Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்குத் தேர்தலின் அரசியல் பின்னணியும் கட்சிகளின் கயமையும் : தவகுமாரன்

கிழக்கு மாகாணத்தில் தேர்தல் களைகட்டி முன்னொரு காலத்தின் ‘பிளாஷ் பாக்’ சுருள் சுளாய் ஓடிவருகிறது. சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற கருணாவினது முன்னைநாள் அடியாள் 2008ம் ஆண்டும் மே மாதம் 16ம் திகதி கிழக்கு மாகாணத்தின் முதல்வராகத் தெரிவானார். ஆளும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட பிள்ளையான் முஸ்லீம் காங்கிரஸ், மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கும் ஐக்கிய மக்கள் சுந்ததிரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டார். இவரது தந்தையாரும் மாகாண சபைக்குத் தெரிவானார். பிள்ளையான் தெரிவான இரண்டு நாட்களுக்கு உள்ளாகவே கண்டி தலதா மாளிகைக்குச் சென்று பௌத்த குருக்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

குறுகிய கால இடைவெளிக்குள்ளேயே வழமையான பாராளுமன்ற அரசியல்வாதிக்குரிய நெழிவு சுழிவுகளைக் கற்றுக்கொண்ட பிள்ளையான் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள கிழக்கு பிரதேச வாதத்தைத் தேசியவாதமாகவும் கிழக்கு அடையாளமாகவும் வளர்க்க முயன்றார்.

நிலப்பறிப்பு, சிங்கள பௌத்த மயமாக்கல், இனப்படுகொலை போன்ற அத்தனை பேரினவாத அரசின் கோரமும் மக்ககளைத் தாக்க பிள்ளையானின் பிரதேசவாதம் பிசுபிசுக்கத் தொடங்கியது.

இதனை எதிர்கொள்ள அவ்வப்போது அரசுக்கு எதிரானவராகத் தம்மைக் காட்டிக்கொள்ள முற்பட்டார். இவரது அரசியல் குரு கருணா மகிந்த கட்சியில் முக்கிய உறுப்பினரானதும் அமைச்சரானதும் இந்த முரண்பாடு வளர்ச்சியடைவது போன்ற தோற்றம் காணப்பட்டது.

புலம் பெயர் நாடுகளில் வாழும் பேரினவாதத்தோடு சமரசம் செய்துகொண்ட பிள்ளையானின் பண முதலீட்டாளர்களும், வியாபாரிகளும் அரசுடனான முரண்பாடு கூர்மையடையாமல் பார்த்துக்கொண்டனர்.

எது எவ்வாறாயினும் பிள்ளையானும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அவர் கையகப்படுத்திக்கொண்ட கட்சியும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டு வட்டத்தின் உள்ளேயே சுற்றி வருகிறது.

பிளையானின் எதிர்த் தரப்பின் ஒரு பகுதியை உள்வாங்கும் முயற்சியில் பாராளுமன்ற அரசியலில் அறியப்பட்ட கோமாளியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னை நாள் முக்கிய தளபதியும் பல போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டவருமான கருணா முயற்சிக்கிறார். பிள்ளையான் படிக்காதவர் என்று குற்றம் சுமத்தும் கருணாவே பாராளுமன்ற அரசியலின் குறைந்தபட்ச நெளிவு சுழிவுகளையும் கற்காத கோமாளியாகக் கருதப்படுகிறார்.

இந்த நிலையில் கிழக்குத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.

முஸ்லீம்களைப் பொறுத்தவரை இன்றைய சூழல் வேறுபட்டது. வட கிழக்குத் தமிழர்களை அழிப்பதிலும் ஒடுக்குவதிலும் தற்காலிக வெற்றிகண்டுள்ள இலங்கை அரசு இப்போது முஸ்லீம் தமிழர்களைக் குறிவைக்கிறது. சிங்கள பௌத்த பேரினவாதத்தை பயன்படுத்தி தனது பொருளாதார அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு முஸ்லீம்களே அடுத்த பலியாடுகள்.

மதவாத பௌத்த பிக்குகளை பள்ளிவாசல்களை ஆக்கிரமிக்கத் தூண்டிவிடுவது இலங்கை அரசே என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

இந்த நிலையில் முஸ்லீம்களின் வாக்குகளைப் பயன்படுத்தி மில்லியன்களைச் சுருட்டிக்கொண்ட ரவூப் ஹக்கீம் போன்ற கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகளுக்கு இலங்கை அரசுடன் அண்டிப் பிழைப்பதைத் தவிர வேறு வழி கிடையாது.

இப்போது பிள்ளையான், முஸ்லீம் காங்கிரஸ், கருணா – இலங்கை அரசு, போன்றவர்களைத் தவிர அரச எதிர்ப்பாளர்களாக அல்லது அரசுடன் முரண்பட்டவர்களாகத் தம்மை தோற்றப்படுத்திக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்குத் தேர்தலில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.

