Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குகநாதன் – நடந்தது என்ன..? : அருள் செழியன்

முன்னுரை
………………
1. ரயாகரனின் பிரச்சனை … அவருக்கு நாவலனை முடிந்த அளவுக்கு இழிவு படுத்தி தனிமைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் மார்க்ஸிய இயக்கத்தோடு அவருக்கு இருக்கும் தொடர்பை சீர்குலைக்க வேண்டும். அவரது செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்பதே ரயாவின் நோக்கம். அந்த நோக்கம் சரியானதாக இருந்திருந்தால் அதை அரசியல் ரீதியான பிரச்சாரமாக ரயா செய்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் நண்பர் நாவலன் பற்றி அவதூறுகளை வாரியிறைத்து வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு நண்பரிடம் ரயா எழுதியிருப்பதை படித்தீர்களா? என்று கேட்டேன் ‘’நான் மனநோயாளிகள் எழுதுவதை படிப்பதில்லை” என்றார். இன்னொருவருவரோ ”எழிலன் அதைக் கண்டு கொள்ளாதீங்க அந்த ஆள் ஒரு பதிவு எழுதுவார் அவரே பத்து பின்னூட்டங்களைப் போட்டு ஹிட்ஸ் கொடுப்பார் அதற்கு ஒரு முக்கியத்துவமும் இல்லை” என்றார். ரயாவின் கண்ணை உறுத்துவது இனியொருவும் சபா நாவலனும், அவரது குழுவினரும்தான். ராயா எழுதியதை நான் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ஆனால், ஆனால் இந்தச் சம்பவத்தில் எந்தத் தொடர்புமற்ற நண்பர் நாவலனின் பெயரை தேவையில்லாமல் தொடர்பு படுத்தி அவர் செய்யும் அவதூறுகளால் அவர் பாதிக்கப்படுகிறார்கள் என்பதாலேயே இந்த கட்டுரை எழுத நேர்ந்தது.
2. இக்கட்டுரை எழுதப்படுவதால் திரு.குகநாதன் அவர்களுக்கு தர்மசங்கடங்களோ, சிக்கல்களோ ஏற்படும் என்றால் அதற்கு முழுப்பொறுப்பும் ரயாகரன் மட்டுமே. ஏனென்றால் அவர்தான் இது குறித்து எழுதும் நிர்பந்தத்தை எமக்கு ஏற்படுத்தினார்.ஏனென்றால் ரயா தனது பாடாவதி இணையதளத்தில் எழுதிய பதிவுக்கு பின்னூட்டமிட்ட அருள் செழியன் ஒரு விளக்கத்தைக் கொடுத்ததோடு தனது தொலைபேசி எண்ணையும் பகிரங்கமாகவே கொடுத்திருந்தார். அந்த எண்ணுக்கு ரயா பேசியிருந்தால் விரிவான ஆதாரங்களோடு அவருக்கு தனிப்பட்ட முறையில் எல்லா தகவல்களையும் செழியனே வழங்கியிருப்பார். ஆனால் வழக்கம் போல வாந்தி எடுக்கத் தெரிந்த ரயாவுக்கு நிகழ்வின் எல்லா தரப்பு வாக்குமூலங்களையும் கேட்கத் துப்பில்லை. ஆனால் குகநாதனுக்கு மட்டும் தொலைபேசி தன் வாந்திக்கு தேவையானதை உண்டிருக்கிறார்.

3.இக்கட்டுரையில் குகநாதனால் அருள் செழியன் எப்படி வீதிக்கு வந்தார் என்பது மட்டுமே உள்ளது. சுமார் எட்டு வருடங்களுக்குப் பின்னர் அருள் செழியன் குகநாதனை எப்படிப் பிடித்தார். சென்னையில் என்ன நடந்தது என்பதை எல்லாம் இக்கட்டுரையில் அவர் எழுத வில்லை. நான்தான் எழுத வேண்டாம் என்றேன். ஏனென்றால் ரயாகரன் எழுதிய அவதூறுக் கட்டுரையில் குகநாதனிடம் தொலைபேசியதாக எழுதும் ரயா. என்ன பேசினார் என்பதையோ குகநாதன் என்ன சொன்னார் என்பதையோ பதிவு செய்யவில்லை.ஆக முதலில் ரயா குகநாதனிடம் கேட்ட விஷயங்களை அவர் தனக்கு சென்னையில் என்ன நடந்தாகச் சொன்னாரோ அந்த விஷயங்களை விரிவாக எழுதினார் என்றால் இக்கட்டுரையின் அடுத்த பாகத்தில் ஆதாரங்களோடு நாங்கள் எழுதத் தயார். ரயா எழுதாத வரை நாங்களும் எழுதுவதாக இல்லை.

4. மற்றபடி இந்தப் பிரச்சனைக்கும் பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கும், காஷ்மீரிகளின் சுயாட்சிக் கோரிக்கைக்கும், மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் பிரச்சனைக்கும், இராமேஸ்வரம் மீனவர் பிரச்சனைக்கும், வெட்டி முடமாக்கப்பட்டு வீதியில் வீசப்பட்டுள்ள வன்னி மக்களுக்கும், பயங்கரவாத இலங்கை அரசுக்கும், அந்த அரசை ஆதரித்து நிற்கும் விஸ்தரிப்பு எண்ணம் கொண்ட இந்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதுமட்டுமல்லாமல் நாவலனுக்கோ ஏனைய நண்பர்களுக்கோ எவ்வித தொடர்பும் இதனோடு இல்லை.

5.குகநாதன் சென்னையில் எங்கள் விவாகரம் தொடர்பாக சிக்கலில் மாட்டிக் கொண்ட செய்தியை நான் எனக்கு வேண்டிய பல நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டேன். குறிப்பாக என் சகோதரருக்கு குகநாதனால் ஏற்பட்ட இன்னல்களின் போது எவரெல்லாம் என் சகோதரரை சந்தேகப்பட்டார்களோ துரோகம் செய்தார்களோ அவர்களுக்குத்தான் உற்சாகமாக இதைச் சொன்னேன். மற்றபடி என் நலம் விரும்பும் சில புலம்பெயர் நண்பர்களுக்கும் சொன்னேன். உண்மையில் நாவலனுக்கு நானாகச் சொல்லவில்லை. நான் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இருந்த போது எனக்கு கட்டுரை ஒன்று தொடர்பாக தொலைபேசிய நவாலனிடம் “ஒரு குட்டி திமிங்கலத்தைப் பிடித்திருக்கிறோம் .அந்த திமிங்கலத்தின் வயிற்றினுள் என் சகோதரரின் மொத்த சொத்துக்களும் இருக்கிறது. சுமார் எட்டு வருடங்களுக்கு முன் உண்டது. இதை சிறையிலிடும் நோக்கோடு மட்டுமே பிடித்திருக்கிறோம்”” என்று சொன்னதோடு நான் விட்டிருக்கலாம்.
நான் ஆர்வக்கோளாரில் அவரிடம் பேசுகிறீர்களா?என்று நாவலனின் போனை குகநாதனிடம் கொடுத்தேன். குகநாதன் அதை வைத்து ஆட்டையப் போட்டு விட்டார். அதுவே ரயா என்னும் புலனாய்வுப் புலிக்கு சாதகமாகப் போய் விட்டது. இது ஒருபுறமிருக்க குகநாதனின் துணைவியார் அருள் எழிலனின் நண்பர்கள்தான் நாவலன், அசோக் என்பதைத் தெரிந்து கொண்டு அவர்களிடமும் பேசியிருக்கிறார். அவர்கள் இது தொடர்பாக என்னிடம் பேசிய போது..நண்பர்கள் என்ற வகையில் உங்களுக்கு ஒரு தகவலாகத்தான் இதைச் சொன்னேன். இதில் நீங்கள் தலையிடக் கூடாது என்றேன். அவர்களும் அதன் படி ஒதுங்கிக் கொண்டார்கள். இதுதான் நண்பர்களே நடந்தது.

