல்லது ஈழ இயக்கங்கள் முன்வந்து செய்வதும் பொது அரசியல் நீரோட்டத்தில் ஜனநாயக அமைப்புகளை உருவாக்குவதற்கான தளத்தையும் உருவாக்க வேண்டும். இரண்டு இன மக்களிடமும் உள்ள இடது சாரி ஜனநாயக சக்திகள் இன்று ஒரு பெரும் பங்கை ஆற்றமுடியும். அறிவுஜீவிகள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், உழைக்கும் மக்கள் உள்ளி்ட்ட அனைவரிடமும் இந்த பொது முன்னணிக்கான அரசியல் செயல்திட்டங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்.

8. இன்று பெரும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ள இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினரிடம், இலங்கை அரசு தனது மேலாதிக்கத்திற்காக இராணுவத்தையும் சிங்கள மக்களையும் எப்படி பலிகடாவாகாக ஆக்குகிறது என்பதை அம்பலப்படுத்த வேண்டும். கட்டாயப்படுத்தி சிங்கள இளைஞர்களை இராணுவமாக மாற்றும் இலங்கை அரசு, சிங்கள மனித உரிமைக்கு எதிராக செயல்படுவதையும், பாதிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தினருக்கும், அவர்களது குடும்பத்திருக்குமான மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக நாமும் குரல் கொடுக்க வேண்டும்.

9. உலகிலேயே அரசு எந்திரத்தின் ஆக மோசமாக செயல்படும் இலங்கை அரசு எந்திரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு ஒரு ஜனநாயக அரசாக மாற்றப்படுவதற்கான இயக்கங்களை தமிழக, சிங்கள ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் உருவாக்குவது அவசியம். இன்றைய சிங்கள அரசு அடிப்படையில் சிங்கள மக்களின் தேசிய நலன் பேணும் அரசல்ல அது ஒரு பேரினவாத பாசிச அரசு என்பதை சிங்களிரிடம் அம்பலப்படுத்தும் முனைப்புகளை உருவாக்க வேண்டும்.

இதற்கெல்லாம் உடனடியாக ‘நலன்புரி’ முகாம்கள் மற்றும் அகதி முகாம்கள் ஒழிக்கப்பட்டு ஒரு சாதரண வாழ்நிலைக்கு தமிழ் ஈழப்பகுதிகள் திரும்ப வேண்டும். பொது ஜனநாயக அமைப்புகளுக்கான களத்தை தமி்ழீழத்தில் உருவாக்க வேண்டும். புலிகள் குறித்து இந்த போரில் வெளிவந்த பல விமர்சனங்கள் கருத்தாடல்கள் அடிப்படையில் அவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களை புணரமைத்துக் கொள்வதன் வழியாக ஜனநாயகப்பாதைக்கு திரும்பி மக்களிடம் தன்னை ஒரு அரசியல் இயக்கமாக நம்பிக்கையை பெறுவது அவசியம். தமிழ் ஈழமக்களை காட்டிக் கொடுக்கும் வண்ணம் சிங்கள அரசிற்கு தலைவணங்கி செவை செய்யும் அமைப்புகள் உடனடியாக மக்களிடமிருந்து துரத்தப்பட்டு அம்பலப்படுத்தப்பட வேண்டும். மக்கள் பேசுவதற்கான ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டும். புலிகள் உள்ளிட்ட ஈழ இயக்கங்கள் தங்களை ஜனநாயக அமைப்பாக மாற்றிக் கொள்ள நிர்பந்திக்க வேண்டும். நம்பகத்தன்மை இழந்துவிட்ட இராணுவ அமைப்புகளிடம் இல்லாமல் சர்வதேசக் கண்காணிப்பு குழு ஒன்றின் கீழ் தமிழ-சிங்களப் பகுதிகளில் மறு-சீரமைப்பு துவக்கப்பட வேண்டும்.

சரி இதெல்லாம் சொல்ல நன்றாக உள்ளது. யார் செய்வது? என்பதுதான் கேள்வி. ஜனநாயக உணர்வுள்ள ஒரு மக்கள் சமூகம் உலகில் இன்று முற்றாக அழிந்துவிடவில்லை என்கிற நம்பிக்கையின் அடிப்படையில்தான் இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தேசம் மற்றும் தேசிய அரசுகள் உலகில் உருவாக்கியது பெரும் பெரும் அகதி முகாம்களைத்தான். முகாம்களில் செயல்படும் அதிகாரம் என்பது ஒரு உடல்மீதான நிபந்தனையற்ற ஆதிக்கத்தை செலுத்துவதாக உள்ளது. எந்த அடிப்படை அதிகாரத்தின் காப்புறுதிகளையும், மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி, அவர்களை ஒரு வகையினமாகவும், அவர்களை சமூகத்தின் மௌனத்திற்குள் பதுக்குவதும், எந்த அடிப்படையும் கனவுகளும், கற்பனைகளும் இன்றி வாழ்ந்து சலிக்கும் நம்பிக்கையற்ற ஒரு வெற்றுவாழ்வை உருவாக்கி உள்ளன. மனித உடலின் உயிராற்றலை முற்றிலுமாக நசுக்கி அழிக்கும் அகதி முகாம்களுக்கு எதிரானதாக நமது அரசியலை ஒருமுனைப் படுத்துவோம். முகாம்கள் வழியாக அரசானது ஒரு கொலை எந்திரமாக மாறி, தனது பாசிசக் கரத்தை விரிவாக்க முனைகிறது. அகதி முகாம்களை உருவாக்காது ஒரு அரசியலமைப்பு முறையே இன்றைய தேவை. ஜனநாயகம் என்பது அரசியல் சொல்லாடலாக இல்லாமல் ஒரு கலாச்சார வாழ்வாக மாற்றப்பட வேண்டும். அதற்கு பலகருத்துக்களை-பலமுனைகளை-பலமக்களை-பலநிறங்களை-பலவாழ்வை-பலஉடல்களை-க் கொண்ட ஒரு ஜனநாயக அமைப்பை உருவாக்குவோம்.

