Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குழம்பிப்போயுள்ள கட்சிகள்! : செல்வரட்னம் சிறிதரன்

election_cartoonநிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் பதவி வகிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்த வருடம் ஜனவரி மாதம் நாட்டு மக்கள் மீது வலிந்து ஜனாதிபதி தேர்தலைத் திணித்தார். இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், அந்த பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடங்கள் இருந்த நிலையிலேயே இந்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அறிவித்தலை வெளியிட்டிருந்தார். மூன்றாம் தடவையாக ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

அவருடைய அரசியல் எதிர்பார்ப்பு சுக்கு நூறாகியது. வீசிய கையும் வெறும் கையுமாக அவர் தென்மாகாணத்தில் உள்ள தனது வீட்டிற்கு வாடிய முகத்தோடு செல்ல நேர்ந்தது. மஹிந்த ராஜபக் ஷவின் தேர்தல் தோல்வியையடுத்து, நாட்டில் ஜனநாயகம் மலர்ந்ததற்கு அறிகுறியாக மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்தார். தேர்தலுக்கு முன்னர் அறிவித்திருந்ததற்கு அமைவாக ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் பிரதமராக்கி, புதிய அரசாங்கத்தை அவர் அமைத்தார். நூறு நாட்களுக்கு மட்டுமே புதிய அரசாங்கம் செயற்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. நூறு நாட்கள் முடிந்ததும் பொதுத் தேர்தல் நடத்தி புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், ஆறுமாதங்கள் கடந்த பின்னர் பொதுத் தேர்தல் ஒன்றை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்கள் மத்தியில் இப்போது திணித்துள்ளார். இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், இடர்பாடுகள், பிடுங்குபாடுகள் என்பன முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் வன்போக்கு அரசியல் முறையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்துவிடுமோ என்ற அச்சத்தை நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை முறியடிக்கப் போவதாகக் கூறி வன்போக்கு அரசியல் செல்நெறியைப் பின்பற்றியிருந்த மஹிந்த ராஜபக் ஷ யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரும், அந்த வன்போக்கு அரசியல் செயல்முறையைக் கைவிடவில்லை. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக எந்த அளவு கடுமையாகச் செயற்பட்டிருந்தாரோ, அதே கடுமையுடன் யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஆயுத மோதல்கள் அற்ற சூழலிலும், அரசியலில் வன்போக்கை அவர் கடைப்பிடித்திருந்தார். நிறைவேற்று அதிகாரத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை எல்லையற்ற வகையில் 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அவர் ஏற்படுத்திக்கொண்டார்.

ஜனாதிபதி ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் பதவி வகிக்கலாம் என்ற புதிய விதிமுறையைக் கொண்டு வந்து சர்வாதிகார அரசியல் போக்கிற்கு அடித்தளமிட்டிருந்தார். எதிர்க்கட்சிகளின் முதுகெலும்பு முறிக்கப்பட்டு, எல்லாமே ஜனாதிபதி, எல்லாவற்றுக்குமே ஜனாதிபதி என்று சர்வ வல்லமை உடையவராக ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரியான சக்கரவர்த்தியாக அவர் அரியணையில் வீற்றிருந்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக அடிவருடி அரசியல் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற வகையில் நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளையும் அரசியலாக்கி அரசோச்சினார்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகக் கூறி, ஏமாற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. யுத்த மோதல்களின் போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நிவாரணமும் நீதியும் மறுக்கப்பட்டன. மீள்குடியேற்றப் பிரதேசங்கள் யுத்தகாலத்திலும் பார்க்க மோசமான இராணுவ நெருக்குவாரத்திற்குள் வைத்து நிர்வகிக்கப்பட்டது. எதிலும் இராணுவம் எங்கும் இராணுவமாகியிருந்தது. சிவில் வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்ததாக மாற்றப்பட்டிருந்தது. இத்தகைய ஒரு பின்னணியிலேயே புதிய அரசாங்கம் வந்தது. ஜனநாயகம் மலர்ந்ததற்கான தோற்றம் தெரிந்தது. ஆனால், பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் வேண்டாம் என்று வீட்டிற்கு விரட்டியடிக்கப்பட்டவர்கள் மீண்டும் பட்டியல்களில் சேர்க்கப்படுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டமைப்பிலும் சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு, இரு துருவங்களாகக் கருதப்பட்ட மைத்திரியும், மகிந்தவும் இணைத்தலைவர்களாக புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தகவல்கள் உண்மையானவையல்ல என்ற மறுப்பு பலவீனமான குரலாக முனங்கிக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தான் தேர்தலுக்கு முன்னரான அரசியல் நிலைமை மிகவும் குழப்பகரமானதாக இருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகுந்த நெருக்கடிக்குள் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டியவராக இருக்கின்றார். இதுபோன்ற குழப்பமான அரசியல் நிலைமையை எனது அரசியல் கால வரலாற்றில் இதற்கு முன்னர் கண்டதில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமாகிய ராஜித சேனாரட்ன செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தேசிய மட்டத்தில் மட்டுமல்ல. பிராந்திய மட்டத்திலும் அரசியல் நிலைமைகள் குழப்பகரமானதாகவே இருக்கின்றன. தேசிய கட்சிகளுடன் கூட்டிணைந்து பொதுத் தேர்தலைச் சந்திக்கவுள்ள சிறு அரசியல் கட்சிகளும் இனரீதியான கட்சிகளும் தேசிய மட்டத்தில் ஏற்பட்டுள்ள உறுதியற்ற அரசியல் நிலைமை காரணமாக பெரிதும் கவலை கொண்டிருக்கின்றன.

