Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூட்டமைப்புக்கு அமெரிக்கா வழங்குகின்ற இராஜதந்திர அங்கீகாரம் : இதயச்சந்திரன்

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு, கொழும்பு மாநகர சபையில் 6 ஆசனங்களும், தெஹிவளை கல்கிஸை மற்றும் கொலன்னாவையில் தலா ஒரு ஆசனமும் கிடைத்துள்ளன.
கொழும்பில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், மனோ கணேசனிடமுள்ள ஆறு ஆசனங்களைப் பெறுவதில் அக்கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக செய்திகள் கூறுகின்றன.
அத்தோடு நிபந்தனைகள் விதித்தால், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவு தேவையில்லை என்கின்ற வகையில் அறிக்கைகளை வெளியிடுகிறது ஐ.தே.க.

ஆனாலும் இத் தேர்தலின் ஊடாக கொழும்பு வாழ் தமிழ் மக்கள் சொன்ன செய்திகளை ஆளும் தரப்பும், ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
வடக்கில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய செய்தியையும், இப் பெரும்பான்மையினக் கட்சிகள் உணரவில்லை போல் தெரிகின்றது.

தேர்தலின் போது மோதிக் கொள்வதும், தேர்தல் முடிவடைந்ததும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக கூட்டுச் சேர்வதை ஜனநாயக பண்பாக ஏற்றுக் கொள்ளும் அபத்தம் நிகழ்வதைக் காணலாம்.

மத்திய அரசியல் கூட்டுச் சேர்ந்துள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் இத் தேர்தலில் பிரிந்து நின்றே போட்டியிட்டன.
ஆகவே, இத்தகைய முரண்பட்ட நிலைப்பாடுகளால் மக்கள் குழப்பமடைவதும், நடைபெறுவது அதிகார நிலை நிறுத்தலிற்கான போட்டியா? அல்லது உண்மையிலேயே இவர்கள் தாம் சார்ந்த மக்களின் நலனிற்காக அரசியல் களத்தில் செயற்படுகிறார்களா? என்கிற கேள்வி எழுவது நியாயமானது.

இத்தகைய முரண் நிலைகள் பிரித்தானிய ஆட்சியாளர்கள் மத்தியிலும் தற்போது தோற்றம் பெற்றிருப்பதை காணலாம்.
இறுதிப் போரில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை யொன்று நடைபெற வேண்டுமென பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுக்கின்றார்.
அதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் லியம் பொக்ஸ் இலங்கை ஆட்சியாளர்களுடன் சுமுகமான உறவொன்றைப் பேணி வருகின்றார்.

இருப்பினும் லியம்பொக்ஸ் வெளிநாடுகளுக்கு தனது உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொள்ளும் போது, அவருடைய நண்பர் அடம் வெற்றிரி (ADAM WERRITTY) கூட விருப்பதுதான் இராஜ தந்திர வட்டாரங்களில் பெரும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
லியம்பொக்ஸின் ஆலோசகர் என்று குறிப்பிடப்பட்ட அறிமுக அட்டையோடு வலம் வரும் வெற்றிரி ஒரு சாதாரண பிரஜை.

ஆனாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் 14 தடவை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு அலுவலகத்துள் அவர் பிரவேசித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவர் அரச உத்தியோகத்தரோ அல்லது பெரும் பழைமைவாதக் கட்சியைச் சேர்ந்தவரோ அல்லர்.

இரண்டு விதமான சந்திப்புகளை மேற்கோள் காட்டி இவ்விவகாரம் கிளப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூனில், வர்த்தகரான ஹாவே பௌல்டர் (HARVEY BOULTER) உடனான, லியம் பொக்ஸின் துபாய் சந்திப்பிற்கு இடைத் தரகராக வெறிரி தொழிற்பட்டாரென்கிற குற்றச்சாட்டு முதன்மையானது.
இவை தவிர இலங்கை ஜனாதிபதியை லியம் பொக்ஸ் சந்தித்த வேளையிலும் இவர் உடனிருந்ததாக புகைப்பட ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதேவேளை, இலங்கை அரசின் மீது சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பாரியளவில் போர்க் குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் இத் தருணத்தில், இலங்கை ஆட்சியாளர்களோடு லியம் பொக்ஸும் அவரது நண்பர் அடம் வெரிறியும் உறவு கொண்டுள்ள விவகாரத்தை சனல் 4 தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தியுள்ளது.