6. வாழ்வின் ஒட்டு மொத்த சேமிப்புகளையும் குகநாதனிடம் இழந்த ஒருவரான அருள் செழியன் அவரது தனிப்பட்ட திட்டங்களினாலும் சட்ட ரீதியான போராட்டங்களினாலும் மட்டுமே குகநாதனைப் பிடித்தார். இதற்கும் வேறு எவர் ஒருவருக்கும் எந்த தொடர்புகளும் இல்லை.
7. ரயாகரன் மட்டுமல்ல சிங்கம், புலி, கரடி. பூனை என்று எந்த சக்தி அவதூறுகளின்  பின்னணியில் இருந்தாலும் நாம்  எதிர்கொள்ளத் தயாராகத் தான் உள்ளோம். புலிகளின் அழிவிலிருந்து முளைத்தவைகள் பல நச்சு மரங்களாக வேர்விட்டுப் படர முயற்சிக்கின்றன. இவையெல்லாம் இந்திய விஸ்தரிப்பு வாதம், அமரிக்க ஏகதிபத்தியம், இலங்கை அரச பயங்கரவாதம் போன்ற எல்லாத் தளங்களிலும் விரும்பியோ விரும்பாமலோ தமது சொந்த நலன்களுக்காகத் தொற்றிக் கொள்கின்றன. அனைத்தையும் எதிர்கொள்ளும் தைரியத்தை நாம் வரவளைத்துக் கொள்வோம். நடந்திருப்பது ஒரு திட்டமிட்ட அவதூறு. இதற்கெல்லாம் சளைப்பின்றி முன்நோக்கிச் செல்வோம்.
நன்றி,
டி.அருள் எழிலன்.
————————————————————————————————

நான் 1998ஆம் ஆண்டு நான் பாரீசிலிருந்து ஒளிபரப்பான டி  ஆர் டி தமிழ் ஒளியின் சென்னை கலையகத்தில் வேலை செய்தபோதுதான் அந்த நிறுவனத்தின் பாரிஸ் தலமையகத்தில் நிர்வாகியாக இருந்த சபாபதி சுப்பையா குகநாதனுடன் தொடர்பு ஏற்பட்டது.அவரது இயல்பான பழகும் தன்மையும் தன்னை ஒரு பாதிக்கப்பட்ட நபராகவே காட்டிக்கொண்டதும் அவர் மேல் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தியது.இதனால் அவருடனான எனது தொடர்பு  ஒரு ஆழமான நட்பாக மாற்றியது.

2000ஆண்டு துவக்கத்தில்  சென்னையில் டி ஆர் டி அலுவலகத்தை நிர்வகித்துவந்த புலம் பெயர் தமிழர் ஒருவரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் நான் அந்த வேலையிலிந்து நின்று விட்டேன்.ஆனாலும் குகநாதனுடனான எனது நட்பு  தொடர்ந்தது.

அதன் பிறகு நான் டி டி என் தொலைகாட்சிக்காக ஒரு வருடம் வேலை செய்தேன்.அப்போது ஒரு நாள் இயக்கம் தன்னை தனிமை படுத்திவிட்ட தென்றும்,தான் மிகவும் மனம் உடைந்த நிலையில் இருப்பதாகவும் குடும்பதோடு தற்கொலை செய்து கொள்வதைத்தவிர தனக்கு வேறு வழி இல்லை என்றும் வருந்தினார்.இதனால் அவர் மீது எனக்கு அனுதாபம் அதிகமாயிற்று.ஆனால் சுவிஸில் டி டி என் னில் பொறுப்பாய் இருந்த பிரபா ‘அவனொரு ஃபிராடண்ணை அவன்ட கதைகளை நம்ப வேணாம்’என்றார்.ஆனால் பிரபா போன்றவர்கள் ஒரு ஆளை பற்றி முழுமையாகத் தெரியாமல் ஊர் சொல்லும் கதைகளை நம்மிடமும் சொல்கிறார்கள் என்று நினைத்தேன்.

அதன் பிறகு நான் ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான கதையல்ல நிஜம் நிகழ்ச்சியின் நிர்வாக தயாரிப்பாளராக வேலைக்கு சேர்ந்தேன்.இதே காலகட்டத்தில் நான் டி டி என் உட்பட பல வெளிநாட்டு தொலைக்காட்சிகளுக்கும் கமிஷன் அடிப்படையில் வேலை பார்த்தேன். இதன் மூலம் எனக்கு மாதம் தோறும் சராசரியாக சுமார் 80000 ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைத்தது.

2002ல் ஏப்ரல் மாதவாக்கில் குகநாதன் என்னிடம் தான் லண்டனில் டிஷ் ஏசியா யுகே லிமிடேட் (DISH ASIA UK LTD)என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை  துவங்கப் போவதாகவும் அதன் மூலம்  ஜெயா,ராஜ் ஆகிய தமிழ் தொலைக்காட்சிகளை ஐரோப்பிய நாடுகளில் ஒளி பரப்ப திட்டமிட்டிருப்பதாகவும்,இதற்காக  மேற்குறிப்பிட்ட தொலைக்காட்சிகளிடம் பேசுமாறும் என்னிடம் கோரினார்.

நானும் தொலைக்காட்சி நிறுவனங்களுடன் பேசி அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு.

குகநாதனை சென்னைக்கு வருமாறுஅழைத்தேன் அப்போது குகநாதன் தான் பணக்கஷ்டத்தில் இருப்பதாகவும் பார்ட்டனர்களிடமிருந்து இன்னும் பணம்  வரவில்லையென்றும் வருந்தினார்.அதற்கு நான் ‘செலவுகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம் கிளம்பி வாருங்கள்’என்றேன்.அதன்படி குகநாதன் ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு வந்தார். 

குகநாதன் திரும்பிப் போவதுவரைக்கும் அவரது விடுதி வாடகை உட்பட பலசெலவுகளையும் நானே பார்த்துக்கொண்டேன்.

அதன்பிறகு குகநாதன் அடிக்கடி சென்னைக்கு வர ஆரம்பித்தார்.அப்போதெல்லாம் அவரது பெரும்பாலான செலவுகளை நானே பார்த்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது.2003 மார்ச் மாதவாக்கில் குகனாதன் சென்னைக்கு வந்தபோது தனது பார்ட்டனர்களிடமிருந்து பணம் பணம்வரவில்லையென்றும் அவர்களிடமிருந்து பணம் வந்தபின்பே தான் இயங்க முடியும் என்றும் கூறினார்.

