Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குர்தீஷ் முள்ளிவாய்காலின் பின்னணி – தொடரும் மனிதப்படுகொலைகள் : சபா நாவலன்

பற்றியெரியும் குர்தீஷ் நகரமான கோபான்
பற்றியெரியும் குர்தீஷ் நகரமான கோபான்

உலகின் அதிபயங்கர கொலைகாரப் படையான CIA, ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பை சிரியாவிலும் ஈராக்கிலும் களத்தில் இறக்கிவிட்டு அதனை அழிக்கப்போகிறோம் என்ற பெயரில் பல மாங்காய்களை மட்டுமல்ல மாமரங்களையே விழுத்துகின்றது.

அமரிக்க அதிகாரவர்க்கத்தின் கொலைப்படை சீ.ஐ.ஏ இன் முக்கிய குறிகளில் குர்தீஷ் மக்களின் விடுதலைப் போராட்டமும் ஒன்று. உலகத்தில் இதுவரைக்கும் அழிக்கப்படமுடியாத, வெட்ட வெட்ட முளைவிடுவது குர்தீஷ் மக்களின் போராட்டம். சுய நிர்ணைய உரிமைக்காக, இஸ்லாமிய அடிப்படைவாத அழிவுகளை நிராகரித்து மார்க்சிய லெனினியத் தத்துவத்தை ஏற்றுக்கொண்ட குர்தீஷ் தொழிலாளர் கட்சியை அழிப்பதற்கான அமெரிக்க அரசின் நோக்கம் பல ஆண்டுகள் இரத்தம் தோய்ந்த வரலாற்றைக் கொண்டது.

குர்தீஸ் தொழிலாளர் கட்சி(PKK) ஐரோப்பிய நாடுகளின் எல்லைக்குள்ளேயே மார்கிசிய லெனினியத் தத்துவங்களை ஏற்றுக்கொண்ட பலம் மிக்க கட்சி. ஐரோப்பா, அமெரிக்கா உட்பட நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகளாலும் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு குர்தீஸ் தொழிலாலர் கட்சி உருவாக்கப்பட்டது. இக்கட்சியை தோற்றுவித்தவர்களில் முக்கியமானவர் தோழர் அப்துல்லா ஓசலான்.

1999 ஆம் ஆண்டு ஓசலான் சீ.ஐ.ஏ இனாலும் துருக்கிப் பாதுகாப்புப் படைகளாலும் நைரோபியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு துருகிக்கு நாடுகடத்தப்பட்டார் அங்கு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குர்திஸ் மக்களதும் துருக்கியத் தொழிலாளர்களதும் மதிப்பிற்குரியவராகத் திகழ்ந்த ஓசலான் குர்தீஸ் தொழிலாளர் கட்சியின் தத்துவார்த்த வழிகாட்டியுமாவார்.

மத அடிப்படை வாதிகளும்., நிற வெறியர்களும், இனவாதிகளும், நயவஞ்சகர்களும்,அயோக்கியர்களும் தேசிய விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கிறோம் பேர்வழிகள் என்று ஏகாதிபத்தியங்களின் அடியாட்களாகச் செயற்படும் காலகட்டத்தில் ஓசலான் மார்சியத்தை விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையாக முன்வைத்தார். சிறைக்குச் சென்ற காலம் முதல் ஓசலான் பல்வேறு நுல்களை வெளியிட்டுள்ளார்.

துருக்கியின் சிறுபான்மைத் தேசிய இனமான குர்திஸ்தான் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தில் தவறுகள், தத்துவார்த்தச் சிக்கல்கள் என்பவற்றிற்கு அப்பால் உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள், தொழிலாளர்கள் போன்றோர் குர்தீஸ்தான் மக்களின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டியது அவசியமானது.

குர்தீஸ் இன மக்களின் மொத்த சனத்தொகை 26 மில்லியன் வரையானது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. குர்திஸ்தான் என்ற பாரம்பரிய பிரதேசத்திற்குரிய மக்கள் துருக்கி, ஈரான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளிடையே பங்கிடப்பட்டுள்ளர் . குர்திச்தானை பிரிக்கும் செயற்கையான எல்லைகள் ஏகாதிபத்திய அரசுகளின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டவை. பிரிக்கப்பட்ட எல்லைகளின் ஒவ்வொரு புறத்திலும் பல குடும்பங்களும்,கிராமங்களும், மக்களின் உணர்வுகளும் இன்றும் ஒருங்கிணைவிற்காகக் கண்ணீர்வடிக்கின்றன. குர்திஸ்தானைப் பிளந்து தின்றுகொண்டிருக்கும் அன்னிய நாடுகள் தமக்கிடையே மோதிக்கொண்டாலும் குர்தீஷ் மக்களை அழிப்பதில் ஒற்றுமையுடனேயே செயற்படுகின்றன.