தேசிய இன ஒடுக்கு முறை மக்கள் மீதான பிரதான ஒடுக்குமுறையாக அமைந்திருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்களின் வாக்குகளில் பெரும்பகுதி வழங்கப்படும் என்பது வெளிப்படையானது.

அதேவேளை அரசியல் சாணக்கியன் என்று சொல்லப்படும் சம்பந்னை விடவும் அதிகமாக மக்கள் சாணக்கியர்களாக உள்ளனர்.

சாணக்கியர்களின் ஒரே அரசியல் வேலைத் திட்டம் என்பது சர்வதேசத்திற்கு தமிழர்கள் அரசிற்கு எதிரானவர்கள் என்று எடுத்துக்காட்டவேண்டும் என்பதே. சர்வதேசம் என்று இந்த மேட்டுக்குடிகள் குறிப்பிட்டுக்கொள்வது சர்வதேச மக்கள் அல்ல. இவர்களைப் போன்று அதிகாரத்திற்காக அலையும் பிழைப்புவாதிகளான ஆட்சியில் இருக்கும் அரசுகளையே. அவர்களுக்கு சம்பந்தன் சொல்லித் தான் இதெல்லாம் தெரியவேண்டியதில்லை. தவிர கிழக்கிலும், வடக்கிலும் ஏன் இலங்கை முழுவதிலும் நடைபெறும் நிலப்பறிப்பின் பின்னணியில் இவர்கள் அடிமைகளாகியிருக்கும் அமரிக்காவும் இந்தியாவும் தான் காணப்படுகின்றன.

‘சர்வதேசம்’ பார்த்துக்கொண்டிருக்க தான் வன்னியில் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டனர். சர்வதேசஆசீர்வாதத்தோடுதான் கிழக்கில் சிங்கள மயமாக்கலும் காணிப்பறிப்பும் நடக்கிறது.

சரி, சர்வதேசத்திற்கு தூக்கிக் காட்ட என்று தானே வடக்கில் மக்கள் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்கள். இவ்வளவு நாளும் ஏதாவது ஒரு காணித்துண்டையாவது அபகரிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்க முடிந்தததா?

சிறைகளில் அப்பாவி தமிழ்க் கைதிகள் அடித்தே கொல்லப்பட்ட போது சம்பந்தனும் சுமந்திரனும் என்ன சோமபானமா அருந்திக் கொண்டிருந்தார்கள். அதற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்திய போராட்டத்தில் கூட ‘உயர்மட்ட சாணக்கியர்கள்’ கலந்துகொள்ளவில்லை.

வடக்கில் இவர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இவர்களால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை. இனிமேலும் முடியாது.

சரி அதெல்லாம் இருக்கட்டும் ராஜபக்ச அரசு கண்துடைப்பிற்காக உருவாக்கிய மாகாண சபை தேர்தல்களில் மக்களுக்கு எந்தப்பயனும் இல்லை என்று சர்வதேச மக்களுக்கு உணர்த்துவதற்காக கிழக்கு மக்களின் போராட்ட உணர்வைப் பயன்படுத்தி ஒரு ஊர்வலமாவது நடத்த முடிந்தததா?

மக்கள் எத்தனை தடவை தெருவிற்கு வந்து போராடியிருக்கிறார்கள். தேசியக் கூட்டமைப்பின் ஒரு சுண்டெலி கூட இவற்றில் கலந்து கொண்டதில்லை.

அதில் வேறு நாங்கள் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவில்லை ‘சர்வதேசத்திற்கு’ காட்ட வாக்களிப்போம் என்று உலகின் பல திசைகளில் இருந்தும் ‘குட்டிகுட்டி சாணக்கியர்களின்’ குரல்கள் தாங்க முடியவில்லை.

இதை தவிர ஐரோப்பிய நாடுகளில் இருந்து ‘வயது முதிர்ந்த சாணக்கியக் குஞ்சுகள்’ கொழுத்தும் வெயிலில் கோட்டும் சப்பாத்தும் போட்டுக்கொண்டு வந்து போகிறார்கள். எத்தனை தடவைதான் நீங்கள் சர்வதேசத்திற்கு காட்டுவீர்கள். நீங்கள்  பிறக்கும் போதே சர்வதேசத்திற்கு தூக்க்கிக் காட்டும் கருவியையும் காவிக்க் கொண்டா பிறந்தீர்கள்.

கிழக்க்த் தமிழர்கள் மீதான யாழ்ப்பாண மேலாதிக்க வாத ஒடுக்கு முறைக்கும், இஸ்லாமியத் தமிழர்களைப் பிளவுபடுத்துவதிலும் தமிழரசு, தமிழர் விடுதலைக் கூட்டணி, இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் நீண்டகால ‘சாணக்கியம்’ பெரும் பங்கு வகிக்கிறது.

பிள்ளையான் கருணா போன்ற அடிதடி அரச கும்பல்களை விட்டால், முஸ்லீம் காங்கிரஸ் என்ற அரச அடிமை அடுத்த சாபக் கேடு.