அதற்காக அவர் தனது டிஸ் ஏசியா யுகே லிமிடேட் நிறுவனத்துடன் நான் 2002 நவம்பரிலேயே கையொப்பமிட்ட மாதிரி (கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முண்தைய தேதியில்) ஒரு ஒப்பந்தத்தை தயார் செய்யவேண்டுமென்றும், இந்த ஒப்பந்தத்தை காட்டித்தான் தான்

அமேரிகாவில் வசிக்கும் இந்தியரான தனது பார்ட்டனர் தீரஜ்அகுலா என்பவரிடம்   ‘சென்னையில் எல்லாம் ரெடி..பணம் கொடுத்தால் உடனே வேலைகளை ஆரம்பித்துவிடலாம்’ என்று பணம் வாங்கிவிடுவேன் என்றார்.

இதற்காக குகநாதன் கண்ணன் என்ற டிரைவரை அனுப்பி (06-11-2002)முந்தைய தேதியிட்ட ஸ்டாம்ப் பேப்பர்களை வாங்கி வரச்செய்ததோடு,அருகே இருந்த இன்டர் நெட் செண்டருக்கு போய் தானே ஒப்பந்தம் ஒன்றயும் டைப் செய்து   எடுத்து வந்தார்.

அந்த ஒப்பந்தத்தில் 06-11-02 அன்று சென்னையில் வைத்து நானும் குகநாதனும் இந்த ஒப்பந்தத்தை செய்து கொண்ட்தாகவும் (உண்மையில் அந்த தேதியில் குகநாதன் இந்தியாவிற்கே வரவில்லை) டிஸ் ஏசியா யுகே லிமிறேட் நிறுவனம் எனக்கு மாதம் தோறும் பத்தாயிரம் டாலர் தருமென்றும் நான் அந்தபணத்தை வைத்து  சென்னையிலிருந்து நிகழ்ச்சிகள் தயாரித்து அனுப்பவேண்டுமென்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.இதில் நானும் அவரும் கையொப்பம் இட்ட பின்பு அந்த பத்திரத்தைப் ஒரு முறை வாசித்து பார்த்த குகநாதன் ‘இந்த பத்திரதை காட்டி தீரஜ்அகுலாவிடமிருந்து பெரும் தொகை எதுவும் வாங்க முடியாது’ என்றும், தான் எனக்கு 50லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடியோ கருவிகளை முதலில் தருவதோடு அதன் பிறகு மாதாமாதம் பத்தாயிரம் டாலர் தருவதாக ஒரு ஒப்பந்தம் போட்டால் மட்டுமே  ‘தீரஜ்அகுலாவிடமிருந்து ஒரு பெரும் முதலீட்டை வாங்க முடியும்’ என்றும் கூறியபடி உடனடியாக அதே தேதியில் புதிய பத்திரம் ஒன்றை தயார் செய்து வந்து அதிலும் என்னிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு முதலில் கையெப்பமிடப்பட்ட பத்திரத்தை குப்பையில் வீசிவிட்டார்.

அந்த பத்திரத்தின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. (இந்த ஒப்பந்தத்தில் எங்கும் ஜெயா ராஜ் டிவிகள் மற்றும் அரெப் ரேடியோ & டெலிவிஷன் பற்றி குறிப்பிடப் படவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்)

அதன் பிறகு குகநாதன் (டிஸ் ஏசியா யுகே லிமிடேட்)அந்த நிறுவனத்தை தொடர்ந்து நட்த்தாமல் டிஸ் ஏசியா நெட் வொர்க்(DISH ASIA NETWORK) என்ற புதிய நிறுவனத்தை பாரிசில் துவங்கினார்.இந்த புதிய நிறுவனம் பற்றி எனக்கு குகநாதன் எதுவும் சொல்லவில்லை.இந்த நிறுவனம் அரெப் ரேடியோ & டெலிவிஷன் என்ற அரபு நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி சென்னையிலிருத்து ஜெயா,ராஜ் எஸ்.எஸ் மியுசிக் ஆகிய தொலைக்காட்சிகளை ஐரோப்பிய மற்றும் வளைகுடா நாடுகளில் ஒளிபரப்பும் தொழிலில் இறங்கியது.இதற்காக அரெப் ரேடியோ & டெலிவிஷன் நிறுவனம் பெரும் தொகையை குகநாதனின் டிஸ் ஏசியா நெட் வொர்க் நிறுவனத்தில் முதலீடு செய்தது.

சென்னையிலிருந்து மேலே குறிப்பிட்ட மூன்று சேனல்களின் சிக்னல்களையும் ஐரோப்பாவிலுள்ள டான் டிவியின் ஒளிபரப்பு மையத்திற்கு அனுப்பித்தர  சென்னை சைதாபேட்டையிலுள்ள டேட்டா அக்ஸ்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார் குகநாதன். அதற்காக 2003ன் பிற் பகுதில் சென்னை வந்த போதுதான் தனது புதிய நிறுவனம் பற்றியும் அரெப் ரேடியோ & டெலிவிஷனுடன் இண்ந்து தான் செயல்படுவது குறித்தும் இது தனக்கு கிடைத்த மாபெரும் அதிஷ்டம் என்றும் என்னிடம் தெரிவித்தார்.  

சென்னை டேட்டா அக்ஸ்ஸ் என்ற நிறுவனதில்வைத்து    முன்னர் குறிப்பிட்ட தொலைக்கட்சிகளின் இந்திய ஒளிபரப்புகளை  பதிவுசெய்து அதிலுள்ள விளம்பரங்களை அகற்றிவிட்டு நிகழ்ச்சிகளை ஐரோப்பிய நேரத்திற்கு ஒளி பரப்பும் வகையில் தயார் செய்து தரும்படி குகநாதன் என்னிடம் கேட்டுக்கொண்டார்.இதற்காக குகநாதன் என்னுடன் எந்தவித ஒப்பந்தங்களும் போடவில்லை.இது பற்றி நான் குகநாதனிட்ம் கேட்டதற்கு ஒப்பந்தம் போடுவதாக இருந்தால் அரெப் ரேடியோ & டெலிவிஷன் நிறுவனத்துடன்தான்  போட வேண்டும் என்றும் அதற்கு இப்பொது அவசியமில்லையென்றும்  அரெப் ரேடியோ & டெலிவிஷன் நிறுவனத்திற்கு எனது பணிகள் பற்றி தான் சொல்லிவிட்டதாகவும் அரெப் ரேடியோ & டெலிவிஷன் நிறுவனமே எனக்கு செலவுக்கான  பணத்தை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த பணியினை செய்வதற்காக தனது நிறுவனம் மாதம் தோறும் எனக்கு ரூபாய்50,000 வழங்குவதாக தெரிவித்ததோடு அதற்காக அவர்  எனக்கு ஒரு கடிதமும் தந்தார்.

அதன் படி அரெப் ரேடியோ & டெலிவிஷன் நிறுவனம் இந்த வர்த்தகத்தில் தொடர்புடைய அனைவருக்கும்  தானே நேரிடையாக செலவுக்கான பணத்தை அனுப்பியது.

ஆக 02-11-2002 தேதியிட்டு குகநாதன் என்னுடன் செய்த ஒப்பந்தத்திற்கும் நான் செய்யப்போகும் இந்த வேலைகளுக்கும் எந்த தொடர்புமில்லை  

ந்த ஒப்பந்தத்திற்கும் சற்றும் தொடர்பில்லாத அரெப் ரேடியோ & டெலிவிஷன் நிறுவனம் எனக்கு வங்கி மூலம் பணம் அனுப்பியதற்கான ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது

இதன்படி குகநாதன்  சார்பாக அரெப் ரேடியோ & டெலிவிஷன் நிறுவனம் எனக்கு ஒவ்வொரு முறையும் 10000 யூரோ வீதம் டிசம்பர் 2003 முதல் 2004 மே மாதம் வரைக்கும் ஆறு தவணைகளில் 60000 யூரோ அனுப்பியது.