2500 வருடங்களாக துருக்கியரின் வருகைக்கு நீண்ட காலத்தின் முன்பாகவே குர்தீஸ் இன மக்கள் குர்திஸ்தானில் வாழ்ந்து வருகின்றனர். அப்பிரதேசத்தின் மிகப்பழமை வாய்ந்த வரலாற்று வழிவந்தவர்கள். அரபு மொழிக்கும், துருக்கி மொழிக்கும் தொடர்பற்ற சொந்த மொழியைப் பொதுவான மொழியாகக் கொண்டவர்கள். பொதுவான குர்திஸ் மொழியின் வெவ்வேறு பேச்சுவழக்கில் குர்மஞ்சி மொழியே அதிகமானோரால் பேசப்படுகின்றது.75 வீதமானவர்கள் சன்னி முஸ்லீம் பிரிவைச் சார்ந்தவர்கள்.

பெண் போராளிகள்

முதலாம் உலகப் போரின் பின்பதாக குர்திஸ்தான் என்ற தன்னுரிமையுள்ள நாட்டை அங்கீகரிப்பதாகக் கூறிய துருக்கி அரசு, பிரித்தானியா மற்றும் பிரான்சின் தலையீட்டினால் பின்னர் அதனை நிராகரிக்க ஆரம்பித்தது.

74 ஆயிரம் சதுர மைல் அழகிய மலைப்பிரதேசங்களில் 25 நூற்றாண்டுகளாக வாழும் குர்தீஸ் இன மக்களின் தன்னாட்சியை 1920 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட செவ்ரெஸ் ஒப்பந்ததின் அடிப்படையில் துருக்கி அரசாங்கம் அங்கீகரித்தது.

1923 ஆம் ஆண்டு பிரஞ்சு மற்றும் பிரித்தானிய அரசுகளுளின் அழுத்தத்தால் சுவிர்ட்ஸ்லாந்தில் லோசான் என்ற நகரில் புதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படுகிறது. இப் புதிய ஒப்பந்ததின் அடிப்படையில் குர்தீஸ் மக்களின் தன்னாட்சி உரிமை பறிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி குர்திஸ்தான் என்ற நிலப்பரப்பும் மக்களும் துருக்கி, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளிடையே பங்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இங்கு குர்தீஸ்தானின் மிகப்பெரிய பிரதேசம் துருக்கியினுள்ளேயே காணப்படுகின்றது. குர்தீஸ் மொழி துருக்கியில் தடைசெய்யப்பட்டது. குர்திஸ் இன மக்கள் துருக்கி மொழியொல் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்ற நிலை உருவானது.

இதற்கெதிராக குர்தீஸ் மக்களின் போராட்டம் துருக்கிய அரசால் 1925 ஆம் ஆண்டு மிருகத்தனமாக அடக்கப்பட்டது.

1946 ஆம் ஆண்டு ஸ்டாலின் தலைலையிலான சோவியத் ரஷ்யாவின் ஆதரவுடன் ஈராக் பகுதியிலுள்ள குர்தீஸ் மக்கள் தனி நாட்டைப் பிரகடனப்படுத்தி குறுகிய கால அரசை நிறுவினர்.
இது ஈராக்கிய அரசால் அழிக்கப்பட்டது.

தொடர்ச்சியான ஒடுக்குமுறைகள் பல்வேறு போராட்டங்களைம் அழிவுகளையும் ஏற்படுத்திற்று. 1978 ஆம் ஆண்டு அப்துல்லா ஓசலன் தலைமையில் குர்திஸ்தான் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கான கம்யூனிச இயக்கமான குர்தீஸ் தொழிலாளர் கட்சி உருவாக்கப்படுகிறது. இன்று வரை குர்தீஸ்தான் மக்களின் போராட்டம் இக் கட்சியினாலேயே தலைமை தாங்கப்படுகிறது.

பி.கே.கே. ஐத் தோற்றுவித்த ஓசலான்

90 களில் துருக்கியின் கிழக்குப் பகுதியில் பெரும்பாலனவை குர்திஸ் தொழிலாளர் கட்சியின் விடுதலைப் பிரதேசங்களாகவிருந்தன. ஓசலானின் தலைமையின் கீழ் கட்சி தனக்கான மக்கள் இராணுவக் கட்டமைப்பை உருவாக்கியிருந்தது. நிலங்கள் மக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டன. மக்கள் நிர்வாக அலகுகள், அரசமைப்பு என்பன உருவாகப்பட்டன. வெகுஜன அமைப்புக்களைக் கட்சி வளர்த்தது. உள்ளூர் தேர்தல் முறை அறிமுகப்படுத்தபட்டிருந்தது. அப்போது உலகப் போலிசான அமெரிக்க அரசு விழித்துக்கொண்டது. துருக்கிய அரசிசிற்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கிற்று.