ஆகவே அரசியல்வாதிகளின் இரட்டை நிலைப்பாடுகள் வெளிப்படும் இவ்வேளையில், எந்த நிலைப்பாட்டினை எடுக்க வேண்டுமென்பதை அறியாமல் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தடுமாறுவதையும் காணலாம்.
நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இலங்கை அரசின் பதிலை நீண்ட நாட்களாக எதிர் பார்த்துக் காத்திருப்பதை சலிப்புறாமல் சொல்கிறார் பான் கீ மூன்.
ஆனாலும் பான் கீ மூனிற்கு பதிலளிக்காமல், சொந்த ஆவணப்படமொன்றைத் தயாரித்து, சனல் 4 தொலைக்காட்சிக்கு பதிலளித்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.

பயங்கரவாதத்தை முறியடித்த தமது நாட்டிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏராளமான விடயங்கள் இருந்தும், போர்க்குற்ற விசாரணை தேவையென்று சர்வதேசம் அடம் பிடிப்பது தவறாதென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய கவலையடைகிறார் போல் தெரிகிறது.

ஆவணப் படப் போட்டிகள் ஒரு புறமிருக்க, புதிய சில மாற்றங்கள் இலங்கை தொடர்பாக நிகழ்வதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது.
அதாவது தேசிய இனப் பிரச்சினை குறித்து கலந்துரையாட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்துள்ளது அமெரிக்கõ இராஜாங்கத் திணைக்களம்.
தெற்காசிய விவகாரங்களிற்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் இச் சந்திப்பினை ஏற்பாடு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சினை தொடர்பாக பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யசீர் அரபாத்தை, அமெரிக்க அரசு முன்பு வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசிய விடயமும் தற்போது நினைவிற்கு வருகிறது.

இலங்கைக்கு அடிக்கடி செல்லும் அமெரிக்க அரசின் பிரதி நிதிகள், அண்மைக் காலமாக கூட்டமைப்போடு பேசுவதற்கு அதிக முன்னுரிமை கொடுத்து வரும் விடயத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தைக் களம் இலங்கையை விட்டு வெளியே இடம் மாறக் கூடாதென்பதை விரும்பும் இந்தியா, கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணத்தை எவ்வாறு நோக்கும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

ஆனாலும் இது காலவரை டெல்லிக்கு மட்டுமே அரசியல் பயணங்களை மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்ட குழுவினர், முதன் முதலாக மேற்குலகின் நாயகனாக விளங்கும் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்திற்கு பயணிப்பது, பல செய்திகளைச் சொல்லப் போகிறது.
அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சர்வதேச அங்கீகாரம் ஒன்றினை வழங்குவதோடு, அவர்களை ஈழத் தமிழ் மக்களின் அரசியல் பிரதி நிதிகளாக காட்ட மேற்குலகம் முனைவதாகவும் கொள்ளலாம்.

புலம்பெயர் நாடுகளில், உலகத் தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற அமைப்புகள் இருந்தாலும், பேரவையின் உருவாக்கத்தின் போது பிரித்தானிய அரச உயர் மட்டத்தினர் கலந்து கொண்ட நிகழ்வு, மற்றும் அண்மையில் ரொபேர்ட் ஓ பிளேக்கின் அமெரிக்காவிற்கு பேரவையை அழைத்துப் பேசிய விடயமும் பலரால் அவதானிக்கப்பட்டது.
டெல்லி இராஜதந்திர வட்டாரத்தில் உலகத் தமிழர் பேரவை மேற்கொண்ட தொடர்பாடல்கள், இவர்கள் குறித்த மேற்குலகின் மென் போக்கிற்கு காரணியாக அமைந்தெனக் கணிப்பிடலாம்.

ஆயினும் கடந்த செவ்வாயன்று தமிழ் நாடு சென்ற உலகத் தமிழர் பேரவையின் (GLOBAL TAMIL FORUM) தலைவர் இமானுவல் அடிகளார், சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் பிறிதொரு செய்தியை வெளிப்படுத்துகிறதெனலாம்.
அதாவது டெல்லியைத் தாண்டி தமிழ் நாட்டுக்கு நேரடியாகச் செல்லும் புலம்பெயர் அமைப்பின் நகர்வினை இந்திய மத்திய அரசு விரும்பவில்லை போல் தெரிகிறது.
அத்தோடு இந்தியாவும் மேற்குலகமும், புலம் பெயர் அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து ஒரு எல்லைக் கோட்டினை வரையறுத்துச் செயற்படுகிறார்களா? என்கிற சந்தேகமும் எழுகிறது.