ஒவ்வொரு மாதமும் இந்த பணம் அலுவலகத்தை நிர்வாகிக்க போது மானதாக இல்லை.(இந்த பணத்தில் நிகழ்ச்சிளை எடிட் செய்யும் வீடியோ கருவிகளும் கணிணிகளும் வாங்கியது, போக சுமார் பதினெட்டு ஊழியர்களுக்கான மாத ஊதியம்,மின் கட்டணம்,வெளி தயரிப்பாளர்களிடமிருந்தும் வேறு தொலைக் காட்சிகளிலிருந்தும்  நிகழ்ச்சிகள் வாங்கி அனுப்பியது,அதற்கான கேசட் செலவு,கேசட்களை அனுப்பிய கூரியர் செலவு, சென்னைருந்து ஊழியர்களை பாரிசிலுள்ள அலுவலகத்திற்கு அனுப்பியது,சென்னையில் ராம் என்பவருக்கு குகநாதன் தர வேண்டிய ரூபாய்4,50,000த்தை  தந்தது,கொழும்பிலும்  பாரிசிலும் இருந்த  குகநாதனின் அலுவலகங்களுக்கு சில லட்ச ரூபாய் மதிப்புள்ள  பொருட்களை அனுப்பியது, என்று பல வகைகளில் பணம் செலவானது இதை எழுத பக்கங்கள் போதாது.)

இதனால் நான் மாதம் தோறும் என் கையிலிருந்து ஒவ்வொரு மாதமும் பெரும் தொகையை வைக்க வேண்டியதாயிற்று.

இவ்வாறாக ஐந்தே மாதத்தில் (2004 ஏப்ரல்) எனக்கு 3,50,000 ரூபாய் நட்டம் ஏற்பட்டது.அதே வேளையில் ‘குகநாதன் ஒரு மோசடிப்பேர்வழியென்றும் பலரையும் அவர் ஏமாற்றி வருவதாகவும்.எச்சரிக்கையாக இருக்கும் படியும்’ குகநாதனுடன் இருக்கும் சிலர் என்னை எச்சரிக்கை செய்தனர்.ஆனால் நான் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை.இதற் கிடையில் அரெப் ரேடியோ & டெலிவிஷன் நிறுவனம் தன்னை குகநாதன் தன்னை ஏமாற்றுவதாக உணர்ந்து அவருடன் செய்துவந்த வியாபாரத்தை நிறுத்தியதுடன் என் போன்றவர்களுக்கு பணம் அனுப்புவதையும் நிறுத்திவிட்டது.ஆனால் குகநாதன் என்னிடம் இந்த உண்மைகளை மறைத்துவிட்டு    ‘பத்து நாளில் வரும்’ ‘அடுத்த மாதம் வரும்’ ‘சேர்த்து மொத்தமாக வரும்’என்று பல கதைகளை விட்டு  காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார்.

செலவுகள் குறையவில்லை அதேபோன்று  குகநாதன் எனக்கு  தருவதாக சொன்ன மாதம் ரூபாய்50,000 சம்பளத்தையும் ஒரு மாதம் கூட தரவில்லை.

என் கையிலிருந்த பணத்தையும் முழுமையாக குகநாதனை நம்பி செலவு செய்துவிட்டேன்.இந்த நிலமையில் அப்போது என்னிடம் வேலை பார்த்தபடி ஒரு ஒட்டுன்ணி போல என்னைஒட்டிக்கொண்டிருந்த (தற்போது திருநெல்வேலி ஹலோ எஃப் எம்மில் வேலைபார்க்கும்) சகாயராஜும் குகநாதனும் சேர்ந்து பேசி சில மத நிகழ்ச்சிகளுக்கும் மருத்துவர்களுக்கும் நிகழ்ச்சிகள் கொடுக்கலாம் என்றும் அதில் வரும் பணத்தில் கம்பனியை நடத்தலாம் என்று முடிவு செய்து அதன்படி நிகழ்ச்சிகழும்  பெறப்பட்டன.இதன்மூலம் எட்டு மாதங்களில் சுமார் 27லட்சம் பெரப்பட்ட்து.இவ்வாறாக வந்த பணமும் அலுவலகத்தை நடத்த போதுமானதாக இல்லை.சகயராஜ் மட்டும் அப்போது ரூபாய் 25,000என்னிடம் மாதச் சம்பளமாக பெற்று வந்தார்.இது போக அவரது பேச்சைகேட்டு பல லட்சங்களை இழந்தேன்.

இந்த நிலையில் 2004 செப்டம்பரில் எனது காலில் ஏற்பட்ட ஒரு பெரிய பிரச்சனக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டேன்.அறுவை சிகிர்ச்சைக்கு பின் மூன்று மாதங்கள் படுக்கையில் இருந்தேன். அப்போது அரெப் ரேடியோ & டெலிவிஷன் நிறுவனம் பணம் அனுப்பாததால்  டேட்டா அக்ஸ்ஸ் நிறுவனமும்   குகநாதனுக்காக தான்  செய்துவந்த சேவையை (ஒளிபரப்பை) துண்டிதுவிட்டு கருவிகளை சிறை பிடித்தது.குகநாதனின் நண்பராக இருந்து பின்நாளில் அவராலேயே ஏமாற்றப்பட்ட சென்னையைச் சார்ந்த சலிம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெரும் தொழில் அதிபரின் சுமார் 60லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒளிபரப்பு கருவிகளும் இந்த பில்டிங்கில் மாட்டிக்கொண்டன.அவர் சுமார் 3,50,000 ரூபாயும், தமிழன் டிவி நடத்தும் கலைக்கோட்டுதையத்திடம் நான் 1லட்சம் வாங்கி டேட்டா அக்ஸ்ஸ் நிறுவனத்திடம்   கொடுத்தும் கருவிகளை மீட்டு வெளியேறினோம். (சலிமின் ஒரு தகாத நடவடிக்கைக்காக அவரை நான் ஒரு முறை கடுமையாக கடிந்து கொண்ட தோடு இனி அலுவலகத்திற்குள் வரவேண்டாம் என்று சொல்லியிருதேன்,இதனால் அவருக்கும் எனக்கும் சுமுகமான உறவு இல்லை)

அதன் பிறகு சகயராஜின் யோசனைபடி பக்கத்து தெருவில் ஏற்கனவே வாடகை கட்டிடத்தில் அமைக்கப்பட்டு பயன்படுத்த முடியாது கிடந்த ஸ்டுடியோவிற்கு இடம் பெயர்ந்தோம்.இப்போது குகநாதன் ராஜ்,ஜெயா தொலைகாட்சிகளை பதிவுசெய்து கேசட்களில் அனுப்புமாறு என்னிடம் கோரினார்.அதன்படி கேசட்கள் அனுப்பி வந்தேன்.