ஒரு புறத்தில் தமிழர்கள் பக்கத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான முரண்பாடு தூண்டப்பட அதன் விளைவுகளை இலங்கை அரச பாசிசத்திற்கு சார்பாக மாற்ற முஸ்லீம் காங்கிரசே பயன்பட்டது.

இலங்கையில் தொடரப்போகும் முஸ்லீம்களுக்கு எதிரான அரச வன்முறைகளுக்கும், இனச் சுத்திகரிப்பிற்கும் எதிராக இவர்கள் குரல்கொடுக்கப்போவதில்லை. அது அவர்களின் வரலாறும் இல்லை. வேண்டுமானால் தமிழர்களுக்கு எதிரான முரண்பாட்டை அரச பக்கத்திலிருந்து தூண்டி விடுவார்கள். ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் இரண்டு தேசிய இனங்களையும் அழிக்கும் அரசின் கயமைத் தனத்திற்கு ஏஜண்டாகத் செயற்படுவார்கள்.

ஆக, தமிழ்த் தேசிய இனத்தின் மத்தியில்ருந்து மட்டுமன்றி, முஸ்லீம் தமிழ்த் தேசிய இனத்தின் மத்தியிலிருந்தும் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்காகப் போராடும் தலைமை உருவாக வேண்டும்.

அந்த இரண்டு தேசிய இனங்களும் வியாபாரக் கும்பல்கள் நடத்தும் மகிந்த ‘ஜனநாயகத்தின்’ தேர்தலைப் முற்றாகப் புறக்கணிப்பதிலிருந்தே ஆரம்பமாகும். என்றுமில்லாத முக்கியத்துவம் வழங்கப்படும் கிழக்குத் தேர்தலின் பின்ணணியில் கிழக்கில் எதிர்காலத்தில் உருவாக இருக்கும் சிங்களக் குடியேற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

வடக்கைப் பொறுத்தவரை இலங்கை அரசின் ஆயுட்கால அடிமை டக்ளஸ் தேவாந்தாவின் அதிகாரமே நிலவுகிறது. பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடமும் அமரிக்காவிடமும் காதோரமாக முறையிட்டுவிட்டு சோமபானம் அருந்திக்கொண்டிருக்க வடக்கில் புத்த பெருமானும் பல் தேசியக் கம்பனிகளும் ‘சிவசிவா’ என்று குடியேறிக் கொள்கின்றன. மக்கள் படிப்படியாக தெருவிற்கு விரட்டப்படுகின்றனர்.

கிழக்கிலும் அப்படி ஒரு அடிமைத்தனமான அதிகாரம் வந்தாக வேண்டும். முஸ்லீம் காங்கிரஸ், மகிந்த கட்சி, பிள்ளையான் கூட்டணி ஆட்சியை அமைத்துக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோழைத்தனத்தைப் பயன்படுத்திக்க்கொண்டு நிலப்பறிப்பும் அழிப்பையும் இலங்கை அரசு நிறைவேற்றும். இதற்கு எதிராக ‘சாணக்கியக் கோழைகளுக்கு’ வெளியில் போராடும் மக்கள் தலைமை தேவை. தமிழர்கள் மத்தியிலிருந்தும் இஸ்லாமியத் தமிழர்கள் மத்தியில்ருந்தும் இது உருவாகும்.

தேர்தலைப் புறக்கணிப்பதிலிருந்து இதனை ஆரம்பிக்கலாம். இன்று கிழக்கு மாகாணம் என்று பேரினவாத அரசு கூறும் பிரதேச எல்லைக்குள் 35 வீதம் தமிழர்களும் 35 வீதம் முஸ்லீம்களும் 29 வீதம் வரை சிங்களவர்களும் வாழ்கின்றனர். 80களில் 18 வீதமா இருந்த சிங்கள மக்களின் தொகை இன்று குடியேற்றங்களால் அதிகரித்துள்ளது. மகிந்த அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கள் இனிமேல் முஸ்லீம் மற்றும் தமிழ்ப் பிரதேசங்களைக் குறிவைக்கும். கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லீம் தமிழர்கள் புறக்கணிக்கத் தக்க சிறுபான்மை ஆகும் அபாயம் உருவாகியுள்ளது.

திட்டமிட்ட மக்கள் அரசியலும் அதன் அடிப்படையிலான போராட்டங்களுமே இனச்சுத்திகரிப்ப்பிலிருந்து இரண்டு தேசிய இனங்களைஉஇம் பாதுகாக்கும்.

புலம் பெயர் நாடுகளிலிருந்து சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் தேர்தல் புறக்கணிப்பைக் சுலோகமாக முன்வைப்பதும் போராட்டத்தை முன்னெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்திக் கொள்வதுமே இன்று எமக்கு முன்னால் உள்ள கடமை.

Exit mobile version