மத்திய உளவுப் பிரிவு போலீசார் (ஐ.பி.) திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ரைனரைப் பிடித்து நாடு கடத்தும்படி ஐ.பி, தமிழக போலீசு இயக்குநர் ராமானுஜத்திற்கு பரிந்துரைத்தது, தமிழக ‘கியூ’ பிரிவு போலீசார் அவ்வாறு செய்தனர்; ரைனரிடம் ஐ.பி. அதிகாரிகள் பலகட்ட விசாரணை நடத்தி, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்துக்கு நிதி திரட்டியதும் போராட்டக் குழுவினருடன் பேசியதும் வழிகாட்டியதும், போராட்டத்தில் அவர் பங்கேற்றதும், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கே அவர் சென்றதும் ரைனரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டது என்று போலீசு மூலம் செய்தி கிடைத்ததாக எல்லா நாளேடுகளும் எழுதியுள்ளன.
கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி வருவதாக பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் அவர்களின் “சமக்சா” நாராயணசாமி கூறிவரும் புகாருக்கு ஆதாரங்களைத் “தேடித் தரும்படி” மத்திய உளவுத்துறை சி.பி.ஐ.க்கு உத்திரவிடப்பட்டிருக்கிறது; அதிகாரபூர்வமற்ற ஆதாரமற்ற இந்த விசாரணை எவ்வாறு அமைய வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திடம் சி.பி.ஐ. விளக்கம் கேட்டிருக்கிறது. சி.பி.ஐ.யின் விசாரணை விளையத்துக்குள் கண்காணிப்பு வட்டத்துக்குள் நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மூன்று அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் வந்துள்ளன; அவற்றில் இரண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்கு பரிவர்த்தனை முடக்கப்பட்டுள்ளன.
ஜெர்மனி சுற்றுலாப் பயணியை நாடு கடத்துவது, மத்திய அரசின் சி.பி.ஐ., ஐ.பி. மற்றும் மாநில அரசின் கியூ பிரிவு உளவுத்துறையினரின் விசாரணை கண்காணிப்பு, நடவடிக்கைகள் எதுவும் வெளிப்படையாகவும், அதிகாரபூர்வமாகவும் சட்டப்படியும் செய்யப்படவில்லை. இத்தாக்குதல்கள் எல்லாம் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடி வரும் இடிந்தகரை மக்களையும் தலைமையையும் மிரட்டிப் பணியவைக்கவும், முடக்கி வைக்கவும் மேற்கொள்ளப்படும் சதிசூழ்ச்சி தாம் என்பது நாடும் மக்களும் அறிந்த வெளிப்படையான உண்மை. பிடிபட்ட ஜெர்மானியர், விசாரணை கண்காணிப்பு வளையத்துக்குள் வந்த அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மீது தக்க ஆதாரங்கள் இருப்பின் நேரடியான, வெளிப்படையான அதிகாரபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதுதானே! அதற்குமாறாக சதித்தனமான, நள்ளிரவு, திரைமறைவு, குறுமதி நடவடிக்கைகள் ஒருபுறமும், அவதூறுக் கூச்சல் மறுபுறமும் ஏன்?
அரசும் ஆளும் வர்க்கங்களும் இத்தகைய தந்திரங்களில் சதித்தனங்களில், அவதூறுப் பிரச்சாரங்களில் ஈடுபடுவதும் ஒன்றும் புதிதில்லை. மக்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு நேர்மையாக முகங்கொள்வதற்கு பதில், ஒன்று அந்நிய சதி, சமூக விரோத, தேசவிரோதச் செயல் அல்லது பயங்கரவாத, தீவிரவாதச் செயல் என்று முத்திரை குத்தி அரசு எந்திரத்தை ஏவிவிட்டுத் தாக்குதல் நடத்துவது என்பது வாடிக்கையானதுதான். உள்நாட்டு விவகாரங்களில் அந்நியத் தலையீடும் நிதியுதவியும் இருப்பதாலேயே மக்கள் போராட்டங்கள் எல்லாம் தவறாகி விடும் என்றால் வங்கதேசம் முதல் சமீபத்திய இலங்கை-ஈழம், மாலத்தீவு விவகாரங்களில் இந்திய அரசின் தலையீடு ஏற்கக்கூடியனவா?
கூடங்குளம் போராட்டத்துக்கு எதிரான மத்திய அரசின் சூழ்ச்சிகள், தந்திரங்கள், அடக்குமுறைகள் எல்லாவற்றிலும் ஜெயலலிதா அரசுக்கும் பங்கு இருக்கிறது. கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் போட்டு, ‘கியூ’ பிரிவு போலீசை ஏவி, திரைமறைவு நடவடிக்கைகள் மேற்கொள்வது முதல் கடைசியாக பரமக்குடி பாணியில் கொலைவெறி தாக்குதல் தொடுப்பதற்கு வசதியாக ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் தலைமையில் போலீசை அனுப்பி தயாரிப்புகள் செய்கிறது.
ஆனால், புலிகள் பிரபாகரனைப் போல ஜெயலலிதா உதவியுடன் மத்திய அரசை எதிர்த்துப் போராடி வெற்றி பெற முடியுமென்று உதயக்குமார் நம்பச் சொல்கிறார். முள்ளிவாய்க்காலுக்கு நேர்ந்த முடிவு இடிந்தக்கரையிலும் ஏற்படக் கூடாது என்பதுதான் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் அக்கறை, எச்சரிக்கை!
நன்றி : புதியஜனநாயகம்
கட்டுரை வெளியான திகதி :05.03.2012
பிந்திய செய்தி : கூடன் குள அணு மின் நிலையத்திற்கு ஜெயலலிதா ஆதரவு : “ஈழத்தாய்” வேடம் இனியும் பொருந்தாது