இலங்கை மீதான அழுத்த அரசியலிற்கு, போர்க்குற்ற விசாரணை குறித்து அதிக கரிசனையோடு செயற்படும் புலம்பெயர் அமைப்புகளின் பங்களிப்பினை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அரசியல் தீர்வு என்கிற விவகாரம் வரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே இந்தியாவும் மேற்குலமும் ஏற்றுக் கொள்வது போலுள்ளது.

ஆகவே, அழுத்த அரசியலிற்குத் தேவையான இரு வேறுபட்ட பரிமாணங்களை எவர் ஊடாக நகர்த்த வேண்டுமென்பதை மேற்குலகம் உணர்ந்து கொள்வதால், கூட்டமைப்பினரை இராஜதந்திர அந்தஸ்தோடு அமெரிக்கா அழைக்கிறதெனக் கூறலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை, இலங்கை மீது பிரயோகிக்கும் அழுத்த அரசியலில், போர்க் குற்ற விசாரணை என்கிற பரிமாணத்தை முதன்மைப்படுத்தவில்லை.
மாறாக கூட்டமைப்பினூடாக, அரசியல் தீர்வு என்கிற அழுத்த அரசியல் பரிமாணத்தை மட்டுமே கையாள்கிறது.

இலங்கை மீது இந்தியா பிரயோகிக்கும் அழுத்தங்களுக்கும் ஓர் எல்லை உண்டு. அதிகம் அழுத்தினால் உறவு முறியும் சாத்தியப்பாடுகள் இருப்பதால் மேற்குலகம் கொடுக்கும் போர்க்குற்ற அழுத்தங்களையும் தனக்குச் சாதகமõன விடயமாக இந்தியா கருதுகிறது.

இவற்றுக்கு அப்பால், அடுத்த நிதியாண்டின் மொத்த வருமானம் 1,11,500 கோடி ரூபாவாகவும், அரசின் மொத்த செலவீனம் இதன் இருமடங்காக இருப்பதாகவும் கணிப்பிடப்படுகின்றது.
கல்வி அமைச்சிற்கு 3326 கோடி, பாதுகாப்பு அமைச்சிற்கு 22, 994 கோடி என்கிற வகையில் உத்தேச வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்படுகிறது.
அதாவது அரசியல் தீர்வு, போர்க் குற்ற விசாரணை என்ற அழுத்தங்களிற்கு அப்பால், பாரிய பொருளாதார நெருக்கடிகளையும் இலங்கை அரசு எதிர்கொள்வதை இப் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

மன்னாரின் எண்ணெய்க் காசு, ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலின் மத்திய வங்கிக்கு வந்து சேர இன்னமும் 10 ஆண்டுகள் செல்லும்.

ஆசியாவின் பொருளாதார வல்லரசுகள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், இலங்கைக்கான இந் நாடுகளின் உதவிகளும் மட்டுப்படுத்தப்படுமென எதிர்பார்க்கலாம்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால், கடந்த ஏழு மாதங்களில் சீனாவின் ஏற்றுமதி வர்த்தகமும் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்தியாவில் பண வீக்கத்தோடு, அரச வட்டி வீதமும் அதிகரித்துச் செல்கிறது. அத்தோடு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீதான சுங்க வரி (TARIFF)யை அதிகரிக்க வேண்டுமென அமெரிக்கா செனட் சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தால், இரு நாடுகளுக்குமிடையே வர்த்தகப் போர் (TRADE WAR) ஆரம்பமாகியுள்ளதாக பொருளியலாளர்கள் அச்சமடைகின்றனர்.

இத்தகைய சர்வதேச நெருக்கடிக்குள் ஈழத் தமிழர் விவகாரம் பந்தாடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.
சட்டப் போராட்டங்கள் நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்த உதவாதென்பதை, வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பயங்கரவாத தடைச் சட்டத்தில் இணைக்கப்பட்ட விடயங்களுக்கெதிராக கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா தொகுத்த அடிப்படை உரிமை மீறல் மனு, உயர் நீதிமன்றத்தõல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படõமல் நிராகரிக்கப்பட்ட விடயம் உணர்த்துகிறது.

ஆகவே சர்வதேச அரங்கிற்கு அரசியல் தீர்வு விவகாரத்தைக் கொண்டு செல்வதே சரியான நகர்வாக இருக்குமென்பதை இந்த வழக்கு விவகாரம் மீண்டும் நினைவூட்டுகிறது.

Exit mobile version