2005டிசம்பரில் குகநாதனிடம் கவனமாக இருக்கும்படி முன்பு என்னை எச்சரித்த  குகனாதனின்  நண்பர் சென்னைக்கு வந்திருந்தார்.அவர் இனியுமா குகநாதனை நம்புகிறீர்கள்?என்றதோடு அரெப் ஷேக்கையும்,தன்னையும் மேலும் பலரையும்  குகநாதன் ஏமாற்றிய கதைகளையையெல்லாம் என்னிடம்  சொன்னார்.நான் இந்த விஷயத்தை சகாயராஜிடம் சொன்னேன்.அவரோ இந்த செய்தியை குகநாதனுக்கு சொல்லிவிட்டார்.

 2005 ஜனவரி 18ஆம் தேதி குகநாதன் சென்னை வந்தார்.வழக்கம் போல அவரை ஹோட்டலில் தங்க வைத்தேன் 21ஆம் தேதி தன்னுடன் கொழும்பு வந்தால் அங்குள்ள அலுவலகத்திலிருந்து காமிரா ஒன்று எடுத்து தருவதாக சொன்னார்.இழந்த பணத்திற்கு ஒரு காமிராவாவது மிஞ்சுமே என்று அவர் வாக்கை நம்பி அவருடன் கொழும்பு செல்ல தயாரானேன்.டிக்கெட்டுக்கு காசில்லை என்றார்.எனது கிரெடிட் கார்ட் மூலம் இருவருக்குமாக டிக்கெட் எடுத்துக் கொண்டு அவருடன் கொழும்பு சென்றேன்.

(டிக்கெட் நகல் இணைக்கப்பட்டுள்ள)

அங்கே சென்ற போதுதான்  அங்கும் குகனாதனுக்காக வேலை பார்த்த சிவகுமார் தான் குகநாதனால் பெரும் துயரதில் இருப்பதாக என்னிடம் தெருவித்தார்.குகநாதன் எனக்கு காமிரா தருவதாக இருந்தால் இவரிடமிருந்துதான் ஒரு காமிராவை பிடுங்கித்தர வேண்டும்.அது எனக்கு உடன்பாடு இல்லாததால்  நான் சென்னைக்கே திரும்பி வந்துவிட்டேன்.

அடுத்து வந்த சில நாட்களில் அரெப் ரேடியோ & டெலிவிஷன் நிறுவனம் ராஜ்,ஜெயா தொலைகாட்சிகளுக்கும் பணம் அனுப்பாததால் பல மாதங்களாக ஏமாற்றப்பட்ட அந்த நிறுவனங்கள்  தங்களது சேனல்களை ஐரோப்பாவில் ஒளி பரப்பக்கூடாதென்று குகநாதனுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு எனக்கும் தகவலை தெரிவித்தன.ஆனால் குகநாதன் இரு சேனல்களையும் கள்ளத்தனமாக பதிவுசெய்து அனுப்புமாறு என்னிடம் கேட்டார்.

நான் மறுத்து விட்டேன்.

மேலும் என்னுடன் ஒட்டிக்கொண்டு எனக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்திய சகாயராஜை வேலையை விட்டு நிற்கும்படி கூறினேன்.அவரோ பாதி சம்பளமாவது தந்து தன்னை பணியில் வைத்திருக்குமாறு வேண்டினார்.மிகவும் மன் வேதனையில் இருந்த நான் அதற்கு மறுத்து அவரை அனுப்பி விட்டேன்.கணக்கு பார்த்தபோது என் கையிலிருந்து ரூபாய் 9 லட்சம் இழப்பு ஏற்பட்டிருந்தது. குகநாதன் சொன்ன சம்பளமும் எனக்கு கிடைக்கவில்லை.என்னைச்சுற்றிலும் கடன் காரர்கள் வேறு.நான் ஒரு வீடு வாங்குவதற்காக ஒரு ரியல் எஸ்டேட் கம்பனியில் அட்வான்சாக கட்டியிருந்த 3, 25,000 ரூபாயை திரும்பப்பெற்றேன்.25, 000 ரூபாயை பிடித்துக் கொண்ட அந்த நிறுவனம்3,00,000 ரூபாயை திருப்பித் தந்தது.அதை வைத்து கடன்களை தீர்த்தேன்.இரண்டு மத நிறுவனங்களிடமிருந்து பணம் வர வேண்டியிருந்தன அதனை நானே எடுத்துக்கொண்டு ஒதுங்கிக்கொள்ளப் போகிறேன்.என்று குகநாதனிடமும் சகாயராஜிடமும் சொல்லிவிட்டேன்.

இரண்டு நாள் கழித்து குகநாதன் எனக்கு போன் செய்து ‘இப்போது சகாயராஜ் சலிமுடன் போய் பேசிக்கொண்டிருக்கிறார்.சலிம் எனக்கு  ராஜ்,ஜெயா சேனல்களை பதிவு செய்து அனுப்பப்போகிறார்..அதற்கு தேவையான  உபகரணங்கள் ஒன்றிரண்டை கொடுத்து உதவுங்கள்’என்றார்.

நானும் தொல்லை விட்டது  என்று அதற்கு தேவையான கருவிகளை கொடுத்தனுப்பினேன். நான் பணம் வருமென்று எதிர் பார்த்த மத நிறுவனங்கள் மறுநாள் என்னை தொடர்பு கொண்டு  ‘சகாயராஜ் சலிமின் நிறுவனத்திற்கு அந்த பணத்தை கொடுக்குமாறு கேட்பதாக’ எனக்கு  தெரிவித்தன.அதற்கு நான்  ‘குகநாதன் என்ன சொல்கிறாரோ.. அதன்படி கொடுங்கள் ’என்று சொல்லி விட்டேன்.ஆனால் குகநாதன் மேற்படி நிறுவனங்களுக்கு அதற்கு முன்பே போன் செய்து சலிமின் நிறுவத்திற்கு அந்த பணத்தை தந்துவிடும்படி கூறியதாக கேள்விப்பட்டேன்.

அதன் பிறகு குகநாதன் மீது எனக்கிருந்த கொஞ்சம் மரியாதையும் போய் விட்டது.

மறுநாள் காலை குகநாதன் வழக்கம் போல பேச ஆரம்பித்தார்.சலிமிற்கு இன்னொரு கருவியை கொடுக்குமாறு வேண்டினார்.அவருடைய அயோக்கியத்தனத்தை புரிந்துகொண்ட நான்  எனக்கு வரவேண்டிய பணத்தை செட்டில் செய்துவிட்டு என்னிடமுள்ள மீதி கருவிகளையும் பெற்றுக்கொள்ளுமாறு கோரினேன்.அவரோ  ‘இந்தியாவென்றால் அவருக்கு எல்லாமே நான்தானென்றும்  நான் இப்படி பேசுவது அவருக்கு அதிர்ச்சியாக இருப்பதாகவு’ம் கூறினார்.அதற்கு நான் இன்னும் உன்னிடம் ஏமாறத்தயாரில்லையென்றேன்.மரியாதை மலையேறிவிட்டது.

அவர் தன் வீட்டை விற்றாவது எனக்கு தரவேண்டியதை தந்து விடுவதாக கூறினார்.அதோடு அவருடன் தொடர்பை துண்டித்து விட்டேன்.