இத்தகைய கட்சிகளில் பல, தேசிய மட்டத்தில், தேர்தலில் வெற்றிபெறுகின்ற கட்சிகளைக் கண்டறிந்து அவற்றை ஆதரித்து, அதன் ஊடாக அரசியல் செய்யும் போக்கினைக் கடைப்பிடிப்பவையாகவே இருக்கின்றன. அந்தக் கட்சிகளுக்கென்று தனிப்பட்ட அரசியல் இலக்குகள் எதுவும் கிடையாது. அதிகாரத்திற்கு வருபவர்களுடன் கைகோர்த்து, அமைச்சர் பதவிகளைத் தட்டிக்கொண்டு அரசியல் நடத்துவதே அவற்றின் போக்காக இருந்து வந்துள்ளது. இதனால் இந்தப் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சி அல்லது எந்தத் தரப்பு வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதைக் கணித்தறிய முடியாத நிலையில் இந்தக் கட்சிகளும் குழப்பமடைந்திருக்கின்றன. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நேரம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற போதிலும், இறுதி முடிவு எடுக்க முடியாமல் அந்தக் கட்சிகளும் தடுமாறிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.

வடக்கு, கிழக்குப் பிரதேசத்திலும் நெருக்கடி மிகுந்த குழப்பகரமான ஓர் அரசியல் சூழலே காணப்படுகின்றது. இங்கு முன்னணியில் உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொலைநோக்கற்ற திட்டமிட்ட செயற்பாடு இல்லாத காரணத்தினால் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும். அதனை ஒரு கட்டுக்கோப்பான அரசியல் அமைப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற தமிழ் மக்களின் விருப்பமும், அதனை ஆதரித்து வந்தவர்களின் கோரிக்கைகளும் நீண்டகாலமாகவே செவிடன் காதில் ஊதிய சங்காகியிருந்தது.