1990 இல் ஆரம்பித்து ஓசலான் கைது செய்யப்படும் வரையான 9 வருட காலத்தில் ஆயிரக்கணக்கான குர்தீஸ் இன மக்களை துருக்கி அரசு சந்தேகத்தின் பெயரில் கைது செய்து கொலை செய்து அழித்தது.

ஈராக்கில் சதாம் ஹுசையினால் இரசாரன ஆயுதங்களால் குர்தீஸ் இன மக்கள் அழிக்கப்படுவது தொடர்பாக ஊழையிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் துருக்கியில் அவர்களை அழிப்பதற்காக ஆயுதங்களை வழங்கிற்று.

ஒசலான் கைதான பின்னரும் குர்தீஸ் மக்களின் போராட்டம் சிறிய பின்னடைவின் பின்னர் புதிய வேகத்தில் தொடர்ந்தது. உலகம் முழுவதும் ஜனநாயக முற்போக்கு சக்திகளுடனும், இடதுசாரி இயக்கங்களுடனும் இணைந்து குர்தீஸ்தானின் விடுதலைகான போராட்டம் இன்றும் தொடர்கிறது. ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரந்து வாழும் குர்திஸ்தான் மக்கள் சந்தர்ப்பவாத பாராளுமன்ற வாக்குப் பொறுக்கிகளின் பின்னால் வாலைத் தொங்கவிட்டுக்கொண்டு சுற்றித் திரியவில்லை. ஏகாதிபத்தியங்களின் தொங்கு தசைபோல குர்திஸ் தொழிலாளர் கட்சி செயற்படவில்லை. கம்யூனிஸ்டுக்களையும், ஜனநாயாக முற்போக்கு அணைகளையும் கொலை செய்வதிலிருந்து ஆரம்பித்த ஈழ விடுதலைப் போராட்டம் போன்று பிற்போக்கு பழமைவாத வலதுசாரிகளின் கைகளில் போராட்டம் முடங்கிப்போகவில்லை.

குர்திஸ்தானின் பகுதிகளூடாகவே பெற்றோலிய குழய்களும் எண்ணைப் போக்குவரத்துக்களும் சென்று வருகின்றது. இதனால் அதிகமாகக் கவலைகொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் குர்தீஸ் மக்களின் போராட்டத்தை அழிக்க பல்வேறு வழிகளைக் கையாண்டது. சிறையிலிருக்கும் ஒசலான் ஊடாக ஆயுதங்களைக் களைந்துவிடுமாறு பி.கே.கே அமைப்பிற்கு உத்தரவிட்டது. சிரியாவில் ஜனநாயகத்தை மீட்பதாக உலக மக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு சிரிய அரசை ஆயுத மயப்படுத்திற்று, அந்த ஆயுதங்கள் குர்தீஸ் மக்கள் மீதான இனப்படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்டன.

ஆயுதங்களை களைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த குர்திஸ் பெண் தலைவர் ஒருவரை பிரான்சில் வைத்து துருக்கிய அரசு பிரஞ்சு அரசின் மறைமுக ஆதரவோடு கொலை செய்தது.

ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பை உற்பத்தி செய்து சிரியாவின் குர்தீஸ் பிரதேசங்களை ஆக்கிரமித்த அமெரிக்க அரசு தானும் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிராகப் போராடுவதாக மத்திய கிழக்கின் மற்றப் பகுதிகளை ஆக்கிரமிக்கிறது.

சிரிய குர்தீஸ் மக்களின் குடியிருப்புப் பகுதியான கொபான் ஐ அமெரிக்க அடியாள் படையான ஐ,எஸ்.ஐ.எஸ் சுற்றி வளைக்க மறுபக்கத்தில் அமெரிக்காவின் மனித உரிமை ‘காவலனான’ ஐ.நா குர்தீஸ் இன மக்களுக்காக குரல் கொடுப்பதாக நாடகமாடுகிறது.

கோபான் பகுதிக்குள் ஐ,எஸ்.ஐ.எஸ் நுளையுமானால் அங்கு அனைத்து மக்களும் கொல்லப்படலாம் என்று ஐ.நா எச்சரிக்க, உலகில் எங்காவது ஒரு மூலையில் அமெரிக்காவிற்கு எதிராக் நாய்கள் குரைத்தாலே அணுவாயுதங்களோடு பிரசன்னமாகும் அமெரிக்கப்படை பார்த்துக்கொண்டிருக்கிறது.
கொபான் மற்றொரு முள்ளிவாய்க்கால் ஆகிக்கொண்டிருக்க இலங்கையில் நடந்தது போன்றே ஐ.நா கண்டிக்க அமெரிக்கா நீலிக் கண்ணீர் வடிக்க இனப்படுகொலை நிறைவேறும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குர்தீஸ் மக்களின் போராட்டத்தை ஆதரிப்பதும் அவர்களோடு கைகோர்த்துக் கொள்வதும் சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடும் ஒவ்வொருவரது கடமையுமாகும்.

Exit mobile version