இன்றைய ஈழ அரசியல் நமக்கு கட்டியங்கூறுவது அதைதான். நாம் நம்மை எதிர்வரும் அகதி முகாம்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ள அகதி முகாம்களற்ற அரசியலை உருவாக்க வேண்டும். ஏழைகள் எல்லோரையும் காணமுடியாத (invisible) ஒரு அகாதி முகாமிற்குள் அடைத்துவிட்டு அல்லது உலகை அகதிகளின் முகாமாக மாற்றிவிட்டு அரசின் இறையாண்மைக்கு வெளியில் மக்களை குடியமர்த்தி, முதலாண்மைக் கொண்ட அதிகார வர்க்கம் மட்டுமே வாழ்வதற்கான உலகாக இந்த உலகை மாற்றும் ஒரு அரசியல் செயல் திட்டத்திற்கான முன்வரைவுகளை முறியடிப்பது அவசியம். இது பாசிசம் இந்த நூற்றாண்டில் கண்டடைந்திருக்கும் ஒரு புதிய வடிவம். நலவாழ்வு என்கிற பெயரில் திட்டமிட்ட கம்பி வலைகளுக்குள் ஆன ஒரு குடியிருப்பை உருவாக்கி இராணுவ கண்காணிப்பிற்குள் வைப்பதற்கான இலங்கை அரசின் இத்திட்டத்தில் எதிர்கால அரசியலின் நுண்-வடிவம் இருப்பதை அவதானிப்பது அவசியம்.

ஆக, குறைந்தபட்சம் அகதிகள் என்று அழைக்கப்படும் நமது சகோதரர்களிடம், ஒரு அர்த்தமுள்ள வாழ்வை உருவாக்க அவர்களது முகாம்களற்ற நலவாழ்வை உருவாக்க நமது அரசுகளை நிர்பந்திப்பது அவசியம். ஈழ அகதிகளின் பேரவலங்கள் தமிழக அகதி முகாம்களில் நடைபெற்றுவருவதை ஈழத்தமிழர் ஆதரவுக்கான நமது போராட்டத்துடன் இணைத்து நடத்துவதும் நமது வேலைத்திட்டங்களில் ஒன்றாகட்டும். காலனியம் என்கிற கரும்புள்ளியை இரண்டாம் உலகப்போருக்குப்பின் துடைத்தெறிந்து அதன் பின் நவ-மறு-காலனிய வடிவங்களில் உலக அதிகாரம் உலா வந்தது. தற்போதைய உலகமயச் சூழலில் அதன் புதிய வடிவம் அதாவது உலகக்-குடிமகன் (globalized citizen) என்கிற சொல்லாடலின் உள்ளார்ந்த பரிணாமமாக அகதிகள் என்கிற உடல்கள் அதிகாரத்தின் உயிராற்றலாக முதலீடு செய்யப்படுகிறதோ என்கிற சந்தேகத்தை உருவாக்குகின்றன இத்தகைய நிழ்வுகள். ஈழத்தில் நடந்து முடிந்த இந்த பேரவலம் நமக்கு உணர்த்துவது இதைதான். உலகம் என்பது மறு ஒழுங்கிற்கு உட்படுத்தப்படுகிறது. நாம் வாழ்வதற்கு நமக்கென ஒரு அகதி முகாமை அதிகாரம் தயாரித்தளிக்க தயராகவே உள்ளது என்பதை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்வது நல்லது. மனித உடல்கள் நிலத்துடன் பிணைக்கப்பட்டு, நில எல்லைக்குள் வாழ் நிர்பந்திக்கப்பட்டு, தேசம் என்கிற வரைகோடுகளுக்குள் குடிமகனாக முதலீட செய்யப்பபட்டு, இன்று உலகமயமாதலில் தேச எல்லைகள் அழிக்கப்பட்டு, மனித உடல்கள் பிணைக்கப்படும் நிலங்களாக முகாம்கள் மாற்றப்படுவதற்கான ஒரு அரசியல் திட்டம் இதற்குள் இருப்பதை உணர்ந்துகொள்வதும், அதை முறியடிப்பதற்கான செயல்திட்டங்களை வகுப்பதும் அவசியம்.

பயன்பட்ட கட்டுரைகள்.

1. Sri Lankan Government Stalls On Release Of Tamil Detainees – By Sarath Kumara http://www.countercurrents.org/kumara040809.htm

2. முகாம் என்பது யாது? – 1 – அகம்பென் – தமிழில் நாகார்ஜீனன் – http://nagarjunan.blogspot.com/2009/02/1_13.html

3. முகாம் என்பது யாது? – 2 – அகம்பென் – தமிழில் நாகார்ஜீனன் – http://nagarjunan.blogspot.com/2009/05/2.html

4. எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம் – நாகார்ஜீனன் – http://nagarjunan.blogspot.com/2009/05/blog-post_10.html

5. வே. பிரபாகரனின் மாவீரர் நாள் உரை, 2008 – தமிழ் விக்கிப்பீடியா

6. Deep Thoughts: Agamben’s camp and sociology – http://adamash.blogspot.com/2006/07/deep-thoughts-agambens-camp-and.html

7. Homo Sacer, Indefinite Detention and the Nike Swoosh: Agamben’s Camp as Biopolitical Paradigm of the West – Jennifer Tomomitsu-Tomasson, Research Student Department of Sociology, Lancaster University

Exit mobile version