அதன் பிறகு ஆறு மாதங்களுக்கு பிறகு 2005 ஆகஸ்ட் 27 அதிகாலை 6மணிக்கு சென்னை கமிஷனர் அலுவலகத்திலுள்ல  மத்திய குற்றபிரிவு போலிசால் நான் விசாரணக்காக அழத்துச் செல்லப்பட்டேன்.ஆய்வாளர் ஜீவரத்தினம் என்பவர்தான் விசாரணை அதிகாரி. சென்னை அசோக்நகரைச் சேர்ந்த சத்திய மூர்த்தி என்பவர்தான் என் மீது புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.குகனாதனிடம் நான் 55லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு. இந்த சத்திய மூர்த்தியை நான் இதற்கு முன் பார்த்ததில்லை.குகநாதனிடம் பவர் ஆப் அட்டார்னி பெற்று அவர் இந்த புகாரை பதிவு செய்திருப்பதாக சொன்னார்கள்( FIR – 622/05) முதல்தகவல்அறிக்கை(FIR) யை யோபவர் ஆப் அட்டார்னியையோ ஆய்வாளர் ஜீவரத்தினம் எனக்கு காட்ட மறுத்தார்.

நான் எனக்குதான் குகநாதன் பணம் தரவேண்டியுள்ளது கணக்குகள் என்னிடம் தெளிவாக உள்ள என்றேன்.ஆனால் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட    06-11-2002 தேதியிட்ட பத்திரத்தின் பிரதி ஒன்றைக்காட்டிய ஆய்வாளர்அதன் படிதான் நான் குகநாதனிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக குற்றம் சாட்டினார்.

நான் மறுத்தேன் குகநாதனுடன் செய்துகொண்ட 06-11-2002 தேதியிட்ட இந்த ஒப்பந்தத்தின்ப்படி பரிவர்த்தனை ஏதும்  நடக்கவில்லையென்றும்,பத்திரத்திலுள்ள டிஷ் ஏசியா யுகே லிமிறேட் கம்பனியை குகநாதன் லண்டனில் நடத்தவில்லை, என்றதோடு  அரெப் ரேடியோ & டெலிவிஷன் நிறுவனம்தான் எனக்கு பணம் அனுப்பியது என்றும் அது பற்றி விசாரித்தாலே நான் ஏமாற்றப்பட்ட்து தெரியவரும் என்றேன்.ஆனால் ஆய்வாளர் என்னை ரிமாண்ட் செய்யப்போவதாவே மிரட்டிக்கொண்டிருந்தார்.

மேலும் சகாயராஜும் எனது மோசடிகளை பற்றி என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாய் வாக்கு மூலம் கொடுத்திருப்பதாகவும்  ஆய்வாளர் சொன்னார்.சகாயராஜை விசாரணைக்கு அழைக்குமாறு கோரினேன்.ஆனால் அவர் ஊரில் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.

எனக்கு இதை என் பத்திரிகை நண்பர்களிடம் சொல்லி ஒரு பிரச்சனையாக்குவதோ அவர்கள் மூலம் அதிகாரிகளிடம் முறையிடுவதோ அவமானமான காரியமாக இருந்தது.

நான் நடப்பது நடக்கட்டுமென்று   இருந்தேன்.  

எனக்கு எதிராக புகார் செய்திருந்த சத்திய மூர்த்தி ஒரு போலி பத்திரிகையாளர் என்றும் மேலிட செல்வாக்குடன் புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிய வந்தது.என் மீதான இந்த மோசடி புகார் எனக்கு ஒரு புறம் அதிர்ச்சியை தந்தாலும் .மறுபுறம் நான் நிரபராதி சட்டப்படி இதை எதிர்கொள்ள வேண்டும் என்ற தைரியத்தோடுதான் நான் இருந்தேன்.

ரிமாண்ட் ஆகவும் நான் தயாராகவே இருந்தேன்.

ஆனால் எனது மனைவி நான் ஜெயிலுக்கு போனால் அது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றாள்.

தம்பி எழிலனும்  ரிமாண்ட் ஆகக்கூடாதென்பதில் உறுதியாக இருந்தான்  ‘குகநாதன் என்ற ஃபிராடுடன் பழகினதற்கு தண்டனையாக அவர்கள் கேட்பதை கொடுத்துவிட்டு வா’என்றான்.

அப்போது அங்கு வந்தார் என்து பழைய நண்பரான ஒரு வக்கீல்.அவர் சகாயராஜுக்கு மிகவும் நெருக்கமானவர்.

அவர் வந்தபோது என்னுடன் பேசினார்.

அவருக்கும் சத்திய மூர்திக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்தது.அவரிடம் முதல் தகவல் அரிக்கையை காட்டினர்,ஆனால் அவர் அதில் இருக்கும் விஷயங்களை எனக்கு சொல்லவில்லை.ரிமாண்டை தவிர்க்க வேண்டுமானால் என் வசம் இருக்கும் கருவிகளையும் மூன்று லட்ச ரூபாயும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றார்.

சத்தியமூர்த்தியும் என்னிடம் பேசினார்.நான் நிரபராதியென்று தனக்கு தெரியுமென்றும் என்னிடம் இருக்கும் பொருட்களையும் பணத்தையும் தன்னிடம் தந்துவிட்டால் பிறகு நான் தரும் கணக்குகளை பார்த்து எனக்கு சேரவேண்டிய பணத்தை குகநாதனிடமிருந்து பெற்று தருவதாக சொன்னார்.  

வேறு வழியின்றி அதற்கு தயரானேன்.அப்போதே ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு எனது  அலுவலகத்தையும்,ரூபாய் 3லட்சத்திற்கான இரு காசோகளையும் சத்தியமூர்த்தியிடம் ஒப்படைதேன்.

என் இரு குழந்தைகள் பெயரில்  வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த பணம், டெபாசிட் உடைக்கப்பட்டு ரூபாய் 3லட்சம் வங்கி மூலம் சத்தியமூர்த்தியின் வங்கிக்கு மாறியது.

உதவிக்கு வந்த அந்த வக்கீல் நண்பர் குகநாதனோடு லார்ட்ஸ் டிவி என்ற நிறுவனத்தை நடத்துவதற்காக ஒப்பந்தத்தில்  இருந்தார் என்று பின்னர் கேள்விபட்டேன்.

சரியாக ஒரு மாதமாக உட்கார்ந்து கணக்குகளை சரி பார்த்து எழுதி உரிய ஆதாரங்களுடன் சத்தியமூர்த்தியிடம் கொடுத்தேன்.அவர் என்னிடமிருந்து கணக்குகளை வாங்க மறுத்ததோடு குகநாதன் தன்னையும் ஏமாற்றிவிட்டு ஓடி விட்டதாக கூறினார்

நான் மறுநாளே சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு ஆய்வாளர் ஜீவரத்தினம் என்னை மிரட்டி கட்டை பஞ்சாயத்து செய்ததாக புகார் ஒன்றை அனுப்பினேன்.அதைத்தொடர்ந்து பல அதிகாரிகளுக்கும் புகார்கள் அனுப்பினேன் எந்த பயனுமில்லை.

நடவடிக்கை எதுவும் இல்லாததால் ஆய்வாளர் ஜீவரத்தினம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்.5லட்ச ரூபாய் நஷ்ட்ட ஈடு பெற்றுத்தரும் படியும் சென்னை உயர் நீதிமன்றத்தில்   வழக்கொன்றை தாக்கல் செய்தேன்.(அது இன்னமும் விசாரணையில் இருக்கிறது).