கட்சி அரசியல் செயற்பாட்டில்; நாட்டம் கொண்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற இறுக்கம் மிகுந்த மறைமுகமான நோக்கமே தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக, கட்டுக்கோப்பான அமைப்பாக, தமிழ் மக்களின் முழுமையான ஆதரவைப் பெற்றதோர் அரசியல் நிறுவனமாக மாற்றி அமைப்பதற்கு இடையூறாக இருந்து வருகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக உருவாக்கத் தவறியிருந்தாலும், அந்த கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியைத்தானும், கட்டுக்கோப்பான கட்சியாக வைத்திருப்பதற்கு அதனுடைய தலைவர்களினால் இயலாமல் போயிருக்கின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் அமைப்பின் பின்னால், இயங்கு விசையாகச் செயற்பட்டு வருகின்ற தமிழரசுக் கட்சியின் தலைமை, தேர்தல்களின் ஊடாக ஒன்றிணைக்கப்பட்டவர்களை ஒரு கட்டுக்கோப்பினுள் வைத்து நிர்வகித்து வழிநடத்த முடியாமல் அல்லாடி கொண்டிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னமாகிய வீட்டுச் சின்னத்திலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம், மாகாண சபை, பிரதேச சபை உள்ளூராட்சி சபைகள் என்பவற்றின் உறுப்பினர்கள் வரை, அனைவரும் மக்களால் தேர்தல்களின் மூலமாக தெரிவு செய்கின்றார்கள்.

இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்களை ஒன்றிணைத்துச் செயற்படச் செய்ய வேண்டியதும், அவர்களை ஒருங்கிணைத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான சேவைகளைச் செய்வதுடன், இறுக்கமான ஓர் அணியாக வழிநடத்திச் செல்ல வேண்டியதும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொறுப்பாகும். இதற்கு உறுதுணையாக இருந்து செயற்பட வேண்டியது கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுடைய தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இணைப்புக்குழு அல்லது தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அடங்கிய குழு என்று எதுவானாலும் சரி, அந்தக் குழு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சகல மக்கள் பிரதிநிதிகள், பாராளுமன்றம் தவிர்ந்த, கூட்டமைப்பின் அனைத்து ஆட்சி மன்றங்கள் என்பவற்றின் ஒன்றிணைந்த செயற்பாட்டுக்கும் கட்டுக்கோப்பான இருப்பிற்கும் பொறுப்பாக இருந்து செயற்பட்டிருக்க வேண்டும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் சரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியும் சரி, அவற்றின் தலைமைகளும்சரி, இதனை செய்யவே இல்லை. மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் மக்களிடம் செல்ல வேண்டியது, அவர்களின் முன்னிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக, தோற்றம் காட்ட வேண்டியது, தேர்தல்கள் வரும்போது, வீட்டுச் சின்னத்தைத் தேர்தல் சின்னமாக பயன்படுத்துவதனால், அந்த சின்னத்திற்கு அதிகாரபூர்வமான உரிமையைக் கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி தனக்கு ஏற்றவாறு ஏனைய கட்சிகளையும், அவற்றின் தலைவர்கள், உறுப்பினர்கள் வேட்பாளர்களை ஆட்டிப்படைப்பதுமாக செயற்படுவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்குச் சென்று இரகசியமாகப் பேசி அரசாங்கத்திடம் இருந்து பெருமளவு நிதியைப் பெற்றிருக்கின்றார்கள் என்று வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியதையடுத்து ஏற்பட்ட குழப்பகரமான ஒரு நிலைமையைத் தொடர்ந்து வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அனைத்து அங்கங்களையும் கொண்டவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் தீர்மானங்களை மேற்கொண்டு அவற்றைச் செயற்படுத்துவதற்குமான ஒரு பொறிமுறையாக ஒரு பொதுச் சபையை அமைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

வடமாகாண சபை செயற்படத் தொடங்கி இரண்டு வருடங்களாகப் போகின்ற நிலையில்தான்இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கும் இந்த ஞானோதயம் வந்திருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிர்வாகம் செய்கின்ற பிரதேச சபைகளில் ஏகப்பட்ட குளறுபடிகள், நிர்வாக ஊழல்கள், தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் என்று ஏகப்பட்ட முறைப்பாடுகள் வந்தன. ஆனால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பொறுப்பில் உள்ள சபைகள் என்ற ரீதியில் அவற்றுக்குப் பொறுப்பேற்க வேண்டிய கூட்டமைப்பின் தலைமையோ அல்லது அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவோ இவை குறித்து கவனம் செலுத்தி அந்த சபைகளை முறையாக நிர்வகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவே இல்லை.

பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மட்டுமல்ல, கூட்டமைப்பின் பொறுப்பில் உள்ள வடமாகாண சபையின் செயற்பாடும் திருப்தியளிக்கத்தக்கதாக இல்லை. மாகாண சபையில் உள்ளவர்கள் தன்னிச்சையாகச் செயற்படுகின்ற ஒரு போக்கே காணப்படுகின்றது. கூட்டமைப்பின் பொறுப்பில் உள்ள ஒரு நிர்வாக சபை என்ற ரீதியில், முக்கியமான செயற்பாடுகளில், முக்கியமான விடயங்களில் ஒரு கூட்டுப் பொறுப்பை காண முடியாமல் இருக்கின்றது. ( 29 ஆம் பக்கம் பார்க்க) அந்த உறுப்பினர்களை அரசியல் ரீதியாக வழிநடத்தி சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கு உரிய சரியான தலைமையைக் காண முடியவில்லை. இதன் காரணமாகத்தான், கிழக்கு மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பியசேன கூட்டமைப்பின் ஒற்றுமையை பரிகசிக்கத்தக்க வகையில் செயற்பட்டிருந்தார்.

இருந்தும் அவருக்கு எதிராக ஓர் அரசியல் கட்சியின் தலைமை என்ற ரீதியில் கூட்டமைப்பினாலோ அல்லது தமிழரசுக் கட்சியினாலோ முறையான தாக்கமுள்ள ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க முடியாமல் போனது. மாகாண சபை உறுப்பினர்களில் வடமாகாணத்தைச் சேர்ந்த அனந்தி சசிதரன் போன்றவர்களின் கட்சியின் தீர்மானங்கள் அல்லது கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொண்டு, அவற்றுக்கு உரிய விளக்கமளித்து, அவர்களை சரியான முறையில் வழிநடத்த முடியாமல், முறையாகத் தண்டித்து தடைபோட முடியாமல் போயிருப்பதும் கூட்டமைப்பினதும், தமிழரசுக் கட்சியினதும் செயற் திறனற்ற செயற்பாடும், தொலைநோக்கற்ற செயற்பாடுமே காரணமாக அமைந்திருக்கின்றன.

இதன் காரணமாகவே, இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும் கட்டுறுதியை மீறி அவர் சுயேச்சையாக களமிறங்குவதற்கு வழியேற்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களினதும், தமிழ் சமூகத்தினதும் ஓர் அங்கமாகிய முன்னாள் போராளிகள் தங்களுக்கும் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டில் பங்கு வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து பேச்சுக்கள் நடத்தி முரண்பட்டுச் செல்வதற்கு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஒரு கட்டுக்கோப்பான அரசியல் அமைப்பாக கட்டியெழுப்பவோ அல்லது கட்டுறுதியுடைய கூட்டாகவோ வைத்திருக்க முடியாமல் போயிருப்பதே முக்கிய காரணமாகும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் இறுக்கமான பற்று கொண்டிருக்கின்றார்கள். கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம், ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 6 வருட்ஙகள் கழிந்தது வரையில் மக்களின் இந்த கட்டுக்குலையாத ஆதரவு நிலைத்து வந்திருக்கின்றது. பல்வேறு நெருக்கடிகள், அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், நிர்ப்பந்தங்கள் என்பவற்றுக்கு மத்தியிலும், வடக்கு கிழக்கு மக்கள் பல்வேறு தேர்தல்களின் மூலம், இந்த ஆதரவையும் பற்றுறுதியையும் வெளிப்படுத்தி வந்துள்ளார்கள். தமிழ்; மக்களின் இந்த ஒற்றுமையையும் உறுதிப்பாட்டையும் உடைப்பதற்காக அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற வகையில் ஆட்சியாளர்களும், இராணுவத்தினரும், இராணுவ புலனாய்வாளர்களும், அரச ஆதரவு அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளும் என்னென்னவோ செய்து பார்த்தார்கள். ஆனால் மக்களின் உறுதியை அவர்களால் உடைக்க முடியவில்லை.

வெளிச்சக்திகளினால் உடைக்க முடியாத மக்களுடைய அந்த உறுதிப்பாட்டையும், இறுக்கமான தீர்மானத்தையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும், கூட்டமைப்பின் தலைமையினதும் தொலை நோக்கற்ற செயற்பாடுகள் குலைப்பதற்கு வழியேற்படுத்திவிட்டதாக அச்சம் கொள்ளச் செய்திருக்கின்றது. பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பங்கீட்டிலும், வேட்பாளர் தெரிவிலும் ஏற்பட்டுள்ள நிலைமைகள், தமிழ் மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை சரியான முறையில் அமைதியாகவும் இயல்பாகவும் தேர்தலில் தெரிவு செய்வதற்குத் தடுமாறத்தக்க நிலைமையை ஏற்படுத்தியிருப்பதையே காண முடிகின்றது.

ஜனநாயகப் போராளிகள் என்ற பெயரில் இணைந்துள்ள முன்னாள் போராளிகள் அடங்கிய குழுவினர், இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறி சுயேச்சையாகக் களம் இறங்கத் துணிந்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், (வடமாகாண சபைக்கான தேர்தலில், இவர் யாழ் மாவட்டத்து மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தார். அதன் காரணமாக இரண்டாவது நிலையில் 87ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று மாகாணசபை உறுப்பினராகத் தெரிவாகியிருந்தார்) போன்றோரின் தேரதல் பிரவேசமானது சாதாரண மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதற்கும், அந்த மக்களின் இயல்பான வாக்களிப்பு போக்கை தடுமாறச் செய்வதற்கும் வழியேற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் சரியான தலைமைதானா என்ற கேள்வியை எழுப்பத்தக்க வகையில் இந்தப் பொதுத் தேர்தல் சூழல் அமைந்திருப்பதையும் காண முடிகின்றது.

ஜனவரி மாதத்து ஜனாதிபதி தேர்தலில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, மைத்திரிபால சிறிசேன அணியினருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது. இதனையடுத்து மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அதனையடுத்து அமைக்கப்பட்ட புதிய அரசாங்ஙத்திற்கும் கூட்டமைப்பு தனது ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தது. இந்த ஆதரவின் மூலமாக தமிழ் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகள் சிலவற்றிற்காவது தீர்வு கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்பு இலவுகாத்த கிளியாகிப் போனது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. சிறிய நகர்வுகள் கூட இடம்பெறவில்லை.

இராணுவத்தின் பிடியில் உள்ள பொதுமக்களின் குடியிருப்பு காணிகளில் கணிசமான அளவு விடப்பட்டு, அங்கு இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் மக்கள் ஏமாற்றத்தையே அடைந்துள்ளனர். பெயரளவில் வலிகாமம் வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டன. அவற்றில் மீள்குடியேறுவதற்கான ஆக்க பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. கூட்டமைப்பின் தலைமையினால் பெரிய அளவில் பேசப்பட்ட சம்பூர் மீள்குடியேற்றம் இறுதியில் மீள்குடியேறச் சென்றவர்கள் துரத்தயடிக்கப்பட்டதிலேயே போய் முடிந்துள்ளது. அது மட்டுமல்ல. புதிய அரசாங்கத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து எத்தகைய பேச்சுக்கள் நடத்தப்பபட்டிருக்கின்றன,

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தீர்வு தொடர்பில் யோசனைகள் எதனையும் முன்வைத்து அதன் அடிப்படையில் பேச்சுக்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றதா, அரசாங்கம் அதற்கு இணங்கியிருக்கின்றதா என்ற கேள்விகள் எல்லாம் இருக்கத்தக்க வகையில் புதிதாகத் தெரிவு செய்யப்படுகின்ற அரசாங்கத்துடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வ காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தேர்தல் விஞ்ஞாபனத்தின் முக்கிய அம்சமாக கூட்டமைப்பு முன்வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் இந்தத் தேர்தலில் இந்தக் கோரிக்கையை ஏற்று மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக இருக்குமா என்ற கோள்வியும் எழுந்துள்ளது. மொத்தத்தில் தமிழ் மக்களை மோசமான நெருக்கடிக்குள் தள்ளப் போகின்ற தேர்தலாகவே இது அமையப் போகின்றது என்று தெரிகின்றது.

நன்றி,

-வீரகேசரி-

Exit mobile version