இந்த வழக்கிற்காக நீதிமன்றத்தில் என் மீது கொடுத்த புகாரையும் முதல் தகவல் அறிக்கையையும் பெற்று பார்த்தபோது புகாரில் வரிக்கு வரி பொய்யானதாக இருந்தது. சத்திய மூர்த்திக்கு குகநாதன் வழங்கிய பவர் ஆஃப் அட்டார்னியும் போலியானது என்று தெரிய வந்தது

என்னிடம் இருந்த ஆவணங்களை தொகுத்து குற்றச்சாட்டுகளை வரிக்கு வரி மறுத்து ‘IS IT FIRST INFORMATION REPORT OR FALSE INFORMATION REPORT’என்று ஒரு புத்தகமாகவே போட்டு நண்பர்களுக்கு கொடுத்தேன்.

அந்த முதல்தகவல்அறிக்கையில் குகநாதனுக்கு நான்  நான்   2004 நவம்பரிலேயே கேசட்டுகள் அனுப்புவதை நிறுத்திவிட்டதாகவும் குகநாதன் இந்தியா வரும்போது அவரை கொலைசெய்துவிடுவதாக மிரட்டியதாகவும் குறிபிடப்பட்டிருந்தது.

ஆனால் 2005 பிப்ரவரி வரைக்கும் நான் கேசட்கள் அனுப்பி வந்துளேன்

அதேபோன்று குகநாதனின் நண்பரும் டான் டி வி இயக்குனர்களில் ஒருவருமான மணிவேல் மெலோன் 2005 பிப்ரவரியில் என்னை பாரிசுக்கு வருமாறு வழக்கம்போல இன்விட்டேஷன் அனுப்பியிருந்தார். (குகநாதன் கையொப்பமிட்டால் பாண்டிச்சேரி தூதரகத்தில் விசா தரமாட்டார்கள்களாம்!)

இதுபோக 2005 ஜனவரியில் குகநாதன் சென்னை வந்தபோது அவரது ஹோட்டல் பில்களை நானே செட்டில் செய்துளேன்.பிறகு என் கிரடிட் கார்டில் அவருக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து அவருடன் கொழும்பு சென்றிருக்கிறேன்.

மேலும் நான் முகவரியிலிருந்து ஓடி தலை மறைவாகி விட்டேன் என்றும் அதில் குறிப்பிடப் பட்டிருந்த்து இதுவும் தவறானது  நான் 2005 ஜூலை கடைசியில் தான் எனது முகவரியை மாற்றினேன்.

ஆனால் எனது அலுவலகம் அதே இடத்தில் தான் இருந்தது அங்கிருந்துதான் பிப்ரவரி 18வரைக்கும் குகநாதனுக்கு கேசட்கள் அனுப்பிவந்தேன். அதற்குரிய ஆவணங்களில் எனது முகவரியும் போன் நம்பரும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

 

 

மேலும் என்னிடம் கட்டை பஞ்சாயத்து செய்து என் அலுவலகத்தை குகநாதன் தன் போலிப் பவர் ஆஃப் அட்டார்னி மூலம் கைபற்றிய பிறகே அந்த அலுவலகம் காலி செய்யப்பட்டு தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டன.அனைத்திற்கும் ஆவணங்கள் இணைக்கப்ட்டுள்ளன.

மேலும் குகநாதன் வழங்கிய பவர் ஆஃப் அட்டார்னியும் போலியானது.

அதன் லட்சணத்தை இப்போது பார்ப்போம்

என் மீது ஒரு புகார் தர வேண்டுமென்பதற்காக லண்டனில் செயல் படாத  – காலாவதியாகிவிட்ட டிஸ் ஏசியா லிட்  நிறுவனத்தின் இயக்குனர்களின் கூட்டம் பாரிஸில் நடந்ததாகவும் அதில் என்மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டதாகவும், ஆப் அட்டார்னி என்று கொடுக்கப்பட்டுள்ள காகிதத்தில் குறிபிடப்பட்டுள்ளது.

ஒரு வெள்ளை காகிதத்தில் ஒரு பழைய ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே அதில் முத்திரையாய் இடப்பட்டுள்ளது அந்த முத்திரையிலும் டிஸ் ஏசியா துவங்கிய காலத்தில் அதன் முகவரியாய் இருந்த முகவரியே இடம் பிடித்திருக்கிறது.அதன் பிறகு ரப்பர் ஸ்டாம்ப் செய்யவது கூட தேவையில்லாமல் போய் விட்டது போலும்.

ஆதன் நகல்

London Company House Web Site ல் போய் பார்த்தால்  குகநாதனின் இந்த டுபாக்கூர் வேலைகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக குகநாதன் என்றால் டான் டிவி என்றுதான் எல்லோருக்கும் தெரியும் உள்ளே நெருங்கிப் பார்த்தால் டான் டிவி பெயரையொத்த    DAN TV,DAN DTH,DAN TV EURO LTD,DAN  NETWORK,DAN TV UK LTD என்ற பல பெயர்களில் குகநாதன் பல கம்பனிகளை பதிவு செய்து வைத்திருப்பது தெரிய வரும்.இதில் ஒவ்வொரு கம்பனிக்குள்ளும் என்னைப்போல் பல ஏமாளிகள் உண்டு.

 

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் பணக்கஷ்டம் மனக்கஷ்டம் என்று வாழ்க்கை ஓடியது.

பல போராட்டங்கள். கடன்,வறுமை, என்று வாழ்க்கை ஒரு தரித்திரவாசியின் வாழ்க்கை போலாகிவிட்டது.அப்போது குழந்தைகளின் கல்விக் கட்டணத்தைக் கட்டவே பெறும் சிரமப்பட்டேன்.குடும்பத்தோடு ஊருக்கு போய் விடலாம் என்று ஊருக்கும் கிழம்பி   போய் விட்டோம்(அதெல்லாம் சுவையா தனி கதை). அப்போதுதான் சன் டிவி யில்  ‘திருப்பம்’ என்ற ஒன்றறை நிமிட நிகழ்ச்சியை தயாரிக்கும் வாய்ப்பு வந்தது.வாழ்க்கையிலும் அதுவே ஒரு திருப்பமானது.அதன்  பிறகு சன் டிவியிலேயே நியுஸ் எடிட்டராக வேலைக்கு சேர்ந்தேன்.

இப்படியாக மறுபடியும் ஒரு வழியாக வேலைக்கு போக ஆரம்பித்தேன் கொஞ்சம் கொஞ்சமாக அன்றாட பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு சகஜ நிலமைக்கு வர ஆரம்பித்தேன்.

இதற்கிடையில் சென்னையில் இயங்கிய  குநாதனின் அலுவலகம் ,ராஜ் டிவியின் புகாரின் பேரில் சி பி சி ஐ டி (திருட்டு வீடியோ பிரிவு போலிஸால்) சோதனைக்குள்ளானது.முன்னர் குறிப்பிட்ட தொழிலதிபர் சலிம் கைதாகி சிறைக்கு போகவேண்டியதாயிற்று

குகநாதன்,சகாயராஜ் உட்பட ஆகிய அனைவரும் ஓடி ஒழிந்தனர்.

தமிழகமெங்கும் கேபிள் டி வி ஆபரேட்டர்களை குகநாதன் ஏமாற்றியதாகவும்  புகார்கள் வந்தன.

அதன் பிறகு  நானும் சத்தியமூர்த்தி மீது  ஒரு புகார் கொடுத்தேன்.இரண்டு கிட்னிகளும் செயலிழந்த நிலையில் அவரை விசாரணைக்கு அழைத்து வந்தார்கள்.

தான் குகநாதன் சொல்லைக்கேட்டு என் மீது புகார் கொடுத்ததாகவும்,ஆனால் குகநாதன் தன்னையும் ஏமாற்றி விட்டு ஓடி விட்டதாகவும் அவர் மீது தான் மாம்பலம் துணை ஆணையரிடம்  புகார் கொடுத்திருப்பதாகவும் கூறினார்.

அப்போது மாநகர காவல் இணை ஆணையராக இருந்த ஜாங்கிட் சத்தியமூர்தியை தூக்கி உள்ளே போடுமாறு கூறினார்.

ஆனால் அவரது நிலமை கண்டு பரிதாபப்பட்ட நான் அவரைவிட்டுவிடக் கோரினேன்.

என்னை பிடித்து கட்டை பஞ்சாயத்து செய்தபோது சென்னை நகர காவல் ஆணையராக இருந்தவர் நடராஜன்(விருமாண்டி மீசை வைத்திருப்பவர்)இப்போது டிஜி பி யாகி விட்டார் அவரிடம் சுதாங்கன் என்னை அழைத்துப்போனார்.என் கதையை கேட்டு என்னிடமிருந்த ஆவணங்களை பார்த்தவர் இவ்வளவு ஆவணங்கள் வைத்துக்கொண்டு ஏன் அமைதியாக இருந்தீர்கள் என்னை வந்து பார்த்திருக்க வேண்டியதுதானே என்றார்.

அதற்கு நான்   ‘உங்கள் பெயரைச் சொல்லிதான் என்னை மிரட்டினார்கள்’என்றேன்.

அதற்கு அவர்  ‘போலிஸ் காரங்க அப்படித்தான் சொல்லுவனுக..நீங்க ஒரு பத்திரிகை யாளர் அதிலும் ஆனந்தவிகடனிலெல்லாம் இருந்திருக்கிறீர்கள்..இப்படி ஏமாந்து நிற்கிறீர்களே..?’என்றதோடு குகனாதன் மீது ஒரு புகார் கொடுத்தால் தானே அதனை பதிவு செய்யச் சொல்கிறேன் என்றார்.

அதன் பிறகுதான் என்னை  ஏமாற்றிய குகநாதன் மீதே புகார் கொடுக்கலாமென்று எனக்கு தோன்றியது.

குகநாதன் என்னை ஏமாற்றியதற்கான ஆவணங்களை தொகுத்து இணத்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ஒருபுகாரைக் கொடுத்தேன்.அவர் அதனை விசாரிக்க உத்தரவிட்டார்  

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான் குகநாதனை ஏமாற்றியதாக என் மீது  புகார் ஒன்றை பதிவு செய்த ஸ்காட்லான்ட் யார்டுக்கு நிகரான அதே சென்னை மாநகர காவல்துறை(அது சம்மந்தமான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போதே)  என்னை குகநாதன் ஏமாற்றி  விட்டதாக இந்தமுறை என் புகாரையும் பதிவு செய்துகொண்டது.

அதன் பிறகு  நான் குகனாதனின் நடவடிக்கைகளை கண்காணித்தேன்

அவர் மாதம் தோறும் மிக ரகசியமாக சென்னைக்கு வந்து

இங்கே ஒரு வீட்டில் அவர் தங்கி போவது தெரிய வந்தது.ஆனால் அந்த வீடு

எங்கு உள்ளது என்பதனைக் கண்டு பிடிக்க முடியவில்லை

குகநாதனின் பிரஞ்சு பாஸ்போர்ட் எண்ணை அவர் ஒரு வெளிநாட்டில் வழக்கமாக டிக்கெட் எடுக்கும் டிராவல்ஸில் வேலை பார்க்கும் ஒருவர் மூலம் பெற்றேன்.சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அந்த பாஸ்போர்ட் என்ணை இந்திய குடி வரவுதுறைக்கு அனுப்பி  இந்தியாவிற்குள் எந்த ஏர் போர்ட்டிற்குள் அவர் வந்தாலும் அவரை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரியது.

ஆனால் குகநாதன் வழக்கம் போல சென்னக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்.இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது!

கொழும்பில் விசாரித்தால் அவர் பாரிசிற்கு போவதாக சொல்லிவிட்டு  கிளம்பிப்போனதாக  தகவல் கிடைக்கும் மறு நாள் பாரிசில் கேட்டால் அவர் கொழும்பில்தான் இருப்பதாக பதில் வரும்.

அதே போன்று அவர் இந்தியா போவதாக சொல்லிக்கிழம்பியதாக தகவல் வந்து விசாரித்தால் பாரிசில் இருப்பார்.

ஆனாலும் அவர் இந்தியாவிற்கு வந்துபோவது உறுதியாகத் தெரிந்தது.ஆனால் பிரஞ்சு பாஸ்போர்ட்டை இமிகிரேஷனில் கொடுத்தும் இவர் சென்னைக்குள் வந்துபோவது எப்படி என்று விளங்கவில்லை.சென்னை போலிஸ் அவர் இங்கு வந்து போவதை நம்ப மறுத்தது.முடிந்தால் நீங்களே அவரை பிடித்துவிட்டு சொல்லுங்கள் பிறகு பார்க்கலாம் என்றது.

நான் மனம் தளரவில்லை  சென்னைக்கு வந்து போகும் அவரை  பிடிக்க ஒரு புதிய ரகசியத்திட்டம் ஒன்றை வகுத்தேன்.குகனாதனிடம் எனக்கிருந்த பழைய கடனை கழித்தேன்.

ஆறுஆண்டுகளாக காத்திருந்து குநாதனை நான் எப்படி  சென்னைக்கு வரவழைத்தேன்..?

பாஸ்போர்ட் கண்காணிப்பில் இருந்தும்  அவர் சென்னைக்குள் வந்தது எப்படி..?

நான் வைத்த பொறி என்ன..?அந்த பொறிக்குள் நான் வைத்த பொரி என்ன..?

அதன் பிறகு நடந்தது என்ன ..?

என்பதை எல்லாம் இராயகரன் தன் சகா குகநாதனிடம் கேட்டு எழுதட்டும் அதன் பிறகு நான் மறுபடியும் ஆதாரங்களுடன் மூக்கை நுழைக்கிறேன்..அதுவரை தேவைபட்டால் காத்திருப்போம் இன்னும் ஒரு ஆறு ஆண்டுகள்..!

பின் குறிப்பு:

நாவலன் மீதான அபாண்டமான இராயகரனின் கட்டு(ரை)க் கதைக்கு நான் எழுதிய எனது பினூட்டத்தில் எனது அனுபவங்களையெல்லாம்  FIR NO – 622/05 என்ற தலைப்பில் ஒரு நாவலாக எழுத உத்தேசித்திருப்பதாக தெரிவித்திருந்தேன் அதை இனியொருவில் பார்த்துவிட்டு அதற்கு பல வெளிநாடுகளிலிருதும் ஆர்டர்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.பிரான்ஸிலிருந்து ஒருவர் தனக்கு ஆயிரம் பிரதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளார்.எல்லாம் இராயகரன் செயல்!

Exit mobile version